லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் ஹேக்கத்தான் – சாதித்துக் காட்டிய நம்மவர்கள்!

எதிர்பார்த்த படி, லிப்ரெஆபிஸ் டெஸ்டிங் இணையவழி ஹேக்கத்தானுக்கு ஆர்வத்துடன் பலர் குவியத் தொடங்கினார்கள். சரியாகப் பதினொன்றரைக்கு உள்ளே நுழைந்தார் இல்மாரி. அவர் உள்ளே நுழையும் போதே இருபதுக்கும் அதிகமானோர் இணைந்திருந்தனர். சில மணித்துளிகளில் நிகழ்வை இல்மாரி தொடங்கும் போது இணைந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதைத் தொட்டிருந்தது.

மிக இயல்பாக, லிப்ரெஆபிஸ் தொகுப்பில் எப்படி வேலை செய்ய வேண்டும்? விண்டோஸ், லினக்ஸ் என ஒவ்வொரு இயங்குதளத்திலும் எப்படி நிறுவ வேண்டும்? வழுக்களை(bug) எப்படிப் பதிய வேண்டும்? என அனைத்தையும் நாற்பது நிமிடங்களில் சொல்லி முடித்தார். இடையிடையேயும் கடைசியிலும் அருண், ஶ்ரீவத்சன், பிரபு, அருள்செல்வம் எனப் பலரும் தங்கள் கேள்விகளைக் கேட்டார்கள். ‘தொடர்ந்து லிப்ரெஆபிசிற்குப் பங்களிக்கத் தொடங்குங்கள், உங்களுக்கு நான் உதவுகிறேன். விருப்பப்பட்டால் டெஸ்டிங்கில் பங்கெடுங்கள், இல்லாவிட்டால், நிரலாக்கத்திலும்[programming] பங்கெடுக்கலாம்’ எனச் சொன்ன இல்மாரியின் வார்த்தைகள் பலருக்கும் கணினித்துறை மீது இருந்த நம்பிக்கையைக் கூட்டியது.

இல்மாரியின் அறிமுகத்திற்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் எல்லோருமே தனியே மீண்டும் அனைவரும் கூடினோம். இருவர், இருவராக அணி பிரித்துக் கொண்டோம். இல்மாரியே எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லியிருந்ததால், இங்கே எங்களுக்கு அதிக நேரம் தேவைப்படவில்லை. தொடக்கத்தில் லிப்ரெஆபிசின் இப்போதைய நிரலர் பதிப்பை நிறுவுவதில் மட்டும் சிலருக்குச் சிக்கல் இருந்தது. அதுவும் உடனடியாகச் சரி செய்யப்பட்டு விட்டது.

பிறகு மீண்டும் நாலரை மணிக்கு எல்லோரும் கூடினோம். இடைப்பட்ட நான்கு மணி நேரத்தில், ஏறத்தாழ முப்பது வழுக்களைச் சோதித்துப் பார்த்திருந்தார்கள் நம்மவர்கள். இவ்வளவு குறைவான நேரத்தில் இவ்வளவு முயற்சிகளா? [அதிலும் பங்கேற்றதில் தொண்ணூறு விழுக்காட்டுப் பேர் புதியவர்கள்] என்று மலைப்பாக இருந்தது.

கலந்து கொண்டவர்கள் சொன்ன கருத்துகளில் சில:
1. இப்படிப்பட்ட நிகழ்வுகள் அடிக்கடி தேவை. இல்மாரி போன்ற அனுபவம் வாய்ந்த வல்லுநர்களைக் கொண்டு நிகழ்வுகள் நடத்துவது மிகவும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
2. இந்த நிகழ்வில் இல்மாரி பேசிய ஆங்கிலம் எனக்குப் புரியவேயில்லை. இருந்தாலும் ஏதாவது செய்யலாம் என நம்பிக்கையுடன் கலந்துகொண்டேன். அணியாக வேலை செய்ததால் என் நம்பிக்கை வீண் போகவில்லை. நானும் ஓர் உண்மையான திட்டப்பணியில்[project] கலந்து கொண்ட மனநிறைவு கிடைத்திருக்கிறது.
3. இவ்வளவு நாள் எனக்கு வழு(bug) என்றால் என்னவென்றே தெரியாது. இந்நிகழ்வு மூலம் அதை நான் தெரிந்து கொண்டேன்.
4. இனி மேல் தொடர்ந்து லிப்ரெஆபிசிற்குப் பங்களிக்க வேண்டும் என உறுதி எடுத்திருக்கிறேன்.

வழுக்கள் கண்டுபிடிப்பு/உறுதிப்படுத்தலில் பங்கேற்றவர்கள்:

ஜான் சுதாகர், ஏழுமலை, பிரபு, அருள்செல்வம், அருள்ராஜ், கிரேசியா, சுசி, ஶ்ரீராம், கேத்தரின், சதீஷ், சாய் பிரசா, நந்தினி, ஶ்ரீவத்சன், கமலக்கண்ணன், கிருத்திகா, இரங்கராஜன், பிரசாந்த், மாதேஷ், கோபாலகிருஷ்ணன், அருண்.

தொகுப்பு: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.

%d bloggers like this: