பைத்தான் படிக்கலாம் வாங்க – 7 – லினக்சில் நிரல் எழுதுவோம்!

முந்தைய பதிவில் விண்டோசில் எப்படி லினக்ஸ் நிரல் எழுதுவது என்று பார்த்தோம். இப்போது லினக்சில் எப்படி எழுதுவது என்று பார்ப்போம்.

லினக்ஸ் இயங்குதளத்தில் பைத்தான் நிரல் எழுதுவதற்கு முன், நோட்பேட்++(Notepad++),  நோட்பேட்கியூகியூ(Notepadqq) போன்ற மென்பொருட்களை நிறுவிக் கொள்வது சிறந்தது. இம்மென்பொருட்கள் கட்டாயமாகத் தேவையா எனக் கேட்டால் இல்லை தான்! இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துவதில் சில நன்மைகள் இருக்கின்றன என்பதால் இவற்றைப் பயன்படுத்தச் சொல்கிறேன், அவ்வளவே!

நோட்பேட்கியூகியூ தரவிறக்கம்:
லினக்ஸ் மின்டின் சாப்ட்வேர் மேனேஜரைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் நோட்பேட்கியூகியூ(Notepadqq) என்று தட்டச்சிட்டு அதை நிறுவிக் கொள்ளுங்கள்.

இப்போது கீழ் உள்ள நிரலை அதில் அச்சிடுங்கள்.

தமிழ் = 90
ஆங்கிலம் = 89
கணக்கு = 78
அறிவியல் = 92
சமூகஅறிவியல் = 95 மொத்தம் = தமிழ் + ஆங்கிலம் + கணக்கு + அறிவியல் +
சமூகஅறிவியல்
print(சமூகஅறிவியல்)

எப்படிச் சேமிப்பது?
1. முதலில் ஏதாவது ஒரு அடைவை(Folder)த் தேர்ந்து கொள்ளுங்கள். (நான் /home/muthu/Documents/Python10 தேர்ந்து கொண்டேன்).
2. File –> Save என்றோ ctrl+s என்றோ கொடுங்கள்.
3. வரும் மேல்மீட்புப் பட்டியில் (Popup) உங்களுக்கு விருப்பமான பெயர் கொடுத்து (நான் total என்று பெயர் கொடுத்திருக்கிறேன்), மறக்காமல் கடைசியில் .py என்று கொடுத்துச் சேமியுங்கள்.

எப்படி நிரலை இயக்குவது?
1. டெர்மினலைத் திறந்து உங்கள் பைத்தான் நிரல் இருக்கும் அடைவுக்குச் செல்லுங்கள்.
குறிப்பு: டெர்மினலை Ctrl+Alt+T எனக் குறுக்கு வழியில் திறக்கலாம்.
2. திறந்து கீழ் உள்ளது போலக் கொடுத்து, பைத்தான் அடைவுக்குப் போகலாம்.
cd /home/muthu/Documents/Python10
3. இப்போது கீழ் உள்ள கட்டளையைக் கொடுங்கள்.
python3 total.py


இது தான் பைத்தான் நிரலை இயக்கும் கட்டளை. python3 எனக் கொடுத்து ஓர் இடைவெளி விட்டு, நம்முடைய பைத்தான் கோப்பின் பெயரைக் கொடுக்க வேண்டும்.

இப்போது நமக்குப் பைத்தான் நிரலை இயக்கி வெளியீட்டைப் பார்க்கத் தெரிந்து விட்டது. அப்படியானால் முதன்மையான கட்டத்தை வெற்றியோடு தொடங்கி விட்டோம் என்று பொருள்! வாருங்கள்! தொடர்ந்து பைத்தானில் பயணிப்போம்.

  • கி. முத்துராமலிங்கம், பயிலகம்
%d bloggers like this: