பைத்தான் படிக்கலாம் வாங்க! 4 – லினக்சில் பைத்தான் நிறுவல்

பைத்தானின் எளிமையையும் இனிமையையும் எவ்வளவு நாள் தான் எட்ட நின்றே சுவைத்துக் கொண்டிருப்பது? நம்முடைய கணினியில் பைத்தானை நிறுவினால் தானே, “கண்ணே கலைமானே” என்று பைத்தானைப் பார்த்துப் பாட முடியும்!

பைத்தான் நிறுவலை லினக்சில் இருந்து தொடங்குவோம். “எடுத்த எடுப்பிலேயே லினக்ஸ் இயங்குதளத்திற்குப் போய் விட்டீர்கள். நாங்கள் எல்லோரும் விண்டோஸ் அல்லவா வைத்திருக்கிறோம்” என்கிறீர்களா? நிரலர் (டெவலப்பர்)க்குரிய ஒரு பால பாடம் சொல்லி விடுகிறேன் – நல்ல கணினியாளராக மாற விரும்பும் ஒவ்வொருவரும் கட்டற்ற மென்பொருளாகிய லினக்ஸ் பயன்படுத்துவது தான் சாலச் சிறந்தது. விண்டோஸ், மேக் போன்ற இயங்குதளங்களில் பல நன்மைகள் இருக்கலாம், மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றின் மூடிய பண்பே(Closed Source) ஒரு நிரலரை ஒரு கட்டத்திற்கு மேல் இயங்க விடாமல் தடுத்து விடும். ‘யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை?’ என்று கைப்புள்ள கேட்பது போல, ‘நிரலர்க்கு மூடிய மென்பொருளில் என்ன வேலை?’ என்று நாமும் கேட்கலாம்.

 

எனவே, பைத்தான் படிக்க விரும்புகிறீர்கள் என்றால், இரட்டை இயங்குதள நிறுவல் (Dual Boot Linux) முறையிலாவது லினக்சை நிறுவிக் கொள்ளுங்கள். லினக்சில் பல வகைகள்
இருக்கின்றனவே! எதை நிறுவுவது? என்பது உங்களுடைய கேள்வியாக இருந்தால்,

1) தமிழ்நாட்டு அரசு கொடுக்கும் இலவச மடிக்கணினிகளில் பாஸ்(BOSS) என்னும் பெயரில் லினக்ஸ் ஏற்கெனவே இருக்கிறது. அரசு மடிக்கணினிகள் வைத்திருப்போர் அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
2) மற்றவர்கள் லினக்ஸ் மின்ட்(https://linuxmint.com/) சின்னமான்(Cinnamon) அல்லது உபுண்டு (ubuntu.com/) டெஸ்க்டாப் நிறுவிக் கொள்ளலாம்.

(இப்படி இரட்டை நிறுவலை மேற்கொள்ள விலை உயர்வான மடிக்கணினி தான் தேவை என்பதில்லை. அரசு மடிக்கணினியே தாராளமாகப் போதுமானது.)

லினக்சில் பைத்தான் நிறுவல்:
1) டெர்மினலைத் திறந்து கொள்ளுங்கள்.
2) அதில் python –version என்று முதலில் அச்சிட்டுப் பாருங்கள். லினக்சில் ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் பைத்தான் 2 பற்றிய விவரங்களை அப்போது பார்க்கலாம். நமக்குத் தேவையானது பைத்தான் 2 இல்லை, பைத்தான் 3 என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, உங்கள் கணினியில் பைத்தான் 2 இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.

3) பைத்தான் 3, உங்கள் கணினியில் இருக்கிறதா என்று பார்க்க, python3 –version என்று அச்சிடுங்கள்.
4) பைத்தான் இருந்தால், கீழ் உள்ளது போல, பைத்தானின் பதிப்பு என்ன என்று காட்டும்.
இப்படிப் பைத்தான் உங்கள் கணினியில் இருந்தால், கீழ் உள்ள வரிகளை நீங்கள் விட்டு விடலாம்.
5) ஒரு வேளை பைத்தான் உங்கள் கணினியில் இல்லை என்றால் மட்டும் கீழ் உள்ள வேலைகளைச் செய்யுங்கள்.
1. பைத்தானின் தளத்தில் எந்தப் பதிப்பை அண்மைய பதிப்பாகக் கொடுத்திருக்கிறார்களோ, அந்த எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள்.(இப்போது அந்தப் பதிப்பு 3.10.1)

2. sudo apt-get install python3.10.1 என்று டெர்மினலில் கொடுங்கள்.

அவ்வளவு தான்! பைத்தானை நம்முடைய கணினியில் நிறுவிவிட்டோம். இப்போது பைத்தான் நம்முடைய கணினியில் இருக்கிறது என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? ஏற்கெனவே சொன்னது போல, python –version என்று டெர்மினலில் கொடுத்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

நான், விண்டோஸ் இயங்குதளத்தில் வேலை செய்கிறேனே, மேக் இயங்குதளத்தில் வேலை செய்கிறேனே என்பவர்கள் அடுத்தடுத்த பதிவுகளைப் பாருங்களேன்.

– கி. முத்துராமலிங்கம், பயிலகம்

%d bloggers like this: