பைத்தான் படிக்கலாம் வாங்க! 11 – வாங்க பழகலாம்!

இது வரை பார்த்த பதிவுகளில் பைத்தான் நிரலை எப்படி எழுதுவது? உள்ளீடு எப்படிக் கொடுப்பது? அச்சிடுவது எப்படி? என்று பார்த்திருக்கிறோம்.

ஆனாலும் பைத்தானின் எளிமையை, இனிமையை இன்னும் முழுமையாக நாம் சுவைக்கவில்லை. அதைத் தான் இந்தப் பதிவில் சுவைக்கப் போகிறோம்.

இரண்டு எண்களில் பெரிய எண் எது?

இரண்டு எண்களில் பெரிய எண்ணை எப்படிக் கண்டுபிடிப்பது? 1. முதல் எண்ணை வாங்குங்கள்.
2. இரண்டாவது எண்ணை வாங்குங்கள்.
3. முதல் எண், இரண்டாவது எண்ணை விடப் பெரியது என்றால், முதல் எண்ணை அச்சிடுங்கள்.
4. இல்லையென்றால், இரண்டாவது எண்ணை அச்சிடுங்கள்.

இவ்வளவு தானே படிநிலைகள். இதைப் படமாக வரைந்து பார்ப்போமா?

இந்தப் படம் புரிந்து விட்டது அல்லவா? இதைவிடப் பைத்தான் எளிது.


no1 = 100
no2 = 200
if no1 > no2:
print(no1)
else:
print(no2)

இதில் நினைவில் கொள்ள வேண்டிய சில கருத்துகள் இருக்கின்றன.

1. பெரியது என்றால், சிறியது என்றால் என்று தமிழில் சொல்கிறோம் அல்லவா? இந்த “என்றால்” தான், பைத்தானில் if.
2. ifஐத் தொடர்ந்து நாம் கொடுக்க வேண்டிய ஒப்பீட்டைக் கொடுக்க வேண்டும்.
3. மறக்காமல் ஒப்பீட்டுக்குப் பிறகு, : கொடுக்க வேண்டும்.
4. இல்லையென்றால் என்று தமிழில் சொல்வதை, else என்று சொல்ல வேண்டும்.
5. மறக்காமல் : கொடுக்க வேண்டும்.

இவ்வளவையும் நினைவில் கொள்ள வேண்டுமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இவற்றை நினைவில் கொள்வது, மிக எளிது தான்!

தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதும் போது காற்புள்ளி(Comma) கொடுக்க வேண்டிய இடத்தில் எல்லாம், பைத்தானில் முக்கால்புள்ளி(:) கொடுக்க வேண்டும். முக்கால்புள்ளி(:)க்கு அடுத்த வரியை எப்போதும் உள்தள்ளி(Tab) எழுத வேண்டும். தொடக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கடினமாகத் தெரிந்தாலும் நாள்படப் பழக்கப்பட்டு விடும். தொடர் பயிற்சி அதை எளிமைப்படுத்தி விடும்.

சரி, இன்றைய வீட்டுப்பாடம் என்ன தெரியுமா? இரண்டு எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பாய்படத்தை(Flowchart) இப்போதே வரைந்து விட்டோம் அல்லவா? மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பாய்படத்தை வரைந்து வருகிறீர்களா?

– கி. முத்துராமலிங்கம், பயிலகம்

%d bloggers like this: