கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி 3

மின்சுற்று வரைபடங்கள்

கல்லூரியில் பயிலும் இயற்பியல் மாணவர்கள் தங்கள் செய்முறை வகுப்புகளில் சில அடிப்படை மின்சுற்றுகளை அமைத்து வேலை செய்யும் விதத்தை அறிந்திருப்பர். பல்தொழில்நுட்பம், பொறியியலில் பயிலும் ECE, EEE மாணவர்கள் மின்சுற்றுகளைப் பற்றி அதிகம் அறிந்திருப்பர். இதுபோன்ற மின்சுற்றுகளுக்கும், மின்சுற்று ஒப்புச் செயலாக்கத்திற்கும் (Circuit Simulation) ஆட்டோகேட் (Auto CAD) போன்ற வர்த்தக மென்பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
லினக்ஸிலும் இதுபோன்று மின்சுற்றுக்களை அமைப்பதற்கும், அமைக்கப்பட்ட மின்சுற்றினைச் சோதிப்பதற்கும், இறுதியாக உருவாக்கப்பட்ட மின்சுற்றினைப் பொருத்துவதற்கு, அச்சிட்ட மின்சுற்றுப் பலகையை (PCB-Printed Circuit Board) வடிவமைப்பதற்கும் திறன் வாய்ந்த கட்டற்ற மென்பொருள்கள் பல உள்ளன.

Dia
இது பல்வேறு வரைபடங்களை வரைவதற்கு உதவும் ஒரு கட்டற்ற மென்பொருள். மைக்ரோசாப்ட் விசியோ (Microsoft Visio) வர்த்தக மென்பொருளைப் போன்று பல்வேறு வரைபடங்களான செயல்வழிப்படம் (flow chart), சிஸ்கோ (cisco), வேதியியல் ஆய்வகப் படங்கள் (chemistry lab), மின்சுற்று (electric circuit) வரைபடங்களை Dia மென்பொருள் மூலம் வரையலாம்.

dia

இதன் மூலம் உருவாக்கப்படும் வரைபடங்களை pdf, ps, svg, eps, png, jpg போன்ற பல்வேறு கோப்புகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இந்த மென்பொருளைப் புதிதாக பயன்படுத்தும் எவரும் எளிதில் வரைபடங்களை வரையலாம்.

QUCS

Quite Universal Circuit Simulator என்பதன் சுருக்கமே QUCS ஆகும். இதன் மூலம் உருவாக்கப்பட்ட மின்சுற்றுகளை ஒப்பு செயலாக்கம் எனப்படும் simulation செய்யலாம். அமைக்கப்பட்ட மின்சுற்று வேலை செய்யும் விதத்தை இந்த மென்பொருளைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
இந்த மென்பொருள் மூலம் புதிய மின்சுற்றுகளை கண்டுபிடிக்க இயலும். பல்தொழில் நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு இந்த மென்பொருள் பயனுள்ளதாக அமையும்.

qucs

Inkscape

பரவலாக பயன்படுத்தும் இந்த கட்டற்ற வெக்டார் மென்பொருளைப் பயன்படுத்தியும் மின்சுற்றுகளை அமைக்க இயலும். மின்சுற்று அமைக்கத் தேவையான மின்னியல் பாகங்களை (Electronic Components) பகிரப்பட்ட ஊடகக் கிடங்கான விக்கிமீடியா பொதுவில் Wikimedia Commons பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

wki

KiCad

மேற்கண்ட மென்பொருள்கள் அனைத்தும் புதியவர்கள் பயன்படுத்தும் வகையில் எளிதான இடைமுகப்புடன் உள்ளது. இன்னும் மேம்பட்ட மின்சுற்றுகளை அமைப்பதற்கு KiCad கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

cad1

உதாரணத்திற்கு நுண்கட்டுப்படுத்தியைக் (microcontroller) கொண்டு மின்சுற்றுகளை அமைப்பது, சில குறிப்பிட்ட வகை மின்னியல் பாகங்களை (Transistor – BC547, Motorola – 68000D, Atmel -AT89C2051-P) பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு KiCad சிறந்தது. மேலும் KiCad மென்பொருள் மூலம் அமைக்கப்பட்ட மின்சுற்றுக்கான, அச்சிட்ட மின்சுற்றுப்பலகையையும் (PCB) அமைக்கலாம். KiCad மென்பொருளுக்கான கையேடு இணையத்தில் கிடைக்கிறது.

cad2

இவை தவிர gEDA (GPL Electronic Design Automation), Xcircuit, ngspice, gnucap போன்ற பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. இதுபோன்று மின்னியலுக்குத் தேவையான மென்பொருட்கள் அனைத்தும் சேர்ந்து ஃபெடோரா எலக்ட்ரானிக் லேப் (fedora electronic lab) என்ற வழங்கல் ( fedora spin ) இணைய தளத்தில் கிடைக்கின்றது.

தொடரின் பதிவுகளுக்கு: கட்டற்ற மென்பொருளும் அறிவியலும்

%d bloggers like this: