எளிய தமிழில் CAD/CAM/CAE 9. CAD கோப்பு வகைகள்

ஒவ்வொரு CAD மென்பொருளிலும் அதற்கேயான தன்னகக் கோப்பு வடிவத்தில் (Native format) சேமித்து வைப்பது அவசியம். முக்கியமாக 3D CAD மென்பொருட்களில், நாம் முன்னர் பார்த்தபடி, அளவுரு மாதிரிகளின் வரலாற்றையும் படிமுறைகளையும் இம்முறையில் மட்டுமே சேமிக்க முடியும். இதுதான் உங்கள் மூல வடிவம். எனினும் பல காரணங்களால் நாம் மற்ற கோப்பு வகைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். 

CAD கோப்பு வகைகள்

CAD கோப்பு வகைகள்

CAD கோப்பு வகைகள் ஏற்றுமதி

பொறியியல் பகுப்பாய்வு (CAE) மற்றும் சிஎன்சி நிரல் இயற்றல் (CAM) மென்பொருட்களுக்கு வேறு கோப்பு வகைகள் தேவையாக இருக்கலாம். நம்முடைய மூல வடிவத்திலிருந்து இம்மாதிரி வேறு எந்த வேலைக்கும் தேவையான கோப்பு வடிவத்தில் ஏற்றுமதி செய்து கொள்ளலாம். இது மிகவும் கடினமல்ல.

CAD கோப்பு வகைகள் இறக்குமதி

நாம் இறக்குமதி செய்யக்கூடிய கோப்பு வகைகள் மற்ற மென்பொருட்களிலிருந்து ஏற்றுமதி செய்யப் பட்டவை. இம்மாதிரி ஏற்றுமதி செய்த கோப்புகள் “புத்திசாலித்தனம்” இல்லாதவை. ஏனெனில் இவற்றில் அளவுரு மாதிரிகளின் வரலாறும் படிமுறைகளும் இருக்காது என்றும் முன்னரே பார்த்தோம். இருப்பினும் நாம் இம்மாதிரி இறக்குமதி செய்த வடிவங்களிலும் மாற்றங்கள் செய்யலாம். ஆனால் இந்த மாற்றங்களை 2D உருவரைவில் மாற்றங்கள் செய்வது போலவே தான் செய்ய முடியும்.

DWG – ஆட்டோகேட் தனியுரிமக் கோப்பு வகை

இது ஆட்டோகேட் (AutoCAD) வணிக மென்பொருளின் தனியுரிமக் கோப்பு வகை. ODA (Open Design Alliance) 1200 நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்ப இலாபநோக்கற்றக் கூட்டமைப்பு. சமீப காலங்களில் இந்தக் கோப்பு வகை பற்றிய விவரங்கள் ODA மூலமாகவும் கிடைக்கிறது என்று முன்பு ஒரு கட்டுரையிலேயே பார்த்தோம்..

DXF – ஆட்டோகேட் வடிவமைப்பு பரிமாற்றம் கோப்பு வகை

மேற்கண்டவாறு DWG என்பது ஆட்டோகேட் தனியுரிமக் கோப்பு வகை. ஆகவே ஆட்டோகேட் மென்பொருளில் தயாரித்த 2D மற்றும் 3D வடிவமைப்புகளைப் பரிமாற்றம் செய்வதற்காக அவர்களே வெளியிட்டது தான் இந்த DXF (Drawing Exchange Format) கோப்பு வகை. அவர்கள் இந்தத் துறையில் முன்னணியில் இருப்பதால் அனேகமாக மற்ற எல்லா மென்பொருட்களும் இந்தக் கோப்பு வகையை ஆதரிக்கின்றன. 

IGES – பழைய வடிவமைப்பு நடுநிலைக் கோப்பு வகை

ஒவ்வொரு CAD மென்பொருளும் அவற்றுக்கேயான கோப்பு வகைகளைப் பயன்படுத்துவதைப் பார்த்தோம். ஒரு மென்பொருளில் தயாரித்த வரைபடத்தை மற்றொரு மென்பொருளில் திறக்க வேண்டுமானால் என்ன செய்வது? அமெரிக்கத் தர நிலையம் (American National Standards Institute – ANSI) இம்மாதிரி பரிமாற்றம் செய்ய IGES (Initial Graphics Exchange Specification) என்ற நடுநிலைக் கோப்பு வகையை பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. 2D CAD வரைபடங்கள் மற்றும் 3D மேற்பரப்பு மாதிரிகளை ஏற்றுமதி செய்ய IGES கோப்பு வடிவம் தோதானது.

STEP – புதிய வடிவமைப்பு நடுநிலைக் கோப்பு வகை

1994 இல் பன்னாட்டுத் தர நிலையம் (International Standards Organization – ISO) STEP (STandard for the Exchange of Product model data) என்ற நடுநிலைக் கோப்பு வடிவத்தை வெளியிட்டது. இது 3D மாதிரிகளைப் பரிமாறிக்கொள்ளத் தோதானது.

STL – 3D அச்சுக்கு உகந்தது

STL (stereolithography) கோப்பு வகை விரைவான முன்மாதிரி (rapid prototyping) தயாரிக்க, 3D அச்சிடல் கணினி உதவி உற்பத்திக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மற்ற சில CAD கோப்பு வகைகள்

SVG (Scalable Vector Graphics) கோப்பு வடிவம் சிஎன்சி நிரல் இயற்றத் தோதானது. OBJ, FBX, COLLADA, 3DS மற்றும் VRML/X3D ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்ற சில CAD கோப்பு வகைகள்.

நன்றி தெரிவிப்புகள்

  1. Cad, computer aided drafting, file, format icon – by Josy Dom Alexis

இத்தொடரில் அடுத்த கட்டுரை: எளிய வரைபடப் பயிற்சிகள்

சித்திரமும் கைப்பழக்கம். நீங்கள் பயன்படுத்தும் எந்திர பாகங்களை வரையலாம். 2D CAD தொடக்க நிலைப் பயிற்சிகள். 3D CAD தொடக்க நிலைப் பயிற்சிகள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: