மேகக்கணிமை – அறிமுகம்

இன்று, மேகக்கணிமையின் (Cloud Computing) வளர்ச்சியால், இணையசெயலிகள் / சேவைகளை (Web Applications / Services) உருவாக்கும் பலருக்கும் அதை எங்கிருந்து இயக்குவது என்ற அடிப்படைச் சிக்கல் இருப்பதில்லை. தமக்கென சொந்தமாக வன்பொருள்களும் (Hardware), நினைவகங்களும் (Storage), நிரந்தரமான தடையற்ற இணைய இணைப்பும் இல்லாமலேயே, நம்மால் செயலிகளையும், சேவைகளையும் வழங்கமுடிகிறது. அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல முன்னனி நிறுவனங்கள் மேகக்கணிமைக்கான கட்டமைப்பை ஒரு சேவையாக வழங்குகின்றன. இவற்றை சேவை வழங்குநர்கள் (Service Providers) என அழைக்கிறோம்.

கார், சைக்கிள் போன்றவற்றை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதுபோல, நமக்குத்தேவையான நேரத்திற்கு மட்டும், தேவையான அளவுக்கு கணினிவளங்களை நம்மால் பெற்று பயன்படுத்திக்கொள்ளமுடிகிறது. தேவை முடிந்தவுடன் அதை திருப்பிக்கொடுத்துவிட முடிகிறது. சொந்தமாக தரவுநிலையங்களைக் (Data Center) கட்டமைத்து பராமரிப்பதற்குத் தேவைப்படும் இடம், பொருள், பலதரப்பட்ட வன்பொருள்களைக் கையாளக்கூடிய அறிவு மற்றும் அவற்றுக்காகும் செலவுகளுடன் ஒப்பிடும்போது, அதைக்காட்டிலும், மேகக்கணிமையைப் பயன்படுத்துவது எளிமையானதாகிறது. மேலும், உலகில் பல இடங்களில் தரவுநிலையங்களை வழங்குவதன்மூலம், இயற்கைப்பேரிடர்களின் போது கூட, நமது செயலிகளும், சேவைகளும் பாதிக்கப்படாமல், இச்சேவை வழங்குநர்கள் கவனித்துக்கொள்கின்றன.

மேகக்கணிமையில் மூன்று முக்கிய சேவைகள் உள்ளன:

  1. கட்டமைப்புச்சேவை (Infrastructure as a Service – Iaas)
  2. செயற்றளச்சேவை (Platform as a Service – Paas)
  3. மென்பொருள்சேவை (Software as a Service – SaaS)

Cloud Services - IaaS, PaaS, SaaS

இவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக கட்டமைக்கப்பட்ட சேவைகளாக நாம் புரிந்துகொள்ளலாம்.

அடிப்படைதேவைகளான வன்பொருள்கள், இணைய இணைப்பு, நினைவகங்கள் ஆகியவற்றை வழங்குவதை கட்டமைப்புச்சேவை என்கிறோம். எ.கா: DigitalOcean, AWS EC2, Google Compute Engine, Microsoft Azure.

இவ்வன்பொருள்களின் மீது ஒரு பணிசெயல்முறைமையையோ (Operating System), ஒருகணினிமொழிக்குத்தேவையான இயங்குதளங்கள் (Runtime / SDKs), தரவுதளங்கள் (Database) போன்றவற்றை உருவாக்கவும், பராமரிக்கவும் உதவும் சேவைகளை செயற்றளச்சேவைகள் என்கிறோம். இவற்றைப் பயன்படுத்த நிரலாக்க அறிவும், தெளிவும் அவசியம். எ.கா: AWS DMS, Google App Engine.

இறுதியாக, இச்செயற்றளத்தின் மீது ஒரு மென்பொருளை இயக்கி, அதனை பயனர்களுக்கு சேவையாக வழங்குவதை, மென்பொருள்சேவை என்கிறோம். இவை இலவசமான சேவைகளாகவோ, பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளவேண்டிய சேவைகளாகவோ இருக்கலாம். எ.கா: GMail உள்ளிட்ட கூகுள் செயலிகள்.

அமேசானின் இணையச்சேவைகள் (Amazon Web Services – AWS) என்ற சேவை வழங்குநரைப் பற்றியும், அதில் வழங்கப்படும் சேவைகளைப் பற்றியும், அடுத்தடுத்த பதிவுகளில் அறிந்துகொள்ளலாம்.

%d bloggers like this: