கணிணி மாணவர்கள் எப்படி வேலை தேடலாம்?

அன்புள்ள கணிணி மாணவருக்கு,

கணிணி அறிவியல் படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடும், வேலை தேடப்போகும் மாணவருக்கு,

வணக்கம்.

உங்கள் வேலை தேடும் படலம் பற்றி சிறிது பேசலாமா?

 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து, பட்டம் பெற்று, கணிணித் துறையில் வேலை தேடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 லட்சம் வேலைக்கு பணியிடங்கள் உருவாவது சாத்தியம் இல்லைதானே. இதனால் தான் அனைவருக்கும் உடனே வேலை கிடைப்பதில்லை.

ஒரு பத்து சதம் பேருக்குதான் InfoSys, TCS, CTS போன்ற பெரு நிறுவனங்களில் Campus Interview ல் வேலை கிடைக்கிறது. மீதி 90% பேருக்கு SME என்ற Small Medium Enterprises, குறு, சிறு நிறுவனங்களே வாய்ப்பளிக்கின்றன.

இந்த மாதிரியான குறு, சிறு, மத்திய நிறுவனங்களில் Fresherகளை வேலைக்கு எடுப்பதால் வரும் சில பிரச்சனைகளைப் பார்ப்போமா?

1. பயிற்சி

 

பெரு நிறுவனங்கள் போல இவை Fresherகளின் பயிற்சிக்கென 6 மத காலம், இடம், ஆசிரியர்களைத் தர முடியாது.

ஓரிரு வாரங்கள் தருவதே கடினம்.

NIIT போன்ற பெரிய தனியார் கணிணி பயிற்சி நிறுவனங்களில் 6 மாத படிப்பிற்கு ஏறக்குறைய 1 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டும் மாணவர்கள், அதை விடுத்து சிறு நிறுவனங்களில் சேர்ந்தால், அதே பயிற்சிக்கு சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்.

 

இலவச பயிற்சி, நகரின் மத்தியில் கட்டிடம், குளிர் சாதனம், கணிணி, இணையம், தடையற்ற மின்சாரம் தந்து, சம்பளமும் தருவதற்கு, நிறுவனங்கள் ஒன்றும் தொண்டு அமைப்புகள் இல்லையே.

 

சரி. அப்படியே சில மாத இலவசப் பயிற்சி அளித்தாலும், இந்த மாணவர்கள் தமது திறனை வெளிப் படுத்த, இன்னும் 6 மாதம் ஆகிறது. இப்படியே ஒரு வருடம் ஓடி விடுகிறது.

 

ஒரு வருடம் கழிந்த பின், நீங்கள் பெரு நிறுவனங்களில் வேலை செய்யம் நண்பரோடு ஒப்பிட்டுக் கொள்கிறீர்கள்.

 

“அவனுக்கு மாதம் 20,000 ரூபாய் சம்பளம். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனக்கும் அதே அளவு சம்பளம், வெளிநாட்டு வாய்ப்புகள் வேண்டும்”

 

என்று கூறி, வேலையை விட்டு நீங்கி, வேறு நிறுவனம் போகின்றீர்.

 

உங்களை நம்பி, வாடிக்கையாளரிடம் புதிய பணிகளை ஏற்றுக் கொண்ட நிறுவனம், மீண்டும் பணியாளரை தேடும் முயற்சியில் இறங்க வேண்டும். இதே போல் பலரும் செய்வதால்தான், நிறுவனங்கள் Fresher ஐ வேலைக்கு எடுக்க பயப்படுகின்றன.

 

ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அனுபவமுள்ள ஆட்களை வேலைக்கு எடுத்தால், ஓரிரு வாரங்கள் பயிற்சி மட்டுமே போதும். மூன்றாம் வாரத்திலேயே வேலை செய்யத் தொடங்கி விடுவர். நிறுவனத்திற்கும் உற்பத்தி கிடைத்துவிடும். இவர் ஒரே ஆண்டில் வேலையை விட்டாலும், நிறுவனத்திற்கு பெரிய இழப்பு இல்லை. ஒரு ஆண்டில் தந்த ஊதியத்திற்கு, தேவையான உழைப்பு கிடைத்திருக்கும்.

 

இதுவே Fresher ஐ வேலைக்கு எடுத்தால், பயிற்சியும் தந்து, சம்பளமும் தந்து, மிகவும் குறைந்த உற்பத்தி பெறும் நிலையே ஏற்படுகிறது. இதற்கு என்ன தீர்வு சொல்வீர்கள்?

 

நாளை நீங்களே ஒரு நிறுவனம் தொடங்கினால், உங்களுக்கும் இதே நிலை தானே ஏற்படும்? எப்படி சமாளிப்பீர்கள்?

 

“எல்லாம் சரிதான். வேலை கிடைத்தால்தானே அனுபவம் பெறுவது. வேலையே கிடைக்காமலும், அனுபவம் இல்லாமலும் இருக்கிறோமே!” என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

 

2. அறிவும் திறமையும்

அறிவும் திறமையும் அனுபவமும் வேலையில் சேர்ந்த பிறகு மட்டுமே வருவது அல்லவே. நாமே வளர்த்துக் கொள்ள வேண்டியது. சரிதானே?

 

பெரும்பாலான மாணவர்கள் சொல்வது என்ன? “எனக்கு ஒரு வேலை கொடுங்கள். பிறகு நான் தேவையானதைக் கற்றுக் கொள்கிறேன். அதற்குப் பிறகு, திறமையை வளர்த்துக் கொள்கிறேன்”. உண்மைதானே.

 

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அடிக்கடி வெளியூர் செல்ல கார் வாங்குகிறீர்கள். நல்ல கார் ஓட்டுனர் தேட்கிறீர்கள். நான் உங்களிடம் நேர்முகத் தேர்விற்கு வந்துள்ளேன். கார் டிரைவிங் வகுப்பு சென்றுள்ளேன். ஆனால் கார் ஓட்டிய அனுபவம் இல்லை.

 

“நான் பயிற்சி முடித்துள்ளேன். சான்றிதழ் வைத்துள்ளேன். ஆனால் அனுபவம் இல்லை. என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் புது காரை என்னிடம் கொடுங்கள். முடிந்தால் சில மாதம் பயிற்சியும் கொடுங்கள். நன்கு கற்றுக் கொண்டு, பழகிய பின், பிறகு உங்கள் குடும்பத்தினரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்கிறேன்.”

 

இப்படி சொன்னால் என்னை வேலைக்கு சேர்த்துக் கொள்வீர்களா? ஆனால் இப்படித் தானே நீங்களும் நிறுவனங்களிடம் சொல்கிறீர்கள்?

 

கார் ஓட்டிப் பழகவாவது சில லட்சங்களில் கார் வாங்க வேண்டும். கணிணியில் திறமையை வளர்க்க உங்களிடம் உள்ள கணிணியே போதுமே.

 

கிரிக்கெட்டில், மட்டையை சும்மாவே வைத்திருந்தால், சச்சினாக இருந்தாலும் நமக்கு கோபம் வருகிறதே. தொடர்ந்து ரன் எடுக்கவும், அடிக்கடி 4, 6 என அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நீங்கள் மட்டும் கணிணியை வைத்துக் கொண்டு, மென்பொருள் எதுவும் உருவாக்காமல், பாட்டு கேட்டு, படம் பார்த்து, விளையாடிக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் அரட்டை அடிப்பீர்கள். என்ன நியாயம் இது?

 

3. நேர்முகத் தேர்வு

என் நிறுவனத்திற்கு ஒரு 100 Fresher வேண்டும் என விளம்பரம் செய்தால், குறைந்தது 1000 பேராவது Resume அனுப்புகின்றனர். எல்லா Resume களிலும் பெரும்பாலும் ஒரே டெம்ப்ளேட்.

 

“எனக்கு C, C++, Java, Oracle, HTML, CSS, Javascript, VB, DotNet, ASP, Photoshop, Windows போன்றவை தெரியும்.”

 

இவ்வாறு பல நுட்பங்கள் தெரிந்த Fresherகளை வைத்து எந்த வகை மென்பொருட்களையும் எளிதாக உருவாக்கி விடலாம் என்ற நம்பிக்கை வருகிறது. இவர்களில் சிலரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்போம்.

 

“வணக்கம் தம்பி!”

 

“வணக்கம் சார்!”

 

“உங்களுக்கு என்னென்ன தெரியும்?”

 

“கணிணியில் எல்லா நுட்பங்களும் தெரியும். C, C++, Java, DotNet, Oracle…இத்யாதி!”

 

“ஓ! மிக்க மகிழ்ச்சி! என்ன Project செய்துள்ளீர்கள்?”

 

“அதுவா சார்!. போன மாதம் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பினார்களே. அதற்கு தேவையான மென்பொருள் ஒன்று செய்தேன். Cloud Computing ல் Fuzzy Logic ம் Artificial Intelligence ம் சேர்த்து Android, iOS ல் இயங்கும்

 

ஒரு மென்பொருளை செய்துள்ளேன்.”

 

“மிக்க மகிழ்ச்சி! என் கடைக்குத் தேவையான ஒரு வரவு/செலவு மென்பொருளை நீங்களே செய்து தர முடியுமா?”

 

“நானேவா? அது கஷ்டம் சார். இன்னும் நிறைய படிக்க வேண்டும். எனக்கு வேலை கொடுங்கள். பிறகு படித்து பிறகு செய்து கொடுக்கிறேன்.”

 

“ஏன் உங்களால் முடியாது? நீங்களேதானே உங்கள் பெரிய Project ஐ செய்தீர்கள்? அதைப்பற்றி கூட விரிவாக விளக்கினீர்களே.”

 

“அதுவா சார். அது வந்து… அது வந்து… பிராஜெக்ட் நான் செய்யவில்லை.”

 

“பின்னே? யார் செய்தார்கள்?”

 

“தியாகராய நகரில் ஒரு பிராஜெக்ட் சென்டரில் 10,000 ரூபாய்க்கு வாங்கினோம். ஆனால் அது பற்றி எனக்கு எல்லாமே தெரியும். எனக்கு வேலை கொடுங்கள். தேவையானவற்றை நன்கு கற்று, பிறகு செய்து கொடுக்கிறேன்.”

 

இப்படித்தான் 100க்கு 95 பேர் சொல்கின்றனர். வெகு சிலரே தாமாக சொந்த பிராஜெக்ட் செய்து, புது மென்பொருள் உருவாக்கும் திறனையும் அனுபவத்தையும் பெறுகின்றனர்.

 

இவ்வாறு அடிப்படை திறன் கூட இல்லாதவருக்கு எப்படி வேலை தருவது?

 

மருத்துவம் படித்துவிட்டு எனக்கு ஒன்றுமே தெரியாது என்பவரிடம் எப்படி நீங்கள் மருத்துவம் பார்ப்பீர்கள்?

 

அதே போல் தானே கணிணி படிப்பும்?

 

கல்வியில் மிகவும் அடிநிலை என்பது ITI. பத்தாவது தேர்வில் தோல்வியடைந்தால் கூட ITI சேரலாம். ITIல் வெல்டிங் பற்றி இரு ஆண்டுகள் படித்து முடித்த மாணவரிடம், நமது வீட்டிற்கு ஒரு இரும்பு கதவு செய்து தரச் சொல்லலாம். அவரும் மறுக்காமல் செய்து தருவார்.

 

12வது முடித்து, 3 அல்லது 4 அல்லது 6 ஆண்டுகள் கணிணி பற்றி விரிவாகப் படித்து வரும் கணிணி மாணவருக்கு மட்டும் ஒரு குட்டி மென்பொருள் கூட சுயமாக உருவாக்கத் தெரியாது.

 

எதுவுமே தெரியாமல் வரும் மாணவருக்கு வேலை தர நிறுவனங்கள் தயாராக இருப்பதில்லை. Reference, Campus Interview, Off Campus என வேலை கிடைப்போர் பத்து சதம் மட்டுமே. மீதியுள்ளோர் தமது திறமை மூலம் மட்டுமே வேலை தேட வேண்டியுள்ளது.

 

4. அனுபவம்/திறமை பெறுவது எப்படி?

ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை எப்போதும் பயிற்சியில் ஈடுபட்டு, விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துவது. “இந்திய கிரிக்கெட் குழுவில் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள்!.. பிறகு விளையாட்டை கற்றுக் கொண்டு, பிறகு சிறப்பாக விளையாடி, பிறகு இந்தியாவிற்கு கோப்பை வாங்கித் தருகிறேன்.” என்று யாருமே சொல்வதில்லை.

 

கிரிக்கெட்டில் திறமை பெற, மட்டையை எடுத்து பயிற்சி செய்ய வேண்டும். கணிணியில் திறமை பெற, பயிற்சி செய்தாலே போதுமே.

 

கணிணி மென்பொருள் உருவாக்கும் அனுபவம் பெறத் தேவையானவை ஒரு கணிணியும், இணைய இணைப்பும் மட்டுமே.

 

பின்வரும் எல்லாவற்றையும் செய்தாலே அனுபவம் தானாய் கிடைக்கும்.

 

1. Syllabus தாண்டி கற்றுக் கொள்க.

GNU/Linux, PHP, Python, Ruby, MySQL என பல நுட்பங்களை கற்றுக் கொள்க.

 

2. Tech குழுக்களில் சேர்க.

ஊரில் உள்ள Tech குழுக்களில் சேர்க. குழு இல்லையென்றால் தொடங்குக. அடிக்கடி சந்தித்து புது விஷயஙுகளை கற்றுக் கொள்க.

 

3. GNU/Linux பயன்படுத்துக.

உலகமே GNU/Linux ஐ விரும்பி வரவேற்கிறது. உங்களிடம் உள்ள விண்டோஸை அழித்துவிட்டு, உபுண்டு, டெபியன், ஃபெடோரா என ஏதாவது ஒரு லினக்ஸை நிறுவுங்கள். Commandline பயன்படுத்தும் போது எக்கச்சக்க புது விஷயங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

 

4. மென்பொருள் மூல நிரல் படியுங்கள்.

குனு/லினக்ஸில் எல்லா மென்பொருட்களுக்கும் source code கிடைக்கும். அவற்றை பதிவிறக்கம் செய்து சும்மாவேனும் திறந்து படித்துப் பாருங்கள்.

 

5. மென்பொருள் உருவாக்குங்கள்.

சின்ன கால்குலேட்டர் செய்யுங்கள். முகவரிப் புத்தகம் ஒன்று. இணைய இணைப்பை சோதனை செய்யும் கருவி, ஒரு அலாரம், ஒரு Backup செய்யும் மென்பொருள், Web scrapping மென்பொருள் என குட்டி குட்டியாக பல மென்பொருள் செய்யுங்கள். ஒவ்வொன்றுக்கும் ஓரிரு நாளே ஆகும்.

 

பிறகு உங்களை சுற்றியுள்ளோரிடம் கேட்டு, அவர்களுக்கு தேவையான மென்பொருளை செய்து கொடுங்கள். கடைகளுக்கு தேவையான Billing, Accounts, Attendance என பல மென்பொருட்கள் தேவைப்படும். அவற்றை இலவசமாகவே செய்து கொடுங்கள்.

 

6.Version Control கற்றுக் கொள்க.

Source Code ஐ பலருடனும் இணைந்து பகிர்ந்து வேலை செய்ய Version Control System பயன்படுகிறது. Subversion (SVN), GIT கற்றுக் கொள்ளுங்கள். github.com -ல் ஒரு பயனர் கணக்கு உருவாக்கி, உங்கள் மென்பொருட்கள் யாவற்றையும் இங்கு சேருங்கள். பிறர் உருவாக்கிய மென்பொருட்களுக்கும் பங்களியுங்கள். உங்கள் Facebook Profile ஐ விட github Profile ஏ உங்கள் வளர்ச்சியை தீர்மானிக்கும்.

 

7. கட்டற்ற மென்பொருட்களுக்கு பங்களியுங்கள்

உங்களுக்கு பிடித்தமான கட்டற்ற மென்பொருளுக்கு பங்களியுங்கள். ஒரு வரி நிரல் தந்தாலும் அது பெரிய விஷயமே. நிரல் மட்டுமின்றி ஆவணமாக்கம், படம், IRC, Forum, Mailing list ஆகியவற்றில் உதவி, Packaging, பரப்புரை செய்தல், மொழிமாற்றம் செய்தல் என ஏதாவது ஒரு வகையில் பங்களியுங்கள். “How to contribute to Open Source Software?” என்று தேடுங்கள். பிடித்த மொழியில், பிடித்த மென்பொருளுக்கு உதவுங்கள்.

 

8. வலைப்பதிவு எழுதுங்கள்

நீங்கள் செய்ய்ம் எல்லாவற்றையும் உங்கள் வலைப்பதிவில் எழுதுங்கள். தினமும் விடாமல் எழுதுங்கள். உங்களின் மிகச்சிறந்த Visiting Card ஆக உங்கள் வலைப்பதிவு அமையும்.

 

9. Resume-ல் இவை எல்லாவற்றையும் சேருங்கள்.

உங்கள் வலைப்பதிவு, உங்கள் github முகவரி, நீங்கள் பங்களிக்கும் கட்டற்ற மென்பொருட்கள், Syllabus தாண்டி நீங்கள் கற்றுக் கொண்ட நுட்பங்கள், இவற்றையெல்லாம் உங்கள் Resume-ல் சேருங்கள்.

 

10. வேலை கேட்காதீர்கள், Project Work கேளுங்கள்.

உங்களுக்கு தெரிந்தோரிடமெல்லாம் வேலை கேட்டு நச்சரிக்காதீர்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு தேவைப்படும் மென்பொருளை செய்து தருவதாய் சொல்லுங்கள். Project Work ஆக செய்யுங்கள்.

 

படித்து முடித்து, பின் சும்மாவே வேலை மட்டும் தேடிக் கொண்டிருந்தால், ஒரு வருடம் ஓடியே விடும். அதற்குள் அடுத்த ஆண்டு மாணவர்கள் வெளியே வந்து Fresher ஆகி விடுவர். நீங்கள் Fresher ஆகவும் இல்லாமல், வேலையும் இன்றி, அனுபவமும் இன்றி மிகவும் குழம்பி நிற்பீர்.

 

இந்த ஒரு ஆண்டில், மாதம் ஒரு Project என பத்து, பன்னிரண்டு Projectகளை நீங்களே செய்து விட்டால், அதையே ஒரு ஆண்டு அனுபவமாக சொல்லலாம். Freelancer என்று தைரியமாக உங்கள் Resume ல் அறிவிக்கலாம்.

 

ஒரு ஆண்டு அனுபவம் உள்ளது என்றே அறிவித்து வேலை தேடுங்கள். பிறகு பாருங்கள். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை. நிஜமாகவே அனுபவம் இருப்பதால், நேர்முகத்தேர்வும் மிக எளிதாகவே இருக்கும்.

 

பல Project கள் செய்யும் போது, வணிக ரீதியான மென்பொருட்களை உருவாக்கி பணமும் சம்பாதிக்கலாம். நல்ல குழுவினர் கிடைத்தால், தனியாக நிறுவனமும் தொடங்கலாம்.

 

உழைப்பும் திறமையும் இருந்தால் போதும். வானமே உங்கள் எல்லைதான்.

 

எனதருமை சச்சின்களே. 50களையும் 100களையும் சச்சின் குவித்தது போல, மென்பொருட்களை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களுக்கு பங்களித்து, உங்கள் திறமையால், சுடர்விடும் சூரியனாய் மிளிருங்கள்.

 

வாழ்த்துக்கள்.

 

இந்த இணைப்புகளையும் பாருங்கள்.

 

ilugc.in

 

fsftn.org

 

opensource.com/life/13/4/ten-ways-participate-open-source

 

teachingopensource.org/index.php/How_to_start_contributing_to_or_using_Open_Source_Software

 

blog.smartbear.com/programming/14-ways-to-contribute-to-open-source-without-being-a-programming-genius-or-a-rock-star/

 

goinggnu.wordpress.com/2012/05/11/what-to-do-after-learning-python-programming/

 

உங்கள் கருத்துகளை இங்கே தெரிவியுங்கள்.

 

த.சீனிவாசன்

tshrinivasan@gmail.com

%d bloggers like this: