வேர்ட்பிரசு சுழியத்திலிருந்து – 02

இணையதள உள்ளடக்க நிர்வாகம்(Content Management Service):

 

உலகம் தோன்றிய ஆதிகாலத்தில் HTML என்னும் நிரலாக்க மொழியைக் கொண்டு இணையதளங்கள் வடிவமைக்கப் பட்டு வந்தன. ஒரு பக்கம் உருவாக்க முழுதாக HTML கோப்பை உருவாக்க வேண்டும். ஒரு பக்கம் – ஒரு HTML கோப்பு. சில காலங்களில் Bluefish, kompozer, Dreamweaver, Frontpage போன்ற கருவிகளும், பல வார்ப்புருக்களும் வடிவமைக்கப்பட்டன, இவற்றின் துணை கொண்டு இணையதளங்களை வடிவமைத்து வந்தனர். பிறகு Php, perl, Asp போன்ற பல நிரலாக்க மொழிகள் இதே பணிகளை வேறு சிறப்பான வழிகளில் செய்தன. இந்த எல்லா முறைகளும், நிரலாக்க மொழிகள் தெரிந்தவர்களால் மட்டுமே இணையப் பக்கங்களை உருவாக்க முடியும் என்ற நிலையிலிருந்தது. உருவாக்கத்தோடு முடிந்துவிடாமல், அதை நிர்வகிப்பதற்குக்கூட நிரலாக்க மொழி தெரிந்தவர்களால் மட்டுமே முடியும் என்ற நிலை, அல்லது நிர்வகிக்கக் கூடிய அளவுக்கு நிரலாக்க மொழியை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது.

 

சாதரணமாக சில பக்கங்களைக் கொன்ட இணையதளங்களை வடிவமைத்த போது இந்த HTML முறை சுலபமானதாக இருந்தது. ஐம்பது பக்கங்கள், நூறு பக்கங்கள் என்று இணையதளங்களின் வயிறு வீங்கிய போது, அத்தனைப் பக்கங்களையும் நிர்வகிப்பது கடினமாகிப்போனது, உதாரணமாக பக்கப்பட்டியில் சமீபத்திய சில பதிவுகளைக் காட்ட வேண்டுமானால் கூட ஒவ்வொரு முறையும் அவற்றை நாமே திருத்தவேண்டிய நிலை இருந்தது. ஒரு பிரிவின் கீழ் பல பக்கங்களைத் தொகுப்பதுவும் இந்த முறையில் கயிற்றின் மேல் நடக்க வேண்டியதற்கு ஒப்பானது. இந்த html நிரலாக்க மொழியில் எங்காவது ஒரு இடத்தில் ஒரு division சரியாக மூடப்படாமல் இருந்தாலும் முறுக்கிக் கொன்டு நிற்கும், மொத்த வடிவமைப்பையும் குலைத்துப் போட்டுவிடும். இப்படி எக்கச்சக்க குளறுபடிகளோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்த உலகம் வேறு வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருந்தது.

இணைய உள்ளடக்க நிர்வாகிகள் (Web Content Management System) இத்தகைய குளறுபடிகளை ஒதுக்கித்தள்ளவும், நிரலாக்க மொழி தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ எல்லாரும் உபயோகிக்க ஏற்றதாய் வடிவமைக்கப்பட்டன. முதன்மையாக, உருவாக்கம் (Development), வடிவமைப்பு (Design) ஆகியவற்றை உள்ளடக்கத்தோடு (Content) போட்டு குழப்பாமல் இவற்றைத் தனியாக பிரித்தன.

 

ஒரு இணையதளத்துக்கு அல்லது வலைப்பதிவுக்கு தேவையான அத்தனை நிரலாக்கங்களையும் மையத்தில் கொண்ட ஒரு அமைப்புதான் இந்த உள்ளடக்க நிர்வாகிகள். இந்த நிரலாக்கங்களே தேவையான எல்லாவற்றையும் வழங்கக்கூடிய தகுதி வாய்ந்தவை. இவற்றையெல்லாம் தாண்டிய ஏதோ ஒன்று உங்களுக்குத் தேவைப்படும் போது தான் உங்களுக்கு நிரலாக்கம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமோ நிரலாக்கம் தெரிந்தவரின் உதவியோ தேவைப்படும். அதே போலத்தான் வடிவமைப்பும், நிரலாக்கம் தெரியாதவர்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் வார்ப்புருக்களை (Themes/Templates) பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது நிரலாக்கம் தெரிந்தவர்களின் உதவியோடு அவற்றை மேம்படுத்துவதோ உருவாக்குவதோ செய்துகொள்ளலாம்.

 

உள்ளடக்க நிர்வாகிகளின் பிரதானமான செயற்பாடே இனிதான். உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கோ, அவற்றை நிர்வகிப்பதற்கோ எந்த நிரலாக்கமோ, நிரலாக்குனர்களின் உதவியோ உங்களுக்குத் தேவையில்லை. இந்தக் கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டே பல உள்ளடக்க நிர்வாகிகள் உருவாக்கப்பட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை நிலையில் இருந்த இந்த மென்பொருள் பிரிவு, பழைய HTML இணையதளங்களை ஒழித்துக்கட்டி பெருமளவில் வளர்ந்து கொண்டிருகின்றன.

 

ஏறக்குறைய சில நூறு இணைய உள்ளடக்க நிர்வாக மென்பொருட்கள் இன்று கிடைக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையாக பலராலும் விரும்பிப் பயன்படுத்த தக்கதாயும், பயன்படுத்த சுலபமானதாகவும் இருக்கக் கூடியவை வெகுசிலவே. உதாரணமாக WordPress, Drupal, Joomla போன்றவையே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றன. அதிலும் சமீபகாலத்தில் வேர்ட்பிரசானது மலைக்க வைக்கக் கூடிய அளவில் வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்குக் காரணங்கள் ஏன் வேர்ட்பிரசை பயன்படுத்த வேண்டும் என சென்ற கட்டுரையில் குறிப்பிட்டவையே.

 

இனி, வேர்ட்பிரசின் கதை…

 

2000 ஆம் ஆண்டு வாக்கில் பலர் தங்களுடைய வலைப்பதிவை b2 cafelog என்னும் கருவியைக் கொண்டு நடத்தி வந்தனர். அதன் உருவாக்குனர் திடீரென காணாமல் போய்விட்டார். மேம்படுத்தல்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. வறட்சியால் பறந்து செல்லும் பறவைகளாக வேறு வாய்ப்புகளைப் பலர் தேடிப் போனார்கள். Matt Mullenweg தன்னுடைய வலைப்பதிவில் b2 வை உருவாக்கியவர் அதன் மேம்படுத்தல் பணிகளைத் தொடராமல் தலைமறைவானதைப் பகடியாகக் குறிப்பிட்டு இருந்தார். அங்கே பின்னூட்டத்தில் Mike Little நாம் சேர்ந்து மேம்படுத்தல்களைச் செய்வோமா என்று கேட்க, அப்போது வேர்ட்பிரசின் முதல் Hello World ! எழுதப்பட்டது.

 

Forbes இதழ், வேர்ட்பிரசு வெளியிடப்பட்ட அந்த நிமிடத்தை, கடல் கடந்து அனுப்பட்ட முதல் தந்தியுடன் ஒப்பிடுகிறது. ஒவ்வொரு ஆறு இணையதளங்களுக்கும் ஒரு இணைய தளம் வேர்ட்பிரசினால் இயக்கப்படுகிறது எனவும், ஏறக்குறைய 60 million இணையதளங்கள் வேர்ட்பிரசின் மூலமாக இயங்குகின்றன எனவும் தெரிவிக்கிறது. Forbes இதழும் வேர்ட்பிரசினால்தான் இயக்கப்படுகிறது. அது மட்டுமல்ல வேர்ட்பிரசின் மூலம் உருவாக்கப்பட்ட சில புகழ்பெற்ற இணையதளங்கள் இவை, CNN, New york times, Mashable

 

வேர்ட்பிரசைப் பற்றிய செய்திகளைவிட்டு அது வழங்கும் வசதிகளைப் பார்ப்போம். மேட் வேர்ட்பிரசை உருவாக்கும் போது அதனை அதற்கு சமகாலத்தில் இருந்த பிற மென்பொருட்களின் சரியான வசதிகள் இதில் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.

  • பதிவுகளை, பக்கங்களை உருவாக்க, நீக்க, திருத்தக்கூடிய வசதி. அவற்றின் பார்வையாளர்கள் அவற்றைப் பற்றி விவாதிக்கக்கூடிய வசதி. அந்த விவாதங்களை மட்டுறுத்தக் கூடிய வசதி, தேவையானால், திருத்தி வெளியிடக்கூடிய வசதி, இல்லை அத்தகைய பின்னூட்டங்களை நீக்கக்கூடிய வசதி, செய்தி ஓடை வசதி ஒரு வலைப்பதிவை உருவாக்கக் கூடிய வசதிகள் அனைத்தும் முன்னிருப்பாகவே அமைந்து விடுவதால், வழங்கியில் வேர்ட்பிரசை நிறுவிய சில நொடிகளிலேயே நீங்கள் உங்கள் வலைப்பதிவைத் தொடங்கிவிடலாம். நீங்கள் வேறு எந்த விதமான கூடுதல் வசதிகளையும் வேண்டாதவராயின்.

  • வேர்ட்பிரசிலேயே இயல்பிருப்பாக சில ஆயிரக்கணக்கான வார்ப்புருக்கள் இருக்கின்றன. அத்தனையும் இலவசமே,. அதேபோல, நீட்சிகளும்(Plugins) ஆயிரக்கணக்கில். உங்களுக்கு வேண்டிய வார்ப்புருக்களையோ அல்லது நீட்சிகளையோ தேடிக்கண்டடைவது மட்டும்தான் கொஞ்சம் சிரமமான வேலை. வார்ப்புருக்களை மேலும் செம்மைப்படுத்துவதோ அழகூட்டுவதோ எல்லாமே உங்கள் விருப்பம் தான். அதைச் செய்வதற்கான உரிமையும் உங்களுக்கு வழங்கப்படுகிறது.

  • பிற உள்ளடக்க நிர்வாகிகள், வலைப்பதிவுக் கருவிகள் ஆகியவற்றிலிருந்து சுலபமாக வேர்ட்பிரசிற்கு மாறிக்கொள்ளும் வசதியும் இங்கிருக்கிறது. எந்த வித இழப்பும் இல்லாமலே. அதாவது, உங்களுடைய பதிவுகள், பின்னூட்டங்கள், செய்தி ஓடையின் சந்தாதாரர்கள் ஆகிய எல்லாவற்றையும் இழக்காமலே. bloggerலிருந்து வேர்ட்பிரசிற்கு மாறும் போது மட்டுமே உங்களைப் பின்தொடர்பவர்களை (followers) நீங்கள் இழக்க வேண்டி வரும், அதுவும் வேர்ட்பிரசின் குறை இல்லை. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கூகிளானது தன்னுடைய friend connect API வசதியை கூகிள் சாராத பிற தளங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வசதியை முடக்கியிருக்கிறது.

  • இவை தவிர, நிறுவனங்கள், அமைப்புகள், அரசாங்கத் துறைகள், ( இந்திய அரசாங்கத்தின் துறைகளுக்கான இணைய தளங்கள் அல்ல, இன்னும் அவை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்தி வருகின்றன.) சமூக வலைத்தளங்கள்(Social net working sites), மன்றங்கள் (Forums), போன்றவற்றைக் கூட உருவாக்கிக் கொள்ளக் கூடிய சாத்தியங்களை வேர்ட்பிரசுக்கு பல நீட்சிகள் வழங்குகின்றன.

  • ஒரே ஒரு வேர்ட்பிரசின் நிறுவலைக்கொண்டே, பல வலைப்பதிவுகளை நீங்கள் பலர் பயன்படுத்திக்கொள்ளும் படி வழங்கலாம். wordpress.com வழங்கும் சேவையைப் போலவே நீங்களும் வழங்கலாம். CNN, Newyort Times போன்றவை இத்தகைய சேவைகளுக்காகவே வேர்ட்பிரசைப் பயன்படுத்து கின்றன.

  • சில குறைபாடுகள் கண்டறியப்படும் போதெல்லாம், அதற்கான தீர்வுகள் உடனுக்குடன் வழங்கப்படுகின்றன. இதற்கான காரணம் இது கட்டற்ற மென்பொருளாக இருப்பதாலேயே. வேர்ட்பிரசை உருவாக்கும் போதே “இதை கட்டற்ற மென்பொருளாக வெளியிட வேண்டும், தான் எழுதும் ஒவ்வொரு வரி நிரலும் பிறரால் மேம்படுத்தலுக்கு உட்படுத்தக் கூடியதாகவும், பிறரால் பயன்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்” என்ற தெளிவுடனே Matt Mullenweg இருந்தார். இதற்காகவே பின்னாளில் Automattic என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டு வேர்ட்பிரசைச் சார்ந்த பல சேவைகளையும், நீட்சிகளையும், வார்ப்புருக்களையும் உருவாக்கியும், பராமரித்தும் வருகிறது.

ஒரு வலைப்பதிவை நிர்வகிப்பதற்கான எல்லா வசதிகளையும் உள்ளடக்கியதாகக் கொண்டு துவங்கப்பட்ட வேர்ட்பிரசானது இன்று முழுக்க இணைய உள்ளடக்க நிர்வாகக் கருவியாக வளர்ச்சி கண்டிருக்கிறது. தக்கன பிழைக்கும் என்பதற்கேற்றபடி, சந்தையில் உருவாகும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, சீரான இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. அதன் பொருட்டே 60 மில்லியன் இணையதளங்கள் என்ற வளர்ச்சியை இன்று எட்டியிருக்கிறது.

அடுத்த பதிவில் வேர்ட்பிரசை நிறுவும் வழிமுறைகளையும், பிற சேவைகளிலிருந்து வேர்ட்பிரசிற்கு மாற்றும் வழிமுறைகளையும், வேர்ட்பிரசிற்கான வார்ப்புருவை நீங்களே உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்.

-இனியன்

%d bloggers like this: