எளிய தமிழில் VR/AR/MR 1. மெய்ம்மை (Reality) வகைகள்

தோற்ற மெய்ம்மை (Virtual Reality – VR) 

உங்களுக்கு சுற்றுலாவில் ஆர்வம் என்று வைத்துக்கொள்வோம். பாரிஸ் நகரத்திலுள்ள ஈபெல் கோபுரம் (Eiffel Tower) சென்று பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்று தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளீர்கள். ஆனால் அங்கு சென்றுவருவதோ தற்போது உங்களுக்கு இயலாது. அவர்களுடைய 360 பாகைக் காணொளியை VR காட்சியாக வெளியிட்டுள்ளார்கள். ஒரு VR தலையணியை (headset) அணிந்து நீங்கள் நாலாபக்கமும் சுற்றிப் பார்க்கலாம், மேலும் கீழும் பார்க்கலாம். நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்தாலும், தத்ரூபமாக ஈபெல் கோபுரத்தில் இருப்பது போலவே தோன்றும். ஆகவே இதைத் தோற்ற மெய்ம்மை என்று சொல்கிறோம்.

மெய்ம்மை வகைகள்

மெய்ம்மை வகைகள்

நாம் இருக்கும் சுற்றுச்சூழலை முற்றிலும் மறைத்துவிட்டு எங்கு திரும்பினாலும் VR காட்சி மட்டுமே தெரியவேண்டுமானால் தலையணியில் பொருத்திய காட்சித்திரை (Head-Mounted Display – HMD) அவசியம். ஆகவே VR என்பது ஒரு வன்பொருள் புதுப்புனைவு (hardware innovation). முதன்முதலில் விளையாட்டுகளில் (gaming) மிகவும் பிரபலமடைந்தது. தற்போது கதை சொல்லவும், அனுபவங்களைப் பகிரவும், வானூர்தி போன்ற விலையுயர்ந்த எந்திரங்களில் பயிற்சியளிக்கவும் VR மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 

மிகை மெய்ம்மை (Augmented Reality – AR)

நீங்கள் காணொளியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவர்கள் குல்லா போட்ட மாதிரியோ, அல்லது கருப்புக் கண்ணாடி அணிந்த மாதிரியோ, அல்லது மிக்கி மவுஸ் (Mickey Mouse) காது இருப்பது போலவோ செய்ய முடிவதைப் பார்த்திருக்கலாம். உண்மையில் இருப்பதை மிகைப்படுத்திக் காட்ட முடியும். ஆகவே இதை மிகை மெய்ம்மை (AR) என்று கூறுகிறோம். இதைச் செய்வதற்குப் புதிதாக எதுவும் வன்பொருள் (hardware) வாங்க வேண்டியதில்லை. உங்கள் கைப்பேசி அல்லது கணினியில் மென்பொருள் நிறுவியே செய்ய முடியும். ஆகவே AR என்பது ஒரு மென்பொருள் புதுப்புனைவு (software innovation).

அதாவது உண்மையான உலகை அடித்தளமாக வைத்துக் கணினியில் உருவாக்கிய உருவங்களை அதன்மேல் காட்டுகிறோம். ஆனால் AR பற்றிய முக்கியக் குறிப்பு என்னவென்றால், நாம் கணினி உதவியுடன் உருவாக்கிய வடிவங்கள் மெய்யுலக சூழலில் உள்ள பொருட்களுடன் ஊடாட (interact) இயலாது.

கலந்த மெய்ம்மை (Mixed Reality – MR)

MR என்பது AR மற்றும் VR கலந்து வேலை செய்வது. ஆகவே இதற்கும் தலையணி தேவை. ஆனால் VR தலையணி போல சுற்றுச்சூழலை முற்றிலும் மறைத்துவிடக்கூடாது. நமக்கு சுற்றுச்சூழலும் தெரியவேண்டும், அதன்மேல் கணினி உருவாக்கிய வடிவங்களும் தெரியவேண்டும். ஆகவே மூக்குக்கண்ணாடி போன்ற தலையணிகள்தான் இந்த வேலைக்கு ஆகும்.

MR தொழில்நுட்பத்தின் முக்கிய சிறப்பியல்பு என்னவென்றால் நாம் கணினி உதவியுடன் உருவாக்கிய வடிவங்கள் மெய்யுலக சூழலில் உள்ள பொருட்களுடன் நிகழ்நேரத்தில் ஓரளவு ஊடாட (interact) இயலும்.

நீட்டித்த மெய்ம்மை (Extended Reality – XR)

XR என்பது VR, AR, MR ஆகியவற்றை உள்ளடக்கிய தொகைச்சொல். மெய்யுலகம் மற்றும் மெய்நிகர் உலகங்களை (physical and virtual worlds) இணைத்து மூழ்கவைக்கும் (Immersive) அனுபவங்களை உருவாக்கும் எல்லாவிதமான தொழில்நுட்பங்களுக்கும் இச்சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்தலாம். ஏனெனில் இம்மாதிரித் தொழில்நுட்பங்களில் மெய்நிகர் உலகங்களைப் பயன்படுத்தி மெய்ம்மையை நீட்டிக்கிறோம் அல்லவா?

தொழில்துறை மற்றும் பயிற்சியில் இவற்றின் பயன்பாடுகள்

நாம் மேலே பார்த்துபோல நிகழ்பட ஆட்டங்களில் (Video Game) இந்தத் தொழில்நுட்பங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன. எனினும் இக்கட்டுரைத் தொடரில் நாம் பயிற்சி (Training) மற்றும் தொழில்துறையில் (Industrial sector) இந்தத் தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று குறிப்பாகப் பார்ப்போம். மேலும் இவற்றை உருவாக்குவது எப்படி, குறிப்பாக கட்டற்ற திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்குவது எப்படி, என்று பார்ப்போம்.

நன்றி

  1. Dunne Teaches – VR, AR, MR and XR

இத்தொடரில் அடுத்த கட்டுரை: தோற்ற மெய்ம்மை (Virtual Reality – VR)

மூழ்கவைக்கும் அனுபவம் (immersive experience). பார்வைப் புலம் (Field of View – FoV). தலையணியில் பொருத்திய காட்சித்திரை (Head-Mounted Display – HMD).

ashokramach@gmail.com

%d bloggers like this: