தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 6. தடை செய்யப்பட்ட கட்டலான் மொழி புத்துயிர் பெற்றது எப்படி?

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டலான் மொழி சிறுபான்மை மக்களால் பேசப்படுகிறது. வெற்றிபெற்ற ஆட்சியாளர்களால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட கட்டலான் மொழி இப்பொழுது 9 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. உலகில் 150 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இந்த மொழியை கற்றுத் தருகின்றன. 400 க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் இம்மொழியில் பிரசுரிக்கப்படுன்றன.

பேரிடர்களை சந்தித்துப் பிழைத்து வந்த கட்டலான் மொழி

1714 ஆம் ஆண்டில் ஸ்பானிய துருப்புக்கள் பார்சிலோனாவை வெற்றி கண்ட பின், கட்டலோனியா அதன் தன்னாட்சி உரிமையை இழந்தது. கட்டலான் மொழி மீது கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஸ்பானிஷ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்கியது.

உள்நாட்டுப் போரின் முடிவில் கட்டலோனிய மக்கள் ஒரு தனி உலகில் வாழ்ந்தார்கள். கட்டலான் மொழியைப் பயன்படுத்துவது தன்னுரிமையின் அடையாளமாகக் கருதப்பட்டது. வரலாறு பற்றி யாரும் பேசவில்லை. அரசியல் பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் கட்டலான் மொழியில் மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இதை அவர்கள் அதிகாரபூர்வ ஸ்பெயின் நாடு மற்றும் ஆட்சியை எதிர்க்கும் அல்லது ஒதுங்கியிருக்கும் ஒரு அடிப்படை வழி என்று கருதினர். 19 ஆம் நூற்றாண்டில், கட்டலான் மொழி தேசியவாத கலாச்சார இயக்கத்தின் முயற்சியால் ஒரு இலக்கிய மொழியாக மறுபிறப்பு அடைய ஆரம்பித்தது. எனினும், இந்த மறுமலர்ச்சி நீடிக்கவில்லை.

1939 ஆம் ஆண்டில் பிரான்கோ சர்வாதிகார ஆட்சி வந்தவுடன் பொதுத்துறை நிர்வாகத்திலும், கல்வியிலும் கட்டலான் மொழி தடை செய்யப்பட்டது. பள்ளிகள், விளம்பரம், மத விழாக்கள் மற்றும் சாலைக் குறியீடுகளில் சிறுபான்மை மொழிகள் தடை செய்யப்பட்டன. புதிய அரசியல் நிலைமையை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், குறிப்பாகக் காவல் துறையினர், “பேரரசின் மொழியைப் பயன்படுத்துங்கள்” என்று மக்களைக் கட்டாயப் படுத்தினர். ஸ்பானிய மொழிடன் ஒப்பிடுகையில், கட்டலான் மொழி கௌரவத்தை இழந்தது. மேலும் சில மேல் வர்க்கத்தார் ஸ்பானிஷ் மொழியில் பேச ஆரம்பித்தனர். 1975 இல் ஸ்பெயினில் மீண்டும் மக்களாட்சி ஏற்பட்ட பின்னர், இது ஸ்பானிஷ் மொழியுடன் சேர்த்து அதிகாரபூர்வ மொழி, கல்விக்கான மொழி, மற்றும் ஊடகங்களின் மொழி என நிறுவப்பட்டது. இவை அனைத்தும் இதற்கு பெருமைக்குரிய பங்கை அளித்தன.

எண்ணிம காலத்தில் மொழித் தொழில்நுட்பங்கள்

நாம் எண்ணிம காலத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். தொலைபேசி, இணையம், மின்னஞ்சல், திரைப்படங்கள் அல்லது இசையை எங்கிருந்தாலும் திறன்பேசி அல்லது கைக்கணினி மூலம் அணுகக்கூடிய வசதிகளை நாம் அனுபவித்து வருகிறோம். இந்த சாதனங்களின் பயன்பாடு இயற்கையாகி வருகிறது. முதலில் வந்த வணிகப் செயலிகளை விசைப்பலகைகள் மூலம் ஓட்ட வேண்டியிருந்தது. மொழித் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் வந்த பின்னர் வாய்ப் பேச்சாலேயே அணுக இயல்கிறது.

வெகு விரைவில் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் நமக்குத் தானியங்கி மொழிபெயர்ப்பு, உரையாடல்கள் மற்றும் ஆவணங்களின் சுருக்கம், தானியங்கியாக பேச்சை உரையாக்குவது, நிழல் படங்களுக்கு துணைத்தலைப்பு போன்ற சிக்கலான செயலிகளை நம்மால் அணுக முடியும். இந்தச் செயலிகள் அனைத்துக்கும் வெவ்வேறு மொழித் தொழில்நுட்பங்கள் (பேச்சை உரையாக்குதல்,  உரை ஒலி மாற்றி, மொழிபெயர்ப்பிகள், பாகுபடுத்திகள், சொற்பொருள் பகுப்பாய்விகள் முதலியன) மற்றும் பொருத்தமான மொழி வளங்கள் (பேச்சு மற்றும் உரைத் தொகுதிகள், இலக்கணங்கள் முதலியன) ஒருங்கிணைந்து வேலை செய்ய வேண்டும்.

நவீன மொழித் தொழில்நுட்பங்களும் மொழியியல் ஆராய்ச்சிகளும் மொழியின் எல்லைகளை இணைக்கும் ஒரு பெரிய பங்களிப்பை செய்ய முடியும். திறன் பேசி போன்ற சாதனங்கள் மற்றும் செயலிகளுடன் இணைந்து, மொழித் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒரு பொதுவான மொழியில் பேசாவிட்டாலும் ஒருவருக்கொருவர் எளிமையாக பேசுவதற்கும் வியாபாரம் செய்வதற்கும் உதவ முடியும்.

மொழித் தொழில்நுட்பத் தீர்வுகள் இறுதியில் வெவ்வேறு மொழிகளுக்கு இடையில் ஒரு தனிப்பட்ட பாலமாக செயல்படும். மேலும், தகவல் மற்றும் புதிய செயலிகளுக்கான உலகளாவிய அணுகல் குறிப்பிட்ட மொழியின் பயன்பாட்டால் வரையறுக்கப்படாது. இருப்பினும், சந்தையில் தற்போது கிடைக்கும் மொழித் தொழில்நுட்பங்கள் மற்றும் பேச்சு செயலாக்கக் கருவிகள் இன்னும் இந்த லட்சிய இலக்கை அடையவில்லை. ஐரோப்பிய ஒற்றுமைக்கு மொழி தொழில்நுட்பத்தின் ஆழமான தொடர்பையும் முக்கியத்தையும் 1970 களின் பிற்பகுதியிலேயே ஐரோப்பிய ஒன்றியம் உணர்ந்தது. அதன் முதல் ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியுதவி செய்தது.

ஸ்பெயின் மொழிகள்

ஸ்பெயின் நாட்டில் சிறுபான்மை மொழி பேசும் வட்டாரங்கள்

கட்டலான் மொழியின் இயல் மொழித் தொழில்நுட்பம்

கட்டலான் மொழியின் இயல் மொழித் தொழில்நுட்பம், மக்கள் தொகை மற்றும் மொழியின் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், எதிர்பார்ப்பதை விடச் சிறந்த வடிவில் உள்ளது. மற்ற வளங்களுக்கிடையில், கட்டலான் மொழியில் ஒரு உயர்தர கைமுறையாகக் குறியீடு செய்த 55 மில்லியன் சொற்தொகுப்பு (manually annotated corpus) உள்ளது. இது பத்தாண்டுகளுக்கும் மேலாக பார்சிலோனா பல்கலைக்கழகம், கட்டலான் மொழியறிவியல் மற்றும் பொது மொழியியல் துறை முனைவர் வக்கீம் ரபேல் முன்யோசனையுடன் தொகுத்தது. ஸ்பானிஷ் மற்றும் கட்டலான் மொழிகளில் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்படும் தினசரி பத்திரிகையின் வெளியீடும் மொழிபெயர்ப்பு இணை உரைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.

மொழி தொழில்நுட்பத்தின் பலதுறை இயல்பு காரணமாக, தொழில்நுட்ப உலகில் (கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகள்) மற்றும் மனிதநேயத் துறையில் (மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறைகள்) இருந்து ஆராய்ச்சிக் குழுக்கள் வந்து சேருகின்றன. குழுக்களில் பெரும்பாலானவை பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவை. அடிப்படை அல்லது செயல்முறை சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. தொழில்நுட்பக் கைமாற்றத்தில் இதில் ஒரு குழு தேர்ச்சி பெற்றிருக்கிறது, ஆனால் எல்லாக் குழுக்களும் இதை ஏதாவது ஒரு விதத்தில் சமாளிக்கின்றன.

உள்ளூர் அரசாங்கம், மாநில அரசு அல்லது ஐரோப்பிய பல்கலைக்கழகம் (Universidad Europea) ஆகியவற்றிலிருந்து திட்டங்களுக்கு நிதி வருகிறது. மற்ற நிதி ஆதாரங்கள் நிறுவனங்களுடன் அல்லது நிர்வாகத்துடன் ஒப்பந்தங்களாகும். கட்டலானுக்கான பெரும்பாலான ஆராய்ச்சிகள் எழுதப்பட்ட உரையைப் பற்றித்தான். பதினான்கு குழுக்களில் பத்து உரைத் தரவுகளில் கவனம் செலுத்துகின்றன. மூன்று குழுக்கள் உரையிலும் பேச்சிலும் வேலை செய்கின்றன.  ஒரு குழு பேச்சில் மட்டுமே வேலை செய்கிறது. பேச்சில் அடிப்படைப் பகுதிகள் பேச்சுத் தயாரிப்பு (speech synthesis) மற்றும் பகுப்பாய்வு ஆகும்.

இந்தக் கூட்டு முயற்சியின் காரணமாக, மொழி செயலாக்கத்திற்கான அடிப்படைக்  கருவிகள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவை கட்டலான் மொழிக்கு உள்ளன. இருப்பினும் அவை எப்போதும் பரவலாகத் தெரியவருவதில்லை. சில சமயங்களில் ஆராய்ச்சி சமூகம், தொழில் நிறுவனங்கள் அல்லது பொதுமக்களுக்குக் கிடைப்பதில்லை. பல்வேறு குழுக்களிடையே (ஆராய்ச்சிக் குழுக்கள், அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள்) நல்ல ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு எந்தவொரு முயற்சிக்கும் தேவைதான். இருப்பினும் கட்டலான் போன்ற ஒரு சிறிய மொழிக்கான தொழில்நுட்பம் உருவாக்குவதில் இது மிக அவசியம். மொழி வளங்கள் விலை உயர்ந்தவை, நிதியோ குறைவு, மற்றும் சமூகம் முயற்சிகளை திரும்பச் செய்யவும் சிதற அடிக்கவும் இடம் கிடையாது.

————–

இத்தொடரில் அடுத்த கட்டுரை:  “ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்” இதுதான் நியதியா?

அயர்லாந்தில் ஆட்சி மொழியாக இருந்தும் ஐரிஷ் மொழி பேசுவது குறைந்து வருகிறது. ஆனால் வட அயர்லாந்திலோ சிறுபான்மை மொழியாக இருந்தபோதிலும், சில குடும்பங்களின் விடா முயற்சியால், பல ஐரிஷ் மொழிப் பள்ளிகள் புதிதாக ஆரம்பித்து நடக்கின்றன.

%d bloggers like this: