திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 18. கரடுமுரடான பாதையில் ஒரு கற்றுக்குட்டியின் பயணம்

திறந்த மூலத்துக்கு எவ்வாறு பங்களிப்பது என்று அறிவுரை தேடி இந்தக் கட்டுரைக்கு வந்தீர்களா? இணையத்தில் இந்தக் கதைகள் பல உள்ளன, அல்லவா? சில காலமாக நீங்கள் பங்களிப்புத் தொடங்குவதற்கு முயற்சித்து வருகிறீர்கள். ஆகவே இதைப்பற்றி நீங்கள் நிறையப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படியும் தெளிவு பிறக்கவில்லை என நீங்கள் நினைக்கலாம்.

எனக்கு அந்த உணர்வு புரிகிறது. நான் ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை அதே நிலையில்தான் இருந்தேன். அது பற்றிய என் கதையைச் சொல்கிறேன்.

கற்றுக்குட்டி நாட்டில் முட்டி மோதல்

இரண்டு ஆண்டுகளாக திறந்த மூலத்திற்கு பங்களிக்க முயற்சிக்கிறேன். ஆம். இரண்டு ஆண்டுகளாக. இதைப்பற்றி ஒரு சங்கதியை நான் உறுதியாகச் சொல்லமுடியும், இது மிகவும் அச்சுறுத்தலானது. இது தொடங்குவதற்கு கடினமானது. நீங்கள் ஒரு பெரிய நிரல் தொகுப்பில் வேலை செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு திட்டத்தின் நிரலாக்கப் பாணி வழிகாட்டிகளைக் கற்க வேண்டும் மற்றும் பின்பற்ற வேண்டும். எதுவும் புரியாது: நிரல் கட்டுப்பாட்டு ஓட்டம், எப்படி வெவ்வேறு தொகுதிகள் தொடர்புகொள்கின்றன, எப்படி நிரல் இவ்வாறு  ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது, ஏன் – இவை யாவும் ஒரு பெரிய புதிர்பாதை போல் தெரியும். கேள்விகள் கேட்க நீங்கள் நிறைய தைரியம் வரவழைத்துக்கொள்ள வேண்டும். எதுவும் தெரியாமல் நிரல் தொகுப்பில் மூழ்கி, அத்துடன் மற்போர் புரிய வேண்டும். (இது சில திட்டங்கள் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றிப் பொதுவானது, ஆனால் பல திட்டங்கள் புதிய பங்களிப்பாளர்கள் அணுகுவதை கடினமாக்குகின்றன.)

நான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக் கொள்ள முயற்சி செய்யும் கற்றுக்குட்டி. எனவே உள்நுழைய எளிதான வழியை எடுக்க நான் முயன்றேன். ஆவணங்களில் அல்லது நிரல் விளக்கக் குறிப்பில் எழுத்துப்பிழைகளை திருத்தினேன். மாற்ற வேண்டியது என்னவென்பது தெளிவாகத் தெரிந்த மிகச் சிறு வழுக்களை சரிசெய்தேன். நான் நிறைய கேள்விகளைக் கேட்க விரும்பவில்லை. நிரல் தொகுப்பைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் பங்களிப்பு செய்ய விரும்பியபோது நான் கிட்ஹப் அல்லது ஒரு வழுத்தடமிக்குச் சென்றேன். எளிதானது, தொடக்கநிலை, நல்ல முதல் வழு என்று பெயரிடப்பட்ட பிரச்சினைகளைத் தேடினேன். அவற்றில் நூற்றுக்கணக்கானவற்றைப் பீராய்ந்த பிறகு, எந்தப் பெரிய உதவியும் இல்லாமல் செய்ய முடிந்த மிகச் சிறிய ஒன்றை நான் கண்டுபிடித்தேன்.

இது கொஞ்ச காலம் தொடர்ந்தது, கற்று வளர்த்த திறமையை இன்னும் நன்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று நான் உணரும் வரை. அந்தக் கட்டத்தில் நான் பல புதிய சங்கதிகளைக் கற்றுக் கொண்டேன், ஆனால் அவற்றை எங்கே பயன்படுத்துவது என்று தெரியவில்லை. கற்றுக் கொண்டதை பயன்படுத்த இயலவில்லையென்றால் என்ன பிரயோசனம். ஒரு சகதியில் மாட்டிக்கொண்டது போல நான் முன்னோக்கி நகர இயலாமல் இருந்தேன். அப்பொழுது நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்கு ஒரு புதிய பங்களிப்பாளராக இருப்பதில் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியது.

ஒரு பெரிய, பிரபலமான திட்டத்தில் எளிதானதாகத் தோன்றிய ஒரு பிரச்சினையை நான் தேர்ந்தெடுத்தேன். குழப்பம் செய்து விடக்கூடாது என்ற அச்சத்தில் எந்த மாற்றங்களையும் செய்வதற்கு முன்னர் கேள்விகளைக் கேட்பது நல்லது என்று நான் நினைத்தேன். நான் ஒரு புதிய பங்களிப்பாளராக இருக்கிறேன் என்று கூறி, ஒரு பிரச்சினையைத் தீர்வு செய்ய குறிப்பிட்ட உரைப்பகுதி மாற்றப்பட வேண்டும், எவ்வாறு செய்வது எனக் கேட்டுக் கொண்டேன். எனக்குக் கிடைத்த பதில்: “மாற்றத்தை எப்படிச் செய்வது என்று தெரியாவிட்டால், அதைச் செய்ய உங்களுக்குத் தகுதியில்லை.”

ஆ! இந்த பதில் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரு திட்டத்தைப் பற்றி எனக்குப் புரியவில்லை என்றால் கேள்விகள் கேட்க மேலும் பயமாக இருந்தது.

எனக்குப் போதுமான அளவு தெரியவில்லை என்பதால் வேண்டாம் என்கிறார்களா? ஓய்வற்று வேலை செய்யும் அனுபவசாலிகளிடம் முட்டாள்தனமான கேள்விகள் கேட்பதற்குப் பதிலாக ஒருவேளை நான் என் திறமைகளை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டுமா? அப்பொழுதுதான் நான் ஒரு வழிகாட்டியைத் தேட ஆரம்பித்தேன். ஏனென்றால் நான் கேள்விகள் கேட்கும் அளவுக்கு நன்றாகத் தெரிந்தவர் ஒருவர் இருந்தால் நல்லது, நானும் பயனுள்ள வேலை செய்ய முடியும் என்று நினைத்தேன். அதனால் நான் பலருக்கு தொடங்குவதற்கு உதவி கோரி மின்னஞ்சல் செய்தேன். மேற்கூறிய அனுபவத்திற்குப் பிறகு நான் குறிப்பாக அச்சுறுத்தலை உணர ஆரம்பித்தேன்.

ஊக்கமளிக்கும் பதில்களை நிறையப் பெற்றேன், ஆனால் நான் தேடியது சரியாகக் கிடைக்கவில்லை. திறந்த மூல உலகில் மூடிய சுவற்றில் முட்டிக் கொள்வது போன்று இருந்தது.

நல்ல முதல் பிழைகள் கண்டுபிடிப்பது

ஒரு நல்ல மாலைநேரம், நான் பணியாற்றுவதற்கான பிரச்சினைகளைத் தேடிக் கொண்டிருந்தபோது, வலை நீட்டிப்பு (web-ext) என்ற மொஸில்லா (Mozilla) திட்டத்துக்கு வந்து சேர்ந்தேன். இது வலை நீட்டிப்புகளை சோதிக்கும் ஒரு கருவி. நல்ல முதல் பிழைகள் என பெயரிடப்பட்ட ஒரு சில பிரச்சினைகளைக் கண்டறிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அவை ஒரு சிறிய எழுத்துப்பிழையை சரி செய்வது போல் அதி எளிமையானவை அல்ல. ஆகா, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

நான் அவற்றில் ஒன்றில் பணிபுரிய ஆரம்பித்தேன். வேலையை முடித்து பிரச்சினை சீட்டை மூட வேண்டுமானால் நான் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று விரைவாக உணர்ந்தேன். நான் நிரல் தொகுப்பை மேலோட்டமாகப் பார்த்தேன். அது எப்படி வேலை செய்கிறது என்பது ஓரளவு புரிந்தவுடன் அடுத்து எப்படி செய்வது என்று உதவி கேட்டேன். கண்டேன் தீர்வை! எனக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொண்ட பிறகு, இந்த சிக்கலை தீர்க்க முடிந்தது. இன்று, நான் நான்கு இழு கோரிக்கைகளை அனுப்பினேன். ஒன்று ஒன்றிணைக்கப்பட்டது, மேலும் இரண்டு ஒன்றிணைப்பை  நோக்கிச் செல்கின்றன, மற்றொன்று, பயர்பாக்ஸ் (Firefox) ஏற்றுக்கொண்ட ஒரு குறுநிரல்.

நான் அதில் குதித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு தேவைப்பட்ட கேள்விகளைக் கேட்கும் நேரம் வந்தபோது நான் பின்வாங்கவில்லை என்றும் மகிழ்ச்சியடைகிறேன், அது முட்டாள்தனமாகத் தெரிந்தாலும் கூட. எல்லாவற்றையும் அறிந்திருக்கத் தேவையில்லை, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கலாம் என்பதைக் கற்றுக் கொண்டேன். இந்த சிக்கல்களில் மொஸில்லா வழிகாட்டிகள் எல்லோரும் மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள். பிரச்சினைகளை சிறிய துண்டுகளாக உடைத்து, நம்ப முடியாத அளவுக்கு விவரங்களை விளக்கி அவர்கள் என்னை வழிநடத்தினர்.

என் சொந்தத் தீர்வை நோக்கி என்னை வழிகாட்ட சில நாட்கள் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு சில மணிநேரங்களில் இந்தப் பிரச்சினைகளைத் தாங்களே சரிசெய்திருக்கலாம்.

இப்போது, ஃபயர்ஃபாக்ஸ் அமைப்பை நிறுவி, பக்ஸில்லாவில் ஒவ்வொரு நாளும் வழுக்கள் தேடுகிறேன்.

Shubheksha Jalan

மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றிஷுபேக்ஷா ஜலான் (Shubheksha Jalan) – நான் மென்பொருள் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட ஒரு  இந்திய கணினி அறிவியல் மாணவி.

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: