முனையத்தில் அளவுகள்

முனையத்தில் அளவுகள் 

GNU Units அளவுகளை ஒரு அலகிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுகின்றது. இந்த நிரல் பெரும்பாலான லினக்ஸ் வழங்கல்களில் (distribution) தானாகவே நிறுவப்பட்டிருப்பதில்லை. எனவே, நீங்கள் உங்களது வழங்கலின் களஞ்சியத்திலிருந்து(repository) GNU Units நிரலை நிறுவிக் கொள்ளுங்கள். GNU Units பற்றி நன்றாகத் தெரிந்து கொள்ளும் வரை, units -v (v for verbose)’ கட்டளையை முனையத்தில் அடியுங்கள். இது பெறுகையை எளிதில் புரிந்து கொள்ள உதவும். ‘units -v’ என்று முனையத்தில் அடிக்கும் போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள திரைப்பிடிப்பில் உள்ளது போன்று ஒரு பெறுகை(output) உங்களுக்கு கிடைக்கும்.

 

அலகு மாற்றத்திற்கு, அளவு மற்றும் அதன் அலகை ‘You have‘ தூண்டியில் (prompt) தட்டச்சு செய்து, ‘Enter’-ஐ அழுத்துங்கள். திரைப்பிடிப்பில் உள்ளது போல், 4139 அடியைக் கொடுத்துப் பாருங்கள்.

You want:‘ தூண்டியில், எந்த அலகுக்கு மாற்ற வேண்டுமோ, அதைக் கொடுங்கள். ‘centimeters’ என்று தட்டச்சு செய்து, ‘Enter’-ஐ அழுத்துங்கள். (திரைப்பிடிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது போல், இங்கே சென்டிமீட்டருக்கு அலகை மாற்றுகின்றோம்)

பெறுகையின் முதல் வரி, ‘4139 feet = 126156.72 centimeters’ என்று நேரடி அலகு மாற்றத்தைக் காட்டுகின்றது. இரண்டாவது வரியில் அலகு மாற்ற காரணியின் தலைகீழியையும்(reciprocal), அதற்கடுத்த வரியில் அடுத்த அலகு மாற்றத்திற்கான தூண்டியையும் காட்டுகின்றது, GNU Unit. நீங்கள் விரும்பினால், எந்தெந்த அலகுகளுக்கு அலகு மாற்றம் செய்யலாம் என்று, ‘?’-ஐ அழுத்தித் தெரிந்து கொள்ளலாம்.

 

GNU Unit-ன் சிறப்பு

‘இதிலென்ன இருக்கின்றது? அலகு மாற்றத்திற்கு நிறைய கருவிகள் இணையத்தில் கிடைக்கின்றன. ஏன் கூகுள் தேடுபொறியே அலகு மாற்றத்தைச் செய்கின்றது.’ என நீங்கள் சொல்வது என் காதுகளில் விழுகின்றது.

ஆம். ஆனால் … GNU Units அணை நிலையில்(offline) வேலை செய்வதோடு மட்டுமில்லாமல், அலகுகளுக்காக மிகப்பெரிய தரவுத்தளத்தைத்(database) தன்னகத்தே கொண்டிருக்கிறது.இவை ‘/usr/shar/misc/units.dat’ கோப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதைப் படிப்பது ஒரு சுவாரசியமான வாசிப்பு அனுபவம். எங்கே வேறு ஏதாவது ஒரு நிரலைப் பயன்படுத்தி, Cubic barleycorns-ஐ, பிரிட்டிஷ் firkins-க்கோ அல்லது Montana miners inches-ஐ cubic meters per second-க்கோ மாற்றி காட்டுங்கள் பார்க்கலாம்!! 1 borgis என்பது சரியாக 9 didotpoint-களுக்கு சமம் என்று உங்களுக்குத் தெரியுமா?

 

 

இவற்றையெல்லாம் விட மிகவும் முக்கிய பயன், கணக்கீட்டின் போது GNU Units தானாகவே அலகுகளை மாற்றிக் கொள்ளும் என்பது தான். எத்தனை USA beer kegs நீர், 55 மீ அகலம், 191 அடி உயரம், 8 அங்குலம் நீளமுடைய நிலத்தில் விழும் போது 1 Biblical cubit மழை நீர் வெளியேற்றப்படும்? இந்தத் திரைப்பிடிப்பைப் பாருங்கள்.

நிரலிலிருந்து வெளியேறுவதற்கு, ‘Ctrl + c’ அல்லது ‘Ctrl + d’-ஐ அழுத்துங்கள். GNU Units பற்றி மேலும் தெரிந்து கொள்ள ‘GNU page‘ மற்றும் ‘Wikipedia‘-ஐப் பாருங்கள், அல்லது முனையத்தில் Unit-ஐ நிறுவிய பின் ‘man units’ என்ற கட்டளையை அடியுங்கள்.

GNU Units, அட்ரியன் மரியானோ என்னும் கணிதயியலாளரால் (கார்னெல் பல்கலைக்கழகம்) C நிரலாக்க மொழியில் எழுதப்பட்டது. இதை Java நிரலாக்க மொழியில் பெறுவதற்கு இங்கே

units-in-java.sourceforge.net/#top சொடுக்கவும்.

ஆங்கில மூலம் : www.freesoftwaremagazine.com/articles/measures_command_line

இரா.சுப்ரமணி. மூத்த மென்பொருள் வல்லுனராக ASM Technologies நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறேன்.  மதுரை க்னு/லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர். [ glug-madurai.org ]

கணியம் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
மின்னஞ்சல் : subramani95@gmail.com வலைப்பதிவு : rsubramani.wordpress.com

%d bloggers like this: