எளிய தமிழில் IoT 1. பொருட்களின் இணையம் (Internet of Things)

நாம் இதுநாள்வரை இணையம் என்று சொல்வது கணினிகளின் இணையத்தைத்தான். நாம் மேசைக்கணினி, மடிக்கணினி, கைக்கணினி மற்றும் திறன்பேசி மூலம் வழங்கிகளைத் (servers) தொடர்பு கொண்டு செய்திகளைப் படிக்கிறோம், காணொளிகளைப் பார்க்கிறோம், மின்னஞ்சல் அனுப்புகிறோம். 

வழங்கிகளும் (Web Servers) உலாவிகளும் (Browsers) கொண்டது இணையம்

இவை எல்லாமே கணினிகள்தான். இவை எல்லாமே மின்னிணைப்பில் உட்செருகப் பட்டிருக்கும். அல்லது மடிக்கணினி, கைக்கணினி, திறன்பேசி போன்ற சாதனங்களைப் பயனர்கள் கவனமாக மின்னேற்றி வைத்துக் கொண்டிருப்பார்கள். மேலும் இவை அதிக அளவு தரவு அனுப்பவும், பெறவும் கம்பிவழி அல்லது கம்பியில்லாத் தொடர்புகளும் கொண்டிருக்கும்.

உணரிகளும் (sensors) இயக்கிகளும் (actuators) கொண்டது பொருட்களின் இணையம்

தொழில்துறையில் பொருட்களின் இணையம்

தொழில்துறையில் பொருட்களின் இணையம்

வெப்பநிலை (Temperature), காற்றழுத்தம் (Air Pressure) போன்ற பலவிதமான உணரிகளைப் பொருட்களின் இணையத்தில் பயன்படுத்துகிறோம். சூடேற்றி (Heater), பம்பு (Pump), ஒலியெழுப்பி (Buzzer) போன்ற பலவிதமான இயக்கிகளையும் பொருட்களின் இணையத்தில் பயன்படுத்துகிறோம். சில இயக்கிகளுக்கு மின்னிணைப்பு இருக்கக்கூடும். ஆனால் உணரிகள் பெரும்பாலும் மின்னிணைப்பு இல்லாத இடங்களில் வெறும் பொத்தான் மின்கலத்திலுள்ள (button cell) சக்தியின் மூலம் வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. இவைகளில் பொதுவாகவே கணித்திறன் (computing capacity) மிகமிகக் குறைவு. மேலும் இவை பெரும்பாலும் மிகக்குறைந்த அளவு தரவு அனுப்பக்கூடிய கம்பியில்லாத் தொடர்புகள் மட்டுமே கொண்டிருக்கும். ஆகவே கணினிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவற்றை வளங்கள் குறைந்த சாதனங்கள் (resource constrained devices) என்று பொதுவாகச் சொல்கிறோம்.

இணையத்தின் கருத்தியல்கள் (paradigms) பொருட்களின் இணையத்துக்குத் தோதானவை அல்ல

இணையத்தில் கேள் (Request) –  பதிலளி (Response) என்ற கருத்தியலைப் (paradigm) பயன்படுத்துகிறோம். உலாவி ஒரு இணையத்தள முகவரியைக் (URL) கேட்டால் இணைய வழங்கி அந்த முகவரியிலுள்ள ஆவணத்தை எடுத்து அல்லது உடன் தயாரித்து பதிலனுப்பும். ஒரு உலாவி பல வழங்கிகளைத் தொடர்பு கொள்ளக் கூடியது.

பொருட்களின் இணையத்தில் பெரும்பாலும் வெளியிடு (Publish) –  சந்தா சேர் (Subscribe) என்ற கருத்தியலைப் (paradigm) பயன்படுத்துகிறோம். ஒரு வெப்பநிலை உணரி (temperature sensor) அத்தருணத்தில் உள்ள வெப்பநிலையை வெளியிடும். இத்தரவில் நாட்டம் உடையவர்கள், எடுத்துக்காட்டாக ஒரு நுழைவாயில் (gateway), முன்னால் சந்தா சேர்ந்திருந்தால் இந்த வெப்பநிலைத் தரவு அதற்குக் கிடைக்கும். எந்தவொரு உணரியும் இயக்கியும் பெரும்பாலும் ஒரேயொரு நுழைவாயிலுடன் மட்டுமே தொடர்பு கொள்ளும்.

இணையத்தின் வரைமுறைகள் (protocols) பொருட்களின் இணையத்துக்கு ஒத்து வராது

இணையத்தில் HTTP என்ற வரைமுறை மிக முக்கியமானது. இது கேள்-பதிலளி என்ற கருத்தியலை செயல்படுத்துகிறது. இது பொருட்களின் இணையத்துக்குத் தோதானது அல்ல என்பதைக் கீழ்க்கண்ட எடுத்துக்காட்டு தெளிவாக்கும். உங்கள் தொழிற்சாலையில் எச்சரிக்கை மணி அடித்தால் தானியங்கியாக இன்னது செய்ய வேண்டுமென்று அமைக்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். HTTP வரைமுறை என்றால் எச்சரிக்கை மணி அடித்ததா, அடித்ததா என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இது தேவையற்ற வேலை செய்வது மட்டுமல்லாமல் மின்கலத்தின் சக்தியையும் சாப்பிட்டு விடும். பொருட்களின் இணையத்தில் MQTT போன்ற வரைமுறைகளைப் பயன்படுத்துகிறோம். இவை சந்தா சேர்ந்தபின் மின்கலத்தின் சக்தியை சேமிப்பதற்காகத் தூங்கிக்கொண்டிருக்கும். எச்சரிக்கை மணி அடித்த தகவல் சந்தா சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுப்பப்படும். தகவல் வந்தவுடன் எழுந்து தன் வேலையைச் செய்யும். பின்னர் திரும்பவும் மின்கலத்தின் சக்தியை சேமிப்பதற்காகத் தூங்கிவிடும்.

மிக அதிக அளவு தரவுகள் சேர்ந்து விடும்

உணரிகளும் இயக்கிகளும் தொடர்ந்து தரவுகளை அனுப்பிக் கொண்டே இருப்பதால் மிக அதிக அளவு தரவுகள் சேர்ந்து விடும். ஆகவே இவற்றை சமாளிக்கத் தக்க தரவுத் தளங்களும், செயலிகளும் பொருட்களின் இணையத்துக்குத் தேவை.

ஆக, இணையம் போலவேதான் என்றாலும், பொருட்களின் இணையம் சீராக வேலைசெய்யப் பல புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. இவற்றை இக்கட்டுரைத்தொடரில் பார்ப்போம்.

நடைமுறையில் IoT பயன்பாடுகள் 

பற்பல துறைகளைத் திறன் மிக்கதாக ஆக்க பொருட்களின் இணையம் புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

  • திறன்மிகு வீடு (Smart Home)
  • அணியக்கூடிய சாதனங்கள் (Wearables)
  • இணையத் தொடர்பு கார்கள் (Connected Cars)
  • தொழில்துறையில் பொருட்களின் இணையம் (Industrial IoT)
  • திறன்மிகு நகரங்கள் (Smart Cities)
  • திறன்மிகு சில்லறை விற்பனை (Smart Retail)
  • நல்வாழ்வில் பொருட்களின் இணையம் (IoT in Healthcare)
  • பயிரிடுதலில் பொருட்களின் இணையம் (IoT in Farming)

இவற்றில் தொழில்துறையில் பொருட்களின் இணையம், அதிலும் குறிப்பாக உற்பத்தி (manufacturing), பற்றி நாம் இக்கட்டுரைத் தொடரில் விரிவாகப் பார்ப்போம்.

நன்றி தெரிவிப்புகள்

  1. the econocom blog

இத்தொடரில் அடுத்த கட்டுரை: தொழில்துறையில் பொருட்களின் இணையம் (IIoT)

முதல் தொழிற்புரட்சி – இயந்திரங்கள். இரண்டாம் தொழிற்புரட்சி – தொழில்நுட்பம். மூன்றாம் தொழிற்புரட்சி – கணினிகள். நான்காம் தொழிற்புரட்சி (Industry 4.0). திறன்மிகு தொழிற்சாலை (Smart Factory). உற்பத்தியில் பொருட்களின் இணையத்தால் பயன்கள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: