எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பாகம் -1

 

Free For All – by Peter Wayner புத்தகத்தின் மொழிபெயர்ப்பு

 

விவாதம்

 

ஜனவரி 1998

 

பணம் மட்டுமே முதன்மையாக வஞ்சகம் மட்டுமே உயிர் குணமாய் கொண்ட உலகம். வாஷிங்டன் D.C-ன் ஒரு நீதிமன்றத்தில், உலகின் பெரும் பண முதலையான மைக்ரோசாப்ட் நிறுவனம் தனக்காக வாதாடுகிறது. “மைக்ரோசாப்ட், ஒரு சர்வாதிகாரியாக செயல்படுகிறது. தனது பலத்தால் போட்டியாளர்களை நசுக்கி வளரவிடாமல் செய்கிறது” என்பதே குற்றச்சாட்டு. ஆனால் இவற்றை மைக்ரோசாப்ட் மறுக்கிறது. இது ஒரு போட்டிகள் நிறைந்த உலகம் இதில் தனது சர்வாதிகாரம் எதுவும் இல்லை. பிற போட்டியாளர்களை சமாளிக்கவும் சந்தையில் தொடர்ந்து தனது இருப்பை நிலைப்படுத்தவும் மட்டுமே செய்கிறது என தன்னிலை விளக்குகிறது.

 

சட்டென விவாதம் சூடுபிடிக்கிறது. வக்கீல்கள், பொருளாதார வல்லுனர்கள். மென்பொருள் நிரலர்கள் என அரங்கம் நிரம்புகிறது. சட்டம் மற்றும் தொழில்நுட்பம் என பேச்சு வலுக்கிறது. மென் பொருளாளர்கள் ஆபரேடிங்  சிஸ்டம் இயங்குதளம் உருவாக்குதல் பற்றி பேசுகின்றனர். சட்ட வல்லுனர்கள், இதன் சட்ட உரிமைகளை அலசுகின்றனர். பொருளாதார வல்லுனர்கள் சர்வாதிகாரம் பற்றி வகுப்பு எடுக்கின்றனர். இவை அனைத்தும் மைக்ரோசாப்டின் மீது குற்றச்சாட்டுகளாய் விழுகின்றன. இவை அனைத்தையும் மைக்ரோசாப்ட் ஆணித்தனமாய் மறுக்கிறது.

98-இன் இறுதிகள் மற்றும் 99-இன் தொடக்கங்களில் நீதித்துறை மைக்ரோசாப்ட்க்கு எதிராக பல சாட்சிகளை அடுக்குகிறது. மைக்ரோசாப்டின் தந்திரங்கள், அதன் மென்பொருள் சர்வாதிகாரம், போட்டியாளர்களை நசுக்கும் அதன் வஞ்சகம், கணிப்பொறி துறையில் அதன் ஏகாதிபத்தியம் என சாட்சிகள் விரிகின்றன.

மைக்ரோசாப்டின் உண்மை குணம், அனைவருக்கும் புரியத் தொடங்குகிறது. அதன் ரௌடித்தனமும், ராஜதந்திரமும் வன்முறையும் புரிகிறது. “உலகெங்கும் உள்ள கணினிகள் அனைத்திலும் மைக்ரோசாப்டின் மென்பொருட்கள் மட்டுமே இருக்க வேண்டும்; வேறு நிறுவனத்தின் மென்பொருட்கள் இருந்தால், அந்த நிறுவனம் அழிக்கப்பட வேண்டும்”. இதுவே மைக்ரோசாப்டின் தாரக மந்திரம். இதனை நீதிமன்றத்தின் பல சாட்சிகள் நிரூபித்தனர்.

சாட்சிகளின் எண்ணிக்கையோ அதிகம் குற்றச்சாட்டுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. இதற்கு முடிவே இல்லை. “இது வீணான தொடர் விவாதம்” என பத்திரிகைகள் குரல் கொடுக்கின்றன. மைக்ரோசாப்டின் சர்வாதிகாரத்தை, அதன் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே நீதித்துறையின் குரலாக இருக்கிறது.

 

ஆனால் மைக்ரோசாப்டும் விடுவதாக இல்லை. நீதிமன்றம் மைக்ரோசாப்டின் கருத்துக்களை கேட்க அனுமதிக்கிறது. மைக்ரோசாப்டும் சொல்லத் தொடங்குகிறது.

“எல்லோரும் மைக்ரோசாப்டின் மென்பொருட்களையே பயன்படுத்துகின்றனர். ஏனென்றால் அவை மிகவும் சிறந்தவை. உலகத் தரமானவை. வேறு எந்த போட்டி நிறுவனத்தின் மென்பொருட்களும் இந்த அளவிற்கு சிறப்பானவை அல்ல. தரமானவை அல்ல.”

Richard schmalenseeஎன்பவர் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தின் sloan மேலாண்மை பள்ளியின் முதல்வர். இவர் மைக்ரோசாப்டிற்கு ஆதரவாக பேசுகிறார். இவர் Federal Trade Commission, மத்திய குழுவிலும் நீதித்துறையிலும் பொருளாதார வல்லுனராக பணிபுரிந்துள்ளார்.

இவர் வணிகப் போட்டிகள், சந்தை நிலவரம், பல்வேறு வணிக மேலாண்மை முறைகள் பற்றி நிறைய ஆய்வுகள் செய்துள்ளார். இவர் சர்வாதிகாரம், அதன் பண்புகள் குணங்கள் பற்றி நிறைய ஆய்ந்தார். அவரது கருத்துக்கள் படி, மைக்ரோசாப்ட் ஒரு சர்வாதிகாரி அல்ல. இதுநாள் வரை, இதே போன்ற கருத்துகளை தொடர்ந்து கூறி வருவதற்காக அவருக்கு மைக்ரோசாப்ட் பெரும் அளவு சம்பளம் கொடுத்து வருகிறது.

அவரது விவாதங்கள் சுவாரஸ்யமானவை. இது போட்டிகள் நிறைந்த உலகம். எங்கு பார்த்தாலும் போட்டி மயம் . இந்த போட்டிகளுக்கு இடையே தன்னை நிலைப்படுத்திக் கொள்ள மைக்ரோசாப்ட் தொடர்ந்து போராடி வருகிறது. வெற்றிக்கான பந்தையமும் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயமும் மட்டுமே கணிப்பொறி உலகின் பலத்த போட்டிகளுக்கான காரணம்.

இங்கு பல போட்டியாளர்களை உதாரணம் காட்டலாம். Intel வன்பொருளில் இயங்கும் windows-க்கு, Apple நிறுவனத்தின் iMac வலுவான ஒரு போட்டியாக உள்ளது.

அவர் சொல்லாத விஷயங்கள் பல உள்ளன. மைக்ரோசாப்ட் தனது போட்டிகளை சந்திக்கும் விதமே தனி. Apple-ன் வளர்ச்சியை தடுக்க பெருமளவு பணம் தந்து ஒப்பந்தங்கள் பல செய்து கொண்டது. Apple-ன் CEO முதல்வர் steve jobs இந்த அறிக்கையினை வெளியிட்டபோது Apple-இன் நலம் விரும்பிகள் அனைவரும்பெரும் அதிருப்தி தெரிவித்தனர். Steve jobs அவர்களை அமைதிப்படுத்தினார், “மைக்ரோசாப்டிற்கும் ஆப்பிளுக்கும் இடையே நடந்த போட்டு முடிந்து விட்டது. இனி இரு நிறுவனங்களும் இணைந்து முன்னேறும்!” என Steve Jobs அறிவித்தார்.

இப்படித்தான் மைக்ரோசாப்ட் தனது போட்டியாளர்களை விலைக்கு வாங்கி, தனக்கு போட்டியே இல்லாதபடி செய்து வருகிறது.

ஒப்பந்த அறிவிப்பின்படி, ஆப்பிள் கணிப்பொறிகளில், மைக்ரோசாப்டின் Internet Explorer-ஆனது இணைய உலாவியாக நிறுவப்பட்டது. “ஆப்பிளும் மைக்ரோசாப்டும் இனி விரோதிகள் அல்ல. இருவரும் நண்பர்கள். தொழில் வெற்றியின் பங்குதாரர்கள். இருவரும் இணைந்து போட்டிகளை சிந்திப்போம்”, என ஆப்பிளின் Steve Jobs தொடர்ந்து அறிக்கைகள் பல வெளியிட்டார்.

இந்த ரகசியங்கள் எதுவுமே பொது மக்களுக்கு தெரியாது. எனவே தான் schmalensee நீதிமன்றத்தில், “மைக்ரோசாப்ட் போட்டிகளை சமாளிக்க திணறி வருகிறது” என நீலிக்கண்ணீர் வடித்தார்.

மேலும் அவர் மைக்ரோசாப்டின் பெரும் போட்டியாளர்கள் பற்றி கூறுகையில் Be OS என்ற இயங்கு தளம்(Operating system) பற்றி குறிப்பிட்டார்.

ஆப்பிளின் முன்னாள் முதல்வரான Jean-Lousis Gasseஎன்பவர், 100 பணியாளர்களுடன் ‘Be’ என்ற ஒரு சிறு நிறுவனத்தை நடத்தி வந்தார். Be நிறுவனத்தின் தயாரிப்பே Be OS. Be OS பல முதலீட்டாளர்களை கவர்ந்தது பலரும் அதனை விரும்பினர்; முதலீடுகளும் பெருகி வந்தன; பயனர்களும் பெருகினர்.

Be OS -இன் விற்பனையை பெருக்க, Gasse பல முயற்சிகள் செய்தார். வன்பொருள் தயாரிப்பாளர்களை அணுகினார். கணிப்பொறியுடன் இணைந்து விற்க விரும்பினார். ஆனால் எவரும் அவரது வேண்டுகோளை ஏற்க வில்லை.

வன்பொருள் உற்பத்தியாளர்களுடன் மைக்ரோசாப்ட் ஏற்கனவே ஒப்பந்தங்கள் பெற்றுவிட்டது. “மைக்ரோசாப்ட் தவிர வேறு எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளையும் வன்பொருளுடன் இணைத்து விற்க மாட்டோம்” என அநேகமாக எல்லா வன்பொருள் நிறுவனங்களும் மைக்ரோசாப்ட்டிடம் ஒப்பந்தத்தில் இருந்தன.

 

இவ்வாறுதான் மைக்ரோசாப்ட் உலகில் தயாராகும் அனைத்து கணிப்பொறிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. போட்டியாளர்கள் நசுக்கப்படுகிறார்கள். Be OS-இன் நிலை தனித் தீவில், கடும் காவல் கொண்ட சிறையில், காற்றில்லா குட்டி அறையில் சிறையிடப்பட்ட கைதி போலானது. அதன் வளர்ச்சி முடக்கப்பட்டது.

ஆனாலும் நீதிமன்றத்தில் Be OS-இன் போட்டியை மைக்ரோசாப்ட் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது என அழுது புலம்புகிறார்.

திரை மறைவில் மைக்ரோசாப்ட் செய்யும் அனைத்து வில்லத்தனங்களையும் மறைத்து “போட்டிகளை சமாளிக்கவே மைக்ரோசாப்ட் மூச்சு திணறுகிறது” என வருந்துகிறார்.

அடுத்ததாக schmalensee தனது வாதத்தை இவ்வாறு தொடர்கிறார்.
“மைக்ரோசாப்டின் பெரும் போட்டி Linuxஎன்பதாகும். எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்படும் Linux, மைக்ரோசாப்டை வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளி விட்டது. மைக்ரோசாப்ட் தனது வாழ்வுக்காக போராடும் நிலைக்கு வந்து விட்டது.

 

இவர் குறிப்பிட்ட லினக்ஸ் என்பது “திறந்த மூல” (Open Source) மென்பொருட்கள். Software-ன் ஒட்டு மொத்த தொகுப்பாகும். இந்த மென்பொருட்கள் உலகெங்கும் உள்ள கணினி வல்லுனர்களால் உருவாக்கப்பட்டவை. அவர்கள் இணையம் மூலம் இணைந்து, தாங்கள் உருவாக்கிய மென்பொருட்களின் மூல நிரலை இலவசமாகவே எந்த வித நிபந்தனையும் இன்றி, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

இவ்வாறு உலகெங்கும் பழகி வரும் திறந்த மூல மென்பொருட்கள் யாவும் GNU GPL (General Public Licence) “பொது மக்கள் உரிமை” என்ற உரிமத்துடன் வெளியிடப்படுகின்றன.

பொதுவாக உரிமம்(License) என்பது ஒரு மென்பொருளின் உபயோகத்தினை கட்டுப்படுத்துவதாகும். மென்பொருளின் உரிமையாளர் ஒருவரே, அவர் அதை பயன்படுத்தலாம். ஆனால் பிறருக்கு தரவோ விற்கவோ கூடாது. இதுவே மென்பொருளுக்கு மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தரும் உரிமம்.

ஆனால் GPL ஆனது, பயனருக்கு மென்பொருள் மீதான முழு உரிமையை அளிக்கிறது. எந்த ஒரு GPL உரிம மென்பொருளையும், நாம் யாருக்கு வேண்டுமானாலும் தரலாம்; அதன் மூலத்தையும் பெற்று ஆராயலாம்; நமக்கு தேவையான படி மாற்றிக்கொள்ளலாம்; நமது பெயரிலேயே அதனை மீண்டும் தரலாம். GPL மென்பொருளை கட்டுப்படுத்தாமல், அதனை பலருக்கும் பகிர்ந்தளிக்க செய்கிறது.

 

இந்த GPL ஆனது, சாதாரண நிறுவனங்களின் Copy Right Licenseகளுக்கு எதிரானது. இதனை GPL-ன் தந்தை Richard Stallman என்பவர், ‘Copy Left’ என்று அழைக்கிறார்.

 

தமிழாக்கம்  – ஸ்ரீனி

 

 

%d bloggers like this: