லிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3, 2014

இன்று தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸ் 4.3 இன் வெளியீட்டை அறிவித்தனர். உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்களின் உடனுழைப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்த லிப்ரெஓபிஸ், இன்று எல்லாவிதத் தேவைகளையும் நிறைவு செய்யும் ஒரு மிகச் சிறந்த அலுவலகத் தொகுதியாக வளர்ந்திருக்கிறது.

LibreOffice

‘லிப்ரெ’ என்றால் விடுதலை என்று பொருள்பட அமைந்துள்ள லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறமூல மென்பொருள் ஆகும். அது முழுக்க முழுக்க தமிழில் அமைந்திருப்பது மட்டுமல்லாது, அனைவருக்கும் இலவசமாகவே கிடைக்கிறது. அதன் சுத்தமான முகப்பும் சக்திவாய்ந்த கருவிகளும் பயனர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரவும் அவர்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவும்.

லிப்ரெஓபிஸ் பல செயலிகளைத் தன்னுள் அடக்கி இருக்கிறது. அதில் ‘ரைட்டர்’ என்ற ஒரு சொற்செயலியும், ‘கல்க்’ என்ற ஒரு விரிதாளும், ‘இம்பிரெஸ்’ என்ற ஒரு வழங்கல் பொறியும், ‘பேஸ்’ என்ற ஒரு தளவுத்தளமும் உள்ளன. இவை தவிர்த்து, அதன் ‘டிரோ’ சித்திரங்களையும் பாய்வு விளக்கப்படங்களையும் தயாரிக்கப் பயன்படுகிறது; அதன் ‘மேத்’-ஐக் கொண்டு கணிதச் சமன்பாடுகளைத் தொகுக்கலாம்.

libre_Tamil

“எந்த ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவும் இல்லாமலேயே ஒரு கட்டற்ற மென்பொருள் சமூகத்தால் செயல்பட முடியும் என்பதற்கு லிப்ரெஓபிஸ் திட்டம் ஒரு எடுத்துக்காட்டு,” என்று தமிழா! குழு தன்னார்வலரும் மலேசிய உத்தமத்தின் தலைவருமான திரு. சி.ம. இளந்தமிழ் கூறினார். “திறந்த செந்தரத்தையும் பல்வித ஆவண வடிவூட்டங்களையும் ஆதரிப்பதில் லிப்ரெஓபிஸுக்கு நிகர் லிப்ரெஓபிஸே.”

கடிதங்கள், தொலைநகல்கள், நிகழ்ச்சி நிரல்கள், கூட்டக் குறிப்புகள், வரவு செலவு கணக்குகள் போன்ற சாதரண ஆவணங்கள் முதல், ஆயிரமாயிரம் பேருக்கு அனுப்பப்படும் கடிதங்கள் வரை அனைத்தையும் லிப்ரெஓபிஸில் எளிதாகத் தயாரிக்கலாம். இதற்காக லிப்ரெஓபிஸில் பல வழிகாட்டிகள் உள்ளன. கூடுதல் உதவி நாடும் பயனர்கள் லிப்ரெஓபிஸில் இயல்பாகவே இடம்பெற்றுள்ள ஆவண வார்ப்புருக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றோடு தமிழைப் பிழையற எழுத உதவும் சொற்பிழை, இலக்கணப்பிழை திருத்திகளின் முன்னோடி பதிப்புகளும் லிப்ரெஓபிஸ் 4.3 இல் சேர்க்கப்பட்டுள்ளன.

லிப்ரெஓபிஸ் 4.3 ஐப் பெற விரும்புவோர் அதனை ta.libreoffice.org/download என்ற வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். விண்டோஸ், லினக்ஸ், மேக் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் லிப்ரெஓபிஸ் செயல்படும். லிப்ரெஓபிஸ் செயல்திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விழைவோர் தமிழா! குழுவினருடன் இணைந்து செயல்படலாம்.

###

தி டொகுமெண்ட் ஃபௌண்டேஷன் மற்றும் தமிழா! குழுவினர்பற்றி

தி டொகுமெண்ட் ஃபௌண்டேஷன் 2012 ஆம் ஆண்டு ஜெர்மனியில் அமைக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை ஆகும். உலக மக்கள் அனைவருக்கும் பயன்படும் ஒரு ஒப்புயர்வற்ற அலுவலக மென்பொருளை மேம்படுத்துவதை இந்த அறக்கட்டளைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழா! குழுவினர் லிப்ரெஓபிஸின் தமிழ்ப் பதிப்பைத் தயாரித்து வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளனர். தமிழர்கள் ஏனைய நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் நுட்பங்களைத் தங்கள் அலுவலக மற்றும் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தல் வேண்டுமென்பது தமிழா! குழுவினரின் அவா.

மூலம்: லிப்ரெஓபிஸ் 4.3: இன்று, அதினும் சிறந்த அலுவலகத் தொகுதி இல்லை

எழுத்து: வே. இளஞ்செழியன் {மின்னஞ்சல்: tamiliam AT gmail DOT com}

%d bloggers like this: