அமேசான் இணையச்சேவைகள் – EC2 – நெகிழக்கூடிய மேகக்கணினி

பெருநிறுவனங்களுக்கான மென்பொருள் தீர்வினைக் கட்டமைக்கும்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்கமுறைமைகளைப் (Operating Systems) பயன்படுத்துவது இயல்பான விசயம். ஒவ்வொரு இயக்கமுறைமையின் அம்சங்களையும் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதன் மூலம், சிறப்பான தீர்வினை வடிவமைக்கமுடியும். இதுபோன்ற சூழலில், அதனை உருவாக்கும் நிரலர்களுக்கு, ஒன்றுக்குமேற்பட்ட இயக்கமுறைமைகளை ஒரே கணினியில் அணுகுவதற்கு, மெய்நிகர் கணிப்பொறிகள் (Virtual machines) பயன்பட்டன. எடுத்துக்காட்டாக, லினக்ஸ் இயக்கமுறைமை நிறுவப்பட்ட கணினியில், ஒரு விண்டோஸ் இயக்கமுறைமையை மெய்நிகர் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.

மேகக்கணினிகளும் இதுபோலவே செயல்படுகின்றன. அமேசானில், நாம் ஒரு மேகக்கணினியைக் கோரும்போது, நமக்கென ஒரு மெய்நிகர் கணினி உருவாக்கப்படுகிறது. ஒரு மேகக்கணினியை உருவாக்கும்போது, அதன் வகைகள், அதில் இணைக்கப்படும் நினைவகத்தின் வகைகள், பாதுகாப்புக்குழுக்கள், இணையத்திற்கான அமைப்புகள், இக்கணினிக்கான அடையாளக்குறிகள் ஆகியவற்றைக்குறித்து அறிந்திருப்பது அவசியம்.

ஒரு மேகக்கணினியை உருவாக்குவதற்கு, அமேசான் இணையச்சேவைகளில் ஒரு கணக்கைத் தொடங்கவேண்டும். அமேசானில் கணக்கு தொடங்கிய முதல் ஓராண்டுக்கு சில சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அமேசான் இணையச்சேவைகள் பற்றி கற்றுக்கொள்வதற்கு இதனை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதிய கணக்குத்தொடங்கி, அமேசான் வலைதளத்தினுள் நுழைந்து, EC2 சேவைக்கான பக்கத்தை அடைந்தவுடன், நமது கணக்கில் ஓடிக்கொண்டிருக்கும் மேகக்கணினிகளின் விவரங்கள் காட்டப்படும். இப்பக்கத்திலிருந்து ஏற்கனவே உருவாக்கியுள்ள மேகக்கணினிகளை நிர்வகிக்கவும், புதிய கணினிகளை உருவாக்கவும் முடியும்.
EC2 Dashboardபுதிய மேகக்கணினியை உருவாக்க Launch Instance ஐ அழுத்தும்போது. புதுகணினியை உருவாக்குவதற்கான படிகள்கொண்ட திரைக்கு, நம்மை இட்டுச்செல்கிறது.

படிநிலை 1: அமேசான் கணினிப் படிமத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும்

Select AMI

நாம் கோரும் புதிய கணினியின் இயக்கமுறைமையை, முதலில் தேர்ந்தெடுக்கவேண்டும். நமது தேவைக்கேற்ப, லினக்ஸ், உபுண்டு, விண்டோஸ் போன்ற இயக்கமுறைமைகளைத் தெரிவுசெய்துகொள்ளலாம். அதோடு உங்கள் செயலிகளுக்குத்தேவையான சேவையகங்கள், பிற செயலிகள் ஆகியவற்றையும் நிறுவிக்கொண்டு, நீங்களாகவே ஒரு புதிய அமேசான் கணினிப்படிமத்தையும் (Amazon Machine Image – AMI) உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

செயல்முறைக்காக, ஒரு உபுண்டு படிமத்தைத் தேர்வுசெய்யலாம்.

படிநிலை 2: கணினிவகையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்

Select Instance Typeஅமேசானில் மொத்தம் பதினொரு கணினிவகைகள் (Instance Types) உள்ளன. இவை, ஐந்து முக்கிய பிரிவுகளின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:

  1. பொதுப்பயன்பாட்டிற்கேற்ற கணினிகள் – General Purpose (T, M)
  2. அதீதகணக்கீட்டிற்குகந்த கணினிகள் – Compute Optimised ( C )
  3. நினைவகத்திற்குகந்த கணினிகள் – Memory Optimised (X, R)
  4. அதிவேக கணக்கீட்டிற்கேற்ற கணினிகள் – Accelerated Computing ( P, G, F)
  5. சேமிப்பகத்திற்குகந்த கணினிகள் – Storage Optimised (H, I, D)

இச்செயல்முறைக்கு, t2.micro என்ற பொதுப்பயன்பாட்டுக்கணினியைத் தேர்வுசெய்யலாம்.

கணினியின் கணக்கீட்டுத்திறனும், நினைவகத்திறனும், இணைய வளங்களையும் சமச்சீராகப் பெற்றுள்ள கணினிகள் இவ்வகையில் அடங்கும். எளிய இணையச்செயலிகள், மென்பொருள் உருவாக்குநர்களுக்கான பணிச்சூழல்கள், கட்டுமான சேவையகங்கள் ஆகியவற்றுக்கு இவ்வகைக் கணினிகள் பயன்படுகின்றன.

இப்படியலிலுள்ள t2, m5, h1 போன்ற பெயர்களையும், அவற்றின் நினைவக அளவு (Memory), கருக்களின் எண்ணிக்கை (vCPUs) போன்ற எண்களையும் விட, இவை என்ன பணிக்காக பட்டைதீட்டப்பட்டுள்ளன என்பதை அறிந்துகொள்வதே அவசியம். மேலும், நமது செயலியின் தேவைக்கேற்ப, இவற்றை மாற்றிக்கொள்ளலாம்.

படிநிலை 3: கணினியைக் கட்டமைக்கவேண்டும்

Configure Instanceஇது மிகவும் முக்கியமான படியாகும். இங்கே கணினியின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட மெய்நிகர் தனிப்பயன் மேகக்குழுமம் (Virtual Private Cloud – VPC), துணை இணையம் (Subnet) போன்றவற்றையும், பயனர் அடையாள, அணுக்க அனுமதிகளையும் (IAM) தேர்ந்தெடுக்கலாம். தற்போதைக்கு இவற்றின் இயல்புநிலையிலேயே இவற்றை விட்டுவிடலாம். ஆனால், இவை ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாகவும், தெளிவாகவும் தெரிந்துகொள்வது, தேவையானபோது சிக்கலான கட்டமைப்புகளை கையாளுவதற்கு ஏதுவாக இருக்கும். இவற்றைப்பற்றி வேறொரு பதிவில் விரிவாக அறியலாம்.

படிநிலை 4: சேமிப்பகத்தைச் சேர்க்கவேண்டும்

Add Storageகணினியோடு இணைக்கவேண்டிய சேமிப்பகத்தை (Storage) இப்படியில் கட்டமைக்கலாம். ஐந்துவகையான சேமிப்பகங்களில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம்:

  1. பொதுப்பயன்பாட்டிற்கான திடநிலைச்சாதனங்கள் – General Purpose SSD
    கணினியின் இயக்கமுறைமையை சேமித்து இயக்கவும், செயலிகளின் உருவாக்க / சோதனைச் சூழல்களாகவும் பயன்படுத்தலாம்
  2. IOPSக்கென ஒதுக்கப்பட்ட திடநிலைச்சாதனங்கள் – Provisioned IOPS SSD
    அதிமுக்கியமான பயன்பாடுகளுக்கும், தரவுதளங்களுக்கும் பயன்படுத்தலாம். இயக்கமுறைமையை சேமித்து, இயக்கலாம்.
  3. அதிக பயன்பாட்டிற்கான வன்வட்டுகள் – High Throughput HDD
    பெருந்தரவுகள், தரவுக்கிடங்குகள் போன்ற, தொடர்ந்து நீண்டநேரம் செயல்படவேண்டிய செயல்களுக்குப் பயன்படுத்தலாம். இதில் இயக்கமுறைமையை சேமித்துவைக்கமுடியாது.
  4. உறைநிலையிலுள்ள வன்வட்டுகள் – Cold HDD
    அதிகம் பயன்படுத்தப்படாத, ஆனால் அதிக இடத்தை அடைக்கக்கூடிய ஆவணங்களின் காப்பகமாக பயன்படுத்தலாம். இயக்கமுறைமையை சேமித்துவைக்கமுடியாது.
  5. காந்த வட்டுகள் – Magnetic (standard)
    உறைநிலை வட்டுக்களைப்போன்றதே. ஆனால், இவ்வகை சேமிப்பகத்தில் இயக்கமுறைமையை சேமித்துவைத்து, இயக்கமுடியும்.

படிநிலை 5: கணினியைக் குறியிடுதல்

Add Tagsஇது முற்றிலும் பயனரின் வசதிக்காக உருவாக்கப்பட்ட படிநிலை. இதிலுள்ள திறவுகளையும், அதற்கான மதிப்புகளையும் நாமே வரையறுக்கவேண்டும். இதனை எப்படி பயன்படுத்துவதென்பதை நாமே முடிவுசெய்துகொள்ளலாம். ஒரு கணினியிலிருந்து என்னென்ன செயலிகள் இயக்கப்படுகின்றன, இக்கணினி தரவுதளத்தைக்கொண்டுள்ளதா அல்லது சேவையகத்தைக்கொண்டுள்ளதா எனக்கண்டறியவும், இதனைப் பயன்படுத்தலாம்.

படிநிலை 6: பாதுகாப்புக்குழு

Configure Security Groupsநமது மேகக்கணினிக்கான மெய்நிகர் தீச்சுவராக (Virtual Firewall) பாதுகாப்புக்குழு விளங்குகிறது. ஒவ்வொரு கணினியும், ஒன்றுக்குமேற்பட்ட பாதுகாப்புக்குழுக்களில் இருக்கலாம். ஒரு பாதுகாப்புக்குழுவை உருவாக்கும்போது, இயல்பாகவே, எல்லாவகையான இணைய நெறிமுறைகளும் தடுக்கப்பட்டிருக்கும். என்னென்ன வகையான இணைய இணைப்புகளை அனுமதிக்கவேண்டும் என்பதை மட்டுமே நாம் பட்டியலிடவேண்டும். நாம் உருவாக்கும் புதியகணினியை அணுகுவதற்காக, SSHஐயும், அதிலிருந்து ஒரு வலைப்பக்கத்தை இயக்குவதற்காக, HTTP, HTTPS ஆகியவற்றையும் நாம் அனுமதிக்கலாம்.

படிநிலை 7 – மீள்பார்வை

இதுவரையில் நாம் தேர்வுசெய்த அனைத்து அமைப்புகளையும், ஒரேபக்கத்தில் பார்த்து, மாற்றங்களிருப்பின் சேர்த்து, நமது புதியகணினியை உருவாக்க இப்பக்கம் பயன்படுகிறது. புதியகணினியை உருவாக்குவதற்கான கோரிக்கையை வைத்தவுடன், அக்கணினிக்கான திறப்பிணையைத் (Key pair) தேர்வுசெய்யவேண்டும்.
Create Key pairஒவ்வொரு திறப்பிணையும், ஒரு பொதுத்திறப்பையும் (public key), தனிப்பட்டதிறப்பையும் (private key) கொண்டது. இதுவரையில் நம்மிடம் எந்தவொரு திறப்பிணையும் இல்லாததால், ஒரு புதிய திறப்பிணையை உருவாக்கச்சொல்லி, அதனை தரவிறக்கி வைத்துக்கொள்ளலாம். அடுத்த பதிவில் நமது கணினியை அணுகுவதற்கு இது பயன்படும்.
Instance launched

ஆயிற்று! அமேசானில் ஒரு புதிய மேகக்கணினியை உருவாக்கியாயிற்று. அதை எப்படி அணுகுவது? ஓர் எளிய வலைப்பக்கத்தை அதிலிருந்து எப்படி இயக்குவது? அடுத்தபதிவில் அறிந்துகொள்வோம்.

%d bloggers like this: