திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 20. திட்டங்களைத் தேடுவதை நிறுத்தி விட்டு வழுக்களைத் தேடுங்கள்

திறந்த மூலத்தில் புதிதாகத் தொடங்கும்போது இம்மாதிரி கேள்விகள் உங்களுக்குத் தோன்றும்:

எனக்கு இன்ன நிரலாக்க மொழி தெரியும். உதவி செய்வதன்மூலம் அதன் நடைமுறைகளில் பயிற்சி பெற விரும்புகிறேன். நான் பங்களிக்கக் கூடிய திறந்த மூலத் திட்டத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? ம்ம் … எங்கு தொடங்குவது என்று தெரியவில்லையே. இது சிக்கலானதாகத் தோன்றுகிறதே.

நான் இதே கேள்வியை பல நிரலாளர்களிடம் திரும்பத்திரும்பக் கேட்டுள்ளேன். அவர்களின் பதில்களை மூன்று வகைப்படுத்தலாம்:

அணுகுமுறை # 1: நீங்கள் விரும்பும் ஒரு மென்பொருளுக்கு பங்களியுங்கள்

எனக்கு பெரும்பாலும் கிடைத்த பதில், நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திவரும், உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு மென்பொருளுக்கு பங்களியுங்கள்.

அணுகுமுறை # 2: பயிலுநர்களுக்கு ஆதரவு தரும் திட்டங்களைத் தேடுங்கள்

பயிலுநர்களுக்கு ஆதரவு தரும் திறந்த மூல திட்டங்களின் சில சிறப்பியல்புகள் இங்கே:

  • உங்கள் கணினியில் திட்டத்தை நிறுவுவது எப்படி, கிட் (Git) பணிப்பாய்வு,  குறியீட்டு பாணிகள் முதலான விவரமான நடைமுறை வழிகாட்டுதல்கள்
  • “நல்ல முதல் பிழை (good-first-bug)”, “புதியவர் (beginner)” அல்லது “முதல் பங்களிப்பாளர் மட்டுமே (first-timers-only)” என்று தெளிவாக வகைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள்
  • பயிலுநர்களுக்கான பிரச்சினைகளில் செயல்பாடு, முந்தைய கேள்விகளுக்கு உடனடியாக பதில்

அணுகுமுறை # 3: திட்டங்களைத் தேடுவதை நிறுத்தி விட்டு வழுக்களைத் தேடுங்கள்

இந்த அணுகுமுறையைத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். இதுவே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

# 1 மற்றும் # 2 அணுகுமுறைகளை முயற்சித்த பிறகு, திட்டங்களின் அடிப்படையில் சிந்திப்பதை நான் நிறுத்தி விட்டேன். அதற்கு பதிலாக என்னால் சரி செய்யக்கூடிய வழுக்களைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தினேன். ஒவ்வொரு வழுவும் ஒரு திட்டம் தொடர்புடையது. எனவே பிழைகள் கண்டறியும் போது, நீங்கள் தவிர்க்க முடியாமல் திட்டங்களையும் கண்டறிவீர்கள்.

நீங்கள் உடனடியாகத் தொடங்க விரும்பினால் இந்த அணுகுமுறை தோதானது. உங்களுடைய முதல் சில பங்களிப்புகளுக்குப் பிறகு அதே திட்டத்தில் ஊக்கத்துடன் இணைந்திருப்பீர்கள் என்று நான் உறுதியாகச் சொல்ல முடியாது. ஒருவேளை உங்களுக்கு ஆர்வம் இல்லாமல் போகலாம். அல்லது திட்டத்திற்குள் நுழைந்து வேலை செய்தபின், உண்மையில் நீங்கள் அதை விரும்பவும் கூடும்.

எப்படியிருப்பினும், நீங்கள் ஒரு சில வழுக்கள் சரி செய்தபின், வெளியில் சென்று மேலும் ஆராய உங்களுக்கு தன்னம்பிக்கை பிறக்கும்.

எனவே வழுக்களைக் கண்டுபிடிக்கத் தொடங்குவது எப்படி?

எந்த வழுக்களில் வேலை செய்வது என்று முடிவு செய்வது எளிதல்ல. ஆயிரக் கணக்கான திட்டங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் தீர்வு ஆகாத வழுக்களும் நிறைய உள்ளன. ஆனால் நீங்கள் எங்காவது தொடங்க வேண்டும்.

எனவே வழுக்கள் கண்டுபிடிக்க நான் பயன்படுத்திய அனைத்து வளங்களையும் குறிப்புகளையும் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் நான் பொதுவாக பல்வேறு வழுத்தடமிகள் மற்றும் நிரல் வழங்கு தளங்களில் தொடங்குவதற்கு நல்ல வழுக்கள் கண்டறிவது எப்படி என்று சொல்கிறேன். பின்னர் நான் தொடர்ந்து பங்களித்துவரும் மோசில்லா திட்டம் பற்றிய சில குறிப்பிட்ட ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.

புதியவர்களுக்கான நல்ல வழுக்கள் கண்டறிதல்

உங்கள் வழு வேட்டை ஆரம்பிக்க ஒரு நல்ல இடம் அப் ஃபார் க்ராப்ஸ் (Up For Grabs). இந்த தளத்தின் முழு நோக்கம் புதிய பங்களிப்பாளர்கள் பயிற்சி பெற உதவியாக தொடக்க நிலைப் பிரச்சினைகள் கொண்ட திட்டங்களின் பட்டியலைப் பராமரிப்பதே. உங்களுக்கு தலைகால் புரியவில்லையென்றால் தொடங்குவதற்கு இது ஒரு நல்ல இடம்.

பலவிதமான வழிகளில் உங்கள் தேடலை விருப்பமைவு செய்யக்கூடிய சக்திவாய்ந்த தேடு பொறியை கிட்ஹப் (GitHub) கொண்டுள்ளது. பிரச்சினை அடையாளச் சீட்டு தான் (issue label) இதில் தேடுவதற்கு எளிதான வழி.

புதியவர் (beginner), எளிதானது (easy), தொடங்குபவர் (starter), நல்ல முதல் பிழை (good first bug), கீழே தொங்கும் பழம் (low hanging fruit), சின்ன கடி அளவு (bitesize), மிகச்சிறியது (trivial), எளிதான திருத்தம் (easy fix) மற்றும் புதிய பங்களிப்பாளர் (new contributor) போன்ற அடையாளச் சீட்டுகளைப் பயன்படுத்தி பல திறந்த மூல திட்டங்கள் சிக்கல்களை கண்டுபிடிக்க வசதியாகக் குறியிடுகின்றன.

நீங்கள் விரும்பும் நிரலாக்க மொழியில் உள்ள பிரச்சினைகளை மட்டும் தேட language: name என்பதை உங்கள் தேடல் வினவலில் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, “புதியவர்” என்று பெயரிடப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் சிக்கல்கள் அனைத்தையும் இவ்வாறு வினவலாம்.

கிட்ஹப் தேடல் தொடரியலை நினைவில் கொள்வது கடினமாக இருந்தால் அடையாளச் சீட்டு மற்றும் நிரல் மொழியை வைத்து பிரச்சினைகளைத் தேடும் ஒரு கருவி issuehub.io ஆகும்.

திறந்த மூலத்துக்கு முற்றிலும் புதிதாக இருந்தால், நீங்கள் கண்டிப்பாக முதல் பங்களிப்பாளர் மட்டுமே (First Timers Only) என்ற இணையதளத்தில் தொடங்குவதே உசிதம்.

இது கென்ட் சி. டோட்ஸ் (Kent C. Dodds) அவருடைய “முதல் பங்களிப்பாளர் மட்டுமே (First Timers Only)” இடுகை மற்றும் ஸ்காட் ஹேன்ஸெல்மேன் (Scott Hanselman) “திறந்த மூலத்துக்கு கனிவை திரும்பக் கொண்டு வருவோம்” இடுகைகளை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. வழுக்களில் “first-timers-only” என்று அடையாளம் இருக்கும். உங்களுக்கு இந்த ட்விட்டர் தானியங்கியும் உதவியாக இருக்கும். இது “first-timers-only” என பெயரிடப்பட்ட எல்லா சிக்கல்களையும் கீச்சுகிறது.

சார்லோட் ஸ்பென்சர் (Charlotte Spencer) பராமரிக்கும் உங்கள் முதல் பிஆர் (YourFirstPR) ட்விட்டர் கணக்கு சிக்கல்களை கண்டுபிடிக்க இன்னொரு சிறந்த வழி. இதில் புதிய பங்களிப்பாளர்களால் எளிதில் கையாளக்கூடிய கிட்ஹப் இல் உள்ள தொடக்க நிலை சிக்கல்களைக் காட்சிப்படுத்துகிறார்கள்.

புதியவர்களுக்கு வியப்பளிப்பது  (Awesome-for-beginners) ஒரு கிட்ஹப் களஞ்சியம் ஆகும். இது புதிய பங்களிப்பாளர்களுக்கு நல்ல வழுக்கள் கொண்ட திட்டங்களைத் தொகுத்து, அவற்றை விவரிக்க அடையாளச் சீட்டுகளைப் பயன்படுத்துகிறது.

ஓபன்ஹேட்ச் (Openhatch) என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது திறந்த மூலத்தில் உள்ள நுழைவுத் தடைகளைத் தாழ்த்தி வழுக்களையும் பங்களிப்பவர்களையும் இணைக்க உதவுகிறது.

மோசில்லா பங்களிப்பாளர் சுற்றுச்சூழல்

மோசில்லாவின் பல திட்டங்கள் கிட்ஹப் இல் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களுக்கு நான் மேலே பட்டியலிட்ட அனைத்தும் பயனுள்ளதாகவே இருக்கும். அவர்கள் தொடக்க பிரச்சினைகளுக்கு  “நல்ல முதல் பிழை (good first bug)” என்று அடையாளம் இடுகிறார்கள். ஆனால் மோசில்லா அதன் சொந்தக் கருவியான பக்சில்லா (Bugzilla) வை முதன்மை வழுத்தடமியாகப் பயன்படுத்துகிறது. இதில் சில சிக்கல்களை வழங்குகின்றனர், மேலும் பதிப்பு கட்டுப்பாட்டுக்காக கிட் (Git)-டுக்கு பதிலாக மெர்குரியலைப் (Mercurial) பயன்படுத்துகின்றனர்.

பக்சில்லா மற்றும் மெர்குரியலைப் பயன்படுத்தும் திட்டங்களில் ஒன்று ஃபயர்பாக்ஸ். உண்மையில் சொல்லப்போனால் இது கொஞ்சம் பயமாக இருக்கும். இது திணற வைக்கும். எனவே நான் இந்த சிறந்த வலைப்பதிவு மற்றும் நிகழ்படத்தை பரிந்துரைக்கிறேன். இவை இந்தக் கருவிகளை தெளிவாக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மோசில்லாவுக்கு பங்களிப்பதை எளிதாக்க மோசில்லியர்கள் பல ஆண்டுகளாக முடிந்தவரை முயன்றிருக்கிறார்கள். இங்கே அவர்களின் முயற்சிகள்:

  • நல்ல முதல் வழுக்கள் (Good First Bugs): இந்த வழுக்கள் திட்டத்துக்கு ஒரு நல்ல அறிமுகம் என்று நிரலாளர்கள் அடையாளம் செய்துள்ளனர். இவை பெரும்பாலும் (ஆனால் எப்போதும் அல்ல) தீர்வு காண மிகவும் எளிதானவை.
  • வழிகாட்டி உள்ள வழுக்கள் (Mentored Bugs): இந்த வழுக்களுக்கு வழிகாட்டிகள் உண்டு. வேலை செய்யும்போது தடைபட்டால் ஐ.ஆர்.சி. (IRC ) இணைய தொடர் அரட்டை மூலம் அவர்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். அவர்கள் அடிக்கடி உங்கள் குறுநிரல்களை மறுபரிசீலனை செய்து பின்னூட்டம் அளிப்பார்கள். மோசில்லா திட்டங்களுக்கு பங்களிக்க எங்கே தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், இது தொடங்க சிறந்த இடம். ஒரு சுவரில் முட்டியதுபோல் உங்கள் வேலை நின்று விட்டால் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒருவர் இருப்பார். எனக்கு உதவி செய்த எல்லா வழிகாட்டிகளும் மிகவும் ஆதரவாகவும் உதவியாகவும் உடனடியாக பதிலளித்தனர்.
  • வழுக்கள் அஹாய் (Bugs Ahoy): இது பக்சில்லாவில் வழுக்கள் கண்டுபிடிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட தளமாகும். நீங்கள் நிரல் மொழிப்படி வடிகட்டக்கூடிய ஒரு பயனர் தோழமை இடைமுகம் கொண்டது.
  • ஃபயர்பாக்ஸ் நிரலாளர் கருவிகள் (Firefox DevTools): இந்த தளமானது ஃபயர்பாக்ஸ் உலாவியில் நிரலாளர் கருவிகளில் வரும் வழுக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. வழுக்களை நீங்கள் வேலை செய்ய விரும்பும் நிரலாளர் கருவிக் கூறுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தலாம்.
  • நான் மோசில்லாவுக்கு என்ன செய்யலாம் (What Can I Do For Mozilla): உங்கள் திறமை மற்றும் ஆர்வங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் நீங்கள் எம்மாதிரி வேலை செய்ய முடியும் என்பதை ஆராய்வதற்கான சிறந்த வழி இது.
  • மோசில்லாவைத் தொடங்கவும் (Start Mozilla): இது மோசில்லா சுற்றுச்சூழலில் புதிய பங்களிப்பாளர்களுக்கு தோதான சிக்கல்கள் பற்றி கீச்சும் ட்விட்டர் கணக்கு.

புதிய பங்களிப்பாளர்கள் தொடங்குவதற்கு உதவ கிட்ஹப் -ல் FreeCodeCamp/how-to-contribute-to-open-source என்ற பெயரில் ஒரு களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. இது திறந்த மூலத்தில் துவங்குவதற்கான ஆதாரங்களையும் அறிவுரைகளையும் கொண்டது.

Shubheksha Jalanமூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றிஷுபேக்ஷா ஜலான் (Shubheksha Jalan) – நான் மென்பொருள் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட ஒரு  இந்திய கணினி அறிவியல் மாணவி.

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: