அச்சு நூல்களை மின்னூலாக்கம் செயஅதிவேக A3 வருடி வாங்கியுள்ளோம்

 

கணியம் அறக்கட்டளை சார்பாக A3 வருடி (ஏற்கனவே பயன்படுத்திய நகலியுடன் இணைந்தது) ஒன்றை வாங்கியுள்ளோம். Xerox 5755 வகை இது.  இதன்மூலம் இன்னும் அதிகமான புத்தகங்களை மின்னூலாக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பரவலாக பயன்படுத்தப்படும் சந்தைகளில் கிடைக்கும் A3 அளவுள்ள வருடிகள் தோராயமாக ரூ.50000/- முதல் ரூ.100000/- வரை இருக்கும். இத்தகைய வருடிகள் பிரத்யேகமாக வருடுவதற்காக உருவாக்கப்பட்டவை. தற்போது கணியம் அறக்கட்டளை வாங்கியுள்ள வருடி நகலியுடன் (Copier Machine) இணைந்தது. ஏற்கனவே பயன்படுத்தியது. மிகக் குறைந்த தொகையில் வாங்கியுள்ளோம் (ரூ.18,000/-).

நகல் இயந்திரம் (Copier Machine)

MFP என்றழைக்கக்கூடிய Multi Function Printer நாம் அறிந்திருப்போம். இவை 10000 (A4) முதல் கிடைக்கின்றன. இவற்றில் நாம் வருடவும் முடியும். MFP யில் அதிக திறனுள்ள கருவிகளை நகலி (Copier Machine) என்றழைக்கின்றனர். இவை சில இலட்சங்களில் ஆரம்பித்து பல இலட்சங்கள் வரை கிடைக்கின்றன. இக்கருவிகளின் வாழ்நாள் முடியும் நிலையில் பயன்படுத்திய சந்தைகளில் மிகக் குறைந்த தொகையில் கிடைக்கும். பெரும்பாலும் இக்கருவிகளின் அச்சுப் பகுதிகளே அதிக தேய்மானம் அடைந்திருக்கும். எனவே இக்கருவிகளை வருடிகளாக வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் இவை அதிக எடை கொண்டவை (150-200 கி.கி). எனவே எளிதாக வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல இயலாது. இதுதவிர இக்கருவிகளில் அதிக வசதிகள் உள்ளன. உதாரணமாக வலைப்பின்னல் (Network) மூலமாக பல கணினிகளுக்கு இணைக்கும் வசதி, கருவிகளில் உள்ள வன்தட்டில் (Harddisk) சேமிக்கும் வசதி, jpg, pdf என தேவைப்படும் கோப்புகளில் வருடும் வசதி, தனித்தனி பக்கங்களை ADF மூலம் மொத்தமாக வருடும் வசதி என பல சிறப்பம்பசங்கள் உள்ளன. மேலும் இக்கருவிகளில் Colour, Grayscale, Black and Whiteல் வருடும் வசதியும் உள்ளது. இதன்மூலம் புத்தகத்தை OCR க்கு ஏற்றவாறு நேரடியாக Black and White ல் வருடுவதன் மூலம் நேரத்தை மிச்சமாக்கலாம்.

இக்கருவி, நூலகங்கள், தனியார் அமைப்புகளில் பணிபுரியும் காப்பகவாதிகள் (Archivist) மற்றும் தன்னார்வல்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தங்களிடம் இருக்கும் காப்புரிமை அல்லாத புத்தங்களை வருட எங்களை தொடர்பு கொள்ளலாம்.

 

kaniyamfoundation@gmail.com

%d bloggers like this: