திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 16. கல்வியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 16 திறந்த மூலக் கோட்பாடுகள்

பிலடெல்பியாவின் ட்ரெக்சல் (Drexel) பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு (2014) மே 28-30 நடந்த “பேராசிரியர்கள் திறந்த மூல கோடை அனுபவம் (Professors’ Open Source Summer Experience – POSSE)” நிகழ்ச்சியில் ஹெய்டி எல்லிஸ் (Heidi Ellis) பேசினார். திறந்த மூல திட்டங்களில் மாணவர்களை உட்படுத்துவது வியத்தகு கல்வி சார் நன்மைகள் செய்யும்  என்பதை தனது சக பேராசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என வேண்டினார். 

இந்த நன்மைகளை அவர்கள் உணர்வதற்கு உதவ, திறந்த மூல சமூகங்களின் காய்ச்சி வடிகட்டிய ஞானத்தை விட வேறு என்ன சிறப்பாக இருக்க முடியும்.

ட்ரெக்சல் பேராசிரியர் கிரெக் ஹிஸ்லாப் (Greg Hislop)-உடன் இணைந்து POSSE நடத்தும் பணியில் எல்லிஸ் ஈடுபட்டிருந்தார். கணினி அறிவியல் மாணவர்களை திறந்த மூல சமூகங்களில் உள்ளடக்கினால் வரும் ஈடுபாடு பாரம்பரிய வகுப்பறையில் ஒருக்காலும் வருவதில்லை என்று நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து வந்திருந்த சுமார் 20 கல்லூரி ஆசிரியர்கள் கூட்டத்தில் கூறினார். ஆனால், மாணவர்கள், பேராசிரியர்கள் இருவருமே தாங்கள் திறந்த மூல வழியைத் தழுவத் தயாராக இல்லை என்றால், கொஞ்சம் பண்பாடு அதிர்ச்சிக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எனவே எல்லிஸ் கட்டற்ற திறந்த மூலக் கலாச்சாரத்திலிருந்து பெறப்பட்ட 16 முதுமொழிகள் மூலம் எப்படி கணினி அறிவியல் கல்வியை திறந்த மூல மதிப்புகள் உரு மாற்றக் கூடும் என்று விளக்குகிறார். இவற்றை அவர் திறந்த மூலக் கோட்பாடுகள் என்கிறார்.

திறந்த மூலக் கோட்பாடு #1: சமூகமே முதலானது

மாணவர்களை திறந்த மூலத்தில் ஆரம்பித்து விடுவது என்பது ஒரு புதிய திட்டத்தில் வேலைசெய்யச் சொல்வது மட்டுமல்ல. அது அவர்களை ஒரு சமூகத்தில் சேரச் சொல்வதும்தான். “அவ்வாறு செய்யும் போது மாணவர்கள் ஒரு புதிய கலாச்சாரத்தில் சேர்கிறார்கள்” என்று எல்லிஸ் கூறினார்.

எனவே மாணவர்கள் விரைவில் அக்குழுவின் தனிப்பட்ட வழிமுறைகள், விருப்பங்கள், மற்றும் உள் நகைச்சுவைகள் போன்ற பேசப்படாத விதிமுறைகளுக்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு திறந்த மூல சமூகத்தில் சேரும் போது மாணவர்கள் அந்த சமூகத்தின் விருப்ப தகவல் தொடர்பு தடங்களை அடையாளம் கண்டுகொண்டு அதன் கலாச்சாரத்துக்கு சாளரங்களாக அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

“சமூகம்தான் திட்டத்தை இயக்குகிறது” என்று எல்லிஸ் கூறினார் “திட்டம் சமூகத்தை அல்ல.”

திறந்த மூல சமூகங்களில் சேர்வதன் மூலம், மாணவர்கள் தங்கள் பங்களிப்புகளை தொடங்க வழி தெரியாமல் திண்டாடும் போது உதவிக்கு வல்லுநர்களை அணுக முடியும். இந்த வழியில் பேராசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு மதிப்புமிக்க வழிகாட்டிகளைப் பெற முடியும்.

“சமூகத்தில் சேர்ந்தபின், மாணவர்கள்  சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள்,” என்று எல்லிஸ் கூறினார். “இது ஒரு நன்மை. அவர்கள் உங்கள் மாணவர்களைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.”

திறந்த மூலக் கோட்பாடு #2: குழப்பமாக இருந்தாலும் தெரிந்த சின்ன வேலையில் தொடங்குங்கள்.

ஒரு திறந்த மூல திட்டம் அல்லது சமூகத்தின் செயற்பரப்பை முற்றிலும் புரிந்து கொள்வது எந்த ஒற்றை நபரின் திறனையும் விட அதிகமானதே. ஆகவே, மாணவர்கள் அறிமுகம் இல்லாத பகுதியில் வழி தெரியாமலோ அல்லது நிலையில்லாமலோ உணரக் கூடும். இந்தக் குழப்பத்தையே உற்பத்தித்திறனுடன் பயன்படுத்த பயிற்றுநர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். சமூகத்தைப் பற்றி விசாரணை செய்து அதன் பொருட்களைத் தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து கற்றுக் கொள்ளலாம். கொஞ்ச காலம் தலை சுற்றும் அளவுக்குத் தடுமாறுவது இயற்கைதான், அதுவும் நல்லதற்கே என்று எல்லிஸ் அவையோருக்குக் கூறினார். திறந்த மூல திட்டங்களுக்கு  புதிதாக வரும் பேராசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

“பயிற்றுநர்களுக்கு இது ஒரு வினோதமான கருத்தாக இருக்கலாம்,” என்று கூறினார். “நாங்கள் பாடப்பொருளின் வல்லுநர்களாக இருக்க வேண்டும் என்றுதான் யாவரும் எதிர் பார்க்கின்றனர்.”

திறந்த மூலக் கோட்பாடு #3: திரும்பக் கொடுங்கள்

பயனர்கள் மற்றும் நிரலாளர்கள் செய்யும் பங்களிப்புகளை வைத்துத்தான் திறந்த மூல மென்பொருள் திட்டங்கள் பிழைத்துக் கொண்டிருக்கின்றன என்று எல்லிஸ் விளக்கினார். எனவே மாணவர்கள் உடனடியாக திரும்பக் கொடுக்கத் தொடங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆவணங்களைப் புதுப்பிக்கலாம், சோதனை செய்யலாம், வழுக்களை உறுதி செய்யலாம், மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். எது முடிந்ததோ அதைச் செய்யலாம். தங்கள் சமூகங்களில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த நிபுணர்களாக இருக்கத் தேவையில்லை என்பதை அவர்கள் விரைவில் கற்றுக்கொள்வார்கள். அவர்கள் வேலை செய்யத் தயாராக இருப்பதுதான் முக்கியம். சிறிய பங்களிப்புகள் கூட மதிப்புமிக்கதாக  இருக்கும் என்று எல்லிஸ் கூறினார்.

திறந்த மூலக் கோட்பாடு #4: நேரம் கிடைத்தபோது இயன்ற வேலையைச் செய்யலாம்

பெரும்பாலான திறந்த மூல நிரலாளர்கள் தங்கள் திட்டங்களில் முழு நேர வேலை செய்வதில்லை. அவர்களுடைய மற்ற வேலைகள் பங்களிப்பதற்கு வரம்பெல்லைகளாகின்றன. எனவே கிடைக்கும் நேரத்துக்கேற்ப திறந்த மூல வளர்ச்சி மாறும் என்று எல்லிஸ் விளக்கினார். நிரலாளர்களுக்கு வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்போது வளர்ச்சி வேகமாக ஏற்படுகிறது. திறந்த மூல வளர்ச்சி செயல்முறைகள் தொழில் நிறுவனங்களின் செயல்முறைகளை எப்போதும் பிரதிபலிப்பதில்லை என்பதை மாணவர்கள் உணர வேண்டும். சமூக உறுப்பினர்களுக்கு நேரம் கிடைப்பதைப் பொருத்து வேலை விட்டு விட்டுத்தான் நடக்கும்.

திறந்த மூலக் கோட்பாடு #5: ஒன்றை வெளியிடவில்லை என்றால், அது நடக்கவேயில்லை

திறந்த மூல வேலை திறந்த வெளியில் நடைபெறுகிறது.

அஞ்சல் பட்டியல்கள், ஐஆர்சி (Internet Relay Chat – IRC) சேனல்கள், மற்றும் பிற பொதுத் தொடர்பு தடங்களை நிரலாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே சமூகத்தில் உள்ள எவரும் மற்றும் சமூகத்தில் சேர விரும்பும் எவரும் அவர்கள் செய்வதைப் பார்க்க முடியும். இவ்வாறு பொது வெளியில் வேலை செய்யவும் மற்றும் தங்களின் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும் மாணவர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்று எல்லிஸ் கூறினார்.

“அவர்கள் செய்யும் வேலையை மக்களால் பார்க்க முடியாது என்றால், அவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது.” என்று அவர் கூறினார்.

இவ்வளவு வெளிப்படைத்தன்மை ஆசிரியர் குழுவையும் திடுக்கிட வைக்கலாம் என்று எல்லிஸ் மேலும் கூறினார்.

“எதையும் சரி செய்து உன்னதமாக ஆக்கும் வரை வெளியிடு செய்யக்கூடாது என்பது பெரும்பாலான கல்வியாளர்களுக்கு நன்கு ஆழமாக பதிந்த கருத்து,” என்று அவர் கூறினார். “திறந்த மூல உலகம் அதற்கு முற்றிலும் எதிர்மாறுதான்.”

திறந்த மூலக் கோட்பாடு #6: தீவிரமான வெளிப்படைத்தன்மையைத் தழுவுங்கள்

திறந்த மூல சமூகங்கள் பகிர்வு வளர்ச்சியில் ஈடுபடுவதால் அவர்கள் தீவிர வெளிப்படைத்தன்மையை மேற்கொள்கிறார்கள். ஆகவே அவர்கள் தயார் செய்யும் அனைத்து ஆவணங்கள், நிரல்கள், மற்றும் பிற பொருட்களும் திறந்த வெளியிலேயே இருப்பதால் மாணவர்கள் தங்கள் கல்வி வளர்ச்சிக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ள முடியும். இவற்றை வகுப்பறையிலும் அதற்கு அப்பாலும் பயன்படுத்தலாம்.

“இவை அனைத்தும் மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு ஒரு வளம் மிகுந்த வாய்ப்பு,” என்று எல்லிஸ் கூறினார்.

திறந்த மூலக் கோட்பாடு #7: அனுமதிக்காக காத்திருக்காதீர்கள். பிரச்சினை வந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்று தைரியமாக இறங்குங்கள்.

அனேகமாக எல்லா திறந்த மூல சமூகங்களிலும் ஏதாவது ஒரு வித பதிப்பு கட்டுப்பாடு பயன்படுத்தப்படுகிறது. எனவே மாணவர்கள் தங்கள் பங்களிப்புகளினால் முற்றிலும் ஒரு திட்டத்தை தடம்புரளச்செய்யும் வாய்ப்பு அரிதே என்று உணர வேண்டும் என்று எல்லிஸ் விளக்கினார். அவர்கள் ஏதாவது ஒன்றை திருகி கழட்டிப் பார்க்க வேண்டுமென்றால் அனுமதி கேட்கத் தேவையில்லை. தவறு நடந்தால் சமூகத்தின் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளலாம் என்று தொடங்க வேண்டும். பெரும்பாலும் சமூக உறுப்பினர்கள் ஆதரவாகவே இருப்பார்கள், ஏனெனில் பிரச்சினை வந்தால் எளிதில் நிரலை பழையபடிக்குக் கொண்டுவர முடியும்.

திறந்த மூலக் கோட்பாடு #8: கிளைகளில் மாற்றங்கள் செய்து பார்ப்பது எளிது

நேரடியாக மூல நிரலில் வேலை செய்ய இன்னும் தயங்கினால், ஒரு நகல் எடுத்து தங்கள் கணினியில் அதன் கிளையில் திருகி கழட்டிப் பார்க்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பரிசோதனைகள் முயன்று பார்க்க இது அவர்களை விடுவிக்கும். இம்மாதிரி முயற்சி செய்து பார்க்கும் போது அவர்கள் ஏதேனும் வழுக்களைக் கூட சரி செய்யக் கூடும். பின்னர் அதை எளிதில் திட்டத்துடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும் என்று எல்லிஸ் கூறினார்.

திறந்த மூலக் கோட்பாடு #9: பணிக்குறிப்பைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்

திறந்த மூல சமூகங்களில் பணிக்குறிப்பைப் பதிவு செய்து வைத்துக் கொள்ள இருக்கும் பல வழிகளில் பதிப்பு கட்டுப்பாடு ஒன்றுதான். ஆனால் திறந்த மூல வளர்ச்சி கருவி தொடரிகளில் உள்ள ஒவ்வொரு கூறும் அனேகமாக பதிவுகளை வைத்திருக்கிறது. எனவே சமூகத்தில் இன்னும் விரைவில் இணைவதற்கு மாணவர்கள் ஒரு திட்டத்தின் பதிவுகளைப் பயன்படுத்த முடியும். மற்றும் அரைக் கல்வியாண்டு முடிவில் அவர்கள் செய்த வேலையைக் கைமாற்றத் தயாராகும் போது இதே பதிவு செய்யும் கருவிகளையே பயன்படுத்த முடியும்.

திறந்த மூலக் கோட்பாடு #10: பயனர் இடைமுகத்தை சரி செய்வது போன்ற சிறிய மாற்றங்களில் தொடங்குங்கள்

மாணவர்கள் எப்போதும் மிகச்சிறிய, மிகவும் எளிதாக முடிக்கக் கூடிய வழுக்களில் தொடங்க வேண்டும் என்று எல்லிஸ் கூறினார். இவை ஆரம்பத்தில் ஒரு திட்டத்துக்கு உருப்படியாக பங்களிப்பு செய்ய வழி செய்கின்றன. அவர்கள் ஆவணங்களை புதுப்பிக்கலாம் அல்லது ஒரு வழுவை சரி செய்யலாம். இவை முக்கியமான பங்களிப்புகள் ஆனால் ஒரு திட்டத்தைப் பற்றிப் பெரிய அளவு தெரியத் தேவை இல்லை. பேராசிரியர்கள் மாணவர்களை திட்டம் வரையறுக்கும் அளவு பெரிய பங்களிப்புடன் தொடங்க வேண்டினால் அது அவர்களைத் திணற வைக்கும் என்று எல்லிஸ் எச்சரித்தார்.

“அகலக்கால் வைக்க வேண்டாம்”, என்று கூறினார்.

திறந்த மூலக் கோட்பாடு #11: என்ன  தெரியும் என்பது முக்கியமல்ல, என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பதுதான்

அறியும் அவாமிக்க வகுப்பறை சூழலில் இருப்பதால் மாணவர்கள் ஏற்கனவே திறந்த மூல திட்டங்களில் பங்களிக்க தகுதியானவர்கள்தான் என்று எல்லிஸ் கூறினார். ஏனெனில் இந்த சமூகங்கள் எவ்வாறு உதவலாம் என்பதை அறிய விரும்பும் உறுப்பினர்களுக்கு மதிப்பு கொடுக்கின்றன. திறந்த மூல சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு காலத்தில் இம்மாதிரி கற்றுக் குட்டியாக இருந்தவர்கள்தான் என்று எல்லிஸ் தனது சக பேராசிரியர்களுக்கு நினைவூட்டினார்.  திறந்த மூல திட்டங்கள் பொதுவாக தேவையான திறன்களை கற்றுக்கொண்டு திட்டத்துக்கு உருப்படியான வேலை செய்யத் தயாராக உள்ள புதிய உறுப்பினர்களை வரவேற்கின்றன.

திறந்த மூலக் கோட்பாடு #12: முன்னதாக வெளியிடு, அடிக்கடி வெளியிடு

பயனர்களுக்கும் நிரலாளர்களுக்குமிடையே சிறிய, இறுக்கமான பின்னூட்டச் சுற்றுகளால் திறந்த மூலச் செயலிகள் பயனடைகின்றன என்று எல்லிஸ் கூறினார். ஆகவே மாணவர்களுக்கு அடிக்கடி மாற்றம் செய்வது பழகிவிட வேண்டும். ஆனால், “முன்னதாகவும் அடிக்கடியும் வெளியீடு செய்யும்” மனநிலை கூட அவர்கள் விரைவாக தங்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வழி செய்கிறது. ஒரு பயிற்றுநரோ அல்லது உதவி ஆசிரியரோ தங்கள் வேலையை மதிப்பீடு செய்ய சில வாரங்கள் காத்திருப்பதை விட இது விரைவில் நடக்கிறது.

திறந்த மூலக் கோட்பாடு #13: திட்ட நீரோட்டத்தின் மேல்புறத்தில் சமர்ப்பியுங்கள்

மாணவர்கள் எப்போதும் தங்கள் வேலையை எந்த நிரலாளர்கள் மற்றும் சமூகங்கள் அவர்களுக்கு நன்மை செய்கின்றனவோ அந்த திட்ட நீரோட்டத்தின் மேல்புறத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுதான் திறந்த மூல சமூகங்களில் சரியான மரபாக உள்ளது. அவர்கள் திட்டத்துக்கு வழங்கும் செயல்பாடு மற்றும் மெருகூட்டுவதை சமூகங்கள் ஏற்றுக்கொள்கின்றன. அவ்வாறு செய்வதால் மாணவர்களுக்கு ஒரு சாதனை உணர்வு ஏற்படும். சுருக்கமாக சொல்லப் போனால் மாணவர்கள் தங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு திருப்பி உதவி செய்வதன் முக்கியத்துவத்தை அறிகிறார்கள்.

திறந்த மூலக் கோட்பாடு #14: நீங்கள் என்ன நிரல் எழுதினீர்கள் என்பது மட்டும்தான் முக்கியம்

திறந்த மூல சமூகங்கள் முற்றிலும் நடைமுறைக்கேற்றவை என்று எல்லிஸ் கூறினார். நிரலாளர்களுக்கு அவர்கள் நிரூபிக்கும் திறன்களுக்கு மட்டுமே மதிப்பு கிடைக்கும். லினக்ஸ் கருநிரலை (kernel) உருவாக்கியவரும் மற்றும் அதை மேம்பாடு செய்வதில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும்தான் லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds). பகிர்வுப் பதிப்பு கட்டுப்பாடு அமைப்பு கிட் (Git) உருவாக்கியவரும் அவர்தான். லினஸ் டோர்வால்ட்ஸ் கூறியது போல: “பேச்சு மலிவானதுதான். நிரல் என்ன எழுதினாய் என்று காட்டு.” என்பதுதான் திறந்த மூல சமூகங்களின் தாரக மந்திரம்.  திறந்த மூல திட்டங்களில் பங்கேற்கும் மாணவர்கள் அந்தந்த சமூகங்களில் ஒரு பகுதியாக ஏற்கப்பட வேண்டும் என்று விரும்பினால் உடன் நிரல் எழுதத் தயாராக இருக்க வேண்டும்.

திறந்த மூலக் கோட்பாடு #15: மேலோட்டமான வழுக்களை நினைவில் வையுங்கள்

“அனேகம் பேர் முயன்றால் அனைத்து வழுக்களும் மேலோட்டமானவையே” என்பதை எரிக் ரேமண்ட்  “லினஸ் விதி” என்று பெயரிட்டார். இந்த விதியை எல்லிஸ் தனது சக பேராசிரியர்களை நினைவு கூறக் கேட்டுக் கொண்டார். தாங்கள் ஒரு அங்கமாக இருக்கும் சமூகங்களிடமிருந்து உதவியை ஏற்றுக்கொள்வது எப்படியென்று மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.  தனிமையில் உழைத்து பெரும் ஏமாற்றம் அடையாமல் உதவி தேவைப்படும் போது கேட்கத் தயாராக இருக்க வேண்டும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக உதவி கேட்க வேண்டும். சமூகம் ஒரு குழுவாக கலந்துரையாட முடியும்.

திறந்த மூலக் கோட்பாடு #16: செய்த வேலையை சொல்லாமல் விட வேண்டாம்

மாணவர்கள் தங்கள் கல்விக் காலம் முடிந்தவுடன் தாங்கள் செய்த வேலையை மனதார மற்றவர்களுக்கு கைமாற்றம் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லிஸ் கூறினார். அவர்கள் பங்களிப்பை சமூகங்கள் பாதுகாப்பாக புரிந்து கொள்ளவும், பராமரிக்கவும், மற்றும் அதன் மேல் உருவாக்கவும் முடிந்தால்தான் அவர்கள் வேலை முழுமை அடையும். அவர்கள் எப்போதும் திட்ட பராமரிப்பாளர்களைக் கண்டறிந்து, தங்கள் இலக்குகளை அடைய இயலா விட்டால் கூட, தங்கள் நோக்கங்களைத் தெரியப் படுத்த வேண்டும்.

வேலையை செய்து சொல்லாமல் விடுவதை விட, இன்ன வேலையை முழுதும் முடிக்க இயலவில்லை என்று கூறுவதே மேல்.

Bryan Behrenshausen

மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றிபிரையன் பெஹ்ரன்ஸ்ஹவுசன் (Bryan Behrenshausen) 2011 முதல் Opensource.com அணியில் ஒரு எழுத்தாளர் மற்றும் ஆசிரியராக இருக்கிறார். 2015 இல் இவர் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம், சேப்பல் ஹில்லில் இருந்து தொடர்பாடலில் முனைவர் பட்டம் பெற்றார். திறந்த மூலம் பற்றி எல்லாவற்றையும் நினைக்காத அல்லது எழுதாத போது இவர் பழங்கால நிண்டெண்டோ விளையாடுகிறார், கலைசார் அறிவியல் புனைகதை வாசிக்கிறார் அல்லது ஒரு பழைய திங்க்பேட்-ஐ சீர் செய்கிறார். இணையத்தில் இவர் செல்லப்பெயர் “semioticrobotic.”

மூலம்: opensource.com  தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்

%d bloggers like this: