துருவங்கள் – அத்தியாயம் 1 – கல்யாணம் ஆகி நாலு பசங்க

கல்யாணம் ஆகி நாலு பசங்க

காலை 8:30 மணி, ‘என் லைவ்ப்ல ஒரு பொண்ணா?’, மதன் பல் துலக்கும் போது கண்ணாடி முன்னின்று அவன் பிம்பத்தை பார்த்து கேட்டான். ‘ரொம்ப கற்பனை பண்ணாதடா, அவ பேர பார்த்தல்ல, karthik.a.lakshman, இதுல lakshman அவ அப்பாவா இல்லாம ஹஸ்பண்ட்டா இருந்தா? அப்படியே அது அவ அப்பாவா இருந்தாலும் அவ உன்ன விட பெரியவளா இருந்தா?’, இது அவன் மனசாட்சி, ‘உன் வாயில நல்ல வார்த்தையே வராதா? சனியனே’, மதன் அவன் மனசாட்சியை திட்டினான். ‘என்ன எவ்வளவு வேணாலும் திட்டு, எனக்கு பழகிடுச்சு, ஆனா நான் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லிட்டு திட்ரா’, இது அவன் மனசாட்சி, ‘நீ சொல்றதும் கரெக்ட் தான், நடக்கிறது நடக்கட்டும்’, அவனை தெளிவுபடுத்திக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்பினான்.

காலை 9:30 மணி, ஆபீஸ் வந்தவனுக்கு அதிர்ச்சி, ‘அடப்பாவிகளா, நான்தான் 9:30 மணிக்கு வர்றதில்லை, முக்காவாசி பேரு என்ன மாதிரிதானா?’, முனுமுனுத்துக்கொண்டே வேர்க்ஸ்டேஷனில் அமர்ந்தான். ‘டே!! ஆச்சர்யமா இருக்கு, எனக்கு முன்னாடி நீயா?? அப்படி அர்ஜன்டா டாஸ்க்கு கூட ஒன்னும் இல்லையே?? என்னாச்சு??’ உதய் கேட்க ஆரம்பித்தார். ‘ஒன்னும் இல்ல, தூக்கம் வரல, அதான்’ என்ற மதனை பார்த்து, ‘ஓகே, ஓகே’ என்று சந்தேகத்துடன் வேலையை பார்க்க ஆரம்பித்தார் உதய்.

வழக்கம்போல் வேலைகளில் மூழ்கியவனுக்கு திடீரென்று நேரம் பார்க்க தோன்றியது, அப்பொழுது மாலை 5:40 மணி, சேட் விண்டோவை பார்த்தான், கார்த்திகா அவைலபில் என்று இருந்தது, ஆனாலும் பிங் பண்ண மதன் தயங்கினான். இப்படியே சிறிது நாட்கள் ஓடியது. ஆரம்பத்தில் மாலை 5:30 மணி வாக்கில் சேட் விண்டோவை பார்த்தவன் நாட்கள் செல்ல செல்ல அதை மறந்து தன் பழைய ரொட்டீனிற்கு திரும்பினான்.

திடீரென்று ஒரு நாள், அதே மாலை 5:45, மதனின் சேட் விண்டோ மினுங்கியது, அதில்,

  • கார்த்திகா

    இருக்கீங்களா?

  • மதன்

    சொல்லுங்க

  • கார்த்திகா

    ஷேல் ஸ்கிரிப்டிங் கத்துக்கணும்

  • மதன்

    கத்துக்கோங்க

  • கார்த்திகா

    விளையாடுறீங்களா, கத்துக்கொடுங்க

  • மதன்

    நான்லாம் யாருங்க உங்களுக்கு கத்துக் கொடுக்குறதுக்கு, நீங்க பெரியவங்க, வயசுல மூத்தவங்க, நாலு பிள்ளைகள் பெத்தவங்க

  • கார்த்திகா

    சோ ஸ்மார்ட், நேரா விஷயத்துக்கு வரீங்க?

  • மதன்

    தெரியாம மண்டைய பிச்சுக்க வேணாம் பாருங்க, அதான்

  • கார்த்திகா

    ஆல்ரைட், ஐயாம் 32 நவ், மேரிட், ஆவ் 2 கிட்ஸ், உங்களுக்கு?

‘உனக்கு வாந்திபேதி வர, காமாலை கொண்டுட்டு போக, என்னன்னமோ நெனச்சுபுட்டனேடி, அப்ப lakshman உன் புருஷன் தானா?’ மனிதனின் மனசாட்சி கொந்தளித்தது, ஆனால் மதனோ அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தான்,

  • மதன்

    ரன்னிங் 25, ஸ்டில் தனிக்கட்டை

  • கார்த்திகா

    தம்பி, ஒலருனியா , எப்படி? ஒரு பொண்ணுகிட்ட வயசு கேட்டவுடன் உன்மைய சொல்லுவாளா? உன்னோட ஏஜ் தெரிஞ்சிருச்சுல்ல, இப்ப சொல்றேன், என்னோட ஒரிஜினல் ஏஜ் 27, உன்ன விட 2 வயசு மூத்தவ. ஸ்டில் பேச்சிலரிட்டி. அக்கான்னு கூப்பிடனும் புரிஞ்சதா?

  • மதன்

    நீங்க ப்ரில்லியன்ட் கா, பசங்க மட்டும் வயச கேட்டவுடனே உண்மைய சொல்லிடு வாங்கன்னு தெரிஞ்சு வச்சிருக்கீங்க. பட் ஐயாம் 28, செக் பண்ணனும், என்னோட ஐடி தரேன் எச்ஆர் எவளாச்சும் உங்களுக்கு பிரண்டா இருப்பால்ல, அவ கிட்ட கொடுத்து வெரிபை பண்ணிக்கோங்க.

  • கார்த்திகா

    ம்ம், நான்தான் அவுட்டா?

  • மதன்

    அத விடுங்க, என்ன விஷயம்?

  • கார்த்திகா

    என்னங்க புதுசா கேட்கறிங்க, ஷெல் ஸ்க்ரிப்டிங் கத்துக்கொடுங்க, ஆக்‌ஷுவலி நான் உங்க டெஸ்க்குக்கே வந்திருப்பேன்.

  • மதன்

    நீங்களாவது நேர்ல வரதாவது

அதன் பிறகு கார்த்திகா டைப் செய்யவில்லை. ‘சொதப்பிட்டியோ’ மதன் உள்ளுக்குள் பேசிக்கொண்டான், மறுபடியும் அவன் வேலையில் மூழ்கினான், சிறிது நேரம் கழித்து யாரோ டெஸ்க் கை தட்டுவது கேட்டு மேலே பார்த்தவனுக்கு அதிர்ச்சி, ‘என்ன பிரதர், உங்க டெஸ்க் வந்தாச்சு, போதுமா? இப்பவாச்சும் சொல்லிக் கொடுப்பீங்களா?’ என்றாள் கார்த்திகா நேரில்.

‘ஆதிவாசிக்கு ஆவின் பாலா, வாழ்வுதான் உனக்கு, அயிட்டு அரேபியா ஒட்டக கணக்கா இருக்கே, நம்ம பயபுள்ளையும் அயிட்டுதான்’ மனசாட்சி கணக்கு போட ஆரம்பித்தது

‘வாங்க சிஸ்டர், உட்காருங்க, என்ன சாப்பிட்டீங்க, காப்பி ஆர் டீ?’ என்று பேசிக்கொண்டே உதய் இருக்குமிடத்தை பார்த்தான் மதன், அவர் முகத்தை காட்டவில்லை ஆனால் அவர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருப்பதை மதனால் நன்றாக உணர முடிந்தது. ‘இருக்கட்டும் ப்ரதர், பரவாயில்லை’ என்றாள் கார்த்திகா. ‘லிப்ட்ல வரலையா, மூச்சு வாங்குது, எந்த ப்ளோர்ல இருந்து நடந்து வந்தீங்க?’ இது மதன், ‘மறுபடியும் உங்க கிட்ட ஏமாற மாட்டேன், எனக்கு தான் உங்க இடம் தெரிஞ்சிருச்சில்ல தேவைப்படும்போது நானே வரேன்’, என்றாள் கார்த்திகா.

‘சரிடா மொக்க, நான் கிளம்பறேன், ஏற்கனவே எம் பொண்டாட்டி ரெண்டு முறை கால் பண்ணிட்டா, நேரத்துக்கு போகலைன்னா வெளியே நிக்க வச்சுருவா’ என்றார் உதய். ‘நா, இது கார்த்திகா, அன்னிக்கு ப்ரொடக்‌ஷன்ல ப்ரச்சன வந்தப்பொ நீங்கதானே இவங்கல ஹெல்ப்புக்கு கூப்பிட்டீங்க’, மதன் அறிமுகப்படுத்தினான். ‘அது கார்த்திக் இல்ல?’ என்றவரிடம், ‘இல்லைங்க, அது karthik.a, கார்த்திகா, நான்தான், ஜாயின் பண்ணும்போது எச்ஆர் பண்ண மிஸ்டேக்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள், ‘ஓ ஓகே நைஸ் டூ மீட் யு, நீங்க கன்டினியுவ் பண்ணுங்க, நான் கிளம்பறேன்’, என்று செல்லி விடைபெற்றார் உதய்.

‘மொக்க, நிக்னேமோ? பொண்ணுங்க கூட அதிகம் பேசுவீங்களா? நிறைய கேர்ள் பிரண்ஸ் இருக்காங்களோ?’, என்றவளிடம், ‘கொஞ்ச நாள் கழிச்சு நீங்களே புரிஞ்சுக்குவீங்க, வந்த வேலையை ஆரம்பிக்கலாமா?’, என்றான் மதன்.

  • கார்த்திகா

    ஆமா? ஷெல் ஸ்கிரிப்டிங் கத்துக்க எத்தனை நாள் ஆகும்? ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செலவாகும்?

  • மதன்

    என்னது? எத்தன நாள்? எவ்வளவு நேரமா? ஒரே நாள், ஐஞ்சு நிமிஷம், உங்க லினக்ஸ் சர்வர்ல போய், ‘man sh’ கமாண்ட் ஆடிங்க, ஒரு மேனுவல் வரும், அத ஒரு எழுத்து விடாம மனப்பாடம் பண்ணுங்க, எவனா, ஷெல் ஸ்கிரிப்டிங் பத்தி கேட்டான்னா, நீங்க படிச்சத அப்படியே வாந்தி எடுக்க அது போதும்

  • கார்த்திகா

    கிண்டலா?

  • மதன்

    சீரியஸ்சாங்க, நீங்க ‘man sh’ கமாண்ட் மூலம் வர மேனுவல்ல இருக்குற அத்தனை விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டா ஷெல் ஸ்கிரிப்டிங் தெரிஞ்சா மாதிரி

  • கார்த்திகா

    ஆனா நீங்க வேற எதையோ பத்தி முதல்ல செல்ல வந்தீங்கன்னு நினைக்கிறேன்?

  • மதன்

    உங்களுக்கு ஷெல் ஸ்கிரிப்டிங் பத்தி மட்டும் தானே தெரிஞ்சிக்கனும், அதுக்கு அந்த மேனுவல் போதும்.

  • கார்த்திகா

    இல்ல இல்ல, நிறைய தெரிஞ்சுக்கணும், ஷெல் ஸ்கிரிப்டிங், லினக்ஸ்

  • மதன்

    லினக்ஸ் என்னன்னு நினைச்சுட்டு இருக்கீங்க?

  • கார்த்திகா

    லினக்ஸ் விண்டோஸ் மாதிரி ஒரு OS, சர்வரா நிறைய இடத்துல யூஸ் பண்றாங்க, வைரஸ் வராது, அதானே?

  • மதன்

    லினக்ஸ் வெறும் OS இல்லீங்க, அதுக்குப் பின்னாடி ஒரு சரித்திரமே இருக்கு.

  • கார்த்திகா

    ஹிஸ்டரி? சொல்லுங்க கேட்போம்

  • மதன்

    அதுக்கு நாம 1950 ஸ்கு போகணும் கொஞ்சம் பெரிய கதை, இப்பவே நைட் 09:00 மணி, என்ன நைட் ஸ்டேயா?

  • கார்த்திகா

    நோ வே, பட் கண்டிப்பா நீங்க இந்த கதையை சொல்றீங்க, சரி நான் கிளம்பறேன், சியூ பாய்!!

  • மதன்

    அடுத்து எப்போ?

  • கார்த்திகா

    தெரியாது, நானே வர்ரேன். பாய்!!

  • மதன்

    டேக் கேர், பாய்!!

‘அவகிட்ட ஏன்டா டைம் சொன்ன கேனக்’ சரமாரியாக திட்டியது மனசாட்சி, அதற்கு மதன், ‘அவ இப்ப கெலம்பலன்னா, கதை சொல்லி முடிக்கும் வரை இங்கேயே இருந்திருப்பாடா மானங்கெட்ட மனசாட்சி’ என்றான்.

அதன் பிறகு அவனுக்கு வேலை ஓடவில்லை, பேன்ட்ரிக்கும் டெஸ்க்கிற்கும் அல்லாடிக் கொண்டிருந்தான். காபி போடும் மெஷின் காரி துப்பாத குறை. ‘என்டா சூனியம் வச்சா மாதிரி சுத்தர’ மனசாட்சி கேட்டது. ‘எனக்கு என்ன ஆனா உனக்கு என்னடா’, இது மதன். ‘டேய், தேவயில்லாம கற்பனைய வலத்துக்காத, அந்த பொண்ண பாத்தா படத்துல வர ரிச்சு கேர்ல்ஸ்ல ஒருத்தி மாதிரி இருக்கா, எப்படியும் பத்து பேர் அவளோட வெயிட்டிங் லிஸ்ட்ல இருப்பானுங்க, நீயும் பத்தோட பதினொன்னா போயிடாத, நமக்கு வேற பொழப்பு இருக்கு’ என்றது மனசாட்சி, ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்டி திட்டின, இப்ப அட்வைஸ் பண்ற, ஏன்டா குழபுற, பாடு’, இது மதன், ‘அதான்டா என் வேலையே, நீதான் தெளிவாகிக்கணும்’, இது மனசாட்சி, ‘கரெக்டா, நமக்கு வேற பொழப்பிருக்கு’ தெளிவானான் மதன்.

மறுநாள், மதனின் க்யூப்பிக்கல்லில் ஒரு பெரிய விசாரனைக் கமிஷன் குழு மதனுக்காக காத்திருந்தது, விசாரணை கமிஷனில் இருப்பவர்கள் எல்லோரும் மதனின் நண்பர்கள், ஆனால் மதனின் ப்ராஜக்ட் அல்ல, மதனின் ப்ராஜக்டில் அவனும், உதயும் மட்டுமே அடக்கம், இவர்கள் இருவருக்கும் மேனேஜர் லலிதேஷ் பூனேவில் இருக்கிறார். உள்ளே வரும்போது கூட்டத்தை பார்த்து அவர்கள் எதற்காக கூடியிருக்கிறார்கள் என்று யூகித்துக் கொண்டான் மதன். ‘என்ன பஞ்சாயத்தா யாரு மேல ப்ராது?’ சந்தேகத்துடன் மதன், ‘நடிக்காதடா, இந்த பூனையும் பால் குடிக்குமான்னு பார்த்தா, நேத்து ஈவினிங் நாங்க போயிடப்புறம் பீரே அடிச்சிருக்கு?’, ஆரம்பித்தான் மதனின் உற்ற நண்பன் சுரேஷ். ‘டே, இல்லடா, உதய்னா, நீங்க ஏதாவது எக்ஸ்ட்ரா பிட்டு சேர்த்துட்டீங்களா?’, இது மதன், ‘தம்பி, நானா வாய தொரக்கல, இவனுங்க வந்து கேட்டாங்க, நான் நேத்து இருந்தவர நடந்ததை சொல்லியிருக்கேன், மிதி நீயே பார்த்துக்கோ’ தப்பித்துக் கொண்டார் உதய்.

‘இல்லடா, அவங்களுக்கு லினக்ஸ் கத்துக்கணுமாம் அதான் வந்திருந்தாங்க’ மதன் சமாளித்தான். ‘கதவிடாதடா, லினக்ஸ் அட்மினே லினக்ஸ் வந்து உன்கிட்ட கத்துக்க போறாங்களா, உண்மைய சொல்லு, யார் அவங்க? எதுக்கு வந்தாங்க? ப்ரதர்னு கூப்டாங்கலாமே, உனக்கு ஊர்ல இருக்குறது ஒரே ஒரு கருவாச்சி, அவளையும் கட்டிக்கொடுத்துட்ட, இது யார்ரா புது தங்கச்சி, அட்மின் தங்கச்சியா தான் இருக்காங்களா? இல்ல அடுத்த ஸ்டேஜ், பிரண்டுக்கு வந்துட்டாங்களா?’, மடக்கினான் சுரேஷ், ‘டேய் பண்ணாட, வெறுப்பேத்தாதடா, நானே கடுப்புல இருக்கேன், அவங்களுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்க முதல்ல ஒரு விண்டோஸ் அட்மின், லினக்ஸ் அட்மின் டீமுக்கு வந்ததுக்கப்புறம் சரியாக வேலை செய்ய முடியலையாம், கூட இருக்கற வங்க இவங்களுக்கு லினக்ஸ் சரியா தெரியலன்னு மட்டம் தட்டுறாங்களாம், அதான் என்கிட்ட ஹெல்ப் கேட்டாங்க, வேற ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, போதுமா?’, சமாளித்தான் மதன். ‘ஆன்ட்டியா? பாத்தா அப்படி தெரியலையே’, மீண்டும் சுரேஷ், ‘வேணும்னா அவங்க குடும்பத்தை கூட்டிட்டு வர சொல்லட்டுமா? உன்ன மாதிரி ஹைக்ளாஸ்டா, வைன் சாப்பிட்டு ஸ்கின் மெயிண்டெயின் பண்ணுவாங்க போல, உனக்குத்தான் பப்பு பிகர்களை பற்றி நல்லா தெரியுமே, எப்படி இருக்கா உன் அருமை தோழி கஞ்சாகுடிக்கி, ரெண்டு பேரும் சேர்ந்து தான பப்புக்கு போவீங்க?’, எதிர் ஏவுகணையை எய்தான் மதன். ‘உன்ன விட நல்லவங்க நிறைய பேர அங்க மீட் பண்ணி இருக்கேன், சரி விடு, நீ சொல்றத நம்பிட்டேன். சாரிடா, ஏதோ இன்ட்ரஸ்டிங்கா உன் லைவ்ப்ல நடக்குதுன்னு கேட்டோம். வேற ஒன்னும் இல்ல’, முடித்தான் சுரேஷ். ‘எனக்கும் தெரியும்டா, போய் இருக்குற வேலைய பாரு’ என்றான் மதன்.

ஒருவழியாக சேரில் உட்கார்ந்தான் மதன், உடனே டெஸ்க் போன் ரிங் அடித்தது, மறுபுறத்தில் மதனின் மேனேஜர் லலிதேஷ், எடுத்து பேசினான், ‘சொல்லுங்க லலித்’, இது மதன், ‘மொக்க, யாற்றா அந்த அட்மின் பொண்ணு?’, லலித் கேட்க, ‘நீங்களுமா, உங்கவர பரப்பிட்டாங்களா, மருபடியும் எக்ஸ்ப்லெய்ன் பண்ணனுமா, ஆள விடுங்க நான் இன்னைக்கு மவுன விரதம்’, தப்பித்தான் நம்ம ஹீரோ.

தொடரும்..

நக்கீரன்.ந [n.keeran.kpm at gmail dot com]

%d bloggers like this: