எளிய தமிழில் IoT 15. தரக் கட்டுப்பாடும் தர உறுதியும்

சந்தையில் போட்டிபோட்டு விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு பாகம் தரக்குறைவாக இருந்து உடைந்து விட்டால் இலவசமாக மாற்றிக் கொடுக்க (warranty claims) வேண்டிவரும். மேலும், தொழிற்சாலையிலேயே பாகங்கள் தரக்கட்டுப்பாட்டில் நிராகரிக்கப்பட்டால் (rejection) அல்லது மறுசெயற்பாட்டுக்கு (rework) அனுப்ப வேண்டி வந்தால் வீண் செலவுதானே.

இம்மாதிரி நிராகரிப்புகள், மறுசெயல்பாடுகள் மற்றும் உத்தரவாத காலத்தில் இலவசமாக மாற்றிக் கொடுத்தல் ஆகியவற்றைக் குறைக்க நாம் நிலையான தரத்தில் உற்பத்தி செய்யும் வழிமுறைகளை மேம்பாடு செய்து கொண்டே இருக்க வேண்டும். உற்பத்தியில் குறைபாடுகள் வருவது தாமதமின்றித் தெரியவந்தால் நாம் அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை உடன் செயல்படுத்தலாம். 

தயாரிப்பு குறைபாட்டின் ஆரம்ப குறிகாட்டிகளை வழங்குவதன் மூலம் உற்பத்தியின் நிலையான தரத்தை உருவாக்க இது உதவும். 

தரக் கட்டுப்பாடும் தர உறுதியும்

தரக் கட்டுப்பாடும் தர உறுதியும்

தரப் பிரச்சினை வந்தவுடன் திருத்தம் செய்தல்

எதிர்வினை (reactive) தரக் கட்டுப்பாட்டு முறையில் ஒரு பாகத்தை உற்பத்தி செய்தவுடன் சோதனைகள் செய்வோம். குறைபாடுகள் இருந்தால் அதை சரிசெய்ய உடன் நடவடிக்கைகள் எடுப்போம். சந்தைக்குத் தயாரிப்பு வருவதற்குமுன் குறைபாடுகளை நீக்குவதுதான் இதன் குறிக்கோள். இதைத் தரக் கட்டுப்பாடு (quality control) என்று சொல்கிறோம்.

தரப் பிரச்சினை வருமுன் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல்

முனைப்பான (proactive) தரக் கட்டுப்பாட்டு முறையில் ஒரு பாகத்தை உற்பத்தி செய்வதற்குமுன் குறைபாடுகளைத் தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகளை எடுப்போம். கச்சாப் பொருட்கள் (raw materials) மற்றும் பாதி வேலை செய்த பாகங்களின் (work-in-progress) பண்புகள் யாவற்றையும் உணரிகள் மூலம் அளவெடுத்து பதிவு செய்வோம். தயாரிப்பு எந்திரங்களையும் அளவுக்கருவிகள் வைத்துக் கவனமாகக் கண்காணிப்போம். இதைத் தர உறுதி (quality assurance) என்று சொல்கிறோம்.

இம்மாதிரி தயாரிப்பின் முந்தைய கட்டங்களில் உணரிகளைப் பயன்படுத்தி எல்லாவிதமான பண்புகளையும் அளவிட்டு பதிவு செய்வதன் மூலம் பின்னால் வரும் பிரச்சினைகள் பலவற்றை நாம் தடுக்க முடியும்.

நன்றி

  1. Integrify – Mike Raia

இத்தொடரில் அடுத்த கட்டுரை:  பட்டை மற்றும் கட்டக் குறியீடு (Barcode and QR code).

பட்டைக் குறியீடு. கட்டக் குறியீடு. குறியீடு உருவாக்கவும், படிக்கவும் திறந்த மூல மென்பொருட்கள். கம்பியில்லா வருடிகள் (scanner).

ashokramach@gmail.com

%d bloggers like this: