கட்டற்ற மென்பொருள் – மின்னூல் – ம. ஸ்ரீ. ராமதாஸ்

கட்டற்ற மென்பொருள்

freesoftware_book-front

ரிச்சர்டு எம். ஸ்டால்மன்
தமிழாக்கம் – ம. ஸ்ரீ. ராமதாஸ்

 

உரிமை  Creative Commons Attribution-NoDerivs 3.0 United States License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com

நூல் தட்டச்சு உதவி – குனு அன்வர் – gnukick@gmail.com

 

 

முன்னுரை

நான் பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக ஞாபகம். கணினி அறிவியல் பாடத்தின் தனியே பயிலகம் ஒன்றை நடத்திக் கொண்டிருநத்ார். ஏட்டறிவைக் காட்டிலும் பழகிப்பெறும் அறிவு சிறந்ததெனச் சொல்லி எங்களை அவரது பயிலகத்தில் இணைந்து படிக்கத் தூண்டுவார். பள்ளியில் கிடைக்கப் பெறும் சில கணினிகளில் அனைவரும் பழகிப் பயில்வது கடினமெனத் தோன்றியதால் நானும் அவரது பயிலகத்தில் இணைந்து கற்கத் தொடங்கினேன்.
BASIC என்றொரு நிரலாக்க மொழியும், வேர்ட் ஸ்டார் என்ற பயன்பாடும் எங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இதில் வேர்டு ஸ்டார் உரைகளை ஆக்க, தொகுக்க பரவலாக அன்று பயன்படுத்தப்பட்டு பிரித்து அவை ஒவ்வொன்றுக்கு கீழும் பல்வேறு பணிகளை தந்திருப்பர். எடுத்துக்காட்டாக அச்சு மெனு கோப்பினை அச்சிடுதற்கான காரியங்களில் துணை புரியும்.
அம்மெனுக்களுக்கு சில விசைக் கூட்டுக்களை தட்டுவதன் மூலம் செல்ல முடியும். உதாரணத்திற்கு, தொகுக்க பயன்படும் எடிட் மெனுவிற்கு செல்ல நாம் சேர்த்து தட்ட வேண்டிய விசை ALT+E. இப்படி இந்த சுருக்கு வழிகளை எனக்கு பாடமெடுத்த ஆசிரியர் சொல்லிக் கொண்டு வர, திடீரென்று, “சார்! எனக்கு ALT+E தட்டினா எடிட் மெனுவிற்கு போக வேண்டாம். நான் விரும்பும் வேறு விசைக் கூடுதல்களில் அது நிகழ வேண்டும். ALT+E ஐ வேறு பணிகளுக்கு நான் பயன்படுத்திக் கொள்கிறேன். எப்படி செய்வது?” எனக் கேட்டேன்.

அதெல்லாம் முடியாது. அவர்கள் எப்படி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனரோ அப்படித்தான் செய்ய இயலும். நீ நினைப்பது போல் மாற்றங்களெல்லாம் செய்ய முடியாது என்று சொன்னார் ஆசிரியர். எனதாகிப்போன ஒரு பொருளின் மீது எனக்கிருக்க வேண்டிய தார்மீக உரிமை பறிக்கப்படுவதாக உணர்ந்தேன். இச்சம்பவம் மனதில் ஏதோ ஒரு உறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.

மென்பொருள் ஒன்றை பயன்படுத்துபவனாய் அதனை எனது விருப்பங்களுக்கு ஏற்றபடி செய்துகொள்ள முடியாத நிலை ஏன்? அப்போது என்னிடமும் அதற்கான விடையில்லை. என்னைச் சுற்றியிருந்தோரிடமும் இல்லை.
பின்னர் கல்லூரியில் பயின்ற காலகட்டங்களில் ஒத்த உணர்வுகளால் உந்தப்பட்ட இயக்கத்தோர் பற்றியும், லினக்ஸ் போன்ற மென் பொருட்களைப் பற்றியும் அறியலானேன். இவற்றை பெறுவோர் அவற்றில் தங்களுக்கு வேண்டிய மாற்றங்களை செய்துகொள்ள ஏதுவாக மூல நிரல்களும் கொடுக்கப்படும் என்பதையும் அறியலானேன்.
பயனரொருவருக்கு அவர் பெறும் மென்பொருளின் மீதான தார்மீக உரிமைகள் தடுக்கப்படுவதையும், அதற்கெதிராக தலை சிறந்த நிரலாளர்களாக கருதப்பட்டு வந்தோரே குரல் கொடுத்து, மாற்று வழிகளை ஏற்படுத்தி வந்தமையும் அளவற்ற மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது. அத்தகைய சமூகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இவை பரவ எம்மால் ஆன சிறு சிறு பங்களிப்புகளை செய்து வரத் துவங்கினேன்.

கட்டற்ற மென்பொருள் பற்றியும் அதனைத் தோற்றுவித்து இவ்வியங்கங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்த ரிச்சர்டு ஸ்டால்மன் பற்றியும் அவரது பணிகள் குறித்தும் அறிந்துகொண்டேன். இடையே அவரது சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்றது. மென்பொருளால் ஏற்படும் தாக்கங்களுக்கு நாமனைவருமே ஆட்படுகிறோம். ஆனால் அத்துடன் தொடர்புடைய ஆழ்ந்த அரசியல், வர்த்தக விளையாட்டுகளால் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும், ஏற்படப்போகும் பாதிப்புகள் ஏராளம்.

அவற்றை இனங்கண்டு சொல்வதோடு மாற்று வழிகளையும் காட்டுவதாக ரிச்சர்டு ஸ்டால்மேனின் படைப்புகள் அமைந்திருந்தன. இவை நம்மக்களுக்கு போய்ச் சேர வேண்டுமாயின் நம்மொழியில் இருக்க வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. குனு என்று அவர் துவக்கிய திட்டம் தற்போது தனது இருபத்தைந்தாம் அகவையில் அடியெடுத்து வைத்துள்ளது.

அவர் காட்ட விழைந்த வழியில் கணக்கற்ற மென்பொருள் திட்டங்கள் துவக்கப்பெற்று இன்று உலகமனைத்திற்கும் பலனளித்து வருகின்றன. அவ்வியக்கம் ஏன் ஏற்படுத்தப்பட்டது? நடைமுறையில் இருக்கும் பிற முறைகளில் உள்ள குறைபாடு என்ன? மாற்று வழிமுறைகள் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு அவரே இயற்றிய கட்டுரைகளை தமிழாக்கி விடையாகத் தந்திருக்கின்றோம். இதைத் தவிர கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டி குனுவின் கட்டுரைகள் சிலவும் சேர்க்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் குனு இணைய தளத்தில் தமிழில் கிடைக்கப் பெறுகின்றன.

இதற்கு முன்னர் இவ்விடயங்களை தமிழர்களுக்கு எடுத்தச் செல்ல பலரும் பல்வேறு வழிகளில் முயன்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். இதனை புத்தகமாக வெளியிட்டு இது படைக்கப்பட்ட நோக்கத்திற்கு முழு வடிவம் தர உதவிய அனைத்து நெஞ்சங்களுக்கும் உளமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குகிறோம்.

கட்டற்ற மென்பொருட்களின் தன்மையைப் போலவே அதன் கொள்கையை விளக்க வந்திருக்கும். இப்புத்தகமும் கட்டற்றது. இதிலுள்ள விடயங்களை யாருக்கும் எங்கேயும் எப்போதும் எவ்வடிவிலும் எடுத்துச் செல்வதில் தங்களுக்கு எவ்வித தயக்கமும் இருக்க வேண்டாம்.

இப்படைப்பில் நிறை குறை என எதுவாக இருப்பினும் amachu@gnu.org என்ற முகவரிக்கு அறியத்தாருங்கள். கட்டற்ற மென்பொருள்கள் வளர ஊக்கமும் உற்சாகமும் ஒத்துழைப்பும் நல்குங்கள்.

ம. ஸ்ரீ ராமதாஸ்

shriramadhas@gmail.com

 

பதிவிறக்க*

freetamilebooks.com/ebooks/free-software/

 

 

%d bloggers like this: