‘பிழை’ப்பைத் தொடர்வோம்!

போன பதிவு பல கேள்விகளுடன் முடிந்திருந்தது. அந்தக் கேள்விகளுக்கும் எல்லாவற்றிற்கும் பதில் பார்த்து விடுவோமா?

பிழை எண் (Bug ID):

ஒவ்வொரு பிழைக்கும் ஒதுக்கப்படும் தானியங்கி எண். இந்த எண்ணைக் கொண்டு தான் பிழையை அடையாளம் கண்டுபிடிப்பார்கள்.

நாள், நேரம்:

பிழை பதியப்படும் நாள், நேரம் – ஆகியன இங்கு குறிக்கப்படும்.

கண்டுபிடித்தவர் (Opened By):

பிழையைக் கண்டுபிடித்தவர் பெயரைப் பதிவதற்காக இந்த ஏற்பாடு. பிழையில் ஏதாவது சந்தேகம் வந்தால், இவரைக் கேட்கலாம் அல்லவா? அதற்காகத் தான்!

பொறுப்பு (Assigned To):

பிழையைச் சரி செய்வது யார்? என்று இங்குக் குறிப்பிடுவார்கள். யார் சரி செய்வது என்று முடிவு செய்து விட்டால், அந்த நிரலர் பெயரை நேரடியாகச் சொல்லி விடலாம். இல்லையெனில் எந்த அணி பிழையைத் தீர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ளதோ அந்த அணித் தலைவர் பெயரைக் குறிப்பிடலாம்.

நிலை (Status):

பிழையின் தற்போதைய நிலை என்ன என்று சொல்வது. இதில் புதியது, ஒப்படைக்கப்பட்டது, தீர்க்கப்பட்டது, முடிந்தது எனப் பல நிலைகள் இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகப் பின்னர் பார்ப்போம்.

தலைப்பு (Title):

பிழையின் தலைப்பு பிழை எதைப் பற்றியது என்று சொல்வது.

சிக்கலின் பாதிப்பு(Severity):

இப்போது நாம் பதியும் பிழை வாடிக்கையாளருக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்வது. ஒரு டெஸ்டருக்கு வாடிக்கையாளருக்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய பட்டறிவு தேவை என்பதால், இதை டெஸ்டரே பதிய வேண்டும். பொது நிலையில், பாதிப்பை

  • குறைவு

  • நடுத்தரம்

  • அதிகம்

என்று வகைப்படுத்துவார்கள். சில நேரங்களில் 1,2,3 என எண்களைக் கொண்டு வரிசைப்படுத்துவதும் உண்டு.

தீர்வு(Priority):

ஒரு தொழில்நுட்பச் சிக்கலைத் தீர்ப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஒரு டெஸ்டரால் சொல்ல முடியாது அல்லவா? அதனால் இதை மட்டும் டெஸ்டர் நிரப்பாமல் விட்டு விடுவார். தொழில்நுட்ப அணியோ, நிரலர்(developer) அணியோ இதை,

  • எளிது

  • நடுத்தரம்

  • கடினம்

என்று வகைப்படுத்துவார்கள்.

சுருக்கமாகப் புரிந்து கொள்வதாக இருந்தால்:

  • பாதிப்பு பயனருக்கு ஏற்படும் பாதிப்பைப் பொருத்தது.

  • தீர்வு தீர்வுக்கு ஆகும் நேரத்தைப் பொருத்தது.

விவரம் (Description):

தலைப்பைப் பற்றி ஓரிரு வரிகளில் விவரமாகச் சொல்வது.

படிகள்(Steps):

என்னென்ன படிகளைச் செய்யும் போது இப்படிப்பட்ட பிழை வந்தது என்பதைச் சொல்வது. இந்தப் படிகளைத் தான் நிரலர் அணி ஒவ்வொரு படியாகச் செய்து பார்த்து பிழையை உறுதிப்படுத்துவார்கள். அதற்காகத் தான் படிகளை வரிசைப்படிச் சொல்வது.

இயங்குசூழல் (Environment):

பிழையை எந்தச் சூழலில் கண்டுபிடித்தோம் என்று சொல்வது அதாவது, வன்பொருள் தகவல்கள்( இன்டெல் ஐ3 என்பது போன்று), மென்பொருள் தகவல்கள் (லினக்ஸ் மின்ட் 19, 64 பிட் இயங்கு தளம், பயர்பாக்ஸ் உலாவி என்பன போன்று) ஆகியவற்றைச் சொல்வது. சில சமயங்களில் ஒரு பிழை எல்லா இயங்குசூழல்களிலும் வராது. சில சூழல்களில் மட்டும் வரும். அது போன்ற சமயத்தில் பிழையைப் போக்கும் நிரலருக்கு இயங்குசூழல் பற்றிய விவரங்கள் இன்றியமையாதவை அல்லவா? அதற்குத் தான் இந்த ஏற்பாடு.

இணைப்புகள்(Attachments):

டெஸ்டர் கண்டுபிடித்த பிழைக்குச் சான்றாக இருக்கும் அனைத்து விவரங்களும் இதில் கொடுக்கப்படும். ஸ்கிரீன்ஷாட் (திரைப் பிடிப்பு), பிற கோப்புகள் ஆகியன இதில் சேர்க்கப்படும்.

பிழை பதிப்பது (Bug Reporting) எப்படி என்பதைத் தான் இப்போது நாம் பார்த்திருக்கிறோம். இதற்காக, பக்சில்லா(BugZilla) போன்ற கட்டற்ற மென்பொருட்கள் பல இருக்கின்றன.  எல்லாத் திட்டப்பணிகளிலும் பக்சில்லா போன்ற மென்பொருட்களைத் தான் பிழை பதியப் பயன்படுத்துவார்கள்.  எல்லாம் சரி!  ஆனால் இன்னும் பிழை வாழ்க்கை வட்டத்தைப் பற்றி நாம் பேசவே இல்லையே! என்கிறீர்களா? அடுத்த பதிவில் அந்த வட்டத்தை வரைந்து விடுவோம்.

கி. முத்துராமலிங்கம் (muthu@payilagam.com)

%d bloggers like this: