திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 10. மாணவர்களுக்கு திறந்த மூல உலகம் அறிமுகம்: நாள் 2

திறந்த மூல திட்டங்களில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவது எப்படி என்று கற்றுத்தரும் ஒரு வார இறுதி பயிற்சியைப் பற்றிய கட்டுரையின் பகுதி 1 இங்கே படியுங்கள்.

சனிக்கிழமை அன்று வகுப்பறை பாணியில் படித்த பிறகு, ஞாயிறை நாங்கள் ஒரு திறந்த திட்டங்கள் நாளாகப் பயன்படுத்தினோம். மாணவர்கள் அங்கு வந்து ஒரு திட்டத்துக்கு எப்படி பங்களிப்பது என்று உதவி கேட்டுப் பெற முடியும். நாங்கள் மாணவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை என்பதால், சுமார் இருபது மாணவர்கள் மட்டுமே வந்தனர்.

மாணவர்கள் வர ஆரம்பித்ததும், அவர்கள் பங்களிக்க ஒரு திட்டத்தைத் தேர்வு செய்ய நாங்கள் உதவினோம். பலர் யுவியின் தந்தையின் ஆலோசனையின் பேரில் ஒரு புதிய ஆண்ட்ராய்டு செயலி உருவாக்கும் வேலை செய்தனர். ஒரு மாணவர் ஓபன்ஹாட்ச் (OpenHatch)-ன் தன்னார்வ வாய்ப்பு தேடும் தளத்தில் இருந்த தேர்வுகளை ஆய்வு செய்து சுகர் (Sugar) திட்டத்தில் வேலை செய்ய விரும்பினார்.

அவர் வர்ச்சுவல்பாக்ஸ்-ல் (VirtualBox) சுகர் (Sugar) இயங்கும் வழிமுறைகளைப் பின்பற்றுகையில், அதன் நிறுவியில் உள்ள ‘இறக்குமதி’ விருப்பம் செயலிழந்ததாக, சாம்பல் நிறத்தில், இருந்ததைக் கவனித்தார். “நான் ஏதாவது தவறு செய்கிறேனா?” என்று அவர் கேட்டார்.

“இல்லை” என்றேன். “இது நிச்சயம் பழுதானதுதான்.” இந்தத் தடையைத் தாண்டியபின் அவர் அருகில் அமர்ந்திருந்த ஒரு மாணவர் வர்ச்சுவல்பாக்ஸ் நிறுவியிருந்ததால் அவருடன் இணைந்து வேலை செய்தார்.

யுவி ஒரு மாணவரை GTKJ கோப்பு தேர்விக்கு வெளியீடு உருவாக்கச் சொன்னார். GTKJ கோப்பு தேர்வி உரையாடல் பெட்டி OpenJDK-ல் பயன்படுத்தப்படுகிறது. அந்த மாணவர் பதிப்பு எண்ணை உயர்த்த ஒரு நிரல் ஒட்டு தயாரித்து, சில வெளியீடு குறிப்புகளை எழுதி,  விநியோகக் கோப்புகளையும் உருவாக்கினார்.

இதர நான்கு மாணவர்கள் எந்த திட்டத்தில் வேலை செய்வதென்று உறுதியற்று இருந்தனர், அதனால் நான் பயர்பாக்ஸ்-ஐ பரிந்துரைத்தேன். நான் மோசில்லா கல்விக்கான விக்கி பக்கம் ஒன்றை அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன். பயர்பாக்ஸ்-இன் XUL குறியீடு மாற்ற ஒரு பயிற்சி அதில் இருந்தது. பங்கேற்பாளர்களில் ஒருவருக்கு ஏற்கனவே மெர்கூரியல் (Mercurial) பதிப்பு கட்டுப்பாடு தெரியும். ஆகவே அவர் விரைவில் வேலை செய்தார். அந்தக்கட்டுரையில் காட்டிய பதிப்பை தொகுக்க இயலவில்லை என்று முதலில் கண்டறிந்தவரும் அவரே.

ஞாயிறு நண்பகலில் நான் நம்பிக்கை இழந்து இருந்தேன். நான்கு உற்சாகமாக மாணவர்களை நான் தவறான வழியில் அனுப்பிவிட்டேன். உருவாக்க வேண்டும் என்று நினைத்த உற்சாகத்தை நான் சுட்டெரித்து விட்டதாக அஞ்சினேன். ஒரு மாணவர் நிகழ்பட ஆட்டம் விளையாடிக்கொண்டிருந்தார். இரண்டு மணி நேரம் ஆனபின்னும் அவரது மடிக்கணினியில் தொகுப்பு இன்னும் முடியவில்லை. அந்த தொகுப்பு எப்படியும் முடியாது என்று எனக்குத் தெரியும்.

ஒரு பெருமூச்சு விட்டபின், நாம் அனைவரும் “உற்பத்தித்திறன் இழந்தோம்” என்று நான் உணர்ந்தேன். அந்த தொகுப்பு பிரச்சினை பற்றி ஏற்கனவே ஒரு வழுச்சீட்டு உருவாக்கப்பட்டள்ளது என்று அந்த மெர்கூரியல் பயனர் கண்டுபிடித்தார். அது அவருக்கு ஓரளவு ஆறுதல் அளித்தது. ஏனெனில் அந்த தொகுப்பு பிரச்சினை அவர் செய்த தவறால் அல்ல என்பதால். மற்றொரு மாணவர் வெற்றிகரமாக பயர்பாக்ஸ்-ன் தற்போதைய பதிப்பு நிரலைத் தொகுத்தார். “இது என்ன பீட்டா-வா அல்லது ஆல்ஃபா-வா?” என்று அவர் கேட்டார்.

“இல்லை” என்றேன். “இது சமீபத்திய பதிப்பு.” அவருக்கு இன்னும் புரியவில்லை, நான் hg பதிவை அவருக்கு சுட்டிக்காட்டினேன். “பாருங்கள், அது பயர்பாக்ஸ்-ன் 30 நிமிடங்களுக்கு முன் இருந்த பதிப்பு தான்.” அவர் குபீரென்று சிரித்து விட்டார்.

அவர் சாந்தமானபின்னர் விளக்கினார், “நான் ஒருபோதும் இவ்வளவு புதிய எந்த மென்பொருளையும் பயன்படுத்தியது கிடையாது!”

நிகழ்பட ஆட்டம் விளையாடிக்கொண்டிருந்தவர் பயர்பாக்ஸ் தொகுக்க காத்திருந்தபோது, எங்களை நோக்கிக் கேட்டார், “லினக்ஸ் நிறுவுவதால் பயனுண்டா?” நிறுவிப்பார்ப்பதில் பயனுண்டு என்று நாங்கள் அவரை நம்ப வைத்தோம். அவர் விரைவில் உபுண்டு நிறுவி இயக்கினார். ஆனால் அதில் கம்பியில்லாத் தொடர்பகம் (Wi-Fi) அட்டை வேலை செய்யவில்லை, ஏனெனில் அதற்குத் தேவையான ஒரு தனியுரிமக் கூறு நிறுவியில் கிடையாது. அவர் பொறுமையிழந்ததைப் பார்த்து நான் அதை பத்து நிமிடங்களில் சரிசெய்ய முடியும் என்று உறுதி கூறினேன். பின்னர் அவர் சரியான உபுண்டு சமுதாய உதவிப் பக்கத்தை கண்டுபிடித்து ஐந்து நிமிடங்களில் சரிசெய்துவிட்டார். பின்னர், என் உதவி இல்லாமல் புரிந்துகொள்ளும்படி, அந்த விக்கி பக்கத்தையும் ஐந்து நிமிடங்கள் செலவிட்டு சரிசெய்தார்.

இந்த கட்டத்தில், அவர் உபுண்டு அறிவிப்பு குறுஞ்செயலியின் நடத்தை பற்றி புகார் செய்தார். அவர் அதை தள்ளுபடி செய்ய சுட்டியை அதன் மேல் எடுத்துச் சென்றபோது, அது ஒளிபுகு நிலைக்கு மாறியது. மற்றும் அவரது சொடுக்குகளையும் அலட்சியம் செய்தது. அவருக்கு சி (C) அனுபவம் கிடையாது. இருப்பினும் ஒரு சிறிய உதவியுடன், அவர் மூல நிரலை வெட்டியும் மாற்றியும், அந்த ஒவ்வா நடத்தை மறைந்து விடும் வரை, சரி செய்தார். அந்த தொகுப்பை மீண்டும் கட்டி நிறுவினார். முடிவில் அவர் ஜிடிகே (GTK) நிகழ்வுக் கையாளிகள் மற்றும் .deb தொகுப்பு பற்றி அறிந்துகொண்டார். மேலும், அவருக்கு இப்போது தன் கணினியின் மீது இருந்த கட்டுப்பாட்டின் அளவையும் நேரடியாகக் காண இயன்றது.

இறுதியில், நான் மகிழ்ச்சி அடைந்தேன். எங்கள் மாணவர்கள் ஆவணங்களுக்கும் மற்றும் தொகுப்புகளுக்கும் கணிசமான பங்களித்துள்ளனர். அவர்கள் திறந்த மூல நிரலை மாற்றவும், தொகுக்கவும் வழி தெரிந்து கொண்டனர். மற்றும் அவர்களுக்கு கேள்விகள் எழுந்த போது, உதவி பெற முடியும் என்றும் அவர்கள் கண்டு கொண்டனர்.

ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவது

ஒரு கோணத்தில் பார்க்கும்போது, மாணவர்கள் இனி தங்கள் கால்களிலேயே நிற்க வேண்டும். இந்த நிகழ்வை நடத்தியதன் மூலம், நீடிக்கக்கூடிய ஒரு உள்ளூர் சமூகத்தை உருவாக்க முடியும் என்று நம்பினோம். இப்போது அஞ்சல் பட்டியல் மற்றும் ஐஆர்சி சேனல் மூலம் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியும் என்பதால், அவர்கள் பிரிந்தவர்களாகவோ ஆதரவற்றவர்களாகவோ எண்ண வேண்டியதில்லை.

அவர்களையெல்லாம் அஞ்சல் பட்டியல் வெறியர்களாகவோ அல்லது ஐஆர்சி சேனல் வாசிகளாகவோ ஆக்க ஒரு வார இறுதி போதுமானது இல்லை, ஆனால் ஒரு சமூகம் வளர்ந்து வருகிறது. இப்போதும் கூட, நிகழ்வுக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ##penn-ல் சில மாணவர்கள் புகுபதிகை செய்கிறார்கள், மற்றும் சில நாட்களுக்கொருமுறை ஒரு புதிய பார்வையாளர் வந்து ஒரு கேள்வி கேட்கிறார். யுவி ஒரு உபுண்டு வெளியீடு கொண்டாட்டம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார், RSVP-க்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒருவருக்கொருவர் உற்சாகத்தைப் பெருக்குவது தொடரும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நீங்களும் இம்மாதிரி நிகழ்வை நடத்தலாம்

நவம்பர் மாதம் நான் பாஸ்டன் பகுதியில் இதே போன்ற நிகழ்வை ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறேன். நீங்கள் இது போன்ற ஒரு நிகழ்வை நடத்த விரும்பினால், நாங்கள் செய்தது போன்ற வழிமுறைகளை பின்பற்றுங்கள் என பரிந்துரைக்க விரும்புகிறேன். நாங்கள் கற்ற  ஒரு சில பாடங்கள்:

கற்பித்தலை நாம் முன்னதாகவே ஒத்திகை பார்ப்பது மிக முக்கியம். ஜான் ஸ்டம்போ-வும் நானும் கற்பித்த திட்ட அமைப்புத் தொகுதிக்கான பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்தை ஒரு மணி நேரத்தில் முடிக்க எங்களுக்கு இரண்டு ஒத்திகைகள் தேவைப்பட்டது. (நீங்கள் இந்த விக்கி பக்கத்தில் மேலும் விவரம் காணலாம்). மேலும், நாம் பயிற்சிகளை வெள்ளோட்டம் விட்டுப்பார்க்கவேண்டும்.

நாங்கள் மதிய உணவுக்கு வெளியே சென்றோம். என் மாணவர்களுடன் அரட்டை அடித்த உவகையில், என் குழு திரும்புவதை நான் தாமதம் செய்தேன். நாங்கள் நிகழ்வை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாக முடித்தோம். மாணவர்களின் மற்ற வேலைகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க, அடுத்த முறை திட்டப்படி முடிக்க வேண்டும்.

இறுதியாக, சனிக்கிழமை காலை மாணவர்கள் ஐஆர்சி-ல் சேர உதவி பெற நீண்டநேரம் எடுத்தது. எதிர்கால நிகழ்வுகளில், மாணவர்கள் பதிவு செயல்முறையில் ஐஆர்சி-ஐயும் இணைத்து விடுவோம். மாணவர்கள் அதை பயன்படுத்தத் தயாராக வந்து விடுவார்கள். மேலும், நான் வருங்கால மாணவர்கள் வருகையை கையாள மின்னஞ்சலை விட திறம்பட ஏதாவது பயன்படுத்துவேன்!

போகப்போக, இம்மாதிரி நிகழ்வுகள் நிறைய நடக்கும் என நம்புகிறேன். இந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள் தங்கள் அனுபவத்தை வைத்து நான் இல்லாமல் ஒத்த நிகழ்வுகளை நடத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். நீங்கள் இது போன்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், விரும்பினால் தயங்காமல் நடத்துங்கள்!

Asheesh Laroia

மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: அஷீஷ் லாரோயா (Asheesh Laroia)

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: