அமேசான் இணையச்சேவைகள் – தனிப்பயன் விபிசி

இதுவரையில் நாம் விபிசியின் கூறுகளைப் பற்றியும், ஒவ்வொரு கணக்கிற்கும் அமேசான் உருவாக்கிக் கொடுக்கிற இயல்நிலை விபிசி பற்றியும் அறிந்தோம். அமேசான் இணையச்சேவைகளை முதன்முதலாகப் பயன்படுத்துவோருக்கு, விபிசி பற்றிய எந்தவொரு சிக்கலும் நேராதவண்ணம் இயல்நிலை விபிசிக்கள் பார்த்துக்கொள்கின்றன. முன்னதாக நாம் ஒரு மேகக்கணினியை உருவாக்கியபோதும், அதிலிருந்து ஒரு வலைத்தளத்தை இயக்கியபோதும், விபிசியின் இருப்பைக் கூட நாம் அறிந்திருக்கவில்லை. தொடக்கநிலையில் இருப்போருக்கு இது போதுமானது.

ஆனால், பல்வேறு பயனர்களைக் கொண்டவொரு வலைத்தளத்தையோ, செயலியையோ கட்டமைக்கும்போது, இயல்நிலை விபிசிக்கள் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. பொதுவாக, எந்தவொரு செயலியையும் மூவடுக்கு கட்டமைப்புக்குள் அடக்கமுடியும்.

  • Presentation tier
  • Application / Business logic tier
  • Data tier

இப்படியான மூவடுக்கு கட்டமைப்புள்ள செயலியை, அமேசானிலிருந்து இயக்கவேண்டும் என வைத்துக்கொள்வோம். இவற்றுக்கென சேவையகங்களை, இயல்நிலை விபிசியில் உள்ள மேகக்கணினிகளிலிருந்து இயக்கினால் என்னவாகும்? இயல்நிலை விபிசியின், துணைஇணையங்கள் அனைத்தும், பொதுத் துணைஇணையங்களாக இருப்பதை முன்னரே அறிந்தோம். எனவே, நமது சேவையகங்களைப் பயனர்களாலும் (கொந்தர்களாலும் – Hackers) எளிதில் அணுகிவிடமுடியும். இது, நமது செயலியின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதால், நமது சேவையகங்களை, வெளியிலிருந்து எவரும் அணுகாதவண்ணம் காப்பது நமது கடமையாகிறது.

இதனாலேயே, தனிப்பயன் விபிசிக்கள் அமேசான் இணையச்சேவைகளின் அதிமுக்கியமான பாகமாகிறது. தனிப்பயன் விபிசிக்களில் தனிப்பட்ட துணைஇணையங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். பெரும்பாலான தனிப்பயன் விபிசிக்களின் வடிவமைப்பு, பின்வரும் படத்திலிருப்ப்பது போன்ற ஒன்றாகவே இருக்கிறது.

இவ்விபிசியில், இரண்டு துணைஇணையங்கள் உள்ளன. பொதுவெளியிலிருந்து அணுகவேண்டிய இணையச்சேவையகங்களைக் கொண்டது பொதுத்துணைஇணையம். செயலியின் தொழில் ரகசியங்களைக் கொண்ட சேவையகங்களையும், தரவுதளங்களையும் உள்ளடக்கியது தனிப்பட்ட துணைஇணையம். இவ்விரு துணைஇணையங்களும், அவற்றுக்கென தனித்தனியே அணுக்கக் கட்டுபாட்டுப் பட்டியலையும், தட அட்டவணையையும் கொண்டுள்ளன.

மேலும், தனிப்பட்ட துணைஇணையத்திலிருக்கும் மேகக்கணினிகளுக்கு இணைய இணைப்பை வழங்குவதற்கு நேட் நுழைவாயிலையும் மேற்கண்ட படத்தில் காணலாம். நேட் நுழைவாயிலின் அவசியத்தைப் புரிந்துகொள்வதற்கு முன், மேகக்கணினிகளின் இணையமுகவரி வகைகளை அறிவது அவசியம்.

துணைஇணையங்களும் இணையமுகவரிகளும்

 

மேகக்கணினிகளுக்கு மூன்றுவகையான இணையமுகவரிகள் உள்ளன.

  • பொது இணையமுகவரி – Public IP Address
  • தனிப்பட்ட இணையமுகவரி – Private IP Address
  • நெகிழக்கூடிய இணையமுகவரி – Elastic IP Address

இவற்றை எளிதாக விளங்கிக்கொள்வதற்கு, ஒரு மேகக்கணினியை, உங்கள் கல்லூரியிலுள்ள நூலகமாக உருவகப்படுத்திக்கொள்வோம்.

அந்நூலகத்திற்குப் புத்தகங்கள் அனுப்பவேண்டுமானால், நீங்கள் அஞ்சலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முகவரியைப் பயன்படுத்தவேண்டும். அதேபோல, வெளியுலகத்தார் ஒரு மேகக்கணினியை அணுகுவதற்கு பொது இணையமுகவரியைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் வகுப்பிலிருக்கிறீர்கள். சில புத்தகங்களைப் பார்த்து குறிப்புகள் எடுக்கவேண்டும். ஆசிரியரிடம் நூலகம் செல்ல அனுமதி வேண்டுகிறீர்கள். இப்போது, அதன் அஞ்சலக முகவரியைப் பயன்படுத்துவதில்லை. நூலகத்திற்குச் செல்லவேண்டும் என்று சொன்னாலே போதுமானது. அதேபோல, ஒரே விபிசியிலுள்ள மேகக்கணினி, மற்றொரு மேகக்கணினியை அதன் தனிப்பட்ட இணையமுகவரியைக் கொண்டே அடையாளம் காண்கிறது.

நூலகத்திற்குச் சென்று சில புத்தகங்களை எடுத்துவருகிறீர்கள். சிலநாள் கழித்து, அவற்றைத் திருப்பிக்கொடுக்கச் செல்கிறீர்கள். நீங்கள் புத்தகங்களை எடுத்தபோது இருந்த நூலகர் இப்போது இல்லை. விடுப்பில் சென்றிருக்கிறார். அதற்காக, நூலகப்பணிகள் நின்றுபோய்விடக்கூடாது என்பதற்காக வேறொருவர் அப்பொறுப்பை ஏற்று செயல்படுகிறார். இங்கே வேலையைச் செய்கிற ஆள் மட்டுமே மாறுகிறார். அவருக்கான பொறுப்பின் பெயர் மாறுவதில்லை. அதேபோல, நமது மேகக்கணினிகளில் முக்கியமான பொறுப்புவகிக்கும் சேவையகங்களுக்கு நிலையான இணையமுகவரியை நம்மால் கொடுக்கமுடியும். இதற்கு நெகிழக்கூடிய இணையமுகவரி என்று பெயர். ஒருவேளை, இம்முகவரியுடைய மேகக்கணினி செயலிழந்தாலும், அதே முகவரியுடன் வேறொரு கணினியை உருவாக்கி, சமாளித்துக்கொள்ளலாம்.

மேகக்கணினிகளை எந்த துணைஇணையத்தில் உருவாக்குகிறோம் என்பதைப்பொருத்து, அவை பெறுகிற இணையமுகவரிகளும் மாறுபடுகின்றன.

தனிப்பட்ட துணைஇணையத்தின் தட அட்டவணையில் இணையநுழைவாயிலுக்குச் செல்வதற்கான பதிவில்லை. எனவே அதிலுள்ள மேகக்கணினிகளுக்கு பொது இணையமுகவரி இல்லை. எனவே அதிலுள்ள சேவையகங்களையும், தரவுதளங்களையும் யாராலும் அணுகமுடியாது. அவற்றில் நமக்குத்தேவையான மென்பொருள்களை நிறுவுவதற்கும், அவற்றைப் பராமரிப்பதற்கும், நமக்கொரு பிரத்யேக நுழைவாயில் தேவைப்படுகிறது. இதற்கு நேட் நுழைவாயில்கள் பயன்படுகின்றன.

%d bloggers like this: