எளிய தமிழில் CAD/CAM/CAE 19. சிஎன்சி நிரல் இயற்றல் (Computer Aided Manufacturing – CAM)

கணினி எண்ணிம கட்டுப்பாட்டு (Computer Numerically Controlled) எந்திரங்களைத் தமிழில் அஃகுப்பெயராக கயெக எந்திரங்கள் என்று கூறலாம். இவற்றுக்கு எவ்வாறு நிரல் எழுதுவது என்பது பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம் கயெக நிரலாக்கம் (CNC Programming). கயெக எந்திரங்கள் பற்றிய அடிப்படைகள் தெரிந்துகொள்ள என்னுடைய எளிய தமிழில் CNC மின்னூலை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

நாம் ஒரு பாகத்தை CNC இயந்திரத்தில் வெட்டித் தயாரிக்க வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அதற்கு G நிரல் (G code) எழுத வேண்டும். இந்த G நிரல் முதலில் கச்சாப் பொருளின் வடிவத்தில் தொடங்கி, படிப்படியாக வெட்டிக்  கடைசியாக அந்த பாகத்தின் வடிவத்தை எவ்வாறு அடைவோம் என்ற விவரங்களைக் கொண்டிருக்கும்.

கடைசல் இயந்திரம் உளிப்பாதை

கடைசல் இயந்திரம் உளிப்பாதை

கயெக நிரல் இயற்றிகள் எவ்வாறு நிரல் எழுதும் வேலையை எளிதாக்குகின்றன

ஒவ்வொரு வரியாகக் கையால் நிரல் எழுதுவதற்குப் பதிலாக நாம் தயாரிக்க வேண்டிய பாகத்தின் வரைபடத்தைக் கொடுத்தால் G நிரல் இயற்றித் தரவல்ல செயலி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா? இம்மாதிரி செய்யவல்ல திறந்த மூல கயெக நிரல் இயற்றிகள் சிலவற்றைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். இவை சோர்வூட்டுகிற, திரும்பத்திரும்பச் செய்ய வேண்டிய வேலைகளை எளிதாக்குகின்றன. இருப்பினும் நாம் எம்மாதிரி கச்சாப் பொருளில் தொடங்குகிறோம், எம்மாதிரி சிஎன்சி எந்திரம் நம்மிடம் உள்ளது, எம்மாதிரி வெட்டுளிகளைப் பயன்படுத்தப் போகிறோம் என்பது போன்ற எல்லா விவரங்களையும் நாம்தான் மிகக் கவனமாக உள்ளீடு செய்ய வேண்டும். மேலும் இவை இயற்றிய நிரலை சரிபார்த்து சில சிறு திருத்தங்களையும் நாம்தான் செய்ய வேண்டும்.

நிரல் எழுதுவது எளிதானதா அல்லது கடினமானதா என்பதை ஏறுவரிசையில் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

2D பக்கத்தோற்ற வெட்டு (profile cutting)

பீற்று நீர் (Water jet), மின்ம (Plasma), சீரொளி (Laser) வெட்டு ஆகிய எந்திரங்கள் எஃகு (steel), துருப்பிடிக்கா எஃகு (stainless steel) மற்ற உலோகங்கள் மற்றும் உலோகம் அல்லாத பொருட்களிலும் தகடுகளைத் தேவையான பக்கத்தோற்ற வெட்டு வேலை செய்யப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இம்மாதிரி வேலைகளைச் செய்யும் சிஎன்சி எந்திரங்கள் X அச்சு, Y அச்சு ஆக இரண்டு அச்சுகள் மட்டுமே கொண்டவை. ஆகவே இவற்றுக்கு நிரல் இயற்றல் ஓரளவு எளிதானது. இவற்றுக்கு 2D G நிரல் இயற்றினால் போதுமானது.

சிஎன்சி உளிக் குடைதல் (CNC Router) 

மரம், ஆடியிழை (fibre-glass) போன்ற கலவைப் பொருட்கள், அலுமினியம், எஃகு, நெகிழி போன்ற பல்வேறு கடினமான பொருட்களை வெட்டுவதற்கு உளிக் குடைதல் பயன்படுத்தப்படுகிறது. உளிக் குடைதல் செய்யும் சிஎன்சி எந்திரங்கள் X அச்சு, Y அச்சு ஆக இரண்டு அச்சுகள் தவிர Z அச்சும் கொண்டவை. இந்த Z அச்சு பல்வேறு ஆழங்களில் குடைதல் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இவற்றுக்கு நிரல் இயற்றல் பக்கத்தோற்ற வெட்டைவிட ஒரு படி மட்டுமே கடினம் அதிகமானது.

சிஎன்சி கடைசல் இயந்திரம் (Lathe)

இவற்றுக்கு X அச்சு மற்றும் Z அச்சு ஆக இரண்டு அச்சுகளே பெரும்பாலும் இருக்கும். ஆகவே இவற்றுக்கு நிரல் இயற்றுவதும் மிகக் கடினமல்ல.

சிஎன்சி துருவல் இயந்திரம் (Milling Machine)

இவற்றுக்கு X அச்சு, Y அச்சு , Z அச்சு ஆக மூன்று அச்சுகள் பெரும்பாலும் இருக்கும். ஆகவே இவற்றுக்கு நிரல் இயற்றுவது ஓரளவு கடினமானது.

சிஎன்சி கடைசல் மையம் (Turning Centre)

இவற்றுக்கு X அச்சு, Y அச்சு , Z அச்சு ஆக மூன்று அச்சுகள் தவிர உளிக் கோபுரம் ஓரிரு அச்சுகளில் திரும்பக்கூடும். ஆகவே இவற்றுக்கு நிரல் இயற்றுவது மிகக் கடினமானது.

சிஎன்சி துருவல் மையம் (Machining Centre – VMC & HMC)

இவற்றுக்கு X அச்சு, Y அச்சு , Z அச்சு ஆக மூன்று நேர் அச்சுகள் தவிர A, B, C என்று மூன்று வரை சுழல் அச்சுகளும் இருக்கக் கூடும். ஆகவே இவற்றுக்கு நிரல் இயற்றுவது மிகமிகக் கடினமானது.

சிஎன்சி நிரல் இயற்றத் திறந்தமூல மென்பொருட்கள்

டிஎக்ஸ்எஃப் இலிருந்து G நிரல் (Dxf2Gcode), சால்வ்ஸ்பேஸ் CNC நிரல் இயற்றல் இரண்டும் 2D நிரல் இயற்றக் கூடியவை. ஃப்ரீகேட் வெட்டுப்பாதை பணிமேடை 3D நிரல் இயற்றக் கூடியது. இவற்றைப் பற்றி விவரமாக அடுத்து வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.

குறிப்பு: முப்பரிமாண அச்சிடல் (3D Printing) அல்லது பொருள் சேர் உற்பத்தி (Additive Manufacturing) வேலை செய்வதற்கும் நாம் நிரல் இயற்ற முடியும். இது பற்றி பின்னர் ஒரு கட்டுரைத் தொடரில் பார்ப்போம்.

நன்றி தெரிவிப்புகள்

  1. Hexagon AB – SURFCAM Turning

இத்தொடரில் அடுத்த கட்டுரை: 2D உருவரைவிலிருந்து CNC நிரல் இயற்றல்

வெட்டுளி ஆரத்தை ஈடு செய்தல் (cutter radius compensation). உடைக்கும் ஒட்டு (Breaks) அல்லது பிடிப்பு ஒட்டு (Holding Tab). சால்வ்ஸ்பேஸ் CNC நிரல் இயற்றல். டிஎக்ஸ்எஃப் இலிருந்து G நிரல் (Dxf2Gcode) இயற்றல்.

ashokramach@gmail.com

%d bloggers like this: