திறந்த மூலக் கயெக இயக்கிகள் (CNC Controllers)

கயெக எந்திரங்கள் என்றால் பல நூறு ஆயிரம் முதலீடு செய்து தொழிற்சாலைகளில் வைத்திருக்கும் பெரிய எந்திரங்கள் தான் என்று நினைக்க வேண்டாம். சிறிய அளவில் மேசைமேல் வைத்து வேலை செய்யக்கூடிய இயந்திரங்கள் குறைந்த செலவிலும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் சீரொளி செதுக்கும் எந்திரங்கள் (Laser Engravers) அல்லது மரம் அல்லது நெகிழிப் பலகையில் துருவல் செய்யக்கூடிய திசைவிகள் (Routers).

இக்காலத்தில் பலர் இம்மாதிரி மேசைமேல் வைத்து இயக்கக்கூடிய சிறு எந்திரங்களைத் தாங்களே சேர்த்து முடுக்கிக் கொள்கிறார்கள். இவற்றுக்கான பாகங்களைத் தனித்தனியாகவோ அல்லது பொழுதுபோக்கு எந்திரத் தொகுப்பாகவோ (hobby machine kits) வாங்க முடியும். இவற்றுக்கான திறந்த மூல மென்பொருட்களைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். இம்மாதிரி செய்வதன் மூலம் சந்தையில் கிடைக்காத சிறப்பியல்புகள் கொண்ட இயந்திரங்களைக் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். ஆனால் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்!

அர்டுயினோ நுண்கட்டுப்படுத்திக்கான (Arduino microcontroller) ஜி ஆர் பி எல் (GRBL) இயக்கி

ஜி ஆர் பி எல் என்பது அர்டுயினோ நுண்கட்டுப்படுத்திக்காகவே உருவாக்கப்பட்ட திறந்த மூல இயக்கி ஆகும். அர்டுயினோவை அறிமுகம் செய்து முன்னர் இந்த இதழில் வந்த கட்டுரையை இங்கே காணலாம். அர்டுயினோ உனோ (Arduino Uno) என்பது அதன் மிகச்சிறிய மாதிரி ஆகும். இது 500 ரூபாய்க்குக் கீழே கிடைக்கிறது. இதில் நீங்கள் ஜி ஆர் பி எல் பதிவிறக்கம் செய்து நிறுவினால் உங்களுக்கு கயெக இயக்கி  தயார்.

அர்டுயினோ மிகச்சிறிய நுண்செயலி என்பதால் செயலாக்கத் திறன் குறைவானது. ஆகவே ஜி ஆர் பி எல் 3-அச்சுகள் மட்டுமே இயக்கக்கூடியது. மேலும் G நிரலின் எல்லா அம்சங்களையும் செய்ய முடியாது. ஆனால் இதன் பயனர் வரைபட இடைமுகத்தை உங்கள் மடிக்கணினியில் மற்ற செயலிகளுடன் சேர்த்தே ஓட்டலாம்.

ஜி ஆர் பி எல் இயக்கும் கயெக சீரொளி வெட்டி

ஜி ஆர் பி எல் இயக்கும் கயெக சீரொளி வெட்டி

ஜி ஆர் பி எல் இயக்கியை அர்டுயினோ உனோவில் நிறுவுவது எப்படி என்ற விவரமான படிகளை இங்கே காணலாம்.

பொதுப்பயன் கணினிகளில் ஒடும் லினக்ஸ் சிஎன்சி (LinuxCNC)

மாறாக உங்களுக்கு வணிக இயக்கிகளுக்கு இணையான திறந்த மூல இயக்கி தேவையெனில் லினக்ஸ் சிஎன்சி உகந்தது. இதற்கு வணிக இயக்கிகள் போல விலையுயர்ந்த சிறப்பியல்புகள் கொண்ட கணினி தேவையில்லை. விலை குறைந்த பொதுப்பயன் கணினிகளிலேயே ஓடும். இது கடைசல் எந்திரம், துருவல் எந்திரம், சீரொளி வெட்டி, திசைவிகள் போன்ற பல்வேறு வகையான எந்திரங்களை இயக்கக் கூடியது. ஒன்பது அச்சுகள் வரை கட்டுப்படுத்தக்கூடியது. இது பணிப்பு மின்பொறிகளையும் மற்றும் படிநிலை மின்பொறிகளையும் இயக்க வல்லது.

லினக்ஸ் சிஎன்சி

லினக்ஸ் சிஎன்சி

இது லினக்ஸ் டெபியனில் (Debian) தயார் செய்து சோதித்து வெளியிடப்படுகிறது. எனவே டெபியனில் ஓட்டுவதுதான் பிரச்சினையை குறைக்கும் வழி.

ஆனால் தொடுதிரை பயன்படுத்த உபுண்டுவே சிறந்தது என்று சொல்கிறார்கள். எனினும் இது உபுண்டுவிலும் ஓடும். இது இயந்திரத்தை இயக்குவதால் இதற்கு துல்லியமான நேரக் கட்டுப்பாடு தேவை. ஆகவே நிகழ்நேரப் பயன்பாட்டு இடைமுகம் (Real Time Application Interface – RTAI) என்ற கருநிரல் (kernel) இதற்குத் தேவை. உபுண்டுவில் முதலில் நிகழ்நேரப் பயன்பாட்டு இடைமுகம் நிறுவி அதைக் கருநிரலாக மாற்றிக் கொண்டு அதன் மேல் லினக்ஸ் சிஎன்சி நிறுவ வேண்டும். இது மிகக் கடினமான வேலை. ஆகவே உபுண்டு, நிகழ்நேரப் பயன்பாட்டு இடைமுகம் மற்றும் லினக்ஸ் சிஎன்சி மூன்றையும் ஒரே தருணத்தில் நிறுவத் தயாராக ISO கோப்பு வடிவத்தில் கிடைத்தால் அதைப் பயன்படுத்தலாம். உபுண்டு 18.04 நெடுங்கால ஆதரவு வெளியீட்டில் நிறுவும் படிகள் இங்கே.

லினக்ஸ் சிஎன்சி வரைபடப் பயன்பாட்டு இடைமுகங்கள் (Graphical User Interfaces – GUIs)

லினக்ஸ் சிஎன்சி-க்கு பல வரைபடப் பயன்பாட்டு இடைமுகங்கள் கிடைக்கின்றன.

நிகழ்நேர முன்பார்வை மற்றும் உளிப்பாதை காட்டுவது ஆக்சிஸ் (Axis) வரைபட பயன்பாட்டு இடைமுகத்தின் சிறப்பு அம்சங்கள்.

டச்சி (Touchy) பயனர் இடைமுகம் இயந்திர கட்டுப்பாட்டகங்களில் பயன்படுத்தப்படுகிறது, எனவே விசைப்பலகை மற்றும் சுட்டி தேவையில்லை. கையால் துடிப்பு இயற்றும் சக்கரம் (Manual Pulse Generator) மற்றும் சுவிட்சுகள், பொத்தான்களுடன் இணைந்து வேலை செய்யும்.

பைதான் மெய்நிகர் கட்டுப்பாட்டகம் (python Virtual Control Panel – pyVCP) பயன்படுத்தி ஆக்ஸிஸ் பயனர் இடைமுகத்தில் சிறப்பு செயல்களுக்கு பொத்தான்களையும் காட்டிகளையும் (indicators) சேர்த்து தனிப்பயனாக்க இயலும்.

மற்ற இயந்திரவியல் கட்டுரைகள்:

நன்றி தெரிவிப்புகள் (Acknowledgements)

ashokramach@gmail.com

%d bloggers like this: