பைத்தான் படிக்கலாம் வாங்க – 21 – காத்து வாக்குல ரெண்டு காதல்

மதன், கார்த்திகா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் மென்பொறியாளர்கள். மதனுக்கு லினக்ஸ் அத்துப்படி! கார்த்திகாவுக்கு மதனைக் காட்டிலும் வேலை அனுபவம் குறைவு! விண்டோசே கதி என்று இருந்த கார்த்திகாவுக்கு லினக்சின் ஒவ்வொரு படியாக மதன் காட்ட, கார்த்திகா, லினக்சில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தாள். லினக்சைக் காதலித்த மதனுக்கு, லினக்சைக் காதலிக்கத் தொடங்கிய கார்த்திகாவையும் பிடித்துத் தான் இருந்தது. அதிலும் ஒரு நாள் அலுவலகத்தில் நடந்த பாட்டுப் போட்டியில் மதனுக்குப் போட்டியாகக் கார்த்திகா பாடிய ‘யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே’ பாடலில் கிறங்கிப் போய் இருந்தான் மதன். “ஆயர் பாடியில் கண்ணன் இல்லையோ” என்று அவள் பாடியதே தன்னைப் பார்த்துத் தானோ என்று மெய் மறந்தான் மதன். இப்படியாகக் கருப்பு வெள்ளைக் கனவுகளுக்கு லினக்ஸ், வண்ணக் கனவுகளுக்குக் கார்த்திகா என்று காத்து வாக்குல ரெண்டு காதலாகப் போய்க் கொண்டு இருந்தது மதனின் வாழ்க்கை.

லினக்சிடம் என்ன வேண்டுமானாலும் கேட்டு வாங்கத் தெரிந்த மதனுக்குக் கார்த்திகாவின் கண்களைப் பார்த்து, காதலைச் சொல்லும் தைரியம் மட்டும் இன்னும் வரவே இல்லை. லினக்சில் பல தேர்வுகள் எழுதிச் சான்றிதழ்கள் குவித்து வைத்திருந்த மதனுக்குக் காதல் தேர்வு மட்டும் என்னவோ கலவரத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. “நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்” என்று மனத்திற்குள் பாடிக் கொண்டே இருந்தான்.

ஒரு நாள் இரவு, மதன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான்; ஆழ்ந்த தூக்கத்தில் மதனுக்குக் கனவு! கனவில் மதனும் கார்த்திகாவும் உட்கார்ந்திருக்கிறார்கள். இருவருக்கும் நரைதிரை எல்லாம் விழுந்து வயதான தோற்றத்தில் வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள்; தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. ‘முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூட வரும்’ என்று ஏதோ பாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவன் வருகிறான். மதனைப் பார்த்து, ‘தாத்தா என் நண்பன் ஒருவன், உன் வயதையும் பாட்டி வயதையும் கேட்டான். எனக்கு இருவர் வயதும் தெரியாது. ஆனால், எங்க பாட்டியை விடத் தாத்தாவுக்கு வயது அதிகம்’ என்று சொன்னேன். அவனாகவே ‘உங்க தாத்தாவுக்கு எழுபது வயது, பாட்டிக்கு அறுபது வயது இருக்கும்’ என்று சொல்லிக் கொண்டான். அப்படிச் சொன்ன நண்பன், என்னுடைய வயதையும் தம்பி தங்கை வயதையும் கேட்டான். ‘நான் என் வயதையும், தம்பி தங்கை வயதையும் சொல்லவில்லை’ என்றான். மதன், ‘ஏன் பேராண்டி! வயதைக் கேட்டால் சொல்ல வேண்டியது தானே!’ என்றான். ‘இல்லை தாத்தா! உனக்கும் பாட்டிக்கும் பத்து வயது வித்தியாசம் இருக்காது தானே! அவன் உன்னைக் கிழவன் என்று கிண்டல் செய்வதற்காகக் கேட்டது போல எனக்குப் பட்டது. அதனால், நான் நேரடியாக வயதைச் சொல்லவில்லை’ என்றான். பேரனின் பாசத்தைப் பார்த்து மதனுக்கு மகிழ்ச்சி. ‘நேரடியாக வயதைச் சொல்லவில்லை சரி, பிறகெப்படி மறைமுகமாகச் சொன்னாயா?’ இது மதனின் கேள்வி! ‘ஆமாம் தாத்தா, என் தாத்தா வயது எழுபது, என் பாட்டியின் வயது அறுபது என்றால், அவர்கள் வயதுகளின் பொது வகுத்திகளைக் கண்டுபிடி! அதில் இருப்பதில் சின்ன எண் என் தம்பியின் வயது, அடுத்த எண், என் தங்கையின் வயது, பெரிய எண் என் வயது’ என்று சொல்லி விட்டேன் என்றான் பேராண்டி.

பொது வகுத்தி, கணக்கு என்று கனவு, காதலைத் தாண்டி எங்கோ போனவுடன் கலைந்து போனது மதனின் கனவு. ‘சே! காதல் கனவு வரும் என்று நினைத்தால் இப்படிக் கணக்குக் கனவு வந்து தூக்கம் தொலைந்து போனதே’ என்று மதனுக்கு ஒரே வருத்தம். ‘சரி, தூக்கம் கலைந்து சீக்கிரம் எழுந்து விட்டோம்! கனவில் கண்ட கணக்கைப் போட்டுத் தான் பார்ப்போமே!’ என்று கணக்குப் போடத் தொடங்கினான் மதன்.


மதன்_வயது = 70
கார்த்திகா_வயது = 60
வகுக்கும்_எண் = 2
while வகுக்கும்_எண்<=கார்த்திகா_வயது:
if மதன்_வயது%வகுக்கும்_எண்==0 and கார்த்திகா_வயது%வகுக்கும்_எண்==0:
print('பேரன்/பேத்தி வயது', வகுக்கும்_எண்)
வகுக்கும்_எண்+=1

இந்த நிரலை எளிதாகப் போட்டு முடித்து விட்டான் மதன். பைத்தானுக்கு அவன் புதியது என்றாலும் கணியம்.காமில் வரும் பைத்தான் பற்றிய தொடரைத் தொடர்ந்து படித்து வந்ததால் எளிதாக இந்த நிரலை எழுதி விட்டான். (என்ன செய்வது? நமக்கு நாமே இப்படி விளம்பரம் செய்து கொண்டால் தான் உண்டு :)) இப்போது மதனுக்குள் ஒரு கேள்வி! தனக்குப் பிறக்கப் போகும் பேரன், பேத்திகளில் மூத்த பேரனின் வயதை மட்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் எப்படிக் கண்டுபிடிப்பது? எப்படி அதைக் கண்டுபிடிக்கலாம் என்று மூளையைப் போட்டுக் கசக்கிக் கொண்டிருந்தான். திடீரென அவனுக்குப் பொறி தட்டியது! முதலில் கிடைக்கும் வகுத்தி[Divisor] கடைசிப் பேரக்குழந்தை என்றால், முதல் பேரக்குழந்தை என்பது கடைசி வகுத்தி! அப்படியானால் அந்தக் கடைசி வகுத்தியை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதுமானது. கிடைக்கும் ஒவ்வொரு வகுத்தியையும் பேரன்_வயது எனச் சேமிப்போம். கடைசியாக என்ன எண் கிடைக்கிறதோ அதுவே முதல் பேரக்குழந்தையின் வயதாக இருக்க முடியும் எனக் கணித்துக் கொண்டான். கணித்து, முதலில் எழுதிய நிரலை,


மதன்_வயது = 70
கார்த்திகா_வயது = 60
வகுக்கும்_எண் = 2
while வகுக்கும்_எண்<=கார்த்திகா_வயது:
if மதன்_வயது%வகுக்கும்_எண்==0 and கார்த்திகா_வயது%வகுக்கும்_எண்==0:
பேரன்_வயது = வகுக்கும்_எண்
வகுக்கும்_எண்+=1
else:
print('முதல் பேரக் குழந்தையின் வயது', பேரன்_வயது)

என்று மாற்றி எழுதினான். நிரலின் வெளியீட்டை(output)ப் பார்த்து,
‘யுரேக்கா யுரேக்கா’ என்று கத்தலாம் போல் இருந்தது. “சீச்சீ! இப்படிச் சின்ன நிரலுக்கு எல்லாமா யுரேக்கா யுரேக்கா என்று கத்துவது” என்று நினைத்துக் கொண்டான். இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ‘காதல் என்னும் தேர்வெழுதி’ என்று அலைபேசி பாடத் தொடங்கியது. இந்தப் பாட்டு, ‘கார்த்திகாவுக்கு மட்டும் அல்லவா வைத்திருந்தேன், காலையிலேயே கூப்பிடுகிறாளா?’ என்று நினைத்தபடியே பாய்ந்து எடுத்து, ‘சொல்லுங்க கார்த்திகா’ என்று சொல்வதில் ‘ங்க’வைக் கொஞ்சம் குறைத்துச் சொல்லிக் கொண்டான்.

‘மதன், உங்களிடம் எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை’ என்றாள் கார்த்திகா.
‘என்ன? எதுவும் சிக்கலா கார்த்திகா?’, இது மதன். ‘நேற்று இராத்திரி தூக்கத்தில் ஒரு கனவு!’ என்றாள் கார்த்திகா. ‘உனக்குமா’ என்று கேட்க நினைத்து, ‘உங்களுக்குமா?’ என்றான் மதன். ‘உங்களுக்குமா என்றால்? உங்களுக்குமா?’ என்றாள் கார்த்திகா. கனவுகளிலும் அவர்கள் சந்திக்கத் தொடங்கியிருந்தார்கள்.

குறிப்பு: இங்கு மதனின் மூத்த பேரன்/பேத்தியின் வயது தான் மீப்பெரு பொது வகுத்தி கண்டுபிடிப்பதற்கான வழி.

– கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை

நன்றி: எழுத்தாளர் நக்கீரன்.ந

%d bloggers like this: