எளிய தமிழில் IoT 22. இடர்மிகுந்த வேலைகளில் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு

சுரங்கப் பணியாளர்களின் உயிர் காக்கும் கேனரி (canary) பறவை

சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் கேனரி போன்ற சிறு பறவைகளைக் கூண்டில் வைத்துக் கையோடு எடுத்துச் செல்வார்களாம்.  திடீரென்று  கார்பன் மோனாக்சைடு (carbon monoxide) அல்லது மீத்தேன் (methane) போன்ற நச்சுவாயு மிகுந்தால் அந்தப் பறவை முதலில் கீச்சிடுதலை நிறுத்தி விட்டுத் துவண்டு விழும். அதைப் பார்த்தவுடன் வெளியே ஓடி வந்துவிடுவார்களாம். இவ்வாறு கேனரி அக்காலத்தில் ஆபத்தை முன்னறிவித்து உயிர் காக்கும் உணரியாக செயல்பட்டது.

தொழில்நுட்ப ரீதியான கேனரி

பாதுகாப்பாக பணிசெய்வோம்

பாதுகாப்பாக பணிசெய்வோம்

பணியிடங்களில் நடக்கும் விபத்துகள் அனைத்துக்கும் நிர்வாகமே பொறுப்பு. எச்சரிக்கைகளையும் மீறி பணியாளர்கள் குறுக்கு வழியில் வேலை செய்து விபத்துக்களில் மாட்டிக் கொண்டாலும் நிர்வாகமே பொறுப்பு. ஆகவே விபத்துக்கள் ஏற்படாமல் கண்காணிக்கவும், தவிர்க்கவும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதற்கு IoT தொழில்நுட்பம் மிகவும் உதவியாக ஏற்பான விலையில் வந்துவிட்டது.

அணுமின் நிலையங்களில் கதிர்வீச்சு ஓரளவுக்கு மேல் சென்றால் உடல் நலத்திற்கு ஆபத்து. அதற்கும் மேல் சென்றால் உயிருக்கே ஆபத்தானது. ஆகவே கைகர் எண்ணி (geiger counter) அணிந்து கொண்டு தான் ஆபத்தான கதிர்வீச்சு (radiation) வரக்கூடிய இடங்களில் பணிபுரியலாம். இம்மாதிரி தொழில்நுட்ப ரீதியாக முன்னெச்சரிக்கை செய்யும் அணியக்கூடிய சாதனங்கள் (wearables) பல இப்போது வந்துவிட்டன.

பழுதடைந்த எந்திரங்கள் பணியாளர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தானவை. ஆகவே இயந்திரங்கள் பழுதடைவதைத் தவிர்க்கவும் கண்காணிக்கவும் உணரிகளைப் பயன்படுத்த வேண்டும்.

இடர்பாடான முறைகளில் வேலை செய்கிறார்களா எனக் கண்காணித்தல்

சுரங்கங்கள் (mines), அணுமின் நிலையங்கள் (nuclear power stations) தவிர எண்ணெய்க் கிணறுகள் (oil wells), எஃகு ஆலைகள் (steel plants), வார்ப்பகங்கள் (foundries) போன்ற இடர் மிகுந்த வேலைகளில் பணியாளர்கள் இடர்பாடான முறைகளில் வேலை செய்கிறார்களா எனக் கண்காணித்தல் அவசியம். மூச்சு, நாடி போன்ற உயிர்ப்புக்குறிகளைத் தொடர்ந்து கண்காணிக்க அணியக்கூடிய சாதனங்கள் (wearables) உதவுகின்றன.

ஆபத்தான இயந்திரங்களை இயக்குபவர்கள் இடர்பாடான இடங்களில் தெரிந்தோ, தெரியாமலோ சென்றால் அபாய அறிவிப்பு கொடுக்க இருப்பு கண்டறிதல் உணரிகளைப் (Presence Detection Sensors) பயன்படுத்தலாம். இந்த வேலைக்கு சீரொளியைப் பயன்படுத்தும் உணரிகளும் (laser light sensors) உள்ளன.

நன்றி

  1. Safety Posters in Tamil

இத்தொடரில் அடுத்த கட்டுரை: திறன்மிகு மானிகள் (Smart Meters)

நிகழ்நேரப் பயனளவைக் கண்காணித்தல். திறன்மிகு மானிகள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: