திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 19. வணிக மென்பொருளை திறந்த மூலமாக வெளியிட்டோம்!

நான் ஒரு தனியார் மென்பொருள் விற்பனை மற்றும் ஆலோசனை நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நிதி நிறுவனங்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் செய்வது எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். இவற்றில் நிதி நடவடிக்கைகளை செயல்படுத்தும் ஃபின்டிபி (FinTP) செயலியும் ஒன்று. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய சாதனைகளையும் அறிவையும் பகிர்ந்து கொள்ள இச்செயலியை ஒரு திறந்த மூல உரிமத்தின் கீழ் வெளியிட எங்கள் நிறுவனம் முடிவு செய்தது.

பாரம்பரிய வணிக முறையிலிருந்து மாற்றம் செய்து திறந்த மூலத்தை ஆதரிக்கும் ஒரு வணிக முறையில் இறங்கும் போது ஒரு நிறுவனம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை இக்கட்டுரையில் நான் ஆராய்கிறேன். இது வணிக ரீதியில் முன்னர் இருந்த தீர்வில் ஒன்பது ஆண்டுகள் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த மாறுதலுக்கு உட்பட்ட மற்றும் சவாலான துறையில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற எங்கள் நிறுவனத்தின் லட்சியமே இது போன்ற ஒரு மாற்றத்துக்கு ஊக்கம் அளித்தது.

திறந்த மூலத்தில் இம்மாதிரி பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம்தான் முன்னோக்கி செல்லும் வழி என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் எங்களுடைய அதே மதிப்புகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முழு சமூகத்தின் அறிவாற்றலுடன் இணைந்து செயலாற்றினால் சிறந்த தீர்வுகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

திறந்த மூலத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பரிமாற்ற நடவடிக்கைகள் அல்லது ஒழுங்குமுறை இணக்கத்திற்காக வேறுபடுத்தாத மென்பொருள் உருவாக்க முடியும் என்று நிதித் துறையில் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இது அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் தேவைப்படும் இன்றியமையா கட்டமைப்பு ஆகும்.

முதலாவதாக அணிக்கு வழிகாட்டும் கொள்கைகளையும் மற்றும் ஒரு திறந்த மூல உரிமத்தையும் நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.

பின்னர், தற்போதைய வாடிக்கையாளர் குழுவுக்கும், சாத்தியமான சமூகம் மற்றும் பயனர் குழு இரண்டுக்குமே சாதகமான சூழ்நிலையை ஊக்குவிக்கக் கூடிய, சரியான சுற்றுச்சூழலை நிறுவினோம். இது எங்களுக்கு பங்களிப்பாளர்களையும்  பின்பற்றுபவர்களையும் கவர்ந்திழுக்க உதவியது. எங்கள் செயலியை ஒரு திறந்த தளமாக வெளியிட்டது நிறுவனத்தின் முக்கிய வியாபார மற்றும் செயற்பாட்டு பணிப்போக்கை பாதித்தது, இதனால் தலைகீழ் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.

திட்டத்தை விருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சமூகத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கும் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் ஃபின்டிபி திட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சமூகத்துக்கு வணிக ரீதியான தயாரிப்பைவிட அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

நாங்கள் இப்படித்தான் இதைச் செயல்படுத்தினோம்.

தனியுரிமத் தீர்வை தோதாக மாற்றி அமையுங்கள்

திறந்த மூல செயலி பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் தெளிவானவை ஆனால் அவற்றை அடைய சிந்திக்க வேண்டும். உட்பொதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு தயாரிப்புகளுக்கு ஆதரவு தருவது மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று. முன் தேவைகளுக்கான நிறுவன பதிப்புகள் மட்டுமே முன்னர் ஆதரிக்கப்பட்டன, எனவே மறுபார்வை கட்டாயமாகியது. நிறுவன தரவுத்தளம், செய்தி சார்ந்த இடைப்பொருள் மற்றும் செயலி சேவையகத்திற்கு சிறந்த திறந்த மூல மாற்றை திறந்த மூல பதிப்பு ஆதரிக்கிறது. செயலியில் உள்ள அனைத்து குறியீடும் வெளியிடத்தக்கதாக இருக்க வேண்டும் என்பதால் உரிமத் தேவைகளுடன் இணக்கமாக இருக்க வேண்டும். மேலும், உள் நிரலாளர் கருவிகள், பணித் தடமிகள், மற்றும் மூலக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான திறந்த மூல மாற்றுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

தயாரிப்பு ஆவணங்கள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளைப் பொறுத்தவரை, பெயரிடும் மரபுகள், குறியீட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் வர்த்தக பதிப்பில் நடைமுறைப்படுத்தப்படும் சிறந்த நடைமுறைகள் திறந்த சமூகத்தில் பணிபுரியும் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்யுமாறு மாற்றியமைக்க வேண்டும். இந்த செயலியை திறந்த மூலமாக வெளியிட தயாரிக்கும் கட்டத்தில் மேலும் ஒரு செய்படி சேர்க்க வேண்டியது அவசியம் என்பதைக் கண்டறிந்தோம். அதைத் திறந்த மூல களஞ்சியமாக பகிர்ந்து கொள்ளும் முன் சமுதாய விதிகள், செயலாக்கங்கள் மற்றும் தயாரிப்பு ஆகியவற்றை முன்கூட்டியே துல்லியமாக  அனுமதிக்கும் கட்டுப்பாட்டு அணுகல் கொண்ட தளம், fintp.org இல் நாங்கள் ஃபின்டிபி ஐ பகிர்ந்துகொண்டோம்.

திறந்த மூல சமூகத்தை உருவாக்குங்கள்

ஒரு மூடிய மூல தயாரிப்பை திறந்த மூலத்திற்கு மாற்றும் போது, வலுவான, துடிப்பான சமூகத்தை உருவாக்குவது மிக முக்கியமான பகுதியாகும். முதலாவதாக, ஒரு மூடிய சமூகத்திற்கும் திறந்த சமூகத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பார்க்கலாம். அனைத்து சமூக உறுப்பினர்களும் மதிப்புமிக்க பங்களிப்புகளை அளிக்கக் கூடியவாறு ஒரு திறந்த சமுதாயம் உள்ளது. குறியீடு சோதனைக்குத் திறந்திருக்கும், இதனால் எவரும் மட்டுறுத்தலுக்கு உட்பட்டு சிக்கல்களை சரிசெய்யலாம், புதிய அம்சங்களை உருவாக்கலாம், மேலும் குறியீட்டை பங்களிக்கலாம். கொடுக்கப்பட்ட பிரச்சினையை பெரிய எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் பார்க்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு மூடிய சமூகமானது வழங்குபவர் மற்றும் வாடிக்கையாளர் குழுவை மட்டுமே உள்ளடக்கியது. மற்றும் கொடுக்கப்பட்ட பிரச்சினையை அதிகபட்சம் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் உருவாக்குநர்கள் மட்டுமே பார்க்க இயலும்.

ஒரு மூடிய சமூகத்திலிருந்து திறந்த நிலைக்கு மாற்றம் செய்த ஆரம்ப கட்டங்களில், நாங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இயக்கி வந்தோம். நிதித் துறையின் உருவாகிவரும் தரங்களை செயல்படுத்துதல், பெரிய புதிய அம்சங்களை உருவாக்குதல் மற்றும் பங்களித்த நிரல்களை திறனாய்வு செய்தல் முதலானவைக்கு நாங்களே பொறுப்பேற்றுக்கொண்டோம். பங்களிப்பின் மதிப்பை வைத்து காலப்போக்கில் புதிய படிநிலைகள் வெளிப்பட்டன. எங்கள் திறந்த மூல சமூகத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இந்த நன்மைகள் உள்ளன – திட்டங்களை பாதிக்கும் செல்வாக்கு, மேம்பட்ட திறனாளிகளை ஈர்த்து, தக்கவைத்தல், வளர்ச்சி மற்றும் பராமரிப்பு செலவுகளைக் குறைத்தல்.

வணிக மாதிரியை மாற்றுங்கள்

மென்பொருள் உரிமங்களை விற்றல், பராமரிப்பு கட்டணங்கள், மற்றும் தொழில்முறை சேவைகளை விற்பதன் மூலம் வருவாயை அடிப்படையாகக் கொண்டது பாரம்பரிய வணிக மாதிரி. முதன்மை தயாரிப்புகளை இலவசமாகவும் திறந்த மூலமாகவும் வெளியிடும் முடிவை எடுக்கும்போது இது பாதிக்கப்படும். ஃபின்டிபி க்கு ஒரு ஆண்டு நீள ஆலோசனை திட்டத்திலிருந்து நன்மை பெறும் வாய்ப்பை நாங்கள் பெற்றிருந்தோம். இதற்கு ஒரு மதிப்புமிக்க பன்னாட்டு நிதி நிறுவனம் இணைந்து நிதியளித்தது.

ஒரு புதிய வணிக மாதிரியை உருவாக்குவதும், பணிப்போக்கை நிறுவுவதும், உள் செயல்முறைகளை ஏற்படுத்துவதும், நிறுவன கட்டமைப்பை ஏற்ப அமைப்பதும் வியாபாரத்தின் நோக்கங்கள் ஆகும். சட்டபூர்வ அம்சங்கள், வேலை செயல்முறைகள், மற்றும் மாறுகூற்று பொருட்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு ஆளும் முறை அமைப்பை முன்வைப்பதே சமூகத்தின் இலக்கு ஆகும்.

வங்கிகள், பெருநிறுவனங்கள், பொது நிர்வாகங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான நிதி பரிமாற்றங்களை செயலாக்கும் கட்டட தொகுதியை வழங்க ஃபின்டிபி திட்டம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது:

  1. வணிக பணிப்போக்கை ஒருங்கிணைக்க உதவி செய்தல்
  2. பல்வேறு சந்தை கட்டமைப்புகளுக்கு நெகிழ்வான இடைமுகங்களை உருவாக்குதல்
  3. பல்வேறு வகையான நிதி இடமாற்றங்களுக்கு (கடன் பரிமாற்றம், நேரடி பற்று, பற்று கருவிகள், கருவூல பாய்ச்சல்கள் போன்றவை) பாதுகாப்பான செயல்பாடுகளை வழங்குதல் மற்றும் நகல்களைக் கண்டறிதல்
  4. பல நடைமுறை செயல்பாடுகளை அடைதல் (பணப்புழக்க அறிக்கை, கணக்குகளைச் சீர்செய்தல், AML பரிவர்த்தனை வடிகட்டுதல், பணம் அனுப்புதல் மேலாண்மை மற்றும் போட்டியாளர் அறிக்கைகள் போன்றவை)

Mihai Guimanமூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றிமிஹாய் குய்மான் (Mihai Guiman) – ஸ்விஃப்ட் (Swift), நிதிசார் செய்தி அனுப்புதல் தரநிலைகள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கும் நிபுணத்துவத்துடன், நிதி நிறுவனங்களின் சூழலுக்கு சிறந்த மென்பொருள் தீர்வுகளை அமைப்பதில் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் ஆழமான தொழில்நுட்ப பின்னணி எனக்கு உள்ளது. சிக்கலான தொழில்நுட்ப திட்டங்களில் பங்கேற்று, கொடுத்த இலக்கை விடவும் மேலாக செய்து முடிப்பதன் மூலம் என் தொழில்முறை சுயவிவரத்தை நீட்டிக்க உந்துதல் பெற்றுள்ளேன். ஓய்வு நேரத்தில் நான் பனிச்சறுக்கு செய்கிறேன் மற்றும் புனைகதை புதினங்களைப் படிக்கிறேன்.

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: