ஓப்பன் சோர்ஸ் கூட்டங்களில் புதியவர்கள்[Freshers] ஏன் கலந்து கொள்ள வேண்டும்?

இன்று மதியம் மூன்று மணிக்குச் சென்னைப் பை நிகழ்வு நடக்கவிருக்கிறது. நிகழ்வில் பங்கேற்க: www.meetup.com/chennaipy/events/286420134/

இது போன்ற கூட்டங்களில் புதிதாக இணைபவர்களுக்குச் சில / பல கருத்துகள் புரியாமல் இருக்கலாம். ஆனால், முதல் முயற்சி எல்லா இடங்களிலும் எப்போதுமே அப்படித்தான் இருக்கும். இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய

அடிப்படைக் குறிப்புகள்:
0. பெரும்பாலான [99%] கூட்டங்கள், இலவசம். இலவசமாக ஒருவர் நம்முடைய துறையைப் பற்றிப் பேசுகிறார், அதிலும் பல ஆண்டு வேலை அனுபவத்துடன் வந்து பேசுகிறார் என்றால் பல ஆண்டு அனுபவமும் அறிவும் சில நிமிடங்களில் நமக்குக் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். அதைத் தவற விடலாமா? அதில் நாம் தானே கலந்து கொள்ள வேண்டும்!

1. இப்படிப்பட்ட கூட்டங்களில் கலந்து கொள்ள விருப்பம் இல்லையென்றால் வேறு துறைக்குப் போய் விட வேண்டும். நம் துறை பற்றிய கூட்டத்திற்கு அரை மணி நேரம்,ஒரு மணி நேரம் [அதிலும் இலவசக்கூட்டம்] கூடச் செலவிட மனம் இல்லாத ஒருவர், தினமும் எட்டு மணி நேரம் அதே துறையில் வேலை பார்த்து எப்படி ஜெயிக்க முடியும்? எனவே, மென்பொருள் துறையில் பெரிய ஆளாக வர வேண்டும் என்றால் அதற்கான முதல் படி ஓப்பன் சோர்ஸ் கூட்டங்களே!

கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது நினைவில் வைக்கவேண்டியவை:

1. ‘நான் இந்தத் துறைக்கு/ தலைப்புக்குப் புதியவன். எனவே எல்லாமே புரியவேண்டும் என்று நான் எதிர்பார்க்கக் கூடாது’ என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி எதிர்பார்ப்பதே அடிப்படையில் தவறு.

2. ‘நான் வெப் டிசைனிங் தானே படிக்கிறேன், ஜாவா தானே படிக்கிறேன், எனக்கெதற்குப் பைத்தான் கூட்டம், லினக்ஸ் கூட்டம் – நான் ஏன் அதில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று நினைக்காதீர்கள். HTML, பைத்தான், ஜாவா, ஜாவாஸ்கிரிப்ட், டாக்கர், லினக்ஸ் என்று பல கூட்டங்களில் கலந்து தான் உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவே முடியும்.

3. யாரோ சொன்னார்கள், இது படித்தால் வேலை நிச்சயம் என்று சொன்னார்கள் என்பதற்காக ஒரு பாடத்தைப் படிப்பதை விட, நீங்களே முயன்று எல்லாவற்றின் அடிப்படையும் தெரிந்த பிறகே உங்கள் ஆர்வத்தின் பேரில் தேர்ந்தெடுக்கும் படிப்பே வெற்றியைக் கொடுக்கும். அந்தப் படிப்பில் தான் நீங்கள் பெரிய ஆளாக வர முடியும். விளையாட்டு வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், தோனி, நடிகர் கார்த்தி என்று பலரும் வேறு துறையில் நுழைய முயன்று இப்போது இருக்கும் துறையில் சாதித்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

2. தொடர்ச்சியாகக் குறைந்தது இப்படிப்பட்ட கூட்டங்கள் பத்து, இருபது கலந்து கொண்ட பிறகு தான் உங்கள் ஆர்வத்தைக் கண்டுபிடிக்க முடியும். எனவே நிறைய கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள். ‘தொடர்ச்சியாக’ என்று இருப்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். ஒரு மாதத்திற்குக் குறைந்தது நான்கு, ஐந்து கூட்டங்களில் உங்கள் பங்கேற்பு இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. கூட்டம், ஆங்கிலத்தில் நடக்கிறதே என்று கலந்து கொள்ளாமல் விடாதீர்கள். நம்மவர்கள் தான் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அவர்கள் ஆங்கிலம் நமக்கு மிக எளிதாகப் புரியும். ஒருவேளை முதல் ஒன்றிரண்டு கூட்டங்களில் புரியவில்லை என்றாலும் அடுத்தடுத்த கூட்டங்களில் புரிதலில் நல்ல வித்தியாசத்தை நீங்கள் உணர்வீர்கள். பின் நாட்களில் திட்டப்பணி[Project]களில் தமிழர் அல்லாதோருடன் நீங்கள் கலந்து வேலை செய்வதற்கு இந்தக் கூட்டங்கள் மிகுந்த நம்பிக்கையையும் அனுபவத்தையும் கொடுக்கும்.

2. புரிகிறதோ / புரியவில்லையோ, கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் குறிப்பு எடுப்பதற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். கணினியில் அவர்கள் பேசுவதைக் குறிப்பெடுத்து வைக்க வேண்டும் அல்லது உங்கள் குறிப்பேட்டில்(நோட்) எழுதி வைக்க வேண்டும்.

3. குறித்து வைக்கும் மனநிலை இல்லாது கூட்டங்களில் கலந்துகொள்ளவே கூடாது. தொழில்நுட்பக் கூட்டங்கள் ஒன்றும் சினிமாப்படங்கள் அல்ல. சில நேரங்களில் சோர்வாகத் தான் இருக்கும். புதிய கருத்துகளை மூளை ஏற்றுக் கொள்வதற்கு எல்லோருக்குமே நேரம் பிடிக்கும். அதிக நேரம் பிடிக்கும் போது சில நேரங்களில் சோர்வு வருவது இயல்பு. . எனவே, ‘குறிப்பு மிகவும் முக்கியம் அமைச்சரே!’

4. எடுத்த குறிப்புகளை மறக்காமல் உங்கள் வலைப்பூ(பிளாக்)வில் பதிந்து வைக்க வேண்டும். அடுத்தடுத்த கூட்டங்களைப் புரிந்து கொள்வதற்கு அந்தப் பதிவுகள் மிகுதியாக உதவும்.

5. கூட்டங்களில் வரும் சந்தேகங்களைத் தயங்காமல் கேட்க வேண்டும். ‘இதைக் கேட்டால் என்ன நினைப்பார்கள்? எல்லோரும் அமைதியாக இருக்கும் போது நாம் இதைக் கேட்கலாமா?’ என்றெல்லாம் சிந்திக்கக் கூடாது. கேள்விகள்/ சந்தேகங்கள் வந்த பிறகும் நீங்கள் ‘திட்டமிட்டு’ அமைதியாக இருந்தீர்கள் என்றால் தொடர்ந்து உங்களால் கவனிக்க முடியாமல் போகும். அது உங்கள் வளர்ச்சிக்கு நல்லதில்லை. ‘யார் என்ன நினைத்தாலும் சரி, எனக்கான கேள்விகளை நான் கேட்பேன். எனக்காக நானே பேசவில்லை என்றால் யார் பேசுவார்கள்’ என்னும் மனநிலை கட்டாயம் வேண்டும்.

6. கேள்விகள் கேட்கும் போது, எல்லோர் முன்னிலையிலும் கேட்கிறோம் என்பதை மனத்தில் வைத்து, கூடிய வரை பொறுமையாகத் தகுதியான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கேட்க வேண்டும்.

எ.கா. பத்தாண்டுகள் லினக்சில் வேலை செய்து வருபவர் ஒரு கூட்டத்தில் அரைமணி நேரம் பேசியிருக்கிறார். புதியவராக நீங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அவர் பேசியது ஒன்றுமே புரியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ‘நீங்கள் அரைமணி நேரம் பேசியிருக்கிறீர்கள், ஆனால் எல்லாமே வேஸ்ட் தான், எனக்கு ஒன்றுமே புரியவில்லை‘ என்று சொல்லாதீர்கள். இப்படிச் சொல்வதன் மூலம் பேசியவர் மன வருத்தம் அடையத் தான் வாய்ப்பு இருக்கிறதே தவிர, உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இதற்குப் பதிலாக,
‘ஐயா பத்தாண்டு அனுபவம் கொண்ட உங்களைப் போன்றவர்கள் எங்களுக்காக இப்படி இலவசமாகப் பேசுவது மிக்க மகிழ்ச்சி. அதே நேரம், நான் இந்தத் துறைக்குப் புதியவன். இதனால் உங்கள் பேச்சைப் புரிந்து கொள்வதில் பல சிக்கல்கள் எனக்கு இருந்தன. நீங்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் இதை அடிப்படையில் இருந்து புரிந்து கொள்ள நீங்கள் வழிகாட்ட முடியுமா?’
என்று கேட்டீர்கள் என்றால், உங்களுக்கு அவர் வழிகாட்ட, அதன் வழி, உங்கள் வாழ்க்கை வளம் பெற நிறைய வாய்ப்புகள் உள்ளன.

7. மிக மிக மிக முதன்மையான குறிப்பு, இது போன்ற கூட்டங்களில் ஒரு நிமிடம் கூடத் தாமதமாக இணையக் கூடாது. பெரும்பாலான கூட்டங்களைச் சரியான நேரத்தில் தொடங்கிச் சரியான நேரத்தில் முடித்து விடுவார்கள். கூட்டத்தின் தொடக்கத்தில் கூட்டம் எதைப் பற்றியது என்பதைப் புதியவர்களுக்கும் புரியுமாறு முதலில் சொல்வார்கள். அதைத் தவற விட்டு விட்டீர்கள் என்றால் மீதிக் கூட்டத்தில் நீங்கள் செலவழிக்கும் ‘ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே’ என்பதாகக் கொடூரமாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

தாமதமாகக் கலந்து கொள்பவர்களுக்குக் கேள்விகள் / சந்தேகங்கள் வந்தாலும் ஒருவேளை இதை முன்னரே சொல்லியிருப்பார்களோ என்னும் மனநிலையிலேயே கேட்காமல் விட்டு விடுவார்கள். ‘கற்றிலாயினும் கேட்க’ என்று திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார். கேள்வியே கேட்காமல் அறிவு வளர்ச்சி என்பது ‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும்’ என்பது போல அமைந்து விடும்.

 

– கி. முத்துராமலிங்கம்

பயிலகம், சென்னை

%d bloggers like this: