பைத்தான் : திட்டப்பணி வழிகாட்டு – இலவச இயங்கலை நிகழ்ச்சி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயிலகம் – நியூஸ் 18 இணைந்து பைத்தான் வகுப்புகளை இயங்கலையில் எடுத்து யூடியூபில் பதிவேற்றியிருப்பது உங்களுக்குத் தெரிந்தது தான்! அந்த வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பைத்தான் திட்டப்பணி வழிகாட்டு நிகழ்ச்சிகள் நாளை முதல் இரு வாரங்களுக்குத் தொடங்குகின்றன. பயிலகம் பயிற்றுநருடன் கணியம் சீனிவாசன், கலீல் ஆகியோரும் வழிகாட்டிகளாக இணைந்து கலக்கவிருக்கிறார்கள். இலவசமாகவும் கட்டற்றும் கிடைத்த பைத்தானை இலவசமாகவே பயிற்றுவித்து கட்டற்று(படைப்பாக்கப் பொது உரிமையில்) வெளியிட்டு இலவசமாகவே வழிகாட்டவும் செய்தால் யாருக்காவது கசக்குமா என்ன?

எனவே, இந்த வழிகாட்டு நிகழ்ச்சியில் மாணவர்கள் திட்டப்பணி உருவாக்கி, வாழ்வில் வெற்றி பெறப் போவது திண்ணம்! தினமும் காலை 7.30 முதல் 8.30 மணி வரை வழிகாட்டு நிகழ்ச்சி IRC முறையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இணையும் மாணவர்கள் irc.freenode.net வழியே அலைவரிசையில் இணைந்து திட்டப்பணி குறித்த வழிகாட்டுதல் பெறலாம்.

இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான விதிகளாக,
1) சென்னைபை(ChennaiPy)மின்மடல் குழுவில் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டும்.
2) தினமும் என்ன கற்றார்கள் என்பதை வலைப்பூவில் எழுத வேண்டும்.
3) நாள்தோறும் காலையில் IRC வழியே வழிகாட்டு நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும்.
4) நேற்று என்ன செய்தார்கள், இன்றைய திட்டம் என்ன? சிக்கல் ஏதும் இருக்கிறதா? என்பதை அந்நிகழ்வில் வழிகாட்டிகளிடம் தெரியப்படுத்த வேண்டும்.
5) ஐயங்கள் இருப்பின், சென்னைபை குழுவிடம் மடல் வழி அணுக வேண்டும்.

என்பன அமைக்கப்பட்டிருக்கின்றன. வாருங்கள்! அன்பால் கட்டுண்டும் உரிமையால் கட்டற்றும் உயரிய உலகம் படைப்போம்!

“தமிழுண்டு தமிழ் மக்களுண்டு – இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு!
                                                                        – பாவேந்தர் பாரதிதாசன்

%d bloggers like this: