PHP தமிழில் – 1

இதற்கு உன் :

பகுதி – 1

  • PHP – இன் வரலாறு
  • PHP Script உருவாக்குதல்
  • PHP பிரபலமானது எப்படி?

PHPயின் வரலாறு

பிரச்சனைகள் ஏற்படும் போதே அதன் தீர்வுகளும் தேடப்படுகிறது. எங்கு தேடியும் தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில், அதற்கான தீர்வை தாமாகவே முயன்று கண்டுபிடிப்பர். அவருக்கு ஏற்பட்ட அந்த பிரச்சனை வேறு ஒருவருக்கு ஏற்படும் போது, மற்றவர்களுக்கும் அவரைப் போல கஷ்டபடாமல் இருப்பதற்காக, கண்டுபிடித்த அந்த தீர்வை அனைவரும் தெரிந்து கொள்ளுவதற்காக இலவசமாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்கிறார்.

மற்றவர்களும் அந்த தொழில்நுட்பத்தை(தீர்வு) ஏற்றுக்கொண்டு அதை மெருகேற்றும் போது அந்த தீர்வை கண்டுபிடித்தவரே கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அந்த தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும்.

PHP

-> PHP உருவான விதம் – PHP யின் முதல் பதிப்பு 1995ஆம் ஆண்டு Ramus Lerdof அவர்களால் உருவாக்கப்பட்டது. Rasmus தற்போது Yahoo நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய இணையதளத்தை எளிமையாக உருவாக்க HTML உடன் இணைந்து நன்றாக வேலை செய்யும் ஏதோ ஒன்று தேவைப்பட்டது. முக்கியமாக இணைய உலாவியிலிருந்து வழங்கிக்கு தகவல்களை அனுப்பவும், வழங்கியில் இருந்து இணைய உலாவியில் தகவல்களைப் பெறவும் எளிமையான ஒரு தொழில்நுட்பம் அல்லது மொழி தேவைப்பட்டது.

அந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் Perl மொழியினைக் கொண்டு ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கினார். அந்த தொழில்நுட்பத்திற்கு அவர் இட்ட பெயர் ‘Personal Home Page / Form Interpreter’. Rasmus Lerdof அவர்கள் உருவாக்கிய அத்தகைய தொழில்நுட்பம் இணைய உள்ளடக்கங்களையும், இணைய படிவங்களையும் செயல்முறைப்படுத்துவதற்கா வசதியான வழிகளை ஏற்படுத்தி கொடுத்தது.

‘Personal Home Page / Form Interpreter’ என்னும் பெயர் பின்பு PHP/FI என்று சுருக்கி அழைக்கப்பட்டது. இறுதியாக ‘PHP: Hypertext Preprocessor’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‘GNU’s Not Unix’ என்பது எப்படி GNU என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறதோ, அதே போல ‘PHP: Hypertext Preprocessor’ என்பதும் PHP என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

PHP/FI யின் முதல் பதிப்பு(Version 1.0) Rasmus அவர்களுடைய சொந்த இணையதளத்தைத் தாண்டி வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. காரணம் அவரினுடைய சொந்த தேவைக்காக அவர் அதை உருவாக்கினார். PHP/FI 2.0 னுடைய அறிமுகம் அதை மாற்ற தொடங்கியது.

ஆனால் PHP 3 பதிப்பு 1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போது அனைவரின் நம்பிக்கையையும் சுக்குநூறாக்கி யாரும் எதிர்பாராத விதமாக PHP அனைவரின் மத்தியிலும் புகழ் பெற்றது.

-> PHP 3 யின் வெற்றி

1997 ஆம் ஆண்டு வாக்கில் இணையதளங்களின் வளர்ச்சி அசுர வேகமெடுத்தது. அவ்வாறு வளர்ச்சி பெற்ற இணையதளங்கள் அதே சமயத்தில் Apache Web Serverஐ பயன்படுத்தி வந்தன. அதே காலகட்டத்தில்தான் PHP யின் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக Andy Gutmans மற்றும் Zeev Suraski ஆகிய இருவரும் PHP 3 திட்டத்தை அறிமுகப்படுத்தினர். குறிப்பாக Apache Web Server உடன் PHP இணைந்து செயல்படும் விதமாக PHP வலிமையாக உருவாக்கி வெளியிடப்பட்டது.

அதேசமயத்தில்PHP + Apache Web Server கூட்டணி வெற்றியை நோக்கி பயணித்தது. இணைய உலகில் 10% க்கு மேலான இணையதளங்கள் PHP தங்களுடைய இணையதளத்தில் பயன்படுத்த ஆரம்பித்தன.

-> PHP 4 – விஸ்பரூபம்

Andi Gutmans and Zeev Suraski ஆகிய இருவராலும் PHP 3மறுபடியும் மெருகேற்றப்பட்டது. PHP3-இன் மெறுகேற்றப்பட்ட பதிப்பு PHP4 ஆக வெளிவந்தது. அவ்வாறு கட்டமைக்கப்பட்ட PHP4 ஒரு சிறிய தொழில்நுட்பத்துடன் வெளிவந்தது. அவ்வாறு இணைக்கப்பட்ட அந்த சிறிய தொழில்நுட்பம் Zend Engine என்று அழைக்கப்பட்டது.

மெருகேற்றப்பட்ட அம்சங்கள்:

  • மற்ற இணைய வழங்கிகளுக்கு ( Microsoft’s Internet Information Server – IIS ) ஆதரவு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
  • நினைவக மேலாண்மையை திறம்பட செய்தல்
  • பெரிய திட்டங்கள், வணிக பயன்பாடு மற்றும் mission critical பயன்பாடுகளுக்கு ஆதரவு

-> PHP 5 – Object Orientation , Error Handling and XML

OOP க்கு ஆதரவளிக்கும் வகையில் மேலும் மெருகேற்றப்பட்டது. Java, Python போன்று மற்ற மொழிகளில் உள்ளது போல try/catch error and exception handling வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. தரவுகளை கையாளுதல் குறிப்பாக XML மற்றும் SQLite போன்றவைகளை கையாளுதல் மற்றும் தரவுதளத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான எளிய வழிமுறைகள் போன்ற வசதிகள் கொண்டு வரப்பட்டது.

-> PHP பிரபலமாக உள்ளது எப்படி?

PHP என்பது ஒரு Server Side Scripting மொழி (Language) என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. PHP இணைய பயன்பாடிற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் அது ஒரு பொதுப் பயன்பாட்டிற்கான மொழியாகவும், அனைவராலும் விரும்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு இருக்கக்கூடிய அனைத்து இணைய வழங்கிகளிலுமே Apache+PHP உள்ளது. புதிதாக நிறுவப்படும் இணையவழங்கிகளில் PHP என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிபர கணக்குப்படி, 240மில்லியனுக்கு (1மில்லியன்=10லட்சம், 240மில்லியன்=240000000) அதிகமான இணையதளங்களில் PHP பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2.1 மில்லியன் இணைய வழங்கிகளில் PHP நிறுவப்பட்டு உள்ளது.

Perl, Python போன்ற மொழிகளை கற்றவர்கள், PHP–ஐ கற்றுக்கொள்வது என்பது மிகவும் எளிது. அதுபோல எளிமையான Syntax, அனைத்து தகவல்தளங்களுடனும் ஒத்து இயங்குவது மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்திருப்பது என பல்வேறு அம்சங்கள் PHP – இல் இருப்பதால், இன்றைய இணைய உலகில் Web Developement ற்கு தகுந்த மொழியாக PHP பிரபலமடைந்துள்ளது.

இது PHPயின் வரலாறு மட்டுமே, அடுத்த பகுதில் நல்லதொரு அறிமுகம் வருகிறது….

About Author

ஓஜஸ்
உங்களுள் ஒருவன். உங்களைப் போல் ஒருவன்!!! http://bit.ly/ojas9 | http://bit.ly/isaai

%d bloggers like this: