மென்பொருள் உருவாக்கும் விந்தையுலகம் 12: நேருக்கு நேர் உரையாடல்தான் சிறந்தது என்கிறார்கள், ஆனால் நாம் இருப்பதோ கடல்கடந்து!

Agile/Scrum பற்றி தொடர் கட்டுரை – 12

“ஒரு மென்பொருள் உருவாக்கும் அணி கருத்துப் பரிமாற மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள முறை நேருக்கு நேர் உரையாடல்தான்.” தகவெளிமை கொள்கை விளக்க அறிக்கையுடன் (Agile Manifesto) வெளியிடப்பட்ட மென்பொருளுக்கான கோட்பாடுகளில் இது ஒன்று.

ஆனால் எப்பொழுதும் குழு உறுப்பினர்கள் யாவரும் ஒரே இடத்தில் இருப்பது இல்லை. என்னுடைய அணிகளில் இரண்டில் யாவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாரத்தில் பல நாட்கள் தொலைவேலை செய்ய அனுமதி உண்டு. மேலும் பெரிய நிறுவனங்களில் ஒரு குழு உறுப்பினர்கள் வெவ்வேறு அலுவலகங்களில் இருக்கலாம். அரிய திறன் உடையவர்களை வேறு ஊரில் இருந்தாலும் பணியமர்த்த நேரிடலாம். சில திட்டங்களில் வெளி நிறுவனங்களிடம் துணை ஒப்பந்தம் செய்வதும் (outsourcing) உண்டு. இவ்வாறு இருக்கும்போது தகவல்தொடர்பை திறம்பட நிர்வகிப்பது மொய்திரள் (scrum) அணிகளின் வெற்றிக்கு மிக முக்கியம்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் முழு அணியும் ஒரே இடத்தில் இருப்பதுதான் மென்பொருள் உருவாக்க மிக உகந்தது. ஆனால் பல்வேறு நடைமுறை காரணங்களுக்காக நாம் பரம்பிய அணிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலை வருகிறது. இந்த நிலைமையில் நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரம்பிய அணிகளின் தகவல்தொடர்பு குறைபாடுகளை இயன்றவரை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

இதற்கு நாம் ஆலிஸ்டேர் காக்பர்ன் (Alistair Cockburn) தயாரித்த வரைபடத்தை குறிப்பாக பயன்படுத்தலாம். இந்த வரைபடம் தகவல் பரிமாற்ற தடத்தின் செழுமையை (“வெப்பநிலை”) கிடைமட்ட அச்சிலும் தகவல்தொடர்பு திறனை செங்குத்து அச்சிலும் காட்டுகிறது. உணர்ச்சிகளையும் தகவல் செழுமையையும் நன்றாகத் தெரிவித்தலை அதிக வெப்பம் என்று கூறுகிறார். இதில் இரண்டு வளைகோடுகள் உள்ளன. மேலே உள்ள வளைகோட்டில் உரையாடல் உள்ளது. கீழே உள்ள வளைகோட்டில் உரையாடல் கிடையாது, இது ஒரு வழி ஊடகம்.

 Scrum

இது முன்னாளில் தயாரித்த வரைபடம். இத்துடன் காணொளிக் கலந்துரையாடலை தொலைபேசிக் கலந்துரையாடலின் மேல்பக்கத்திலும் உரை அரட்டையை மின் அஞ்சலின் மேல்பக்கத்திலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டு பேர் ஒரு வெள்ளைப் பலகையில் வரைந்து நேருக்கு நேர் உரையாடுவதுதான் அதிக வெப்பமான தடம், அதிக தகவல்தொடர்பு திறனை அளிக்கும். கொடுத்த சூழலில் நாம் குழுவினரின் தகவல்தொடர்பை வளைகோட்டின் மேல்நோக்கி கூடியவரை இதற்கு அருகில் நகர்த்த முயற்சிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக யாவரும் ஒரே இடத்தில் இல்லையென்றால் காணொளிக் கலந்துரையாடல் அடுத்த சிறந்த வழி. தொலைவேலை செய்பவர்களை வேலை நேரத்தில் உரை அரட்டையில் புகுபதிகை இட்டுக்கொண்டு வேலை செய்யச் சொல்லலாம். மற்ற குழு உறுப்பினர்களுக்கு எதுவும் தேவையானால் உடன் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். வெளியூரிலோ அல்லது வேறு அலுவலகங்களிலோ வேலை செய்பவர்களை முக்கிய நிகழ்ச்சிகளுக்கு, எ.கா குறுவோட்டம் திட்டமிடல், நேரடியாக வரச் சொல்லலாம்.

இது தவிர மென்பொருள் திட்டங்களில் கடல்கடந்த நாடுகளில் பணியை ஒப்படைப்பது (offshoring)  நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டில் பல மென்பொருள் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு மென்பொருள் செயலி அல்லது தயாரிப்பு வேலைகள் செய்கிறார்கள். இத்திட்டங்களில் பெரும்பாலும் தயாரிப்பு உரிமையாளர், மொய்திரள் நடத்துனர் மற்றும் பங்குதாரர்கள் வெளிநாட்டிலும் ஏனைய உருவாக்குனர் குழு உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலும் இருப்பது சகஜம். இத்திட்டங்களில் தொலைத்தொடர்பு பிரச்சினையுடன் கலாச்சார வேறுபாடுகளும் நேர வித்தியாசமும் சேர்ந்து குழுப்பணிக்கு பெரிய சவாலாக அமைகின்றன. இந்த அணிகளில் தகவல்தொடர்பை மேம்பாடு செய்ய மேலே கூறியவை தவிர கீழ்கண்ட வழிமுறைகளையும் செயல்படுத்துவது அவசியம்.

  • இரண்டு குழுக்களுக்கும் வேலை நேரம் குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது மேல்படிய வேண்டும்.

  • அணிகளுக்கு பொதுவான நாட்காட்டி அவசியம் தேவை. அலுவலக விடுமுறை நாட்களும், குழு உறுப்பினர்கள் விடுமுறை நாட்களும், மொய்திரள் நிகழ்ச்சிகளும் யாவருக்கும் ஒரே இடத்தில் தெரிய வேண்டும். மேலும் யாவரும் ஒரே இடத்தில் ஆவணங்களை பகிரவும் திருத்தவும் இயல வேண்டும்.

  • குழுவுக்கு வெளியில் தொடர்புக்கு மின் அஞ்சல் தேவைதான்.  ஆனால் குழுவுக்குள் தொடர்பு கொள்ள உரை அரட்டை ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். குழு முழுவதுமோ அல்லது தனியாகவோ தொடர்பு கொள்ள வசதி தேவை.

  • கூடுதல் செலவு என்றாலும் ஒரு அணியில் இருந்து தூதுவர்களை மற்ற அணியைச் சந்திக்க அனுப்புங்கள். கலாச்சார வேறுபாடுகளைத் தாண்டி புரிதலை உருவாக்க இதுதான் முக்கிய வழி.

  • இதில் மொய்திரள் நடத்துனருக்கு முக்கிய பங்கு உண்டு. கூடியவரை மொய்திரள் நடத்துனர் இரண்டு அணிகளின் மொழிகளையும் பேச இயன்றால் இரு கலாச்சாரங்களையும் இணைக்க மேலும் துணை புரியும்.

  • முன்னெல்லாம் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வேலையைப் பிரிப்பது வழக்கமாக இருந்தது. எ.கா ஆய்வு மற்றும் வடிவமைப்பு செய்து முடித்து நிரல் எழுதும் பணியை மட்டும் கடல்கடந்த நாடுகளில் ஒப்படைப்பது. அருவி செயல்முறையில் இவ்வாறு செய்தனர். ஆனால் மொய்திரள்  செயல்முறைக்கு இது ஒத்து வராது. உருவாக்குனர் குழு அனைத்து தொழில்நுட்ப திறன்களும் கொண்டு தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு எழும் கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஒரு இரவு காத்திருக்கத் தேவையில்லாமல் உடனே பதில்களைப் பெற வழி இருக்க வேண்டும்.

  • தகவெளிமை செயல்முறைகள் ஆவணங்களைக் குறைத்து நிரல் எழுதி வெளியிடுவதை வலியுறுத்துகிறது என்று முன்னர் பார்த்தோம். இதற்கு எதிர்மாறாக கடல்கடந்த நாடுகளில் வேலையை ஒப்படைத்தால் ஓரளவு ஆவணங்கள் எழுதவேண்டி வருகிறது. ஏனெனில் நேருக்கு நேர் தொடர்பு குறைகிறது என்பதால் சில ஆவணங்கள் அவசியமாகின்றன.

– இரா. அசோகன் ( ashokramach@gmail.com )

மேலும் இந்த தொடரில் வந்த கட்டுரைகளை வாசிக்க : www.kaniyam.com/category/agile/

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: