திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 21. திறந்த மூல மென்பொருளை வைத்து வணிகம் செய்வது எப்படி

எவரும் தங்கள் முதல் அனுபவத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் பொருத்தவரை என்னுடைய நிறுவனம் லூசிட்ஒர்க்ஸ் (Lucidworks) 2008 ல் முதல் சுற்று துணிகர முதலீடு பெற்றிருந்தது, எங்கள் முதல் விற்பனையாளர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அபாச்சி சோலார் (Apache Solr) ல் ஏற்பட்ட ஒரு பிரச்சினைக்கு உதவி தேடும் ஒரு வருங்கால வாடிக்கையாளருடன் தொலைபேசி அழைப்பில் பேசக் கூறினர். அழைப்பின் போது, பல சிக்கலான கேள்விகளை வருங்கால வாடிக்கையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். பேசி முடித்தபின் எல்லாக் கேள்விகளுக்கும் நன்றாக பதில் சொன்னேன் என்று என்னையே நான் மெச்சிக்கொண்டிருந்த போது எங்கள் விற்பனையாளரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவருடைய சரியான சொற்கள் எனக்கு நினைவில் இல்லை என்றாலும், அதன் சுருக்கம் பின்வருமாறு:

விற்பனையாளர்: “நன்றாக பதில் சொன்னீர்கள், ஆனால் நீங்கள் அந்த வணிக வாய்ப்பைப் பறிகொடுத்து விட்டீர்கள்.”

நான்: “ஏன் அப்படி? எனக்கு இந்தப் பிரச்சினை பற்றி நன்றாகத் தெரியும் என்று காட்டினேனே. அவர்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பதில்களையும் கொடுத்தேனே.”

விற்பனையாளர்: “ஆம், நீங்கள் நிச்சயமாகச் செய்தீர்கள். இப்போது அவர்களுக்கு எல்லா பதில்களும் கிடைத்து விட்டன. நம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யத் தேவையிருக்காது.”

அவர் சொன்ன மாதிரியே நடந்தது. பின்தொடர்ந்த தொலைபேசி அழைப்பு விரைவாகவும், சுருக்கமாகவும் முடிந்தது. “உதவியதற்கு நன்றி, நாங்கள் எங்கள் பிரச்சினையை சரி செய்துவிட்டோம்.” திறந்த மூல வியாபாரத்தை நடத்துவது ஒரு திறந்த மூல சமுதாயத்தின் பகுதியாக இருப்பதை விட வித்தியாசமாக இருக்கிறது என்பதை விரைவாக உணர்ந்தேன். என்னைத் தவறாக எண்ணாதீர்கள் – என்னுடைய அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், சமூகத்தை உருவாக்க உதவவும் இன்னும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ஆனால் என் நிறுவனத்தின் செலவுகளை சமாளிக்க நான் வருமானத்துக்கு வழி செய்ய வேண்டும். குறிப்பாக நிறுவனத்தின் ஆரம்ப கட்டங்களில், என் அறிவும் நேரமும்தான் எனது முதன்மையான சொத்து.

ஒரு ஆதரவு அடிப்படையிலான வணிகத்திலிருந்து தயாரிப்பு-சார்ந்த நிறுவனத்திற்கு வளர்ந்துள்ள இந்த பல ஆண்டுகளில் இதே கருப்பொருளின் வேறுபாடுகள் திரும்பத் திரும்ப வந்துள்ளன. ஒவ்வொரு நிறுவனத்தையும் போல, இறுதியில் எப்படி பணம் சம்பாதிக்கப் போகிறோம் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். எனினும் முதன்மையான தயாரிப்பை இலவசமான உரிமத்தில் தருவதன் விளைவாக திறந்த மூலத் தொழில்களில் சில தனித்தன்மை வாய்ந்த சவால்கள் எழுகின்றன. குறைந்தபட்சம், இது விலையில் குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய அழுத்தங்களை ஏற்படுத்துகிறது. அதிகபட்சம் இலவச எதிர்பார்ப்பு: இலவச மென்பொருள், இலவச அறிவு, இலவச ஆதரவு.

வாடிக்கையாளர்களின் சிந்தனை பெரும்பாலும் இவ்வாறு செல்கிறது: “மூல நிரலை எடுத்து அதை செயல்படுத்தக்கூடிய ஒரு சில நிரலாளர்களை அமர்த்துவோம். அஞ்சல் பட்டியில் பதில்களைப் பெறுவோம். பிரச்சினை ஏற்பட்டால் ஆலோசகர்களுக்கு செலவு செய்து கொள்ளலாம்.”

“உன்னுடைய சேவையை இலவசமாகவே கொடு, ஆனால் நீ என்னுடைய சேவைக்கு விலை தர வேண்டும்” என்னும் மென்பொருள் இயக்கம் என்றே நான் இதை அழைக்கிறேன். இந்த நிறுவனங்கள் அனைத்தும் நிச்சயமாக தங்கள் தயாரிப்பு / சேவையை விலைகொடுத்து வாங்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றன. இம்மாதிரி சிந்தனையால்தான் பல நிறுவனங்கள் திறந்த மூலத்தைப் பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைந்துள்ளன ஆனால் ஒருபோதும் பங்களிப்பதில்லை. சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று நான் நினைப்பதாக எண்ண வேண்டாம். நிறைய மென்பொருள் நிறுவனங்களின் உண்மை நிலவரம் இதுதான். இந்த நடைமுறை நீண்டகாலத்தில் எவ்வாறு தாக்குப்பிடிக்கும் என்பதை நான் உறுதியாகக் கூற இயலாது, குறிப்பாக நிரலாளர்களின் சம்பளம் அதிகரித்து வரும்போது. ஆனால் இதுதான் நடைமுறை. ஒரு திறந்த மூல திட்டத்தில் நீங்கள் வணிகத்தை உருவாக்க விரும்பினால், இந்த நடப்பு நிலவரத்தை எவ்வாறு சமாளிப்பது என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அல்லது இதில் இறங்கவே கூடாது. “உங்கள்” குறியீடு உண்மையில் உங்களுக்கு சொந்தமானது இல்லை என்றால் நிலைமை மேலும் சிக்கலாகிறது. திறந்த மூல அடித்தளம் அபாச்சி (Apache) மென்பொருள் அறக்கட்டளை போன்ற திறந்த மூல அறக்கட்டளைக்கு சொந்தமாக இருந்தால் இதுதான் நிலைமை. போட்டி நிறுவனங்களும் பெரும்பாலும் “உங்கள்” இடத்தைச் சுற்றியேதான் வேலை செய்வார்கள்.

என் நிறுவனத்தில், “நாம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது” என்ற கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க பல வழிகளில் முயன்றுள்ளோம். முதன்முதலாக ஆலோசனை மற்றும் ஆதரவின் சில வேறுபாடுகளை செய்து பார்த்தோம். இது கொஞ்சம் கொஞ்சமாக திறந்த மூல செயற்பாட்டுமேடையை விற்பதற்கு மாறிவருகிறது. “திறந்த உள்ளகம் (open core)” அதைச் சுற்றி தனியுரிம மென்பொருள் கொண்டது. இத்துடன் திறந்த மூல சமுதாய பதிப்பில் நேரடியாக கட்டமைக்க விரும்புவோருக்கு ஆதரவும் தருகிறோம். இந்த அணுகுமுறைகள் ஒவ்வொன்றிலும் நன்மைகளும் உள்ளன, பிரச்சினைகளும் உள்ளன. அவற்றுள் சிலவற்றை நான் இங்கு முன்வைக்கிறேன்:

ஆலோசனை

ஆலோசனை தருவது சரியான குழுவுக்கு நல்ல வருமானத்துக்கு வழி ஏற்படுத்தலாம். எனினும் இதைப் பெரிய அளவில் செய்ய முடியாது, வரவுக்கும் செலவுக்கும் இடையில் குறைந்த அளவு இலாபத்தைக் கொண்டிருக்கிறது, துணிகர முதல் போடுபவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வருவாய் வராது.

ஆலோசனை நிறுவனங்களில், குறிப்பாக ஆரம்ப நாட்களில், சீரான அளவு வேலை இருக்காது. ஒருநாள் பெரு விருந்து மற்றொரு நாள் பட்டினி. எனினும் உங்கள் மென்பொருளை வைத்து வாடிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய நேரடி உள்நோக்கை ஆலோசனை போன்று வேறு எதுவும் அளிக்காது. எந்த தரவு இணைப்பிகள் மற்றும் நிர்வாக அம்சங்களை கட்டுவது என்று எங்களுக்குத் தெரிய வந்ததில் எங்கள் ஆரம்ப ஆலோசனை திட்டங்கள் மிக முக்கியமானவை. இன்று நாங்கள் ஆலோசனையை வேண்டுமென்றே கட்டுப்படுத்துகிறோம். எங்கள் சந்தாதாரர்களுக்கு அல்லது நாங்கள் ஆதரிக்கின்ற திறந்த மூல திட்டங்களுக்கு நேரடியாக பங்களிப்பவர்களுக்கு மட்டுமே ஆலோசனை வழங்குகிறோம்.

ஆதரவு

பெரும்பாலும் ஒரு திறந்த மூல திட்டத்தின் சான்றிதழிட்ட விநியோகத்துடன் சேர்த்து ஆதரவும் அளிக்கப்படும். உங்கள் மென்பொருள் பரவலாக பயன்படுத்தப்பட்டால் (இயக்குதளம், சேமிப்பு, கணிப்பீடு போன்ற முக்கிய கட்டமைப்பை கருத்தில் கொள்ளுங்கள்), பயனர்களில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை தொடரும் ஆதரவுக்கு ஒப்பந்தம் செய்ய இயலும். சில திட்டங்களில், முதல் ஆண்டு அல்லது ஆரம்ப, தரமற்ற ஆண்டுகளுக்கு மட்டுமே ஆதரவு தேவைப்படுகிறது. ஆகவே வாடிக்கையாளர்கள் தொடக்கக் கற்றல் சாய்வில் ஏறி வெற்றிகரமாக நிறுவியபின் நிறுவனங்கள் மற்றொரு விற்பனை மாதிரிக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். மிகவும் போட்டிமிக்க ஹடூப் (Hadoop) சந்தை போன்ற திட்டங்களில் வழங்குநரை மாற்ற செலவுகள் மிகக் குறைவாக இருப்பதால், விற்பனை விலையில் ஒரு தொடர்ச்சியான கீழ்நோக்கிய அழுத்தம் இருக்கிறது.

“பிரச்சினை வந்தால் வழுதிருத்தம்” செய்யும் வழக்கமான ஆதரவு மாதிரி எங்களுக்கு வேலைக்கு ஆகவில்லை. அதற்கு பதிலாக, முனைப்புடன் “வாடிக்கையாளர் வெற்றி” மாதிரிக்கு மாற்றியமைத்தோம். அவை வழக்கமாக ஆதரவு கேள்விகளாகக் கருதப்படுமா என்பதைப் பொருட்படுத்தாது, வாடிக்கையாளர்களைக் கேள்விகள் கேட்க ஊக்குவித்தோம். எடுத்துக்காட்டாக, எங்கள் பழைய, வழக்கமான ஆதரவு மாதிரியில், வழு அடுக்குத்தடம் (stack trace) மற்றும் உற்பத்தி சிக்கல்களைப் பற்றிய கோரிக்கைகளை மட்டுமே நாங்கள் கையாள முடியும். ஆனால் முடிவுகளின் தரத்தை மேம்படுத்துவது அல்லது செயலியில் இயந்திர கற்றலை செயற்படுத்துவது போன்ற வணிக / நிரலாளர் பிரச்சினைகளை அல்ல. வாடிக்கையாளர் வெற்றியடைய உதவ, இன்று எல்லா வகையான கேள்விகளுக்கும் நாங்கள் நடைமுறையில் பதில் தருகிறோம். பதிலளிக்க அதிக ஈடுபாடு வேண்டுமென்றாலோ அல்லது வாடிக்கையாளருக்கு விரிவான உதவி தேவைப்பட்டாலோ, நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம்.

பல சந்தர்ப்பங்களில், ஒரு அம்சத்தை செயல்படுத்துகையில் வாடிக்கையாளருக்கு சரியான திசையில் கை காட்டுவது மட்டுமே தேவை. இது வெளிப்படையானதாகத் தோன்றலாம். ஆனால் பெரும்பாலான நிறுவனங்களின் பெரும்பாலான ஆதரவு மையங்களில் அழைப்பைக் குறைக்கவே முயற்சி செய்கிறார்கள், வாடிக்கையாளரின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு விற்பனை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அல்ல. எங்கள் அணுகுமுறை எங்கள் வணிகத்தின் ஆதரவு மட்டுமே உள்ள வாடிக்கையாளர்களில் புதுப்பித்தல் விழுக்காட்டில் எங்களுக்கு கணிசமான முன்னேற்றம் வழங்கியுள்ளது. இருப்பினும், ஆதரவு செலவுகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும். மேலும் இவ்வாறு தொடர்பு கொள்வது மணிக்கணக்காக இலவச ஆலோசனையாக மாறி விடக்கூடாது.

திறந்த உள்ளகம் அல்லது வணிக நீட்சிகள்

சிறந்த நிர்வாகக் கருவிகள் போன்ற மதிப்பு சேர்க்கக்கூடிய திறன்களைக் கொடுத்து வருமானம் பெற முடியும் என்று பல நிறுவனங்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றுகின்றன. இந்த நிலையிலுள்ள நிறுவனங்களுக்கு சவால் பொதுவாக விற்பனையாளரை மாற்ற இயலாது என்ற பயத்தின் கீழ் வருகிறது (எந்தவொரு தேர்வு செய்தாலும் மாற்றுவது கடினமே என்றாலும்). அல்லது சமூகம் இதே போன்ற அம்சங்களை உருவாக்கினால், நீங்கள் அதை ஆதரிக்க நேரும், உங்கள் தீர்வை அதைவிட மிக நல்லதாக வேறுபடுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

நீங்கள் ஒரு தோதான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டால், இலாபத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம், சமூகத்தின் நல்ல நிர்வாகிகளாகவும் இருக்கலாம். ஆனால் தயாரிப்பு வளர்ச்சியில் மிகுந்த கவனம் வைக்க வேண்டும், மேலும் பயனர்களுக்கு உண்மையில் என்ன தேவை என்று தெரிந்து கொள்ள ஆதரவு மற்றும் ஆலோசனையில் நல்ல அனுபவம் பெற்ற பின்னரே இதைச் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக, எங்களது தயாரிப்பு (லூசிட்வர்க்ஸ் தேடல்) எங்கள் முதல் வெளியீட்டில், சந்தையில் முந்தைய தலைமுறை தேடுபொருட்களின் அம்சங்களைப் பார்த்து முக்கியமாக உருவாக்கப்பட்டது. மேலும் இது சோலார் (Solr) உடன் நெருக்கமாக இணைக்கப்பட்டது. இது சோலார் ன் முழு அம்சத் தொகுப்பை பயனர்கள் பயன்படுத்துவதைத் தடுத்தது.

தயாரிப்பு முழுமையாக வெற்றிடத்தில் வடிவமைக்கப்படவில்லை என்றாலும், பின்னூட்டம் பெரும்பாலும் நாங்கள் எப்படி சோலார் ன் அம்சங்களை மிக அதிகமாக மறைத்துவிட்டோம் என்பதைக் குறித்தும்  அல்லது அவற்றின் உட்பொருத்திகள் வேலை செய்யவில்லை என்றுமே. நிறுவனத்துக்குள் எங்கள் சொந்த நிரலாளர்கள்கூட அதில் வேலை செய்யும்போது முரண்பாடுகளை உணர்ந்தனர். ஏனெனில் அது திறந்த மூல திட்டத்துக்கு நிறைவு உண்டாக்குவதற்குப் பதிலாக மிக அதிகமாகப் போட்டியிட்டது.

எங்கள் புதிய கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு லூசிட்வர்க்ஸ் ஃப்யூஷன் (Lucidworks Fusion) மூலம் நாங்கள் ஆதரிக்கும் முக்கிய திட்டத்தின் (சோலார்) பல்வேறு பதிப்புகளில் இணைக்கலாம், வேலை செய்யலாம். மேலும் அபாச்சி ஸ்பார்க் (Apache Spark) போன்ற பிற முக்கிய திறந்த மூல திட்டங்களுடனும் நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். திறந்த மூலத்திற்கான மாற்றீடாக அல்ல, நீட்சியாகவே நாங்கள் இதைப் பார்க்கிறோம். தனியுரிம வினைச்சரங்கள் எழுதுவதற்குப் பதிலாக, மேலும் தகவலை புத்திசாலித்தனமாகக் கைப்பற்றவும் பயன்படுத்தவும் அதிக வழிகளைக் காண நாங்கள் முயல்கிறோம்.

மேக வழங்கி சேவை

திறந்த மூலத்  திட்டத்தின் கருவித் தொகுப்பை முழுமையாக (அல்லது பகுதியாக) வாடிக்கையாளர் அணுகலை வழங்கும் அதே வேளையில், திறந்த மூல நிறுவலும் நிர்வாகமும் வாடிக்கையாளருக்கு செய்து தரப்படும். இம்மாதிரி மேக வழங்கி சேவை மாதிரியுடன் சில திட்டங்கள் இயல்பாகவே ஒருங்கிணைகின்றன. நீங்கள் ஒரு உண்மையான பல்குடியிருப்பாளர் தீர்வு அடைய முடியும் என்றால், இந்த அணுகுமுறை நல்ல தொடரும் வருவாயையும் குறிப்பிடத்தக்க இலாபத்தையும் கொடுக்க முடியும்.

இந்த  துறையிலுள்ள சவால்கள் பெரும்பாலும் தரவு பாதுகாப்பு, குறைந்த செயலறு நேரம், பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் தரவை எவ்வாறு பதிவேற்றம் செய்வது (ஏற்கனவே மேக வழங்கியில் இல்லாவிட்டால்) என்பன. பெரிதும் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்துறைகள் (நிதி சேவைகள், உடல்நலம்) பெரும்பாலும் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல் குறித்த கவலைகள் காரணமாக ஊடுருவக் குறிப்பாக கடினமாக உள்ளன. ஏடபிள்யூஎஸ் (AWS), அஷர் (Azure), கூகிள் (Google) ஆகிய பெரிய மேக வழங்குநர்கள் இந்த அணுகுமுறையைத் தீவிரமாகப் பின்பற்றுகிறார்கள். ஆனால் குறைந்த செலவில் இயக்க முடிந்தால் ஒரு சிறு துறைக்கு மட்டும் சேவை செய்யும் சிறு நிறுவனங்களும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்.

இவற்றில் சிறந்த தீர்வு எது? நிச்சயமாக இதற்கு பதில், நிறுவனத்தின் மூலதனம், குழுவின் திறன் தொகுப்பு, போட்டித்தன்மை சூழல் போன்ற உங்கள் திறந்த மூல திட்டத்தின் குறிப்பிட்ட திறன்களை உள்ளடக்கிய பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. இவற்றைக் கலந்த மாதிரிகள் கூட சாத்தியமானவையாக இருக்கலாம், நீங்கள் அகலக்கால் வைக்காத வரை.

இறுதியில், ஒரு திறந்த மூல நிறுவனமாக நீங்கள் சமூகத்தையும் பேணி வளர்த்துக்கொண்டு, விரைவாக “இது இலவசம்” என்ற வலையில் மாட்டிக்கொள்ளாமல் வெளியே வர முன்னதாக முடிவு செய்ய வேண்டும். மென்பொருளைப் போலவே, வேலை செய்யாவிட்டால் மாதிரியை மாற்றியமைக்க நீங்கள் தயங்கக்கூடாது.

Grant Ingersoll

மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: கிரான்ட் இங்கர்சால் (Grant Ingersoll)  – கிரான்ட் லூசிட்வர்க்ஸ் (Lucidworks) இன் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) மற்றும் இணை நிறுவனர் ஆவார். “உரையை பயன்படுத்த அடக்குவது எப்படி” என்ற மானிங் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு செய்த புத்தகத்தின் துணை-ஆசிரியர். அபாச்சி மஹௌட்டின் (Apache Mahout) இணை-நிறுவனர், மற்றும் அபாச்சி லூசீன் (Apache Lucene) மற்றும் சோலார் (Solr) திறந்த மூல திட்டங்களில் நீண்ட காலமாக மூல நிரலை மாற்றும் உரிமை பெற்றவர். பல வகையான தேடல்கள், கேள்வி பதில் மற்றும் இயல்பு மொழி செயல்படுத்தல் செயலிகளை பல்வேறு களங்களுக்கும் மொழிகளுக்கும் வழங்குவதில் கிரான்ட் அனுபவம் பெற்றவர். அவர் தனது பி.எஸ். பட்டத்தை கணிதம் மற்றும் கணினியில் அம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் இருந்து பெற்றார்.

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

முற்றும்

%d bloggers like this: