சப்பாத்திக்குத் தமிழில் என்ன என்று தெரியுமா?

தலைப்பே தப்பு என்று நினைக்கிறீர்களா? போன வாரம் நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். கடந்த வாரம் கணித்தமிழ் பற்றிய கூட்டம் ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தான், சப்பாத்திக்குத் தமிழில் என்ன என்று தெரிந்து கொண்டேன். சப்பாத்திக்கு மட்டுமில்லை, பப்ஸ், பீட்சா, ரஸ்க், சோபா ஆகியவற்றை எல்லாம் தமிழில் எப்படிச் சொல்வது என்றும் தெரிந்து கொண்டேன். உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், தொடர்ந்து படியுங்கள், சொல்கிறேன்.

கணித்தமிழ் பற்றிய கூட்டம் என்றால் தமிழ்நாட்டு அரசே கூட்டிய கூட்டம். ‘இனி இது எனது அரசு இல்லை, நமது அரசு’ என்று முதலமைச்சர் அறிவித்தாரே, அதை நிறுவுவது போல, கணித்தமிழ் வளர்ச்சிக்கு அகரமுதலித் திட்ட இயக்ககம், கணினித் தொழில்நுட்பத் துறை வல்லுநர் குழுக்கூட்டத்தைக் கூட்டியிருந்தது. நண்பர் நீச்சல்காரனின் ஒருங்கிணைப்பில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன், நீச்சல்காரன், அலைபேசியில் கூப்பிட்டு கலைச்சொற்கள் பற்றிய கூட்டம் இது, நாம் உருவாக்கியிருக்கும் கலைச்சொற்களைப் பற்றி உரையாடத் தகுந்த களம் இது, வாருங்கள் என்று ஊக்கப்படுத்தியிருந்தார். அந்த ஊக்கத்தின் அடிப்படையில் நானும் போயிருந்தேன்.

போன பிறகு தான், தமிழ்நாட்டு அரசு, தனிப்பெரும் செம்மொழியாம் தமிழுக்கு என்னவெல்லாம் செய்து வருகிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்டேன். அவற்றுள் சில:

1) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் இன்னும் சில ஆண்டுகளில் தன்னுடைய பொன்விழாவை நெருங்குகிறது. (1974இல் பாவாணர் தலைமையில் இயக்ககம் உருவாக்கப்பட்டிருக்கிறது)

2) மாதத்திற்கு ஆயிரம் கலைச்சொற்களுக்கு மேலாக அகரமுதலி இயக்ககம் வெளியிட்டு வருகிறது. இத்தனைக்கும் இங்கிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு, அதிலும் பெரும்பாலானோர் தொகுப்பூதியமே பெற்று வருகிறார்கள்.

3) இயக்ககத்தின் முன்னெடுப்பில் சொற்குவை(sorkuvai.com) தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழில், ஆங்கிலத்தில் என்ன வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை என்றாலும் அங்கே போய்த் தேடிக் கொள்ளலாம். ஏறத்தாழ நான்கு இலட்சம் சொற்களைச் சேர்த்திருக்கிறார்கள்.

4) இந்தியாவிலேயே அகரமுதலி(அகராதி)க்கென ஒரு துறையை அரசே உருவாக்கி நடத்தி வருவது தமிழ்நாட்டு அரசு என்று தான் கருதப்படுகிறது.

5) செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி பதின்மூன்றாயிரம் பக்கங்களுக்கும் அதிகமான பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

6) தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எனத் தனித்தமிழ்ச் சொற்கள் புத்தகம் (இதில் தான், முதல் பத்தியில் பேசிய சப்பாத்தி வருகிறது :))

7) இவற்றையெல்லாம் விட முத்தாய்ப்பானது என்ன தெரியுமா? தமிழில் கலைச் சொற்கள் தெரிந்து கொள்ள கட்டணமில்லா அழை மைய எண் இருக்கிறது. 14469க்குக் கூப்பிட்டு கலைச்சொற்கள் கேட்டுப் பாருங்கள்.

8) இவை தவிர, அகராதியியலில் சிறந்த அறிஞர்க்குத் தேவநேயப் பாவாணர் விருது, தமிழர் அல்லாத வெளிநாட்டு அறிஞர்க்கு வீரமாமுனிவர் விருது, தனித்தமிழில் பேசுவோர்க்குத் தூயதமிழ்ப் பற்றாளர் விருது, தனித்தமிழில் பாட்டு எழுதும் புலவர்க்கு நற்றமிழ்ப்பாவலர் விருது, மொழித் தூய்மையைக் கையாளும் ஊடகத்திற்குத் தூயதமிழ் ஊடக விருது என்று விருதுகளை அள்ளி வழங்கி வருகிறார்கள்.

9) அதிலும் சீரிளமைத் திறம் கொண்ட செந்தமிழை இளையோரிடம் கொண்டு செல்ல, ‘சொல்லின் தாய்’ விருது வழங்குகிறார்கள். புதுச் சொற்களை உருவாக்கித் தமிழுக்குக் கொடுக்கும் தகுதியான மாணவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருது வழங்கப்படுகிறது.

இப்படிப் பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட இயக்கம், ‘தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே!’ என்னும் பாவேந்தரின் வரிகளை வாழ்வியலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மருத்துவர்கள், பொறியாளர்கள் என ஒவ்வொரு துறை அறிஞர்களையும் அழைத்து, தமிழ்க் கலைச் சொற்கள் கூட்டம் நடத்தி வருகிறது.

இந்த முறை நான் கலந்து கொண்ட கூட்டத்தில் கணினித் தமிழ் வளர்ச்சி பற்றியும் சொற்குவை திட்டத்தை மேம்படுத்துவது பற்றியும் அறிஞர்கள் உரையாற்றினார்கள். நானும் கலந்து கொண்டு, சொற்குவையில் இருக்கும் வார்த்தைகளைப் பொது வெளியில் வைப்பது, stackoverflow தளத்தைப் போல, சொற்குவை தளத்தை
மாற்றுவது, சொற்குவை நிரலை(API)ப் படைப்பாக்கப் பொது உரிமத்தில் வெளியிடுவது ஆகியவற்றை வலியுறுத்திப் பேசினேன்.

கலந்து கொண்ட அறிஞர் ஒவ்வொருவரும் கணித் தமிழுக்கு அரசும் மக்களும் செய்ய வேண்டிய ஆழமான கருத்துகளைப் பகிர்ந்தார்கள். முனைவர் தமிழ்ப்பரிதி மாரி, ஒரு படி மேலே போய்த் தமிழ்நாட்டில்
வெளியாகும் எல்லா மென்பொருளும் வன்பொருளும் தமிழில் தான் வர வேண்டும் என்னும் ஒற்றை அரசாணை போதும், அதை மீறுவோர்க்குத் தண்டம் என்று வாங்கினால், தமிழ் வளர்ச்சித் துறை வளம் கொழிக்கும் துறையாக ஒரே நாளில் மாறி விடும் என்னும் அவருடைய கருத்து புன்சிரிப்புடன் கூடிய ஆமோதிப்பை எல்லோரிடமும் கொண்டு வந்தது. இப்படிச் செய்தால், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை உடனடியாக நடைமுறைப்படுத்தி விடலாம் என்று அவர் குறிப்பிட்டார். தமிழ் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும், வயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும், தமிழும் நாமும் வேறல்ல, தமிழே நம் வேர் என்று அவர் சொல்லி விடை பெற்ற போது அங்கிருந்த மொத்த அறிஞர் குழாமும் அவர் கருத்தை ஆமோதித்தது.

தமிழ்நாட்டில் ஒரு பெட்டிக்கடையின் பெயரைக் கூடத் தமிழில் எழுத வேண்டும் என்று அரசாணை இருக்கிறது. அப்படியானால் அதே நிலையைத் தானே இங்கு வெளியாகும் மென்பொருள், வன்பொருளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கருத்தை அடியொற்றிய கருத்தை நானும் எடுத்துரைத்தேன்.

எல்லாக் கூட்டங்களுக்கும் மிகுந்த ஆயத்தங்களுடன் வருவது போலவே, இந்தக் கூட்டத்திற்கும் நீச்சல்காரன், தம்முடைய கருத்துகளை எடுத்து வந்திருந்தார். கருத்துகள் மட்டுமல்லாது, நூற்றுக்கணக்கான கலைச் சொற்களைத் தமிழாக்கிக் கொண்டு வந்து தந்தது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது.

திருச்சிராப்பள்ளியில் இருந்து வந்திருந்த முனைவர் துரை மணிகண்டன் அவர் பங்கிற்கு நூற்று எண்பது சொற்களை உருவாக்கிக் கொண்டு வந்திருந்தார். ‘பிறருக்குத் தமிழைக் கொண்டு செல்வதற்கு முன், நாம் தமிழைப் பயன்படுத்த வேண்டும், நாம் செய்யாத ஒன்றைப் பிறருக்குச் சொல்வது எப்படி அறமாகும்?’ என்னும் அறச்சீற்றத்தை வெளிப்படுத்தியதாக அவருடைய உரை அமைந்திருந்தது.

தொடக்கத்தில் உரையாற்றிய முனைவர் அண்ணா கண்ணன், மொழியாக்கத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை விதிகளை எடுத்துரைத்தார். மொழிபெயர்ப்பு, மொழியாக்கம் இரண்டையும் சரிவரப் பிரித்து புரிந்து கலைச் சொற்களை உருவாக்க வேண்டும் என்பது முனைவர் இல. சுந்தரம் அவர்களின் கருத்தாக அமைந்தது.

கலைச்சொல்லாக்க உரையாடலில், spyware என்பதை உளவு பொருள் என்று சொல்லலாம் என்று நீச்சல்காரன் சொன்னார். இன்னும் கொஞ்சம் அதைச் சுருக்கி, உளவி என்று சொல்லலாமே என்று நான் கேட்டுக் கொண்டேன். hacker என்னும் சொல்லை ஊடுருவி என்று சொல்லலாமா என்று நான் கேட்டேன். ‘சொல்லலாம் தான், ஆனால், hacker என்பதை எதிர்மறைச் சொல்லாக மட்டும் பார்க்கக் கூடாது, நேர்மறைப் பொருளிலும் அது பயன்படுமே!’ என்று விளக்கிச் சொன்னார் நீச்சல்காரன். சரி, அப்படியானால், அதையும் உள்ளடக்கி, ‘ஊடுபாவுநர்’ என்று சொல்லலாமே என்று முன்மொழிந்தேன். இதே போல, Data Analyst என்பதற்கு தரவு ஆயர் / ஆய்நர் முதலிய சொற்களைப் பற்றிப் பேசினோம்.

நிகழ்வின் தொடக்கத்தில் இயக்கக இயக்குநர் தங்க. காமராசு அவர்கள், இயக்ககம் முன்னெடுத்திருக்கும் முயற்சிகளையும் அதில் இருந்த சிக்கல்கள், அவற்றைத் திறம்படக் களைந்தது எப்படி என்பதையும் விரிவாக எடுத்துச் சொன்னார். தங்கம் செய்யாததையும் சங்கம் செய்யும் என்பதை எடுத்துச் சொல்லும் வகையில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கில் அவருடைய நோக்கவுரை அமைந்திருந்தது. நிகழ்வை முனைவர் கார்த்திக் தொகுத்து வழங்கினார். ஒவ்வொருவர் பேச்சிலும் குறிப்பெடுத்து சரியான கருத்துகளைத் தம்முடைய தொகுப்புரையில் அவர் எடுத்துச் சொன்னது எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. தொகுப்பாளர் சாந்தி அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது கூட்டம்.

எல்லாம் சரி, சப்பாத்திக்குத் தமிழில் என்ன என்று சொல்லவே இல்லையே என்கிறீர்களா?

சப்பாத்தி – கோதடை
பப்ஸ் – திணியடை
ரஸ்க் – வறளப்பம்
பீட்சா – பொதியப்பம்
சோபா – மெத்திருக்கை

இன்னும் பிஸ்கட், குக்கர், பிளக்(plug), டிசர்ட் ஆகியவற்றுக்கெல்லாம் தமிழில் தெரிய வேண்டுமா? அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் நற்றமிழ் அறிவோம் நூலைப் படியுங்கள்.

தமிழுயர்ந்தால்தான் தமிழன் உயர்வான்!
– பாவேந்தர் பாரதிதாசன்

%d bloggers like this: