பைத்தான் படிக்கலாம் வாங்க – 1

பைத்தான் படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாட்களாகவே என்னுள் இருந்த சிந்தனை. கல்லூரி படித்த காலங்களில் சி++, ஜாவா ஆகிய இரண்டையும் பாடமாகவே படித்திருந்தேன். ஆனாலும் அவை இரண்டும் பெரிய அளவில் மனத்தில் நிற்கவில்லை. செயலிலும் அப்படித்தான் வெளிப்பட்டது. வேலை பார்த்த நாட்களில் ஜாவா மிகப் பெரிய அளவில் எனக்குத் தேவையாக இருந்தது. வேலையைத் தக்க வைப்பதற்கே ஜாவா வேண்டும் என்னும் நாட்களில் எப்படியாவது ஜாவாவைக் கரைத்துக் குடித்து விட வேண்டும் என்று ஜாவா கம்ப்ளீட் ரெஃபரென்ஸ் புத்தகங்களை வாங்கி, ஜாவா சான்றிதழ் படிப்புகளுக்குள் என் தலையை விட்டுக் கொண்டிருந்தேன். என்ன தான் பல்வேறு புத்தகங்களைப் படித்தாலும் ஒவ்வொரு கருத்தையும்(Concept) திட்டப்பணி(Project)களில் செயல்படுத்திக் காட்டுவதில் எனக்கு அளவுகடந்த சிக்கல்கள் இருந்தன. அந்தச் சிக்கல்கள் என்னை ஜாவாவின் மேல் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தன. யாராவது ஒருவர் எனக்கு ஜாவா தெரியும் என்று சொன்னால் அவர் மிகப்பெரியவர் என்றும் நான் ஒன்றுக்கும் ஆகாதவன்என்றும் என்னை நானே மட்டம் தொட்டத் தொடங்கியிருந்தேன். இந்த மட்டம் தட்டும் மனநிலை பல ஆண்டுகளுக்கு என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது. எனக்கு வந்த வெளிநாட்டு வாய்ப்புகளை எல்லாம் இந்த மனநிலையைக் கொண்டு தட்டி விட்டுக் கொண்டிருந்தேன்.

பின்னாட்களில் பயிலகத்தைத் தொடங்கியிருந்த காலங்களில் மிகக் கவனமாக மென்பொருள் சோதனைகள் (Software Testing) பாடத்தைத் தான் நான் தேர்ந்து கொண்டேன். கணினி மொழி எனக்கே வராது, அதை நான் இன்னொருவருக்குச் சொல்லிக் கொடுத்து, பாடம் என்னிடம் இருந்து கடத்தப்படுவதற்குப் பதிலாக, பயம் கடத்தப்பட்டு விடக் கூடாது என்பதில் இருந்த என்னுடைய உறுதி தான் அதற்குக் காரணம். ‘கோடி ரூபாய் கொடுத்தாலும் நிரல்மொழி எனக்கு வேண்டாம்என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் காலம் என்னை வேறு விதமாக இட்டுச் சென்றது. நிரல் மொழியைப் பாடமாக எடுக்க வேண்டிய நெருக்கடி என்னிடம் வந்தது. முன்பு போல நெருக்கடியைத் தட்டிக் கழிக்கும் இடத்தில் நான் இல்லை. இந்த முறை ஜாவாவைப் படித்துச் சொல்லியே ஆக வேண்டிய நெருக்கடியை நேரடியாகவே எதிர்கொண்டேன்.

ஜாவா எனக்கு வருமா? வராதா? இந்த முறை ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மணிக்கணக்கான நேரத்தை நிரல் கருத்துருக்களை(concepts)ப் புரிந்து கொள்ள செலவு செய்யத் தொடங்கினேன். நிற்க. அதன் பிறகு எனக்கு நடந்தவை எல்லாம் இணையத்தில் யூடியூப் தளத்தில் படைப்பாக்கப் பொது உரிமத்தில் தமிழிலேயே காணக் கிடைக்கின்றன.

இந்தக் காலக்கட்டத்தில் தான் நண்பர் கணியம் சீனிவாசனின் அறிமுகம் கிடைத்திருந்தது. மாணவர்கள் ஜாவா படிக்கக் கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள் என்பது உண்மை தான்! என்று அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ‘நீங்கள் ஏன் பைத்தான் முயலக்கூடாது?’ என்று கேட்டார். ‘ஜாவாவிற்கும் பைத்தானுக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்து விடப் போகிறது? இரண்டுமே பொருள்நோக்கு நிரலாக்க மொழிகள்(Object Oriented Programming) தானே! என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டேன்.

அப்படி நினைத்தாலும் பைத்தான் படிக்கலாமே என்னும் சிந்தனை என்னுள் இருந்து கொண்டே இருந்தது. பைத்தானுக்குரிய புத்தகங்களைத் தேடத் தொடங்கினேன். ஜாவாவின் பின்னணியில் இருந்து வந்த நான், பைத்தானை, ஜாவாவைப் போலவே அணுகத் தொடங்கினேன். ஆனால், அப்படிப்பட்ட தேவைகள் இல்லை என்பதும் பெரிய பெரிய வேலைகளை எல்லாம் மிக எளிதாகப் பைத்தானில் செய்து விட முடியும் என்பதை அனுபவத்தில் உணர்ந்த போது – “இதை யாரிடமாவது சொல்ல வேண்டுமே! சொல்லாமல் இருக்க முடியவில்லையே!” என்று பார்க்கும் நண்பர்களிடம் எல்லாம் பைத்தானைப் பற்றிப் பேசத் தொடங்கினேன். எளிதில் பெயரக்கூடிய(Portable), உயர் நிலை(High level), பொருள் நோக்கு நிரல்(Object Oriented Programming) என்று எத்தனையோ நன்மைகள் பைத்தானில் இருந்தாலும் என்னை ஈர்த்தது என்ன?  என்னை ஈர்த்தது, உங்களையும் ஈர்க்குமா?  ‘உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே!  நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே! அன்பே!’ என்று நீங்களும் பைத்தானைப் பார்த்துப் பாட முடியுமா?  தொடர்ந்து பேசுவோம். 

படம் நன்றி: www.roflphotos.com/tamilcomedymemes/?current_active_page=14&images=goundamani

%d bloggers like this: