தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 16. தகவல் தொழில்நுட்ப உதவியுடன் நீங்களும் ஒரு எழுத்தாளராகலாம்

வெளியீடு செய்த எழுத்தாளராக ஆவதற்கு இதுதான் வரலாற்றிலேயே சிறந்த காலம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அது உண்மைதான். நூலாசிரியர்கள் முன்னர் இருந்ததை விட வாசகர்களை அடைய அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளனர். மேலும் தங்கள் படைப்புகளை வெளியீடு செய்வதில் முன்னை விட அதிகமான கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள விரும்பினால், அதுவும் சாத்தியமே.

மேலும் புத்தகங்களை விநியோகம் செய்வதில் வந்த மாற்றங்களால் ஒவ்வொரு வாசகருக்கும் எந்தப் புத்தகமும் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். இணையப்  புத்தகக் கடை அலமாரிகள் எல்லையற்றதாகவும் மற்றும் உலகளாவியதாகவும் உள்ளன. தேவைப்படும் போது அச்சிடும் (print on demand) தொழில்நுட்பம் ஒரு புத்தகம் எப்பொழுதுமே அச்சில் இருக்க உதவுகிறது.

உங்களுக்கு இயல்பான படைப்பாற்றல் இருந்தால் சிறிய புனைகதைகளும் முழுநீளப் புதினங்களும் எழுதலாம். “ஒரு புத்தகத்தை நீங்களே வெளியிடுவது எப்படி” என்பது போன்ற உதவிக் குறிப்புகள் இணையதளத்தில் பல உள்ளன. ஒருக்கால் கடினமாக இருந்தால் மனச்சோர்வு அடைய வேண்டாம். முதலில் சிறிய அளவில் தொடங்குங்கள்.

விக்கிப்பீடியா கட்டுரைகளை எழுதி அல்லது தமிழாக்கம் செய்து பழகிக் கொள்ளுங்கள்

முழுப் புத்தகம் எழுதுவது பற்றி நினைத்தாலே மலைப்பாக இருக்கிறதா? உங்களுக்கு மிகவும் நன்றாகத் தெரிந்த தலைப்பில் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத ஆரம்பியுங்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில், அல்லது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த வேறு மொழியில், உள்ள கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்யுங்கள். தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகிகளின் பின்னூட்டத்தை பயன்படுத்தி உங்கள் எழுத்துத் திறமையை நன்கு வளர்த்துக் கொள்ள முடியும். ஆங்கிலச் சொல்லுக்கு ஒப்பான தமிழ்ச் சொல் கிடைப்பது கடினமாக இருக்கிறதா? தமிழ் விக்சனரியில் தேடுங்கள். தமிழ் விக்சனரியில் 350 ஆயிரத்துக்கு மேல் பக்கங்கள் உள்ளன.

எழுத்தாளர்

எழுத்தாளர்

கட்டற்ற திறந்த மூல மென்பொருட்களின் பயனர் இடைமுகம் மற்றும் கையேடுகள் எழுதலாம் அல்லது தமிழாக்கம் செய்யலாம்

நீங்கள் தொழில்நுட்ப ஆர்வலரா? கட்டற்ற திறந்த மூல மென்பொருட்களின் பயனர் இடைமுகத்தை மொழிபெயர்க்கவும் கையேடுகளை எழுதவும் மற்றும் மொழிபெயர்க்கவும் வாய்ப்புகள் எப்பொழுதும் உண்டு. திறந்த மூல மென்பொருட்களின் தன்னார்வலர் மடலாடற் குழுக்களில் சேருங்கள். உங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யலாம். அதே நேரத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம். புதிய நண்பர்களும் வழிகாட்டிகளும் கிடைப்பார்கள்.

உங்களுக்கு மிகவும் பிடித்த நூலைத் தமிழாக்கம் செய்து வெளியிடுங்கள்

பல மொழிகளிலிருந்து முக்கிய இலக்கியப் படைப்புகளை தமிழாக்கம் செய்யும் பாரம்பரியம் சில பத்தாண்டுகளுக்கு முன் நம் சமூகத்தில் இருந்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஏனோ ஆர்வமிழந்துள்ளது. “லார்ட் லிட்டன் அவர்களால் எழுதப்பட்ட ‘தி சீக்ரட் வே’ என்ற நூலை ‘மனோன்மணீயம்’ என்ற நாடகமாக எழுதினார் பேராசிரியர் சுந்தரம். சுமார் அறுபது ஆண்டுகளுக்கும் முன்பாகவே பிரெஞ்சு Les Miserables என்ற அற்புதமான நாவல் தமிழில் வெளிவந்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஓ.வி. அழகேசன் மொழிபெயர்த்தார். குமாரசாமி, சேனாபதி ஆகியோர் வங்க இலக்கியங்களைத் தமிழில் தந்தனர். கா.ஸ்ரீ.ஸ்ரீ. மராட்டிய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். காண்டேகரின் படைப்புகள் அனைத்தையும் தமிழுக்குக் கொண்டு வந்தார். ரா. வீழிநாதன், சரசுவதி ராம்னாத் ஆகியோர் இந்தி மொழியிலிருந்து தமிழுக்கு பல படைப்புகளைக் கொண்டுவந்தனர்.”

மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற க. பூரணச்சந்திரன்

“நீட்சே மிகச்சுருக்கமான அறிமுகம்”, “காந்தியைக் கொன்றவர்கள்”, “நொறுங்கிய குடியரசு” போன்ற பல நூல்களைத் தமிழாக்கம் செய்து “பொறுப்புமிக்க மனிதர்கள் (Serious Men)” என்ற நூலுக்கு 2016 ஆம் ஆண்டிற்கான தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற க. பூரணச்சந்திரன் அவர்கள் தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களை மிக விரிவாக இங்கே பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ சில எடுத்துக்காட்டுகள். “இன்றைக்கு மொழிபெயர்ப்பின் தேவையையும் இன்றியமையாமையையும் யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. செய்தித்தாள்கள், தொலைக்காட்சி முதலாகப் பாடப்புத்தகங்கள் வரை நமக்குக் கிடைக்கும் தகவல்களில் பெரும் பகுதி மொழிபெயர்ப்பின் வாயிலாகத்தான் கிடைக்கின்றன.” “வாசகரைவிட, மொழிபெயர்ப்பாளருக்கு ஒத்துணர்வு (empathy) மிகவும் கூடுதலாகத் தேவை. ஒத்துணர்வு இல்லாவிட்டால் ஆசிரியரைப் புரிந்து கொண்டு மொழிபெயர்க்க இயலாது.”

“பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் என்ற மூன்றும் தமிழில் மிகச் சுருக்கமாகச் செய்திகளைச் சொல்ல வல்லவை. The men who killed Gandhi என்ற தொடரை நான் காந்தியைக் கொன்றவர்கள் என்று சுருக்கமாக முடித்து விட்டேன். The men who killed என்ற நீண்ட தொடருக்கு, தமிழில் ஒரே ஒரு வினையாலணையும் பெயர் – கொன்றவர்கள் என்பது போதுமானதாகி விடுகிறது. The man who came yesterday என்பதை நேற்று வந்தவர் என்று இரண்டே சொற்களில் அடக்கலாம். (பெயரெச்சம்) She ran and fell down என்பதை ஓடி விழுந்தாள் என்று சொல்லலாம். ஓடி என்பது வினையெச்சம். To cut a long story short என்பதை வளர்த்துவானேன் என்பாராம் புதுமைப்பித்தன். ஆங்கிலத்தில் ‘ரிலடிவ் க்ளாஸ்’ எனப்படுவனவற்றைத் தமிழில் மிகச் சுருக்கமாக மொழிபெயர்க்க இம்மூன்றும் உதவுகின்றன… இவை மூன்றையும் சரிவரக் கையாளத் தெரியாதவர்கள்தான் ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லமுடிகிறது, தமிழில் சொன்னால் அது நீளமாகிறது, அதிகரிக்கிறது என்பார்கள்.”

பதிப்புரிமையும் பொதுவுரிமையும்

ஒரு நூலின் பதிப்புரிமை காலம் முடிவடைந்தால் அது பொதுவுரிமையில் வந்து விடும். அதை எவரும் மொழிபெயர்த்துப் பதிப்பிக்கலாம். விக்கிப்பீடியாவில் பல்வேறு நாடுகளுக்கான பதிப்புரிமை ஆண்டுகளும் விதிமுறைகளும் கொண்ட பட்டியல் உள்ளது. பொதுவுரிமையில் வந்து விட்ட ஆங்கிலப் புத்தகங்களின் பட்டியல் இங்கு கிடைக்கிறது. ‌ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்? இந்த இணைய தளத்தில் பொதுவுரிமையில் உள்ள ஆங்கில நூல்களைப் பதிவிறக்கமே செய்யலாம். இவற்றில் மிகவும் பிரபலமான பல ஏற்கனவே தமிழாக்கம் செய்யப்பட்டு விட்டன. எனினும் மேலும் தமிழாக்கம் செய்ய வாய்ப்புகளும் பல உள்ளன. நீங்கள் மொழிபெயர்த்து வெளியிட மிக விருப்பப்படும் நூல் பதிப்புரிமையில் உள்ளது என்றால் என்ன செய்வது? அதற்கான  உரிமைகளைப் பெறுவது எப்படி என்ற கையேட்டை இங்கே பார்க்கலாம்.

எடுத்துக்காட்டாக தமிழாக்கம் செய்து மின்னூலாக சமீபத்தில் freetamilebooks.com வெளியிட்ட நூல் ஒன்று இதோ. சுவர்கத்தின் நுழைவாயில் – தமிழில்: சே.அருணாசலம் (ஆங்கில முதன்நூல்: ENTERING THE KINGDOM by James Allen (1903). நீங்கள் எழுதிய உரையை மின்னூலாக்குவது எப்படி  என்று இந்த இணையதளத்தில் படிப்படியாக நிகழ்படம் பார்த்து நீங்களே செய்யலாம். ஆன்டிராய்டு, ஐபோன், ஐபாட், கிண்டில் போன்ற கைச் சாதனங்களில் படிக்கக்கூடிய எல்லா வடிவங்களிலும் வெளியீடு கிடைக்கும். குறைந்த செலவில் ஒருசில பிரதிகள் மட்டும் அச்சிட்டு புத்தகமாகத் தரவும் சேவைகள் உள்ளன.

கணினி உதவி மொழிபெயர்ப்பு

ஒமேகா-டி (OmegaT) என்பது ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல கணினி உதவி மொழிபெயர்ப்புக் (Computer Assisted Translation) கருவி ஆகும். இது விண்டோஸ், மேக் அல்லது லினக்ஸ் கணினிகளிலும் இயங்கும்.

ஒரு மொழிபெயர்ப்பில் அதே களத்தைச் சேர்ந்த மற்ற மொழிபெயர்ப்புத் திட்டங்களில் உருவாக்கிய சொற்களஞ்சியங்களைப் பயன்படுத்தலாம். இது குழு மொழிபெயர்ப்பை சீர்மைப்படுத்த உதவுகிறது. ஒருவர் மொழிபெயர்ப்பு செய்து இன்னொருவர் சரிபார்க்க வேண்டுமானால் இது மிகவும் வசதியானது. ஒவ்வொரு வாக்கியமாக எடுத்து அதன் மூலத்தையும் மொழிபெயர்த்த தமிழ் வாக்கியத்தையும் ஒன்றன் கீழ் ஒன்றாகக் காட்டும். இது சரிபார்க்கவும் திருத்தங்கள் செய்யவும் வசதியானது. மைக்ரோசாஃப்ட், கூகிள் (பணம் செலுத்திய கணக்கு), மற்ற சில இயந்திர மொழிபெயர்ப்புக் கணக்கை உள்ளிட்டால் தானியங்கியாக இயந்திர மொழிபெயர்ப்பைப் பெற்றுத் தரும். மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட், மீஉரைக் குறிமொழி (HTML), லிபர் ஆபீஸ், ஓபன் ஆபீஸ், விக்கிப்பீடியா கட்டுரைகள், வடிவமைக்கப்படாத உரை போன்ற 30 க்கும் மேற்பட்ட கோப்பு வடிவங்களுடன் வேலை செய்கிறது.

———-‍

இத்தொடரில் அடுத்த கட்டுரை: இயல்மொழிக் கருவிகளும் வளங்களும் – மொழித்தொகுப்பு

ஆங்கில மொழித்தொகுப்புகளின் வரலாறு. COBUILD ஆங்கில மொழித்தொகுப்பு. தமிழ் மொழித்தொகுப்புகள். மைசூர் மத்திய இந்திய மொழிகள் கழக மொழித்தொகுப்பு. இங்கிலாந்து லங்காஸ்டர் பல்கலை எமிலி (EMILLE) மொழித்தொகுப்பு. சார்லஸ் பல்கலை லோகநாதன் ராமசாமியின் இருமொழித் தொகுப்பு. தமிழ் விக்கிப்பீடியா உரைத்தொகுப்பு.

%d bloggers like this: