ஹெச்.டி.எம் . எல் 5 ஒரு பட விளக்கம் (2)

ஹெச்.டி.எம் . எல் 5 ஒரு பட விளக்கம் (2)

சுகந்தி வெங்கடேஷ்

ஹெ.டி.எம்.எல் 5 வருவதற்கு முன் இந்த விஷயங்களை காட்டுவதில் ஒவ்வோர் உலாவியும் ஒவ்வொரு விதமாகச் செயல்பட்டன. அது மட்டுமல்ல பயனாளிகள் எந்த உலாவிகள் பயன் படுத்துகிறார்கள் என்று இணையப் பக்கம் தயாரிப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒரு சில விஷயங்களை பயனாளிகள் பார்க்க, சில செருகிகள் [plugins] தேவைப்பட்டன. அவற்றை பயனாளிகள் தரமிறக்காவிட்டால் இணையப் பக்கங்கள் சரியாக வேலை செய்ய வாய்ப்பு இல்லை. இணைய தளங்களின் வழியாக பலர் தங்கள் கருத்துக்களை வெளியிடுகின்றனர். அவர்களின் கருத்துக்கள் அச்சுப் பிரதிகளுக்கு இணையாக இருக்க மனம் கொண்டனர். எல்லாவற்றையும் விட முக்கியமானது இன்றைய கணினிகளின் வளர்ச்சி. மேசைக் கணினிகள், கைக் கணிணிகள், கை பேசிகள் எனப் பல விதங்களில் மக்கள் கணிணியைப் பயன்படுத்துகின்றனர். விண்டோஸ் ,ஆப்பிள் போன்ற கணினி இயங்கு தளங்களைத் தவிர திறவூற்று இயங்கு தளங்களும் இன்று பயன்பாட்டில் வளர்ந்து வருகின்றன. இன்று இணைய உலாவிகளின் பட்டியலும் நீண்டு உள்ளது . அதனால் ஒரே இணையப்பக்கம் அனைத்துக் கணினிகளிலும், பயன் பட வேண்டும்; எல்லா உலாவிகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற இரு நோக்கங்களுடன் ஹெச்.டி.எம் . எல் 5 அறிமுகப்படுத்தப்பட்டது.

இணையப்பக்கம் அடிப்படையில் ஓர் உரை ஆவணமே. உங்களால் உரை ஆவணத்தை உருவாக்க முடியுமானால் உங்களால் ஓர் இணையப்பக்கத்தை உருவாக்க முடியும் வெறும் உரையாகச் சேமிக்கப் பட்ட ஆவணத்தின் படத்தில் எழுத்துக்கள் கரும் நிறத்தில் உள்ளன.

இணையப் பக்கமாகச் சேமிக்கப் பட்டதில் எழுத்துக்கள் இழைகளாக நிறம் கொண்டு இருப்பதை கவனிக்க

உரைப்பான் [text editor] ஆவணத்தை இணையப் பக்கமாக சேமித்தால் அது ஒர் இணையப் பக்கமாக மாறிவிடுகிறது. இதை உலாவிகளால் திறக்க முடியும். நீங்களே செய்து பாருங்கள்.

இத்துடன் வெறும் உரைப்பான் ஆவணத்தின் படத்தையும் அதையே இணையப் பக்கமாக சேமித்தும் காட்டியுள்ளேன். நான் உரைப்பானில் எழுதிய கதை ஒன்று, வினாடி நேரத்தில் இணையப் பக்கமாக மாறி விட்டது.

ஒர் உரைப்பான் ஆவணத்திற்கும் இணையப் பக்கத்திற்கும் உள்ள வேறுபாடு இணையப் பக்த்தில் இருக்கும் இழைகள் தான். இணையப் பக்கங்களைத் திறக்க இணைய உலாவிகளை நாம் பயன் படுத்துகிறோம்.உலாவிகளால் திறக்கப்படும் பக்கங்கள் ஒழுங்கு முறையாக கட்டமைக்கப் பட நாம் கற்றுக் கொள்ளப் போகும் இழைகள் உதவுகின்றன.

<html></html> என்ற இழைகள் ஒர் இணையப்பக்கத்தின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கின்றன. கீழே உள்ள படங்கள் கணியம் இணையப்பக்கத்தின் தொடக்கத்தையும் முடிவையும் காட்டுகின்றன. அதாவது புத்தகத்தின் அட்டைகளாக <html></html> இழைகள் இணையப் பக்கத்திற்கு செயல்படுகின்றன.

மேலே வரும் படத்தில் கணியம் இணையப் பக்கத்தின் ஆதாரத்தை படம் பிடித்துக் காட்டியுள்ளேன் <html> என்ற தொடக்க இழைக்கும் </html>என்ற இறுதி இழைக்கும் இடையில் உள்ள உள்ளடக்கத்தைப் பாருங்கள்.

அடுத்து வருவது <head></head> இழை. இதைப் பற்றி தான் கடந்த இதழில் பார்த்தோம்.

இந்த இதழில் <body> </body> என்ற இழையைப் பற்றியும் அதற்குள் வரும் மற்ற இழைகள் பற்றியும் பார்ப்போம்.

இந்த இழைக்குள் இடும் எந்த ஒரு விஷயமும் ஒரு பயனாளியால் பார்க்க முடியும். வாசகங்கள் (text), இணையச்சுட்டிகள் (hyperlinks), படங்கள் (images), அட்டவணைகள் (tables), பட்டியல் (lists),காணொளிகள் (videos) ஆகியவை <body> </body> இழைக்குள் அடங்கும்.

<html></html> <body> </body> <head></head> என்ற மூன்று இழைகளிலும் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து ஹெ.டி.எம்.எல் ஆவணங்களிலும் இவற்றின் வேலை ஒன்றே. <html></html>என்ற இழை இணையப் பக்கத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் குறிக்கிறது. <body> </body> என்ற இழை இணையப் பக்கத்தின் உட்பொருள்களைத் தாங்கி நிற்கிறது. <head></head> என்ற இழை இணைய உலாவிகளுக்குத் தேவையானக் கட்டளைகளைத் தாங்கி நிற்கிறது.

அடுத்த இதழில் <body> </body> இழைக்குள் வரும் உட்பொருள்களை விவரமாகப் பார்க்கலாம்

– தொடரும்

%d bloggers like this: