திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 9. மாணவர்களுக்கு திறந்த மூல உலகம் அறிமுகம்: நாள் 1

ஃபயர்பாக்ஸ் இணைய உலாவியின் இணை உருவாக்குநர் பிளேக் ராஸ் (Blake Ross) முதல் லினக்ஸ் கருநிரல் உருவாக்கிய லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) வரை, மாணவர்கள் திறந்த மூல சமுதாயத்தில் முக்கிய சாதனைகள் செய்து பெரிதும் நன்மதிப்பைப் பெற்றவர்கள். ஆனால் பிலடெல்பியாவில் ஒரு ஓபன்ஹாட்ச் (OpenHatch) சந்திப்பில் மேசையில் என் எதிர்ப்புறம் அமர்ந்து யுவி மேஸொரி (Yuvi Masory) சொன்னது அதற்கு எதிர்மாறாக இருந்தது.

“என் ஆய்வகத்தில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம்,” என்று அவர் விளக்கினார். கேள்விகளுக்கு விடை காணக்கூடிய, நிரலாக்க அனுபவம் உள்ள மாணவர்கள் வேண்டும். ஆனால் பென் (பென்சில்வேனியா பல்கலைக்கழகம்) மாணவர்கள் இணையத் தொடர் அரட்டை (IRC) பற்றி கேள்விப்பட்டதே இல்லை. திறந்த மூலத்துக்கு அவர்கள் ஒருபோதும் பங்களித்ததேயில்லை.”

யுவி ஒரு முதுகலை மாணவர் மற்றும் நிரலாக்கம் செய்யும் கல்லூரி ஊழியர். அவர் கல்லூரி வளாகத்துக்கு வந்து இளநிலை மாணவர்களுக்கு ஓபன்ஹாட்ச் பற்றி ஒரு மணி நேரம் பேசச் சொல்லி என்னிடம் மன்றாடினார். திறந்த மூல சமூகத்தில் புதிய பங்களிப்பாளர்கள் வழி கண்டுபிடிக்க உதவுதான் ஓபன்ஹாட்ச் என்ற என் திட்டத்தின் குறிக்கோள்.

“ஒரு மணி நேரம் போதாது, எனக்கு ஒரு வார இறுதி வேண்டும்,” என்று நான் சொன்னேன்.

வார இறுதியில் ஒரு முழு அமிழ்வு

யுவி, நான், மற்றும் எங்களை சந்திக்க ஹார்வர்ட்-இலிருந்து வந்திருந்த ஃபெலிஸ் ஃபோர்டு மூவருக்குமிடையே ஒரு திட்டமிடல் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். ஃபெலிஸ் ஃபோர்டு ஹார்வர்ட்-ல் செவ்வியல் படிப்பவர் மற்றும் லினக்ஸ் ஆர்வலர்.

இரண்டு நாட்கள் செறிந்த இடைத்தொடர்பு செய்வது என்று நாங்கள் முடிவெடுத்தோம். நிரலாக்க மாணவர்கள் குறியீடு எழுத முடியும் என்றாலும், பெரும்பாலோர் வழுத்தடம் கண்காணிப்பை (bug tracker) பார்த்ததேயில்லை மற்றும் பதிப்பு கட்டுப்பாடு (version control) பற்றி தெரியாது. திறந்த மூல திட்டத்தை நிறுவி தொகுப்பதில் வரும் பிரச்சினைகளை சமாளிக்க இயலாமலும் அல்லது சரியான சமூகத் தலைமை இல்லாத காரணத்தாலும் ஆரம்பித்த பலர் விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். இது அங்கு ஒரு கலாச்சார பிளவை உண்டாக்குகிறது. இது போன்ற பிரச்சினைகளை மாணவர்கள் கடக்க உதவியாக இருக்க நாங்கள் விரும்பினோம்.

நிகழ்வை விளக்க ஒரு இணையதளம் ஏற்பாடு செய்தோம். சனிக்கிழமையன்று நான்கு ஒரு மணி நேர அமர்வுகளுக்கு நாங்கள் திட்டமிட்டோம். ஒவ்வொரு அமர்வும் வெவ்வேறு தலைப்பில், மேலும் மாணவர்களுக்கு சில கைப்பயிற்சிகளும் உண்டு. இரண்டாவது நாள் ஒரு வழக்கமான நெடுநிரலாக்கம் (Hackathon). இது மாணவர்கள் தாங்களே தேர்ந்தெடுத்த திட்டங்களில் நாங்கள் வழி காட்டி உதவுவதற்கு.

மாணவர்களிடம் ஈடுபாடு உணர்வு உருவாக்கவும், மற்றும் ஒரு நெருக்கமான மாணவர் ஆசிரியர் விகிதம் இருக்கவும், சனிக்கிழமை 20 மாணவர்கள் மட்டுமே என்று வரையறுத்தோம். ஆர்வமுள்ளவர்களுக்கும், மற்றும் குறிப்பாக புதிய நபர்களுக்கும் முன்னுரிமை தர இவ்வாறு எழுதச் சொல்லிக் கேட்டோம்:

  • அவர்கள் நிகழ்வை எவ்வாறு இணையதளத்தில் கண்டுபிடித்தார்கள் என்பது பற்றி ஒரு வாக்கியம்.
  • திறந்த மூலத்தில் தங்கள் தற்போதைய ஈடுபாடு பற்றி ஒரு வாக்கியம் (எ.கா., “கேள்விப்பட்டதேயில்லை”, “உபுண்டு பயன்படுத்துகிறேன்”, “பெரும்பாலான லினக்ஸ் கருநிரலை நான்தான் எழுதினேன்”)
  • அவர்கள் எதைக் கற்பது பற்றி ஆர்வமாக இருக்கிறார்கள் என்று ஒரு வாக்கியம்

எங்கள் இலக்கு திறந்த மூல கலாச்சாரம் பற்றி மேலும் மாணவர்கள் அறிய வேண்டும் என்பதால், நாங்கள் ஒரு உள்ளூர் சமூகம் தொடங்க மாணவர்களுடன் நேரடியாக வேலை செய்ய விழைந்தோம்.

எங்களுக்குத் தெரிந்தவரை இந்த உத்தி இதுவரை எவரும் கையாளாதது. பேராசிரியர்களின் திறந்த மூல கோடை அனுபவம் (Professors’ Open Source Summer Experience) பற்றி நீங்கள் படித்திருக்கக்கூடும். அவர்கள் மாணவர்களுக்கு ஒரு அரைக் கல்வியாண்டு நீண்ட பயிற்சி வகுப்பு நடத்துவது பற்றி சொல்லிக் கொடுப்பது.

மாணவர்கள் வருவார்களா?

நிகழ்வைப்பற்றி தெரியப்படுத்துவதற்காக, நாங்கள் பென்சில்வேனியா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறையை அவர்களுடைய மாணவர்கள் 250 பேருக்கும் மின்னஞ்சல் அனுப்பக் கேட்டுக் கொண்டோம். ஸ்வார்த்மோர் (Swarthmore) மற்றும் அருகிலுள்ள கல்லூரி மாணவர்களுக்கும் நாங்கள் தகவல் கொடுத்தோம். யுவி புதிரான குறியீட்டு அட்டைகளும் மற்றொரு நண்பர் துண்டு வெளியீடும் தயாரித்து பொது அறிவிப்பு செய்தார்கள்.

அறிவிப்பு அனுப்பிய சில நிமிடங்களில் மின்னஞ்சல்கள் வந்து சேரத் தொடங்கின. இறுதியில், ஐம்பத்தியோரு விண்ணப்பதாரர்களிடமிருந்து பதில் வந்தது. உடனடியான திணறலில், நாங்கள் விளம்பரம் பற்றிய கவலையை விட்டுவிட்டு விண்ணப்பங்களைப் படிக்க ஆரம்பித்தோம்.

நமக்கு வழக்கம்போல் இருக்கும் இந்த சங்கதி இந்த மாணவர்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது போலும். இந்த மின்னஞ்சல்களைப் படிப்பது ரசிகர் அஞ்சல் படிப்பது போல் இருந்தது.

சிலர் இது போன்று அபூர்வமாக எழுதினர்:

  • “திறந்த மூலத்தில் எனது ஈடுபாடு முதன்மையாக போற்றுதலையும் மிகமிஞ்சிய பாராட்டையுமே கொண்டுள்ளது.”
  • “நான் ஒரு திட்டத்தில் ஈடுபட ஆரம்பிப்பது எப்படி என்று அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன். முன்பு கொஞ்சம் முனைந்து பார்த்தேன். ஆனால் ஆரம்ப கற்றல் சாய்வு மிகவும் செங்குத்தாக இருப்பதால் எனக்கு உள்ளே நுழைய மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது.”
  • “நான் திறந்த மூல மென்பொருள் பற்றி இப்பொழுதுதான் நிறைய படித்தேன். புதுமையான மற்றும் பயனுள்ள பொருட்களை (பயர்பாக்ஸ்!) இம்மாதிரி கூட்டு முயற்சிகள் எப்படி உருவாக்குகின்றன என்றும், எப்படி திறமையாக ஏற்பாடு செய்து ஓட்டப்படுகின்றன என்ற வணிக முன்னோக்கும் தெரிந்துகொள்ள நான் ஆர்வமாக உள்ளேன்.”
  • “நான் திறந்த மூல மென்பொருள் பற்றியும், அதை உருவாக்கும் சமூகங்கள் பற்றியும், மற்றும் அதன் சமுதாய தாக்கம் பற்றியும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள உற்சாகமாக இருக்கிறேன்.”
  • “என்னை இந்த நிகழ்வுக்கு ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்! இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் போல் தோன்றுகிறது!”

நான் என் கணினி முன் உட்கார்ந்து இதைத் திரும்பத் திரும்பப் படித்தேன். “இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது! இவர்களெல்லாம் இவ்வளவு ஊக்கத்துடன் இருக்கிறார்களே!” என்று உரக்க சொல்லிக்கொண்டேன்.

இந்த மாணவர்கள் பல்வேறு இன மற்றும் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். விண்ணப்பதாரர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். பென் கணினி அறிவியல் துறையை விட சற்று விகிதம் கூடவே  இருந்தது. யுவியும் நானும் மிக உற்சாகமான முப்பது மாணவர்களைத் தேர்வு செய்து, எங்களை சந்திக்க சனிக்கிழமை வரச்சொன்னோம்.

இப்போது நமக்கு ஆசிரியர்கள் தேவை. விரைவாக வளரத் தொடங்கும் எங்கள் சமூகத்துக்கு ஃபிரீநோட்- ல் (Freenode) #penn என்ற பெயரில் ஃபெலிஸ் ஒரு அரட்டை அறை ஏற்பாடு செய்தார். எங்கள் நல்ல நேரம் ஸாக் கோல்ட்பர்க் (Zach Goldberg) என்ற குனோம் (GNOME) கொந்தர் (hacker) அரட்டை அறைக்கு வந்தார். அவரை நியூயார்க்கிலிருந்து ஒரு பேருந்து எடுத்து, அவர் கல்வி கற்ற பென்-க்கு வரச் சொல்லி ஏற்க வைத்தோம். என் நண்பர்கள் ஜொனாதன் சிம்ப்சன்-ம் (Jonathan Simpson) மற்றும் ஜான் ஸ்டம்போ-வும் (John Stumpo) கற்பிக்கும் அணியில் சேர்ந்தனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகலும் மாலையும் தளவாடங்களை ஏற்பாடு செய்வதில் நாங்கள் கழித்தோம். இரவு ஒரு மணி வாக்கில் யுவியும் நானும் நாங்கள் கற்பிக்க வேண்டிய தலைப்புகளை மாற்றிக்கொள்ள முடிவு செய்தோம். மாணவர்களை அவர்கள் அனுபவ அடிப்படையில் குழுக்களாகப் பிரித்து ஃபெலிஸ் ஏற்பாடு செய்தார். அதன் பின்னர்தான் நாங்கள் அனைவரும் அன்று தூங்க முடிந்தது.

ஒரு சுறுசுறுப்பான சனிக்கிழமை

காலை 10 மணி அளவில் ஆசிரியர்கள் அனைவரும் வந்து சேர்ந்தார்கள். மாணவர்கள் பயன்படுத்த நாங்கள் கம்பியில்லாத் தொடர்பகம் (Wi-Fi) அமைத்தோம். ஆசிரியர்கள் தொடர்ந்து அதே தலைப்பை நான்கு முறை கற்றுக் கொடுப்பார்கள். எனவே நாங்கள் எங்கள் பாட திட்டத்தை மேம்படுத்த வாய்ப்பு இருந்தது. மாணவர்கள் ஆசிரியர்களை மாற்றம் செய்து திறந்த மூல சமூகத்தின் நான்கு பகுதிகளில் ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் செய்தனர்.:

  • இணையத் தொடர் அரட்டை (IRC), அஞ்சல் பட்டியல்கள் போன்ற தொடர்பாடல் தொழில்நுட்பங்கள்
  • திறந்த மூல நிரலை எப்படி பெறுவது, தொகுப்பது, மற்றும் மாற்றுவது
  • திட்ட அமைப்பு, பதிப்பு கட்டுப்பாடு, வழுத்தடம் கண்காணிப்புகள், மற்றும் ஒரு திட்டத்தில் உள்ள வெவ்வேறு பணிகள்
  • லினக்ஸ் மற்றும் கட்டளை வரி திறன்கள்

நாங்கள் ஒரு இடைவேளை மதிய உணவுக்காக எடுத்தோம். மற்றொரு முறை பொதுவாக கட்டற்ற மென்பொருள் நெறிமுறைகள் பற்றி விவாதிக்கவும் மற்றும் குறிப்பாக உரிமம் பற்றிப் பேசவும். இறுதியாக, மாணவர்கள் நான்கு தொகுதிகளையும் பார்த்த பிறகு, எல்லாவற்றையும் சேர்த்து ஒரு திறந்த கலந்துரையாடல் இருந்தது. மொத்தம் முப்பது மாணவர்களில் சுமார் இருபது பேர் கடைசி வரை விடாது இருந்தார்கள்.

பின்னூட்டம் பெரும்பாலும் நேர்மறையாகவே இருந்தது. ஒரு மாணவர், திறந்த மூலத்துக்கு பங்களிப்பு பற்றி கூறுகையில், “நீங்கள் அதை மிகவும் செய்யக்கக்கூடியதாக உணரச் செய்தீர்கள்” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நீங்கள் பங்களிக்கவோ மற்றபடி உதவவோ ஒரு தொழில் நெறிஞராக இருக்க வேண்டும் என்று இல்லை” என்றார். மற்றொருவர் தங்கள் பல்வேறு விதமான பயிற்றுநர்களை இரசித்து “பல்வேறு ஆளுமைகள், வித்தியாசமான கண்ணோட்டங்கள்” என்று கூறினார்.

ஒரு மாணவர், குறிப்பாக கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் பின்னால் உள்ள கொள்கைகள் மற்றும் நெறிமுறைகள் பற்றிய விவாதத்தால் ஈர்க்கப்பட்டார். “இது எல்லாவற்றிற்கும் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தைத் தருகிறது,” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். எனினும், அவர் கொந்தர் (“hacker”) என்ற எங்கள் பயன்பாடு தொந்தரவு செய்யும் திசை திருப்பியாக உள்ளது என்றார்.

தொகுத்துரைத்தல் முடிவில், ஒரு மாணவர் அடுத்த நிகழ்வு எப்போது நடத்துவோம் என்று கேட்டார். அந்த கணத்தில், யுவியும் நானும் நம்பவே முடியாமல், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

மொத்தத்தில், மாணவர்கள் நிகழ்வின் யதார்த்தமான இயல்பை அனுபவித்து மகிழ்ந்தார்கள். ஒரு மாணவர் எங்கள் “உரையாடல் தொனியை” அனுபவித்து மற்றும் விளக்கினார், “திறந்த மூல நபர்கள் பாதி இயந்திரம் பாதி மனிதன் இல்லை என்று அறிய நன்றாக இருந்தது.” மற்றொருவர், “தொடர்ந்து கட்டணமில்லாமலே நடத்துங்கள்!!” என்று எங்களை வேண்டிக்கொண்டார்.

Asheesh Laroia

மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: அஷீஷ் லாரோயா (Asheesh Laroia) கணினி தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வமுடையவர்களிடையே தோழமையுணர்ச்சி வளர்க்க விரும்புகிறார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கணினி இயந்திரத் தொகுதி சங்கத்துக்கு (Johns Hopkins Association for Computing Machinery) தலைமை தாங்கினார். சான் பிரான்சிஸ்கோவில் வாழ்ந்த போது Noisebridge மற்றும் EFF -ல் பைதான் வகுப்புகள் கற்பித்தார். இப்போது சோமெர்வில் (Somerville, MA) வாசியான இவர் உகாண்டாவில் ஐ.நா.வுக்கும், EFF, மற்றும் கட்டற்ற கலாச்சார மாணவர்களுக்கும் (Students for Free Culture) அவரது தொழில்நுட்ப திறன்களை தன்னார்வலராகச் செய்தார். மற்றும் டெபியன் லினக்ஸ்-க்கு நிரலாளர். அவர் 2009-ல் அரையாண்டு வரை கிரியேட்டிவ் காமன்ஸ்-ல் (Creative Commons) வேலை செய்தார். பின்னர் ஓபன்ஹாட்ச் (OpenHatch) இணை நிறுவனர் ஆனார்.

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: