களை கட்டிய கட்டற்ற மென்பொருள் திருவிழா – நிகழ்வுக் குறிப்புகள்

எப்படித் தொடங்கினோம்?
முதன்முதலில் கட்டற்ற மென்பொருளுக்கு என நிகழ்வு ஒருங்கிணைக்கலாமா என தமிழறிதத்தின் செயலாளர் சரவண பவானந்தன் ஐயா தமிழ் இணையம் 100 நிகழ்ச்சியில் கேட்டார். கணியம் சீனிவாசன், இங்கே இருக்கிறார், அவரிடம் கேளுங்கள் என்று சொன்னேன். அன்று விழுந்தது தான் இவ்விதை! அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக, சரவண பவானந்தன் ஐயா, சீனிவாசனிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். அந்தத் தொடர் கேள்விகளின் விளைவாக எழுந்ததே இம்மாநாடு.

யார் யாரெல்லாம் இணைந்தோம்?
கணியம் சீனிவாசன், தமிழறிதம் சரவணபவானந்தம், தமிழ் இணையக் கழகம் முனைவர் துரை மணிகண்டன், ஐலக்சி மோகன், தனசேகர், காஞ்சிலக் பரமேஷ்வர், பயிலகம் முத்துராமலிங்கம் ஆகியோர் தொடக்கக் கட்டக் கலந்துரையாடல்களில் கலந்து கொண்டோம். அஷோக், அபிராமி, விக்னேஷ் என இளைஞர்கள் பலரும் அடுத்தடுத்த உரையாடல்களில் இணைந்தார்கள்.

எந்தெந்த அமைப்புகள் இணைந்தார்கள்?
இந்திய லினக்ஸ் பயனர் அமைப்பு, காஞ்சி லினக்ஸ் பயனர் அமைப்பு, பயிலகம்,விழுப்புரம் குனு லினக்ஸ் பயனர் அமைப்பு, ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேஷன் , கணியம்,  ஆகிய அமைப்புகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் இருக்க, திருவிழாத் திட்டமிடல் களைகட்டத் தொடங்கியது.

எங்கே நடத்தலாம்?
முதலில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தலாமா எனச் சிந்தித்தோம். நூலகத்தில் நடத்துவதை விட, ஏதாவது ஒரு கல்லூரியில் நடத்தினால் அந்த மாணவர்களும் பயனடைவார்கள், நமக்கும் இளைஞர்களிடம் கட்டற்ற மென்பொருளைக் கொண்டு சேர்க்கும் மன நிறைவு கிடைக்கும், இடம் கொடுக்கும் கல்லூரியில் தொடர்ச்சியாகப் பயிற்சிப்பட்டறைகளை அந்த மாணவர்களுக்கு நாம் நடத்தவும் வாய்ப்பு கிடைக்கும் என்று கணியம் சீனிவாசன் சொன்னார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கேள்விப்பட்டிருக்கிறோம், இது ஒரே கல்லில் மூன்று மாங்காயாக இருக்கிறதே என்று ஏற்றுக் கொண்டோம். எஸ் ஆர் எம் கல்வி நிலையங்களில் கேட்போம், இலயோலா கல்லூரியில் கேட்போம் என்று ஆளுக்கொரு திசையில் தேடத் தொடங்கினோம்.

கடைசியில் இலயோலா கல்லூரியில் பேசிவிட்டேன், தமிழ்த்துறை நம்முடன் இணைகிறார்கள் என்று கணியம் சீனிவாசன் சொன்ன போது எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி!

எப்போது நடத்துவது?
கட்டற்ற மென்பொருள் நாள் ஒவ்வோராண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை வருகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் மூன்றாம் சனி – 17ஆம் நாள் வந்தது. அன்றே நடத்தி விடலாம் என்று ஐலக்சி மோகன், பயிலகம் முத்துராமலிங்கம் ஆகியோர் தெரிவித்தார்கள். குழுவின் பெரும்பான்மை விருப்பமும் அதுவாகவே இருந்தது. ஆனால், அன்றைய நாளில் [தேர்வு காரணமாகக்] கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அதற்கடுத்த வாரம் தான் இடம் இருக்கிறது என்று சொன்னார்கள். இப்போது என்ன செய்வது என்று சிந்தித்தோம்.

ஏன் செப்டம்பர் 17 நாளன்று மட்டும் நடத்த வேண்டும்? இணையவழி மாநாடு ஒரு நாள், நேரடியாக மாநாடு ஒரு நாள் நடத்துவோம், கற்கும் கருவிகள்(மெசின் லேர்னிங்) பயிற்சிப்பட்டறை, லினக்ஸ் பயிற்சிப் பட்டறை, பைத்தான் பயிற்சிப்பட்டறை, டெவ் ஆப்ஸ்(DevOps) பயிற்சிப் பட்டறை எனப் பல பயிற்சிப்பட்டறைகள் நடத்துவோம் எனச் சீனிவாசன் சொன்ன போது, உள்ளுக்குள் ஒரே பூரிப்பு இருந்தாலும், ஒரு நாள் மாநாடு நடத்துவதற்கே எங்கே நடத்துவது, எப்போது நடத்துவது எனப் பல கலந்துரையாடல்கள் நடத்த வேண்டியிருந்ததே, இதில் ஆறு நாளா என்ற மலைப்பு இருந்தது என்னவோ உண்மை தான்! ஆனால், ‘உள்ளத்தனையது உயர்வு’ என்று முப்பால் முப்பாட்டன் சொல்லியிருக்கிறானே! அது தான் நடந்தது. ஆறு நாள் நடத்த குழு மகிழ்வாக இசைந்தது.

இதையெல்லாம் கேட்ட ஐலக்சி மோகன், ‘நான் வேண்டுமானால், கியூப் சினிமாஸ் நிறுவனத்திடம் இடம் கேட்டுப் பார்க்கிறேன்’ என்றார். ‘சரி எடு வண்டியை விடு கியூப் சினிமாசுக்கு’ என்று எல்லோரும் அவருடன் கியூப் அலுவலகத்திற்குப் பயணமானோம். அங்கே போன பிறகு தான், கியூப் சினிமாஸ் ஆனந்த், கட்டற்ற மென்பொருளை எவ்வளவு நேசிப்பவர் என்று தெரிந்தது. இரண்டு அறைகளைக் காட்டி ‘இதில் எது வேண்டுமோ அதற்கு நிர்வாகத்திடம் நான் பேசுகிறேன்’ என்று சொன்னார். நாங்கள் ஓர் அறையைச் சொன்ன போது “அறை மட்டும் எனத் தர மாட்டோம், அறையுடன் அன்றன்றைய நாளின் தேநீர்ச் செலவு, மதிய உணவு என அனைத்தையும் நாங்களே தான் செய்வோம்” என அவர் சொன்ன போது, எங்களுக்கு வந்த வியப்புக்கு அளவே இல்லை. இப்படியாக செப்டம்பர் 18, அக்டோபர் 1,2 ஆகிய நாட்களில் கியூப் சினிமாஸ்,மைலாப்பூரில் நடத்த ஒப்புதல் வாங்கினோம்.

செப்டம்பர் 17 என்ன நடந்தது?
செப்டம்பர் 17 தான் கட்டற்ற மென்பொருள் நாள் அல்லவா? அன்றைய நாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தோம். கட்டற்ற மென்பொருளுக்கு அயராது உழைக்கும் அயலகத் தமிழ்க் கணினி அறிஞர்களை அழைப்போம் என முடிவெடுத்தோம். இலங்கையில் இருந்து மயூரன், அமெரிக்காவில் இருந்து முத்து அண்ணாமலை, சுகந்தி ஆகியோர் பேசுவதாக ஒப்புதல் கொடுத்தார்கள்.

மாநாட்டில் யார் பேசுவது?
மாநாட்டை வழக்கமான மாநாடாக இல்லாமல், கட்டற்ற மென்பொருள் வலியுறுத்தும் விடுதலையை உணர்த்தும் வகையில் புதுமையாக நடத்த வேண்டும் என்று சிந்தித்தோம். ‘முழுக்க முழுக்கப் பெண்களே பேச்சாளர்களாக இருந்தால் நன்றாக இருக்குமே’ என்றார் முத்துராமலிங்கம். ‘இது நன்றாக இருக்கிறதே’ என்றார் சீனிவாசன். பெண்களே பேச்சாளர்கள் என்பது சரி, ஆனால் தகுதி வாய்ந்த பெண்கள் ஐந்தாறு பேர் தேவை, அத்தனைப் பேர் நம்மிடம் இருக்க வேண்டுமே என்று மாநாட்டுக் குழுவினர் கேள்வி கேட்க, ‘இது பெரியார் பூமி, திறமை வாய்ந்த பெண்களுக்கா பஞ்சம்? அந்தப் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றார் சீனிவாசன். சொன்னபடியே, விஜயலட்சுமி, ஹரிப்பிரியா, கலாராணி, ஷாகின், ஷர்மிளா, நித்யா என ஒரு படையையே கூட்டியும் வந்தார்.

இணையத்தளம், சான்றிதழ் வடிவமைப்பது யார்?
மாநாட்டுக்கென இணையத்தளம் வேண்டுமே என்று கேட்ட போது, ஐலக்சி தனசேகர், ‘எனக்கு இணையத்தள வடிவமைப்பில் போதுமான முன் அனுபவம் இல்லை, ஆனால் முழுப்பொறுப்பையும் நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்று மனமுவந்து பொறுப்பெடுத்துக் கொண்டார். மோகனும் காஞ்சிலக் பரமேஷ்வரும் ‘நாங்களும் அவருக்கு உதவுகிறோம்’ என்று இணைந்து கொண்டார்கள். சான்றிதழ் வடிவமைக்கும் பொறுப்பையும் இணையவழி மாநாட்டுக்கு உரிய மென்பொருளைத் தேடி ஒளிபரப்பும் பொறுப்பையும் பரமேஷ்வர் எடுத்துக் கொண்டார். ஒட்டுத்தாள்(ஸ்டிக்கர்) பொறுப்பை முனைவர் தமிழரசன் எடுத்துக் கொண்டார். மாநாட்டில் குறிப்பேடு, எழுதுகோல், சான்றிதழ் அச்சடித்துக் கொண்டு வரும் பொறுப்பை முத்துராமலிங்கம் எடுத்துக் கொண்டார்.

பயிற்சிப்பட்டறைகள் யார் நடத்துவது?
பயிற்சிப்பட்டறைகள் நடத்தப் போவது யார் என்று பேசும் போது தான் தெரிந்தது, ஐலக்சி மோகன் செப்டம்பர் 23ஆம் நாள் வெளிநாட்டுக்குக் கிளம்புகிறார் என்று. வெளிநாட்டுக்குக் கிளம்ப சில நாட்களே இருந்த போதும் ஒரு முழு நாள் ஒதுக்கி லினக்ஸ் பயிற்சி கொடுத்துச் செல்கிறேன் என்று ஒத்துக் கொண்டார் மோகன். ‘என்னால் டெவ்ஆப்ஸ் பற்றிய அறிமுகப் பட்டறை நடத்த முடியும்’ என தனசேகர் சொல்ல, பைத்தான் பயிற்சிப்பட்டறையைத் தன் பைக்குள் போட்டுக் கொண்டார் முத்துராமலிங்கம். நித்யாவும் முனைவர் தமிழரசனும் கற்கும் கருவிகளுக்குப் பொறுப்பேற்க மாநாடும் பயிற்சிப்பட்டறைகளும் ஒரு முழுமை பெற்ற வடிவத்திற்கு வந்தன.

இலவச மாநாடா? பணம் பெற்று மாநாடா?
மாநாட்டை இலவசமாகவே நடத்தலாம், மாநாட்டுக்கு ஆகும் செலவைப் பகிர்ந்து கொள்ளலாம் என ஒரு சாரார், மாநாட்டுக்குக் குறைந்த தொகை பெற்று நடத்தலாம் என்று ஒரு சாரார், மாணவர்களுக்கு மட்டும் குறைந்த தொகை என்று ஒரு சாரார் என்று இந்தக் கலந்துரையாடல் களை கட்டியது. ஒரு திரைப்படத்திற்குப் போனாலே இரு நூறு ரூபாய் இல்லாமல் முடியாது, எனவே, அந்த அளவு குறைந்த தொகை வாங்கிக் கொள்ளலாம், அதை மாநாட்டுக்கு வருவோர்க்கான தேநீர், உணவுக்குச் செலவிடலாம் என்று நிறைவில் முடிவானது. [பணம் செலுத்துவோரின் எண்ணிக்கையைப் பொறுத்து எத்தனைப் பேர் வருவார்கள் என்பதை ஊகிக்கவும் முடியும் என்பது இன்னொரு காரணம்.] சான்றிதழ், குறிப்பேடு, எழுதுகோல், இன்ன பிற செலவுகளை நாமே பகிர்ந்து கொள்ளலாம் என முடிவெடுத்துக் கொண்டோம்.

மாநாட்டில் விருது:
தமிழ்க் கணிமைக்கு உழைக்கும் பெருந்தகை ஒருவர்க்கு விருது கொடுக்கலாமே என்றார் சீனிவாசன். யாருக்குக் கொடுக்கலாம் என்ற போது, எல்லோர் மனத்திலும் ஒரு மனதாக நின்றவர் முனைவர் ச. குப்பன். தமிழ்க்கணிமை பற்றித் தொடர்ந்து எழுதி வரும் குப்பன் அவர்களுக்குத் தமிழ்க் கணிமை எழுத்து விருது கொடுக்க முடிவெடுத்துக் கொண்டோம்.

படையெடுத்த பயிலகம் மாணவர்கள்:
தமிழில் கட்டற்ற மென்பொருள் பற்றி நடக்கும் தொழில்நுட்பம் சார்ந்த மாநாட்டில் கலைகளையும் புகுத்திக் கலகலப்பை ஏற்படுத்தினார்கள் பயிலகம் மாணவர்கள். இளைஞர்களை ஈர்க்கும் வகையில் கட்டற்ற மென்பொருள் பற்றிய மீம்கள், நாடகங்கள் என ஓயாமல் உழைத்து மாநாட்டில் எல்லோரும் விரும்பும் வகையில் பரிமாறினார்கள். பெண்களே முழுக்க முழுக்கப் பேசுகிறார்கள் என்றதும் பயிலகம் மாணவிகள் இணைந்து நிகழ்ச்சியின் வரவேற்புரை, பேச்சாளர்கள் பற்றிய அறிமுக உரை, தொகுப்புரை ஆகிய அனைத்தையும் தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். இன்னொரு பக்கம், விக்னேஷ், எல்லாப் பேச்சாளர்களுக்கும் தனித்தனி விளம்பரப் பதாகைகளை உருவாக்கிச் சமூக ஊடகங்களில் பரப்பிக் கொண்டிருந்தார். ‘நாங்கள் இல்லாமல் மாநாடா?’ என்று இலயோலா தமிழ்த்துறை சார்பாக மூன்றாமாண்டு மாணவர் சந்தோஷும் மாநாட்டுத் தொகுப்புரைக்குப் பொறுப்பெடுத்துக் கொண்டார்.

அசத்திய பேச்சாளர்கள்:
செப்டம்பர் 24ஆம் நாள் பேசிய பேச்சாளர்கள் அனைவரும் அசத்தலான பேச்சை வெளிப்படுத்தினார்கள். முறையான ஆயத்தங்களுடன் ஒவ்வொரு பேச்சாளரும் வந்திருந்தது அமர்வின் கருத்துகளை அழகாக ஒவ்வொருவரிடத்திலும் கொண்டு போய்ச் சேர்த்தது. ஒவ்வோர் அமர்வுக்கும் பிறகு பார்வையாளர்கள் கேள்விக்கணைகளை வீச, அவற்றிற்கு அவர்கள் மறுமொழி கொடுக்க என அரங்கம் அமர்க்களமானது. தாய்த்தமிழில் தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்கும் போது எல்லோருக்கும் எளிதில் போய்ச் சேரும் என்பது தொழில்நுட்பம் சாராத தமிழ்த்துறை மாணவர்களும் ஒவ்வோர் அமர்விலும் கேள்வி கேட்டு, விடைகள் சொன்ன போது எல்லோர் மனத்திலும் நின்றது.

அக்டோபர் 1, 2 ஆகிய இரண்டு நாட்களும் மீண்டும் கியூப் சினிமாஸ் அலுவலகத்தில் பயிற்சிப்பட்டறைகள் நடந்தன. அக்டோபர் முதல் நாள் பயிற்சிப்பட்டறை பைத்தான் பற்றியது. முதலில் முத்துராமலிங்கம் நடத்துவதாக இருந்த நிகழ்வு அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடைசி நிமிட மாற்றத்தில் கணியம் சீனிவாசன் சீரும் சிறப்புமாக நடந்தது. ‘பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தது போலத்’ தான் பைத்தான் நடத்தியதாகச் சீனிவாசன் பணிவாகப் பின்னர் சொன்னாலும் கலந்து கொண்டோர் அனைவரும் மகிழ்ச்சியுடன் மெச்சும் வண்ணம் சிறப்பாக அமைந்திருந்தது அவருடைய பைத்தான் பயிற்சிப்பட்டறை.

எல்லோரும் எப்போது எப்போது எனக் காத்திருந்த டெவ்ஆப்ஸ் பயிற்சிப்பட்டறைக்காக அக்டோபர் 2ஆம் நாள் களம் இறங்கினார் ஐலக்சி தனசேகர். புதியவர்களுக்கும் மிக எளிதாகப் புரியும் வண்ணம், தேர்ந்தெடுத்த எடுத்துக்காட்டுகளுடன் பட்டறையை அவர் கொண்டு சென்ற பாங்கு, அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. அந்த ஒரு நாள் பட்டறைக்காக, எத்தனை மணிநேரம் உழைத்திருக்கிறார் தனசேகர் என்பது அந்தப் பட்டறையில் பங்கெடுத்த அனைவரும் உணரும் வண்ணம், எளிமையாகவும் இனிமையாகவும் அமைந்து சிறந்தது டெவ்ஆப்ஸ் பயிற்சிப்பட்டறை.

சிற்றரங்கங்கள்:
கட்டற்ற மென்பொருள் மாநாட்டின் ஒரு பகுதியாகச் சிற்றரங்கங்கள் அமைப்பது என முடிவெடுத்தோம். லிப்ரே ஆபிஸ், செலினியம், ஓப்பன் ஷாட், இமாக்ஸ், பைத்தான், கிட் எனப் பல தலைப்புகளில் இளைஞர்கள் சிற்றரங்கங்கள் அமைத்து மாநாட்டின் போது செயல்முறை விளக்கங்கள் கொடுத்தது பங்கெடுத்தோர் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருந்தது.  முனைவர் தமிழரசன், தம்முடைய அணியை இதில் மொத்தமாக இறக்கினார்.  பலரது பார்வையையும் பாராட்டையும் அவர் அணியின் சிற்றரங்கங்கள் பெற்றன.

துருவங்கள் புதினம் வெளியீடு:
இலயோலா கல்லூரியில் துருவங்கள் புதினம் வெளியிடப்பட்டது. கல்லூரியின் செயலர் அருள்தந்தை ஜெயராஜ் அடிகள் வெளியிட, முனைவர் ச. குப்பன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். அருள்தந்தை தம்முடைய தலைமையுரையில் கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்திக் கல்லூரிக்குப் பயனுள்ள மென்பொருளை உருவாக்கினால் அதன் மொத்தச் செலவையும் கல்லூரியே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்த போது அனைவரின் கண்களும் வியப்பில் விரிந்தன; கைகள் ஒலியெழுப்பத் தாமாகவே ஒன்றாகக் குவிந்தன. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அமல்ராஜ் அவர்களும் பொறுப்பாசிரியர் முனைவர் டான் ஸ்டோனி அவர்களும் மாநாட்டின் இரண்டு நாட்களும் (சனி, ஞாயிறாக இருந்த போதும்) கூடவே இருந்து வழிநடத்தியது மிகுந்த நெகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் முனைவர் டான் ஸ்டோனி, தேநீர், உணவுக்கு ஏற்பாடு செய்வது, அரங்கங்களுக்கு ஒப்புதல் பெற்றுத் தருவது, அழைப்பிதழ் வடிவமைப்பது என அனைத்திலும் கூடவே நின்று ‘குகனோடு ஐவரானோம்’ என்பதைப் போல, ‘சீனிவாசன், மோகன், முத்துராமலிங்கம், தனசேகர்’ ஆகியோர் ‘டானுடன் ஐவரானோம்’ என்று சொல்வது பொருத்தம் என்பதாகப் பழகுவதற்கு எளிமையாகவும் பண்பில் அருமையாகவும் உழைப்பில் முதன்மையாகவும் நடந்து கொண்டார்.

 

எதிர்பாராப் பரிசுகள்:
செப்டம்பர் 18ஆம் நாள் லினக்ஸ் பயிற்சிப் பட்டறையின் நிறைவில் கியூப் சினிமாஸ் நிறுவனத்தார், வந்த எல்லோருக்கும் வெப்பநிலைமானியுடன் கூடிய தண்ணீர்ப் புட்டியைக் கொடுத்து அசத்தினார்கள்.
செப்டம்பர் 25ஆம் நாள் கற்கும் கருவிகள் பயிற்சிப் பட்டறையின் நிறைவில் எல்லோருக்கும் துருவங்கள் புதினம் பரிசாகக் கொடுக்கப்பட்டது. இந்தப் புதினத்தை எழுதிய நக்கீரன், இந்தப் புத்தகத்திற்காக ஒரு காசு கூட வாங்கிக் கொள்ளவில்லை என்பதுடன் படைப்பாக்கப் பொது உரிமத்தில் இப்புத்தகத்தை வெளியிடக் கொடுத்திருக்கிறார் என்பதையும் சேர்த்துச் சொன்ன போது கூட்டத்தில் எழுந்த கையொலி அடங்க நெடுநேரம் பிடித்தது.

மாநாட்டுப் படிப்பினைகள்:
பாடம் கற்பித்து அதன் பிறகு தேர்வு என்பது பள்ளித் தேர்வு, தேர்வு வைத்து அதில் இருந்து பாடங்கள் கற்பிப்பது வாழ்க்கைத் தேர்வு என்று சொல்வார்கள். அது உண்மை என்பது போல, இந்த மாநாடும் பல பட்டறிவுகளைப் போகிற போக்கில் அள்ளித் தெளித்துச் சென்றது.

1. மாநாடு நடத்துவோம் என்று முடிவு செய்யும் போது இணைந்தவர்களுள் சிலரால், தங்களுடைய பணிச்சூழலால், பல்வேறு காரணங்களால் தொடர்ந்து மாநாட்டு வேலைகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டது.
2. தொடர்ந்து மாநாட்டு வேலைகளில் ஈடுபட்ட சிலருக்கு, இடையே உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன.
3. ‘ஊருக்கு நல்லது செய்வேன்’ என்று இறங்கி வேலை செய்யும் போது எதிர்பாராத பல இடங்களில் இருந்து உதவிகள் வந்து கொண்டே இருந்தன.
4. மாநாடு நடத்துவதற்குக் காசு வேண்டும் என்பதைக் காட்டிலும் மன உறுதி தான் முதன்மையான தேவை.
5. ஒரு நல்ல காரியத்திற்காக நான்கு பேர் சேர்ந்தால் போதும், தேர் இழுத்து விடலாம்.
6. இணையவழி நிகழ்வுகளைக் காட்டிலும் நேரில் மனிதர்களுடன் அளவளாவி நிகழ்வுகள் நடத்துவது பல மடங்குப் பலனைத் தரும்.
7. மனத்தளவில் நாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும் மாநாட்டு வேலைப் பளு காரணமாகச் சின்னச் சின்ன தவறுகள் நடக்கத் தான் செய்யும். அவற்றைத் திறந்த மனத்துடன் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தேவை.
8. மாநாடு நடத்துவதற்கு முன்னரே நான்கு நாட்களை மாநாட்டுக்கென ஒதுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நான்கு நாட்கள் தொடர்ச்சியாகத் தேவையில்லை. மாநாட்டு இடத்தைப் பார்ப்பது, இடம் கொடுப்போரிடம் பேசி உறுதித்தன்மையை ஏற்படுத்துவது என்பன போன்ற அடிப்படைகளைச் செய்வதற்கு இந்த நேரம் பயன்படும்.
9. ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்று முப்பால் முப்பாட்டன் சொல்லிய சொல் ஆயிரத்தில் இல்லை, கோடியில் ஒரு வார்த்தை. அந்த வார்த்தைகளைச் சரியாகப் பின்பற்றினாலே போதும்.

இந்த மாநாடு, பயிற்சிப்பட்டறை எப்படி இருந்தது என்று கலந்துகொண்ட எல்லா மாணவர்களிடமும் கருத்துகள் கேட்டோம். அதில் பாலாஜி என்னும் மாணவர், ‘ஒரு காட்டுத்தீயை உருவாக்க இன்னொரு காட்டுத்தீ தேவையில்லை. ஒரு சிறு நெருப்பு போதும். அந்த நெருப்பை இந்த மாநாடு பற்ற வைத்திருக்கிறது’ என்று சொன்னார். அதுவே உண்மை.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!
– பாரதியார்

 

மாநாட்டு இணையத்தளம்: tossconf22.kaniyam.com/
படங்கள்: forums.tamillinuxcommunity.org/t/topic/662

கட்டற்ற மென்பொருள் விளம்பரப் படங்கள்: youtube.com/watch?v=Km5XAH8F5yY

%d bloggers like this: