மும்பை பள்ளி மைக்ரோசாஃப்ட்-ஐ விட்டு கட்டற்ற திறந்த மூல மென்பொருளுக்கு மாற்றியது

மைக்ரோசாஃப்ட், அடோபி போன்ற தனியுரிம மென்பொருள்களுக்குப் பதிலாகக் கட்டற்ற திறந்த மூல மென்பொருள்களுக்கு (Free and Open Source Software – FOSS) மாற்றம் செய்து மும்பை மஸ்காவுனில் உள்ள செயின்ட் மேரி என்ற அரசு உதவிபெறும் பள்ளி நகரிலேயே முதல் பள்ளியாக இடம் பெற்றது. மைக்ரோசாஃப்ட் இயங்கு தளம் மட்டும்தான் என்று இருக்கக் கூடாது என்றும் செலவைக் குறைக்கும் இலவச திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்த மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் மராட்டிய மாநில இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம் (MSBSHE) அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டது.

இவ்வாரியம் 10 முதல் 12 வகுப்பு வரை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் (ICT) பாடத்திட்டங்களை மாற்றியமைத்துள்ளது. “மைக்ரோசாஃப்ட்” என்று குறிப்பிடப்பட்ட எல்லாவற்றையும்  பாடத்திட்டங்களிலிருந்து நீக்கியுள்ளது. எக்செல் (Excel) என்று இருந்த இடத்தில் பொதுவாக விரிதாள் என்றும், வேர்ட் (Word) என்று இருந்த இடத்தில் பொதுவாக உரை செயலி / தொகுப்பி என்றும் மற்றும் பவர்பாயிண்ட் (PowerPoint) என்று இருந்த இடத்தில் பொதுவாக விளக்கக்காட்சி என்றும் மாற்றம் செய்தது.

புனித மேரி பள்ளியின் தலைமை ஆசிரியர் தந்தை ஜுட் பெர்னாண்டஸ் கூறுகையில், “நாங்கள் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியாக இருக்கிறோம், இதனால் கணினி கட்டணம் 600 ரூபாய் மட்டுமே. 600 ரூபாயில், மைக்ரோசாஃப்ட் தொகுப்பிற்காக ஒவ்வொரு கணினிக்கும் ஒவ்வொரு மாதமும் 2,000 ரூபாய் செலவு செய்ய முடியாது. எனவே இலவச திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்தும் யோசனை வந்தது. மேலும், இது செலவைப் பற்றி மட்டுமல்ல. திறந்த மூல மென்பொருட்களுக்கு விரிவான வேலை வாய்ப்பு உள்ளது. திறந்த மூல மென்பொருட்களில் ஒன்று லினக்ஸ் ஆகும். இது பொறியியல் மாணவர்களால் அவர்களின் கல்விக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஆசிரியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட உறுப்பினர்களாகக் கொண்டது இந்திய லினக்ஸ் பயனர் குழு (Indian Linux Users Group – ILUG). இக்குழு எழுப்பிய தகவல் உரிமை சட்ட (RTI) வினவல் மூலமாக, மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகள், மென்பொருள் மற்றும் நச்சுநிரல் எதிர்ப்பு ஆகியவற்றில் கால்சா கல்லூரி ஒரு ஆண்டில் ரூ. 8 லட்சம் மற்றும் ரூயா கல்லூரி மூன்று ஆண்டுகளில் ரூ 30 லட்சம் முறையே செலவழித்திருந்தன என்பது தெரிய வந்தது.

“இந்த அளவிலான இழப்புகளைக் கண்டறிந்து, மைக்ரோசாஃப்ட் ஏகபோகத்தை நிறுத்தவும், கல்வி அமைப்பில் திறந்த மூல மென்பொருட்களைக் கொண்டு வரவும் முடிவு செய்தோம். திறந்த மூல மென்பொருட்களில் உரிமம் மற்றும் நச்சுநிரல் பற்றிய பிரச்சினை இருக்காது,” என இந்திய லினக்ஸ் பயனர் குழு உறுப்பினர் கூறினார்.

இது பற்றி ஐஸ்வர்யா எழுதிய மூலக்கட்டுரை இங்கே

இது பற்றி ரொனால்ட் ரோட்ரிக்ஸ் எழுதிய மூலக்கட்டுரை இங்கே

%d bloggers like this: