மென்பொருள் விடுதலை நாள்

இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னை (ILUGC) மற்றும் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை (FSFTN) ஆகியவற்றின் சார்பில் தங்கள் கல்லூரியின் ஆசிரியர்களையும் மாணவர்களையும் மென்பொருள் விடுதலை நாள் (Software Freedom Day) கொண்டாட்டத்திற்கு அழைக்கிறோம்.

மென்பொருள் விடுதலை நாள் என்பது கட்டற்ற மென்பொருளைக் கொண்டாட உலகெங்கிலும் நடக்கும் நிகழ்வு. கட்டற்ற மென்பொருளையும் அதன் கோட்பாடுகளையும் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்தல், அதனைப் பயன்படுத்துவதோடு பங்களிக்கவும் ஊக்குவித்தல் ஆகிய குறிக்கோள்களை அடையும் வண்ணம் கட்டற்ற மென்பொருட்களை மக்களின் அன்றாட வாழ்வில் அறிமுகப்படுத்தும் முயற்சி இது.

குனு/லினக்ஸ் என்பது ஒரு கட்டற்ற இயங்குதளம். இது நிலையானது, வைரஸ் தொல்லைகள் இல்லாதது. மேலும் தனியுரிம மென்பொருட்களுக்கு இணையான, அவற்றை விடச் சிறப்பான பல கட்டற்ற மென்பொருட்கள் இலவசமாகவே கிடைக்கின்றன.

மென்பொருள் விடுதலை நாளின் நோக்கம் மாணவர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், கொள்கை இயற்றுபவர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வை அதிகரிப்பதே!

இவ்வாண்டு ஒரு வாரம் முழுதும் இதனைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம். இதன் தொடக்கம் செப்டம்பர் 15 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள டி.ஜி வைஷ்ணவ் கல்லூரியில் நடைபெறும். அதன்பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி பொறியியல் கல்லூரி (CEG) வளாகத்தில் செப்டம்பர் 22-ம் தேதி நிறைவுபெறுகிறது.

கட்டற்ற மென்பொருள் பற்றி அறிந்துகொள்ள ஆர்வமுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம், அனுமதி இலவசம். இந்நிகழ்ச்சியில் FSFTN மற்றும் ILUGC தன்னார்வலர்களும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியரும் பல்வேறு கட்டற்ற மென்பொருட்களைச் செயல்முறையோடு விளக்குவார்கள். அன்றாடம் பயன்படுத்தும் ஆஃபிஸ், இமேஜ் எடிட்டிங் கருவிகள், ஆடியோ/வீடியோ எடிட்டிங் கருவிகள், விளையாட்டுகள், PHP, பைத்தான் போன்ற நிரலாக்க மொழிகள், துருபல், ஜூம்லா உள்ளிட்ட இணையதள வடிவமைப்பு மென்பொருட்கள், லினக்ஸ் நிறுவும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கங்கள் பெறலாம். இடம்பெறவுள்ள அனைத்துத் தலைப்புகளின் பட்டியலைக் காண; wiki.ilugc.in/index.php?title=Sfd2012

கட்டற்ற மென்பொருள் என்பது எப்பொருட்டும் பயன்படுத்த, பிறரிடம் பகிர்ந்துகொள்ள, மாற்றங்கள் செய்ய மற்றும் மாற்றிய பின் வெளியிட சுதந்திரம் அளிக்கும் மென்பொருளைக் குறிக்கும். பெரும்பாலான கட்டற்ற மென்பொருட்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இதன் காப்புரிம அமைப்பு இந்தியா போன்ற நாடுகளுக்கு தனியுரிமக் கோட்பாட்டு அமைப்புகளுக்கு மாற்றாக அமைகின்றன.

வெவ்வேறு தேவைகளுக்கேற்ற பல வகையான கட்டற்ற மென்பொருட்கள் இருக்கின்றன. இணையத்தை உலாவ மொசில்லா ஃபையர்பாக்ஸ், காணொளிகளுக்கு VLC தொடங்கி குனு/லினக்ஸ் இயங்குதளம், ஓப்பன் ஆஃபிஸ், விளையாட்டுகள், நிரலாக்க மொழிகள், கல்விக்கான கருவிகள் வரை இதில் அடங்கும்.

இந்திய லினக்ஸ் பயனர் குழு, தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை ஆகியவை தமிழகமெங்கும் பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்கங்கள் மற்றும் பல்வேறு பணித்திட்டங்கள் மூலம் கட்டற்ற மென்பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பும் நோக்கில் செயல்படும் அமைப்புகள்.

கட்டற்ற மென்பொருள் சார்ந்த தரமிக்க ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் வெளிக்கொணரும் நோக்கில் கணியம் மாத இதழின் சார்பில் ஒரு கட்டுரைப் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் விவரங்கள் www.kaniyam.com/essay-competition பக்கத்தில் உள்ளன. இதனைத் தங்கள் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவருக்கும் தெரிவித்து இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கட்டற்ற மென்பொருளையும் அது ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களையும் கண்டறிய செப்டம்பர் 15, சனிக்கிழமை!

 

இடம்: டி ஜி வைஷ்ணவ் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை – 106
நேரம்: காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை
தொடர்புக்கு: ஶ்ரீனிவாசன் (9841795468), அருண் (9488000707)

ilugc.in/content/software-freedom-day-celebrations-2012-invitation/

ilugc.in/wp-content/uploads/2012/09/sfd-invitation.pdf

%d bloggers like this: