விக்கிப்பீடியா_மங்கைகள் 3 – சு காந்திமதி

விக்கிப்பீடியா பல இலட்சக்கணக்கான தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வரும் ஓர் தகவல் களஞ்சியம்.. அதில் சிறப்பான செயல்கள் செய்து வரும் சில பெண் விக்கியர்களைப் பற்றிய அறிமுகம் இது. ஆர்வமும் திறமையும் இருந்தும், எனக்கு எங்கே நேரமிருக்கிறது? என வீட்டிற்குள்ளேயே ஒடுங்கிப்போய்விடும் பெண்களுக்கு இது ஓர் ஊக்கமாக இருக்கலாம்

சு காந்திமதி

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஈவேரா நாகம்மை அரசு மகளிர் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் காந்திமதி 30 வருட ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர். 2015 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில்
பங்களித்து வருகிறார்.

தமிழ் விக்கியில் 4000 கட்டுரைகளுக்கு மேல் எழுதிய இவரது கணவர் கி. மூர்த்தியே இவருக்கு உந்துதலாய் இருந்துள்ளார். விக்கி அறிமுகம் செய்து வைத்து அவர் அளித்த ஊக்கத்தினால் விக்கித்தரவு, விக்கிமூலம், விக்கிப்பீடியா ஆகிய திட்டங்களில் பங்களிக்கத்தொடங்கினார் காந்திமதி.

தொடக்கக்காலங்களில் இவரது கணவரின் மடிக்கணினியில் தான் காந்திமதி விக்கிப்பணியினைச் செய்துள்ளார். இருவரும் அலுவலகம் செல்வதால் கிடைக்கும் ஓய்வில் கணவரே மடிக்கணியினைப் பயன்படுத்துவார். அவர் பயன்படுத்தாத நேரத்தில் மட்டுமே காந்திமதி தொகுப்புகள் செய்யத் தொடங்கினார்.

யோகா, உடற்பயிற்சி, பள்ளிப்பணி என திட்டமிட்டு நேரத்தைச் செலவிடும் காந்திமதி கிடைக்கும் குறைந்த ஓய்வு நேரத்திலும் விக்கிப்பீடியாத் திட்டங்களில் பங்களிப்பு செய்கிறார்.

இதுவரை இணைய நூலகமான விக்கிமூலத்தில் சுமார் 1700 தொகுப்புகளும் விக்கித்தரவில் சுமார் 1300 தொகுப்புகளும் செய்துள்ள காந்திமதி விக்கிப்பீடியாவில் வேங்கைத்திட்டம் 2.0 போட்டி, விக்கி மகளிர் நலம், விக்கிப் பெண்களை நேசிக்கிறது 2020 போன்ற திட்டங்களில் பங்கேற்று 176 கட்டுரைகளையும் பதிவு செய்துள்ளார்.

பஞ்சாபில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறை, சேலத்தில் நடைபெற்ற விக்கிமூலம் பயிற்சிப்பட்டறை, இலங்கையின் தமிழ்விக்கிப்பீடியாவின் 16 ஆம் ஆண்டுக்கொண்டாட்டம் ஆகியற்றில் காந்திமதி கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வதிஸ்ரீ

parvathisriabi@gmail.com

%d bloggers like this: