திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 7. நீங்கள் ஒரு அற்புதமான நிரல் பங்களிப்பாளராக ஆகலாம்

இங்கு நியூயார்க் நகரில் ஒரு சுறுசுறுப்பான காலை நேரம். என் மின்னஞ்சல் அகப்பெட்டியில் பார்த்தால் இனிமையான ஆச்சரியங்கள் பல உள்ளன. முதலில் என்னுடைய திறந்த மூல திட்டங்களில் ஒன்றுக்கு ஒரு நிரல் ஒட்டு (patch) வந்துள்ளது. இரண்டாவது ஒட்டு இன்று பிற்பகல் வரும். மூன்றாவது ஒருவேளை இன்றிரவோ அல்லது நாளையோ ஒரு புதிய பங்களிப்பாளரிடமிருந்து வர வேண்டும்.

என் வேலை நேரம் போக, நான் சில திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிக்கிறேன் மற்றும் அவற்றை நிர்வகிக்கிறேன். நான் வேலை செய்யும் திட்டங்களின் எண்ணிக்கை இரண்டு மூன்று சிறு கருவிகளில் ஆரம்பித்து கடந்த மூன்று ஆண்டுகளில் பன்னிரண்டுக்கு மேல் வளர்ந்து விட்டது. புதிய தொழில்நுட்பம் கற்கவும், நவீன மென்பொருள் உருவாக்கும் வழிமுறைகளை சோதனை செய்து பார்க்கவும், மற்றும் முக்கியமாக, மற்ற ஒத்த நோக்கமுடைய பொறியாளர்களை சந்திக்கவும் திறந்த மூலம் நல்ல வழியாகியுள்ளது. திறமைவாய்ந்த பங்களிப்பாளர்கள் சோதனை செய்த நிரல்களை அனுப்பும்போது  ஒரு பெரும் சாதனை செய்த ஒரு தனித்தன்மை வாய்ந்த உணர்வு எழுகிறது. என்னுடைய சொந்த செயலிகளுக்கு பல திருப்தியான வாடிக்கையாளர்கள் இருப்பதும், என்னை வேலைக்கு வைத்துள்ள நிறுவனம் விற்பனை மிக நன்றாக ஆகியுள்ளது என்று அறிவிப்பதையும் போன்ற வலிமை கொண்டதே இந்த உணர்வு.

கடந்த சில மாதங்களில் எனக்கு நிரல் ஒட்டுகள் அனுப்பிய மூன்று பொறியாளர்களை நான் தங்கள் அனுபவங்கள் பற்றி மேலும் சொல்லும்படிக் கேட்டேன். பங்களிக்க வேண்டுமென்ற உந்துதல் எப்படி வந்ததென்று அவர்களிடமிருந்து முதலில் அறிய விரும்பினேன்.

நிக்கோலா கில்லௌமின் (Nicolas Guillaumin) ஆஸ்திரேலியாவில் டிக்ஸ்டனில் (Dickston) உள்ள ஃபன்னல்பேக் (Funnelback) என்ற ஒரு தேடுபொறி தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் நிறுவனத்தின் ஆராய்ச்சியும் உருவாக்கமும் (R & D) செய்யும் குழுவில் வேலை செய்கிறார். வாஃபில் வேலைக்கூறு (WAFFLE workitem) # 8559 பற்றி நிக்கோலா தன் கருத்தைத் தெரிவித்தவுடன்தான் எங்கள் தொடர்பு துவங்கியது.:

“தயவு செய்து நான் இத்துடன் இணைத்துள்ள நிரல் ஒட்டைப் பார்க்கவும். நான் இந்த [எல்லோரும் விரும்பிய ஆனால் ஒருவரும் செயல்படுத்த அக்கறை எடுக்காத] அடிப்படை வேலையை செயல்படுத்திவிட்டேன்.”

பங்களிப்பாளர் ஆக அவரை உந்தியது என்ன என்பதை விளக்கச் சொல்லி நான் நிக்கோலாவைக் கேட்டேன்:

“எங்கள் வலை செயலியை பேர்லில் (Perl) இருந்து ஜாவாவுக்கு (Java) ஏற்புடையதாக மாற்றம் செய்வது பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தோம். இதனால் எங்களுக்கு ஐஐஎஸ் (IIS) வழங்கும் எஸ்எஸ்ஓ (SSO) மற்றும் ஆள்மாறாட்டம் (impersonation) போன்ற சில அம்சங்களுக்கு பதிலாக வேறு ஒரு வழி தேவைப்பட்டது. சான்றுறுதி செய்ய ஸ்ப்ரிங் (Spring) பாதுகாப்பு மற்றும் ஜாஸ் (JAAS) போன்ற பல்வேறு சாத்தியமான தீர்வுகள் கிடைத்தன. எனினும் வாஃபில் (WAFFLE) அவற்றை விட எளியதாகவும் நேரடியானதாகவும் இருந்தது. மேலும் அதில் மட்டும் தான் அடித்தள API ல் ஆள்மாறாட்டத்துக்கு ஆதரவு இருந்தது. அதை நீட்சி செய்து ஒரு குறுவழங்கி வடிகட்டியில் ஆள்மாறாட்டம் செயல்படுத்துவது ஓரளவு எளிதாகத் தெரிந்தது. கூட பங்களிப்பு செய்வது நேரடியாக இருந்தது. கட்டமைப்பு சிறியதாகவும், எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டும் இருந்தது.”

ராமி அபுகஸாலே (Rami Abughazaleh) அகோரா ஹில்ஸ் (Agoura Hills), கலிபோர்னியாவில் உள்ள நோவாஸ்டோர் (NovaStor) என்ற ஒரு காப்புநகல் மென்பொருள் மற்றும் தரவு பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை செய்கிறார். இன்று அவர் விண்டோஸ் மென்பொருள் நிறுவல் துறையில் பிரபலமான டாட்நெட் நிறுவி (dotNetInstaller) உட்பட பல தொடர்பான திறந்த மூல திட்டங்களில் மூல நிரலை மாற்றும் உரிமை பெற்றவர்.

“நாங்கள் தயாரிப்பில் நேரடியாக டாட்நெட் நிறுவியைப் பயன்படுத்துகிறோம். அதில் எங்களுக்கு ஒரு சில வழு திருத்தங்களும் மேலும் ஓரிரண்டு அம்சங்களும் தேவைப்பட்டன. இந்த திறந்த மூலத் தீர்வு எங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தது. ஆகவே முதலில் எனக்கு என் வேலையைத் திறமையாக செய்து என்னுடைய நிறுவனத்தில் நல்ல பெயர் வாங்க உதவிய இந்த திட்டத்தைப் பற்றி நன்றியுணர்வே மேம்பட்டது. பின்னர் இந்த திட்டத்தை தொடங்கி, தொடர்ந்து மேம்படுத்தி வரும் சமூகத்துக்கு நன்றியாக என் நேரத்தை உதவியாக அளிக்க வேண்டும் என்று தோன்றியது. எனக்கும் பல்வேறு புதிய கருவிகள் கற்றுகொண்டு அதிக அனுபவம் பெற வேண்டும் என்ற ஒரு தனிப்பட்ட வேட்கையும் இருந்தது.”

நீல் ஸ்லைட்ஹோம் (Neil Sleightholm) X2 ஸிஸ்டம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்துகிறார். இந்நிறுவனம் தென்மேற்கு இங்கிலாந்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை வழங்குகிறது. இவர் குறிப்பாக டாட்நெட் நிறுவியை நிறுவும்போது அனுமதிகளை உயர்த்துவதை நடைமுறைப்படுத்தினார் (# 7968).

“இத்திட்டம் எனக்குத்தேவையானதில் 95% செய்தது. சில வணிக செயலிகள் சரியாகச் செய்யவில்லை அல்லது எனக்குத் தேவையான சிறு பகுதிக்கு அதிக விலையாய் இருந்தது. இத்திட்டத்தில் எனக்குத் தேவையான அம்சங்களை சேர்ப்பதில் என் நேரத்தை செலவிடுவது பயனுள்ளதாகத் தோன்றியது. நிரலின் தரம் அசத்தலாக இருந்தது. எனவே அதை ஒரு நம்பகமான அமைப்பாக்க நான் முதலீடு செய்யும் முயற்சி உருப்படியான வேலை என்று தெரிந்தது. குறிப்பாக நான் இது போன்ற அதிநவீன அலகு சோதனை திட்டத்தை, திறந்த மூலத்திலும் சரி வணிக திட்டத்திலும் சரி, ஒருபோதும் பார்த்ததில்லை. இதன் காரணமாக, இருக்கும் நிரலை உடைக்காமல் அம்சங்களை சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. மேலும் திட்ட ஒருங்கிணைப்பாளர் நிரலாக்கப் பிரச்சினைகளில் உதவி செய்யத் தயாராக இருந்தார்.”

இவை நல்ல அனுபவபூர்மான விவரிப்புகள்! ஆனால் நிக்கோலா, ராமி, மற்றும் நீல் தலை சிறந்த பங்களிப்பாளர்களாக ஆனதற்கு மூல காரணம் என்ன? நான் இதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தேன். இவர்கள் சொன்னதையும், நான் பங்களிக்கும்போது என்ன நினைக்கிறேன் எனபதையும், நான் பார்த்தவரை இம்மாதிரி சமூகங்களில் என்ன நடக்கிறது என்பதையும் மனதில் கொண்டேன்.

பங்களிக்கும் பொறியாளர்களிடம் நான் மிகவும் மதிக்கும் சங்கதிகளைப் பட்டியலிட்டேன். இந்த குணாதிசயங்களை வெளிப்படுத்துவதன் மூலம் நீங்கள் ஒரு சிறந்த நிரலாளர் ஆவதுடன் நல்ல வரவேற்பையும் பெறலாம்.

  1. தீர்வு செய்யவேண்டிய ஒரு உண்மையான பிரச்சினையோ, வணிக தேவையோ, அல்லது வணிக ரீதியான உந்துதலோ உங்களுக்கு இருக்க வேண்டும்.
  2. திட்டத்தின் இலக்குகளைப் புரிந்துகொண்டு உங்கள் பங்களிப்பு அத்துடன் ஒத்து வருகிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.
  3. முழு அம்சங்களை நடைமுறைப்படுத்தும் நிறைவான ஒட்டு நிரலை சமர்ப்பியுங்கள். அத்துடன் சோதனை செய்த தகவலையும் மற்றும் ஆவணங்களையும் சேர்த்து அனுப்புங்கள்.
  4. நீங்கள் பங்களிக்கும் திட்டத்தின் விதிமுறைகளுடன் ஒத்துழையுங்கள்.
  5. அடக்கமாக இருங்கள். பங்களிப்பாளர்கள் பட்டியலில் உங்கள் பெயரை நீங்களாக ஒருபோதும் சேர்க்க வேண்டாம். உங்கள் திட்டத் தலைவர் உங்கள் வேலையை உயர்வாக மதித்தால், அவரே அதைச் செய்யவேண்டும்.
  6. குறைந்த எதிர்பார்ப்புடன் இருங்கள். நிராகரிப்பை ஏற்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
  7. விடாமுயற்சி முக்கியம். பின்னூட்டங்களை வைத்து உங்கள் நிரலை மேம்படுத்துங்கள். மேம்படுத்தல்களை அனுப்பிக் கொண்டே இருங்கள்.
  8. உங்களுக்கு இதில் வேலை செய்ய கிடைக்கும் நேரம் மற்றும் உங்களுடைய திறன்கள் பற்றி நேர்மையாக இருங்கள். ஆனால் அமைதியாகிவிட வேண்டாம்.
  9. வெறும் பேச்சோடு இல்லாமல் செயல்வாதியாக இருங்கள். வீண் வம்பு வேண்டாம்.
  10. நீங்கள் தொடங்கியதை முடித்து விடுங்கள். அறைகுறையாக விட்டு விட வேண்டாம்.

இந்த பட்டியலிலுள்ள அடிப்படை குணநலன்களை வளர்த்துக்கொள்ள என் பங்களிப்பாளர்களை நான் ஊக்குவிக்கிறேன்.

Daniel Doubrovkine

மூலக்கட்டுரை எழுத்தாளர்: டேனியல் டூப்ரோவ்கைன் (Daniel Doubrovkine) ஆர்ட்சி (artsy) நிறுவனத்தின் பொறியியல் தலைவர்.

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: