எளிய தமிழில் Robotics 18. லெகோ பூஸ்ட் (Lego Boost)

லெகோ மைண்ட்ஸ்டார்ம்ஸ் (Mindstorms) என்பது பல புதிய அம்சங்கள் உள்ள மாதிரி. இருப்பினும் இதன் பாதி செலவில், பாதி மெனக்கெடுதலில் முக்கால்வாசிக்கு மேல் கற்றுக் கொள்ளக் கூடியது அவர்களின் வயதில் இளையவர்களுக்கான மாதிரி லெகோ பூஸ்ட்தான். இதில் பயிற்சி செய்ய உங்களிடம் ஒரு ஐபாட் அல்லது ஆண்ட்ராய்டு கைக்கணினி இருக்க வேண்டும். திறன்பேசிகளையும் பயன்படுத்தலாம் என்று  சொல்கிறார்கள். ஆனால் அவற்றின் சிறிய திரைகளில் வரைபடங்களின் விவரங்களைப் பார்ப்பது கடினமாக இருக்கலாம்.

லெகோ பூஸ்ட் வெர்னி (Vernie) சுழல்நெறிப் பட்டை (track) எந்திரனும், அதை இயக்கும் கைக் கணினியில் ஓடும் செயலியும்

லெகோ பூஸ்ட் வெர்னி (Vernie) சுழல்நெறிப் பட்டை (track) எந்திரனும், அதை இயக்கும் கைக் கணினியில் ஓடும் செயலியும்

நிரல் எழுதக் கற்றுக்கொள்வது இன்றைய தலைமுறைச் சிறுவர்களுக்கு அவசியம்

இம்மாதிரி பொம்மைகளை வைத்துப் பாடமாக இல்லாமல் விளையாட்டாகவே கற்றுக் கொள்வது எளிது.

வெர்னி (படத்திலுள்ளது), ஃபிரான்கி என்ற பூனை, M.I.R. 4, கித்தார் 4000 மற்றும் ஆட்டோ பில்டர் ஆகிய ஐந்து வெவ்வேறு எந்திரன்கள் கட்டும் துண்டுகள் பூஸ்ட் தொகுப்பில் உள்ளன. மற்றும் இவற்றைக் கட்டுவதற்கான செயல் முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் ஒரு பொழுதுபோக்கான செயலியும் வருவதால் இளம் சிறுவர்கள் கூட எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.

செயலாக்கமும் நிரலாக்கமும் உங்கள் கைக்கணினியில் நடைபெறுகின்றன. மேலும் இசை, ரோபோ பேசுவது போன்ற ஒலி விளைவுகள் எந்திரன் வழியாக அல்லாமல் உங்கள் கைக்கணினியின் ஒலிபெருக்கி வழியாக வெளியே வரும்.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 847 பாகங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானது நகர்வு மையம் (Move Hub). இதில் இரண்டு விசைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செயலாக்கங்கள் யாவும் இதனுள்ளேயே நடைபெறுகின்றன. உங்கள் கைக்கணினியில் எழுதிய நிரல்களை ப்ளூடூத் வழியாக இதற்கு அனுப்பும். இவை தவிர ஒரு ஒளி மற்றும் அகச்சிவப்பு உணரியும், ஒரு தனி விசையும் வருகின்றன. இவை இரண்டும் நகர்வு மையத்துடன் கம்பி மூலம் இணைக்கப்படுகின்றன.

லெகோ பூஸ்ட்டை இயக்கும் திறந்த மூல நிரல்கள்

அவர்கள் கொடுத்த பயிற்சிகளை முதலில் செய்யலாம். ஆனால் அவற்றில் திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்தி மேலும் செய்வதுதான் முக்கிய சவால்.

லெகோ பூஸ்ட்டுக்கு இரண்டு பேர் திறந்த மூலமாக பைதான் நிரல் எழுதியுள்ளனர். நீங்கள் இவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.

  1. பைலெகோபூஸ்ட் pylgbst
  2. பைபூஸ்ட் pyb00st

நன்றி தெரிவிப்புகள்

  1. Lego Boost review – cnet.com

இத்தொடரில் அடுத்த கட்டுரை: ஸ்பார்க்கி (Sparki) அர்டுயினோ (Arduino) எந்திரன் இழுத்து விடுதல் (drag-and-drop) முறையில் நிரல் எழுதுதல்

%d bloggers like this: