திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 17. திட்டத்துக்கு பங்களிப்பாளர்களை ஈர்க்க 5 வழிகள்

கட்டற்ற திறந்த மூல மென்பொருள் திட்டப்பணிகள் ஒரு பிரச்சினையைத் தீர்க்க ஆரம்பிக்கப்படுகின்றன. சிலர் தாங்கள் மிகவும் எதிர்நோக்கும்  பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பதற்காக அவர்களும் பங்களிக்கத் தொடங்குகிறார்கள். திட்டப் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு இது பயனுள்ளதாக இருப்பதைக் கண்டுபிடிப்பதால் திட்டம் வளர்கிறது. அந்தப் பகிர்வு நோக்கமும் ஒருமித்த கவனமும் திட்டப்பணியின் சமூகத்திற்கு மற்றவர்களைக் கவர்கிறது.

ஆயுட்காலம் உள்ள எதையும் போல, வளர்ச்சியே திட்டத் திறனுக்கு அடையாளமாகவும் ஆதாரமாகவும் விளங்குகிறது. எனவே எப்படி திட்டத் தலைவர்களும் மற்றும் பராமரிப்பவர்களும் பங்களிப்பாளர் குழு வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும்? இங்கே ஐந்து வழிகள் காண்க.

1. நல்ல ஆவணங்கள் வழங்குங்கள்

ஒரு திட்டத்தில் ஆவணங்களுக்கான முக்கியத்துவத்தை பலர் பெரும்பாலும் குறைத்தே மதிப்பிடுகிறார்கள். இதுதான் ஒரு திட்டத்துக்குப் பங்களிப்பவர்களுக்கு  தகவல்களுக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது மற்றும் அவர்கள் முயற்சிகளை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள தகவல் சரியாக இருக்க வேண்டும் மற்றும் நடப்பில் இருக்க வேண்டும். இதில் மென்பொருளை தொகுத்து இருமமாக்கும் செய்படிகள், குறுநிரல் சமர்ப்பிக்கும் வழிமுறைகள், ஒரு நிரலாக்க பாணி கையேடு முதலானவை அடங்க வேண்டும்.

நீண்ட கால தொழில்நுட்ப எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் பாப் ரெசல்மேன் (Bob Reselman) எழுதிய உலகத்தரம் வாய்ந்த ஆவணங்கள் உருவாக்கும் 7 விதிமுறைகளைப் பாருங்கள்.

நிரலாளர்களுக்கான ஆவணங்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக பைதான் டெவலப்பர் கையேடு உள்ளது. இதில் பைதான் நிரலாக்கத்தின் ஒவ்வொரு அம்சத்துக்கும் தெளிவான மற்றும் சுருக்கமான செய்படிகள் உள்ளன.

2.  எளிதாக உள்நுழைய வழிகள் அமைக்கவும்

உங்கள் திட்டத்தில் ஒரு பிரச்சினை அல்லது வழுத்தடமி இருந்தால், தொடக்க நிலைப் பணிகளை “எளிதான வழு” அல்லது “தொடங்கும் இடம்” என்று அடையாளமிடுங்கள். இந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதன் மூலம் புதிய பங்களிப்பாளர்கள் எளிதாக திட்டத்தில் வேலை துவங்க முடியும். மேலும் இந்தத் தடமியில் வரைபட வடிவமைப்பு, கலைப்படைப்புகள், மற்றும் ஆவணங்களை மேம்படுத்துவது போன்ற நிரல் அல்லாத பணிகளையும் அடையாளமிடுங்கள். பல திட்ட உறுப்பினர்கள் நிரல் எழுதுவதில்லை. இருப்பினும் இத்தகைய வழிகளில் பங்களிப்பதன் மூலம் திட்டதுக்கு ஒரு உந்து சக்தியாக ஆக உள்ளனர்.

ஃபெடோரா திட்டத்தில் இம்மாதிரி ஒரு “எளிதான வழு” மற்றும் “தொடங்கும் இடம்” பட்டியலைப் பராமரிக்கின்றனர்.

3. நிரல் ஒட்டுகள் அனுப்புவோருக்கு உடன் பின்னூட்டம் வழங்குங்கள்

நிரல் ஒட்டு எழுதி அனுப்பிய ஒவ்வொருவருக்கும் பதில் அனுப்புங்கள், அது ஒரு ஒற்றை வரியாக இருந்தாலும் கூட. பின்னூட்டம் வழங்குவது திட்டத்தில் சேர நினைப்பவர்களுக்கு வழி காட்டுகிறது மற்றும் ஊக்கம் அளிக்கிறது. எல்லா திட்டங்களிலும் தகவல் பரிமாற ஒரு அஞ்சல் பட்டி மற்றும் அரட்டை செயல்பாட்டில் இருக்க வேண்டும். கேள்வி பதில் அமர்வுகளை இந்த ஊடகங்களில் நடத்த முடியும். பெரும்பாலான திட்டங்கள் ஒரே நாளில் வெற்றிகரமாக ஆகி விடுவதில்லை, ஆனால் செழித்து வளரும் திட்டங்கள் அந்த வளர்ச்சிக்கு ஆதரவான சூழலை உருவாக்க அஞ்சல் பட்டியல்கள் மற்றும் தொடர்பு கொள்ளும் ஊடகங்களை வைத்துள்ளார்கள்.

4. உங்கள் திட்டம் பற்றிய செய்திகளைப் பரப்புங்கள்

ஒரு பிரச்சினையைத் தீர்க்கத் தொடங்கப்பட்ட ஒரு திட்டம் வளர்ந்து வரும் மற்ற திட்டங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கக் கூடும். நீங்கள் திட்டத்துக்கு முதன்மை பங்களிப்பவர் என்றால் திட்டத்தை ஆவணப்படுத்துவதும் விளம்பரப்படுத்துவதும் உங்கள் பொறுப்பு. வலைப்பதிவுகள் எழுதுங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் திட்டத்தின் முன்னேற்றத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். திட்டப்பணிக்கு பங்களிக்கத் தொடங்குவது எப்படி என்று ஒரு குறுகிய விளக்கம் எழுதுங்கள். அதில் முக்கிய நிரலாளர் ஆவணங்களுக்கு ஒரு இணைப்பு கொடுங்கள். மேலும் செயல் திட்டம் மற்றும் வரப்போகும் வெளியீடுகள் பற்றிய தகவல்களையும் வழங்குங்கள்.

உங்கள் இணையதள பார்வையாளர்களுக்கு தோதாக எழுதுவது பற்றி Opensource.com சமுதாய நிர்வாகி ரிக்கி எண்ட்ஸ்லி (Rikki Endsley) தரும் உதவிக்குறிப்புகள் இங்கே.

5. வரவேற்கும் மனப்பான்மையுடன் இருங்கள்

ஒரு நண்பருடன் உரையாடுவது போன்ற தொனியும், கேள்விக்கு உடன் பதிலளித்தலும் உங்கள் திட்டத்தில் மக்களுக்கு ஆர்வத்தை வளர்க்கும். ஆரம்பத்தில் கேள்விகள் உதவிக்காக மட்டுமே இருக்கலாம். ஆனால் போகப்போக புதிய பங்களிப்பாளர்கள் தங்கள் யோசனைகளையும் ஆலோசனைகளையும் தரக் கூடும். அவர்கள் திட்டத்துக்கு ஒரு பங்களிப்பாளராக ஆக முடியும் என்று நம்பிக்கை அடைய வழி செய்யுங்கள்.

நீங்கள் மதிப்பீடு செய்யப் படுகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். எந்த திட்டத்திலும் நிரலாளர்கள் ஒரு அஞ்சல் பட்டியலில் அல்லது அரட்டையில் ஒருவருக்கொருவர் எவ்வாறு பேசிக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் கண்காணிக்கிறார்கள். புதிய பங்களிப்பாளர்களுக்கு எம்மாதிரி வரவேற்பு இருக்கும் மற்றும் திறந்த மனப்பான்மை உண்டா என்பதற்கு இவை அறிகுறிகளாக உள்ளன. தொழில்நுட்பத்தில் பணிபுரியும் போது, நாம் சில நேரங்களில் பணிவன்பை மறந்து விடுகிறோம். இது திட்டத்தின் சுற்றுச்சூழலுக்கு முக்கியமான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக ஒரு திட்டம் சிறந்தது ஆனால் திட்ட பராமரிப்பாளர் வரவேற்கும் மனப்பான்மை உடையவர் அல்ல என்று வைத்துக் கொள்வோம். இந்த பராமரிப்பாளரினால் திட்டம் பயனர்களை இழக்கக் கூடும். பெரிய பயனர் குழுவில், இம்மாதிரி ஆதரவில்லாத சூழலால், ஒரு குழுவினர் மட்டும் திட்டத்தைக் கவைத்து (forking) ஒரு புதிய திட்டம் தொடங்கக் கூடும். திறந்த மூல உலகில் இத்தகைய சம்பவங்களுக்கு எடுத்துக்காட்டுகள் பல உள்ளன.

மேலும், ஒரு திறந்த மூல திட்டத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும் புதிய எண்ணங்கள் உருவாகவும் பல்வேறு பின்னணியில் இருந்து நபர்கள் வருவது முக்கியம்.

இறுதியாக, தாக்குப் பிடித்து திட்டம் வளர உதவும் பொறுப்பு திட்ட உரிமையாளருக்கு உள்ளது. புதிய பங்களிப்பாளர்களுக்கு பயிற்சியளிப்பது திட்டத்துக்கு இன்றியமையாததாக இருக்கிறது. அவர்கள் திட்டம் மற்றும் சமூகத்துக்கு எதிர்கால தலைவர்களாக வரக் கூடும்.

Kushal Das

மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றிகுஷால் தாஸ் (Kushal Das) பைதான் மென்பொருள் அறக்கட்டளையில் ஒரு சிபைதான் (CPython) கருநிரல் உருவாக்குநர் மற்றும் இயக்குனர் ஆவார். அவர் நீண்ட கால திறந்த மூல பங்களிப்பாளர் மற்றும் அறிவுரையாளர் ஆவார். முதல் முறை பங்களிப்பாளர்களுக்கு பங்களிப்பு உலகில் முதல் அடி எடுத்து வைக்க உதவுகிறார். அவர் தற்போது ரெட் ஹாட்-ல் ஃபெடோரா மேகக் கணிமை பொறியாளராகப் பணிபுரிகிறார். அவருடைய வலைப்பதிவுகள் இங்கே:  kushaldas.in. அவருடைய ட்விட்டர் பயனர் பெயர்: @kushaldas

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: