எளிய தமிழில் Robotics 14. எந்திரனியல் விதிகள் (Laws of Robotics)

ஐசாக் அசிமோவ் (Isaac Asimov) என்பவர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியல் (Biochemistry) பேராசிரியர் மற்றும் எழுத்தாளர். அறிவியல் சார்ந்த கருத்துகள், கோட்பாடுகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும்படி எளிதாக எழுதிப் பிரபலமானவர். அறிவியல் புனைகதைகளில் முன்னோடி. இக்காரணங்களால் செவ்வாய் கிரகத்தில் ஒரு எரிமீன் வீழ்ச்சி நிலக்குழிக்கு (impact crater) இவர் பெயரே இடப்பட்டுள்ளது.

ஐசாக் அசிமோவ் எழுதிய எந்திரன் தொலைநோக்கு

ஐசாக் அசிமோவ் எழுதிய எந்திரன் தொலைநோக்கு

எந்திரனியலுக்கான மூன்று விதிகளை இவர் 1942 இல் ஒரு சிறுகதையில் அறிமுகப்படுத்தினார். இது 1950 இல் வெளியிடப்பட்ட “எந்திரனாகிய நான்” (I, Robot) தொகுப்பிலும் சேர்க்கப்பட்டது.

  1. முதல் விதி – ஒரு எந்திரன் மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது மற்றும் மனிதர்களுக்குத் தீங்கு நேரக்கூடிய நேரத்தில் செயலற்ற நிலையில் இருக்கக் கூடாது.
  2. இரண்டாவது விதி – ஒரு எந்திரன் மனிதர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அவ்வாறு கீழ்ப்படிவது முதல் விதிக்கு முரணாக இருந்தாலொழிய.
  3. மூன்றாவது விதி – ஒரு எந்திரன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும், அத்தகைய பாதுகாப்பு முதல் அல்லது இரண்டாம் விதிகளுடன் முரண்படாத வரை.

அடுத்து வந்த புனைகதைகளில் முழு கோள்கள் மற்றும் மனித இனங்களின் அரசாங்கத்திற்கு எந்திரன்கள் பொறுப்பேற்பது போல் வந்த பின்னர் அடுத்த அறிவியல் புனைகதையில், அசிமோவ் நான்காவது விதியை உருவாக்கி அதை சுழியம் விதியாக மற்ற விதிகளுக்கெல்லாம் முன்பாகச் சேர்த்தார்.

0. ஒரு எந்திரன் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கக் கூடாது, மற்றும் மனித இனத்துக்குத் தீங்கு நேரக்கூடிய நேரத்தில் செயலற்ற நிலையில் இருக்கக் கூடாது.

முக்கியக் குறிப்பு: மேற்கண்ட விதிகள் அறிவியல் ரீதியாக உருவாக்கப்பட்டவை அல்ல. இவை புனைகதை எழுத்தாளரால் உருவாக்கப்பட்டவை.

எந்திரன்கள் இயல்பிலேயே இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. எந்திரன்களை உருவாக்கும் மனிதர்கள்தான் நிரல் எழுதும் போது இவற்றை மனதில் கொண்டு எழுத வேண்டும். சந்தையில் தற்போதுள்ள துப்புரவு எந்திரன்கள் போன்றவை மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கிறோம் என்பதை அறியும் திறனற்றவை. விபத்துக்களைத் தடுக்க முட்டுத் தாங்கிகள் (bumpers), எச்சரிக்கை ஒலி எழுப்பிகள் (warning beepers), பாதுகாப்புக் கூண்டுகள் (safety cages) அல்லது கட்டுப்படுத்தப்பட்ட அணுகல் பகுதிகள் (restricted access zones) போன்ற பல பாதுகாப்பு அமைப்புகள் உண்டு. தற்போது தயாரிக்கப்படும் அதிநவீன எந்திரன்களால்கூட மேற்கண்ட எந்திரனியல் விதிகளைப் புரிந்து கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் இயலாது.

மனித உருவ எந்திரன் (Humanoid) விரைவாக நடத்தல்

எந்திரன் திறனளவிடல் (Robot Benchmark) என்ற இந்த இணைய தளத்தில் நாம் இதற்கு முந்தைய பயிற்சிகளைச் செய்தபின்னர் இதைச் செய்வது நன்று.

நாம் முதல் கட்டுரையில் பார்த்த படம் ஆல்டெபாரான் NAO என்ற மனித உருவ எந்திரன். இங்கு சவால் என்னவென்றால் இந்த எந்திரனை 10 மீட்டர் தூரம் முடிந்தவரையில் விரைவாக நடக்க வைக்க நிரல் எழுத வேண்டும்.

மனித உருவ எந்திரன் விரைவாக நடத்தல்

மனித உருவ எந்திரன் விரைவாக நடத்தல்

பாவனையாக்கம் தொடங்கியவுடன் நிறுத்து கடிகாரம் தொடங்குகிறது. எந்திரன் நிறுத்து கடிகாரத்தின் முன் கடக்கும் போது, ஒரு உணரி எந்திரன் முன்னிருப்பதைக் கண்டுபிடித்து கடிகாரத்தை நிறுத்தும். இந்த கட்டத்தில் நிறுத்து கடிகாரத்தில் காட்டப்படும் நேரம் செயல்திறன் என பதிவு செய்யப்படுகிறது. எந்திரன் கீழே விழுந்து விட்டால் அல்லது தவழ்ந்து செல்ல முயன்றால் 30 வினாடிகள் தண்டம் சேர்க்கப்படும். அதன் உடலின் செங்குத்து நிலை மையம் 20 செ.மீ. விட கீழே சென்றால் அத்தகைய நிலை அடைந்தது என்று முடிவு செய்யப்படும்.

எப்படி இந்த எந்திரனின் வேகத்தை அதிகரிப்பது?

நீங்கள் இந்த எந்திரனைக் கட்டுப்படுத்தும் பைத்தான் நிரலைப் பார்த்தால், இது ‘forward.motion’ என்ற கோப்பிலுள்ள இயக்கத்தை ஓட்டுகிறது என்பது தெரியும்.

இந்த இயக்கம் 1360 மில்லி விநாடிகள் (மிவி) நீடிக்கும். இதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்: முதல் பகுதி 360 மிவி நீளமானது தொடக்க நிலையிலிருந்து எந்திரனை நடக்கத் தொடங்கும் தோற்ற அமைவுக்குக் (posture) கொண்டு வரும். இரண்டாவது பகுதி 1000 மிவி, அதாவது ஒரு வினாடி, நீடிக்கும் நடை சுழற்சி (walk cycle) ஆகும். இதை மீண்டும் மீண்டும் செய்யும் போது எந்திரன் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

நடை வேகத்தை மேலும் மேம்படுத்த நீங்கள் முயற்சி செய்யலாம். இயக்கக்கோப்பில் நடை சுழற்சி இயக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் கால்களின் ஒவ்வொரு நிலைக்குமான மூட்டு அமைப்புகள் (ரேடியன்களில்) உள்ளன. இந்தக் கோப்பை லிபர் ஆபிஸ் அல்லது எக்செல் போன்ற ஒரு விரிதாளில் திறந்து மாற்றங்கள் செய்து மீண்டும் சேமிக்கலாம்.

நன்றி தெரிவிப்புகள்

  1. Isaac Asimov – Robot Visions – Wikipedia
  2. RobotBenchmark – Humanoid Sprint

இத்தொடரில் அடுத்த கட்டுரை: எந்திரனுக்கு நிரல் எழுதும் வகைகள்

வரைகலை நிரல் இயற்றிகள். எளிதாக்கப்பட்ட உரை நிரலாக்கம். இடைநிலை நிரல் இயற்றிகள். முழுமையான நிரலாக்க மொழிகள். மனித உருவ எந்திரன் (humanoid) நெடுந்தொலை நடத்தல் (marathon).

ashokramach@gmail.com

%d bloggers like this: