எளிய தமிழில் IoT 3. உணரிகளும் (Sensors) இயக்கிகளும் (Actuators)

உணரிகள் மற்றும் இயக்கிகள் என்பவை இயற்பியல் உலகத்துடன் தொடர்பு கொள்ள உதவும் சாதனங்கள். வெப்பம், அழுத்தம் போன்ற காரணிகளை அளவிட்டு மின்சமிக்ஞையாக மாற்ற உணரிகள் சில வகை ஆற்றல்மாற்றிகளைப் (Transducers) பயன்படுத்துகின்றன. ஆற்றல்மாற்றிகள் என்றால் என்ன?

ஆற்றல்மாற்றிகள்

நமக்கு நாட்டமுள்ள காரணிகளை, எடுத்துக்காட்டாக வெப்பநிலையை, மின்சமிக்ஞையாக மாற்றுபவை உணரிகளின் ஆற்றல்மாற்றிகள். இதற்கு எதிர்மாறாக இயக்கிகள் மின்சமிஞ்சையை நமக்குப் பயனுள்ள ஆற்றலாக மாற்றும். எடுத்துக்காட்டாக, சமிக்ஞை கொடுத்தால் குளிர்காற்று சாளரத்தைத் தேவைக்கேற்பத் திறக்கவும் மூடவும் செய்யும்.

உணரி/இயக்கி ஆற்றல்மாற்றிக

உணரி/இயக்கி ஆற்றல்மாற்றிகள்

பலவிதமான உணரிகள்

நம் வேலைக்கு தக்கவாறு நாம் பலவிதமான உணரிகளைப் பயன்படுத்தலாம்:

  • காற்றழுத்தம் (Air Pressure)
  • கரியமிலவாயு (CO₂)
  • ஈரப்பதம் (Humidity)
  • வெப்பநிலை (Temperature)
  • ஒளிர்வு (Brightness)
  • அமிலத்தன்மை (Acidity level – pH)
  • அழுத்தம் (Pressure)
  • புகை (Smoke)

கூட்டு உணரிகள் (Combination sensors)

கூட்டு உணரிகளில் ஒரே பாகத்தில் பல உணரிகள் அடக்கமாக அமைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழல் உணரிகளில் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், காற்றழுத்தம் ஆகிவற்றை ஒரே கூட்டு உணரியில் அளவிடலாம். மூன்று தனித்தனி உணரிகளை நிறுவிப் பராமரிப்பதை விட இவற்றை நிறுவுவதும் பராமரிப்பதும் எளிது.

இயக்கிகள் (Actuators)

இயக்கிகளால் ஒரு வேலையைச் செய்யமுடியும். மின்பொறிகள் (motors), மற்றும் ஏற்றிகள் (pumps) போன்றவை இயந்திரவியல் இயக்கிகளின் எடுத்துக்காட்டுகள். கீழ்க்கண்டவையும் இயக்கிகளின் எடுத்துக்காட்டுகள்தான்:

  • ஒலியெழுப்பி (Buzzer)
  • LED விளக்கு
  • சூடேற்றி (Heater)
  • குளிர்விப்பி (Cooling unit)
  • திருகு பளு தாங்கி (Screw jack)
  • நீரழுத்த இயக்கி (Hydraulic cylinder)
  • காற்றழுத்த இயக்கி (Pneumatic cylinder)
  • வரிச்சுருள் வால்வு (Solenoid valve)
  • படிநிலை மின்பொறி (Stepper motor)

தொடர்பு கொள்ளுதல் (communicating)

உணரிகள், இயக்கிகள் போன்ற பொருட்களின் இணைய சாதனங்களுக்குத் தொடர்பு கொள்ளும் அம்சமும் தேவை. இதன் மூலம்தான் உணரிகள் தரவை வெளியே அனுப்ப முடியும் மற்றும் இயக்கிகள் வேலையைச் செய்ய சமிக்ஞையைப் பெற முடியும். இது கம்பி வழியாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் கம்பியில்லா வானலைத் தொடர்பு செய்ய முடியும். இது நிறுவுதல் மற்றும் பராமரித்தலை மிகவும் எளிதாக்குகிறது.

நன்றி தெரிவிப்புகள்

  1. Mike Vladimer – Sensors, Actuators and IoT

இத்தொடரில் அடுத்த கட்டுரை: திறன்மிகு உணரிகளும் இயக்கிகளும் (Smart sensors and actuators)

அர்டுயினோ நுண்செயலி (Arduino microprocessor). நுண்கட்டுப்படுத்திகளும் உறக்க நிலைகளும் (sleep modes). அர்டூயினோவில் (Arduino) மாற்றம் செய்து மின் சக்தியை சேமித்தல். மின்சக்தி நுகர்வை (power consumption) அளவிடல்.

ashokramach@gmail.com

%d bloggers like this: